மேற்குவங்கம்: கிறிஸ்தவர்கள் மீது தீவிரமடையும் பாசிச தாக்குதல்!

கிறிஸ்தவர்கள் - இஸ்லாமியர்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றும் நோக்கத்தில் அம்மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்ற பாசிச கும்பலுக்கு எதிராக மேற்குவங்க மக்கள் வீதிகளில் இறங்கி மாபெரும் போராட்டங்கள கட்டியமைக்க வேண்டும். மனித குலத்திற்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் இம்மண்ணிலிருந்து அகற்றப்படும் போதுதான் அனைத்து மக்களுக்குமான வாழ்வை உறுதி செய்ய முடியும்.

0

மேற்குவங்கத்தில் பாசிச பா.ஜ.க ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய இரண்டே மாதங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. மே மாதத்தில் ஆங்காங்கே நடந்த வன்முறைகள் தற்போது திட்டமிட்டு நடத்தப்பட்டு வருவதையே ஜூலை 5-ஆம் தேதி அன்று நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் அடிக்கோடிட்டு காட்டுகின்றன.

தெற்கு 24 பர்காணாஸ் மாவட்டத்தில் உள்ள சுபாஷ்கிராமில் புதிதாக கட்டப்பட்டு வருகின்ற தேவாலயத்திற்குள் ஜூலை 5-ஆம் தேதி நுழைந்த காவி கும்பல் “இந்து இந்து பாய் பாய்”, “ஜெய் ஸ்ரீராம்” ஆகிய முழக்கங்களை எழுப்பியபடி, தேவாலயத்தின் ஜன்னல்களை உடைத்தும், பலிபீடத்தை அவமதித்தும், வழிபாட்டிற்கு பயன்படுத்தும் இசைக்கருவிகளை சேதப்படுத்தியும் உள்ளது.

மேலும், தேவாலயத்தின் கூரை மீதுள்ள சிலுவைகளை அக்கும்பல் உடைத்து கீழே தள்ளுகின்ற காணொளிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஞாயிறு பிரார்த்தனைக்காக வந்த மக்கள் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தங்களது வழிபாட்டுத் தளம் மற்றும் மத அடையாளத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவை தவிர அன்றைய தினம் மேற்குவங்கத்தின் பல இடங்களில் தேவாலயங்களின் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் காவி கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பர்னாலி சட்டர்ஜி என்ற கணவனை இழந்த கிறிஸ்தவப் பெண்ணைத் ஒரு கும்பல் தாக்கியுள்ளது. கிறிஸ்தவ மதத்தை கைவிட்டு இந்து மதத்திற்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதுடன், கோவில் கட்டுவதற்காக அவரது சொத்தை வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளது. அக்கும்பலுக்கு பயந்து அண்டை வீட்டார் யாரும் தடுக்காத நிலையில், அக்கும்பல் பெண்ணின் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளது.

பங்குரா மாவட்டத்தைச் சேர்ந்த போதகர் ராஜீவ் தாஸ் கூறியதன் அடிப்படையில், ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தை காவி கும்பல் ஒன்று குறுக்கிட்டு நிறுத்தி பைபிள்களைப் பறிமுதல் செய்ததோடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட வழிபாட்டாளர்களை தடுத்து நிறுத்தி தற்காலிகக் காவலில் எடுப்பது போல அச்சுறுத்தியுள்ளது.

சோனார்பூர் சுபாஷ்கிராமில் உள்ள மிசோ சினோட் அமைப்பிற்கு சொந்தமான தேவாலயத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அங்கு வந்த மர்ம கும்பல் ஜன்னல்களை உடைத்தும், பலிபீடத்தை அவமதித்தும், பிரார்த்தனைக்கு பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளை சேதப்படுத்தியும் உள்ளது. மேலும், இனிவரும் காலங்களில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தக் கூடாது என்று எச்சரிக்கும் வகையில் சுவர்களில் வாசகங்களை எழுதிவிட்டுச் சென்றுள்ளதாக தேவாலயத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் தலைவர்கள் இந்தத் தாக்குதலை மத சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்று கண்டித்துள்ளனர். மேலும், தங்களுக்கு அவசரப் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.


படிக்க: “கிறிஸ்தவ தலித்துக்கு பட்டியல் சாதி அந்தஸ்து பொருந்தாது” – பாசிஸ்டுகளின் ஊதுகுழலாக உச்சநீதிமன்றம்


பூர்பா பர்தமான் மாவட்டத்தின் கட்வா உட்பிரிவில் உள்ள பரிக்பூரில், உள்ள “கிரேஸ் தேவாலயம்” ஞாயிறு வழிபாட்டின் போது தாக்கப்பட்டது. இதுகுறித்து பாஸ்டர் சுராஜித் கோஷ் கூறுகையில், “எங்களுக்கு எதிராகத் தவறான மற்றும் வன்முறையைத் தூண்டக்கூடிய குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது சமூக அமைதியையும் வகுப்புவாத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கக்கூடும். எனது பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் இதனால் மிகுந்த கவலையில் உள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “எங்கள் சபையினர், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் எங்கள் குடும்பங்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் உண்மையிலேயே கவலைப்படுகிறோம். சரியான நேரத்தில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், இந்த அச்சுறுத்தல்கள் தேவையற்ற அசம்பாவிதங்களுக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.” என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவர்கள் தவிர இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்களும், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்களும் மேற்குவங்கத்தில் தீவிரமடைந்து வருகின்றன. இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுகின்ற பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை மறு ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான ஒரு குழுவை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சட்ட வரைவை ஆய்வு செய்து அதன் பரிந்துரைகளை வழங்குவதற்கு அக்குழுவிற்கு நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டு ஆகஸ்ட் மாதத்தில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த அரசு உத்தேசித்துள்ளதாக முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்திருப்பது; பக்ரீத் பண்டிகைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக பொது இடங்களில் மாடு எருமைகளை வெட்டுவதற்கு தடை விதித்தது; பொது இடங்களில் தொழுகை நடத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதித்தது; மத வழிபாட்டுத் தளங்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது; ஓ.பி.சி. இட ஒதுக்கீடு பிரிவிலிருந்து 77 இஸ்லாமிய பிரிவினரை நீக்கி இட ஒதுக்கீட்டை பறித்தது போன்ற பாசிச நடவடிக்கைகள் மூலம் இஸ்லாமியர்கள் மீதும், அவர்களின் வழிபாட்டு உரிமை மீதும் சட்டத்தின் வழியே தாக்குதல் தொடுத்து வருகிறது பாசிச கும்பல்.

கிறிஸ்தவர்கள் – இஸ்லாமியர்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றும் நோக்கத்தில் அம்மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்ற பாசிச கும்பலுக்கு எதிராக மேற்குவங்க மக்கள் வீதிகளில் இறங்கி மாபெரும் போராட்டங்கள கட்டியமைக்க வேண்டும். மனித குலத்திற்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் இம்மண்ணிலிருந்து அகற்றப்படும் போதுதான் அனைத்து மக்களுக்குமான வாழ்வை உறுதி செய்ய முடியும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க