ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு
– கடும் கண்டனம்!
மக்கள் அதிகாரக் கழகம் “பண்பாட்டுப் பெருவிழா” என்ற பெயரில் இன்று (21.02.2026, சனிக்கிழமை) மதுரையில் நடத்தத் திட்டமிட்டிருந்த மாநாட்டிற்கு காவல்துறை இறுதி நேரத்தில் அனுமதி மறுத்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரிய நடவடிக்கையாகும்.
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சாதி ஆணவப்படுகொலைகள் இந்த மண்ணின் வரலாற்றில் அழிக்க முடியாத கரும்புள்ளிகளாக பதிந்துள்ளன. யாரும் வெளிப்படையாக பேசத் தயங்கும் இந்த அநீதியை மையப்படுத்தி, தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்து வந்தது மக்கள் அதிகாரக் கழகம். இதுவே புரட்சிகரமான செயல்பாடாகும்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் சங்பரிவாரத்தின் முயற்சிகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியதிலும், அரிட்டாபட்டி மற்றும் அ. வல்லாளப்பட்டி உள்ளிட்ட மேலூர் பகுதிகளில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக போராடியதிலும் மக்கள் அதிகாரக் கழகம் முன்நின்றது. குறிப்பாக மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் பிரகாஷ் அவர்கள் டங்ஸ்டன் கூட்டமைப்பின் தொடர்ச்சியான செயல்பாடுகளில் காட்டிய உறுதியான பணிகளால், அவருக்கு “டங்ஸ்டன் பிரகாஷ்” என்ற பெயரை பெற்றுத்தந்தது.
சமீபத்தில் நடைபெற்ற மாநில பொறுப்பாளர் ரவி அவர்களின் சாதி மறுப்பு புரட்சிகர திருமணமும் சமூகத்தில் பரவலாக பேசப்பட்டு, இயக்கத்திற்கு பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது. அதே ஊக்கத்துடன் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக மாநாட்டை திட்டமிட்டு, தமிழ்நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் தோழர்கள் ஈடுபட்டனர். தொடர்வண்டி, மாநகர பேருந்து, போக்குவரத்து சிக்னல்கள் உள்ளிட்ட பொதுவிடங்களில் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்க சோர்வில்லா முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
வி.சி.க தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தி.மு.க கூட்டணி கட்சித் தலைவர்கள் மக்கள் அதிகாரக் கழக நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர். பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் விசம அரசியலை எதிர்த்து, எந்த சமரசமும் இல்லாமல் மக்கள் அதிகாரக் கழகம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், பா.ஜ.க-வை எதிர்த்து நிற்பதாக கூறும் தி.மு.க அரசு, முதல்வர் வருகையை காரணம் காட்டி, பா.ஜ.க-வுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒரு ஜனநாயக இயக்கத்தின் மாநாட்டிற்கு தடை விதிப்பது பெரும் முரண்பாடாகும்.
வரும் காலங்களில் “முதல்வர் ஸ்டாலின் வரும் திசையில் காக்கா குருவி கூட பறக்கக் கூடாது” என்ற போக்கில் எதேச்சை அதிகாரத்துடன் செயல்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மக்களாட்சியின் ஆன்மாவை காயப்படுத்தும் நிகழ்வுகள் தொடர் கதையாகி வருகிறது.
தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா அல்லது மன்னராட்சியா என்ற கேள்வி எழுகிறது.
இந்த சர்வாதிகாரப் போக்கை அனைவரும் ஒருமித்த குரலில் கண்டிக்க வேண்டும்.
![]()
முகநூலில்: கம்பூர் செல்வராஜ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











