இஸ்லாமியர்களின் இட-ஒதுக்கீட்டைப் பறிக்கும் தீர்ப்பு: த.வெ.க. அரசின் இரட்டை வேடத்தை திரைகிழிப்போம்!

16 ஜூலை 2026 தமிழ்நாடு-புதுச்சேரி முழுவதும் ஆர்ப்பாட்டம்

இஸ்லாமியர்களின் இட-ஒதுக்கீட்டைப் பறிக்கும் தீர்ப்பு:
த.வெ.க. அரசின் இரட்டை வேடத்தை திரைகிழிப்போம்!

பார்ப்பனியச் சதியை முறியடிப்போம்!

16 ஜூலை 2026
தமிழ்நாடு-புதுச்சேரி முழுவதும்
ஆர்ப்பாட்டம்

உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே!

  • தமிழ்நாட்டில், மதம் மாறிய இஸ்லாமிய மக்களின்
    இட-ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கும்
    உயர் நீதிமன்றத் தீர்ப்பை இரத்து செய்வதற்கான
    மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்போம்!
  • இஸ்லாமியர்களின் இட-ஒதுக்கீடு பறிக்கப்படுவதை
    வேடிக்கைப் பார்த்துவிட்டு, மேல்முறையீடு என்ற பெயரில்
    ஏமாற்று நாடகமாடும் த.வெ.க. அரசின்
    முகமூடியைக் கிழித்தெறிவோம்!
  • இந்துராஷ்டிரத்தை நிறுவும் நோக்கில், ஒட்டுமொத்த
    இட-ஒதுக்கீட்டு முறையையும் சிதைத்துவரும்
    பாசிச மோடி கும்பலின் பார்ப்பனியச் சதியை முறியடிப்போம்!
  • நமது நாட்டின் உழைக்கும் மக்களுக்கு உண்மையான
    சமூக நீதியையும், சமத்துவத்தையும் வழங்கும்
    பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைக்க உறுதியேற்போம்!

பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் ஒன்றிணைவோம்!
தேர்தலுக்கு வெளியே மாநில, மாவட்ட, வட்டார அளவிலான
ஜனநாயகத்துக்கான மக்கள் கூட்டமைப்புகளைக் கட்டியமைப்போம்!

உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே!

அண்மையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மாநில உரிமையை காலில் போட்டு மிதித்து, சமூகத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு சிறுபான்மையினர், தலித் மக்கள், பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பாசிச கும்பலின் சதித் திட்டத்தின் அங்கமாகும்.

நீதிமன்றத்தின் கரசேவை

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜூன் 25, 2026 அன்று ஓர் அநீதியான தீர்ப்பை வழங்கியுள்ளது. இஸ்லாமியராக மதம் மாறிய ஒருவர், “பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்” (BCM) தகுதியைக் கோர முடியாது என்றும், “அவர் வெறும் இஸ்லாமியர் மட்டுமே” (He is only a Muslim) என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2006-இல் சச்சார் கமிட்டி அறிக்கை, பல மாநிலங்களில் இஸ்லாமியர்களின் கல்வி மற்றும் சமூக நிலை மிக மோசமாக இருப்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தது. இவ்வறிக்கையின் அடிப்படையிலும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின்படியும் 2007-இல் பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவிகித இட ஒதுக்கீட்டிலிருந்து இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவிகித தனி உள்-ஒதுக்கீடு (BCM) தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது. இது, அன்சாரி, தக்காணி இஸ்லாமியர்கள், துடேகுலா, லெப்பை (ராவுத்தர், மரைக்காயர் உட்பட), மாப்பிளா, ஷேக், சையத் ஆகிய ஏழு பாரம்பரிய இஸ்லாமிய சமூகங்களுக்குப் பொருந்தும் வகையில் சட்டமியற்றப்பட்டது.

இதன் பிறகு 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை 31-ஐ வெளியிட்டது. அது, பட்டியலினத்தவர் (SC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC), சீர்மரபினர் (DNC), பிற்படுத்தப்பட்டோர் (BC) ஆகிய எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இஸ்லாத்திற்கு மாறினாலும் அவர்களுக்கும் மேற்குறிப்பிட்ட ஏழு இஸ்லாமிய பிரிவுகளின் கீழ் சான்றிதழ் வழங்கி, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவிகித ஒதுக்கீட்டின் பலன்களை அளிக்க வழிவகை செய்தது.

தற்போது, தமிழ்நாடு அரசின் இந்த அரசாணை 31-ஐ சட்டவிரோதமானது என்று கூறி உயர்நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு மதம் மாறிய இஸ்லாமியருக்கு “பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்” சான்றிதழ் வழங்குமாறும், அரசாணை 31-ஐப் பின்பற்றுமாறும் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு நேர்மாறாக உயர்நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு இத்தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

இஸ்லாமியர்களுக்கு துரோகமிழைக்கும் த.வெ.க. அரசு!

த.வெ.க. ஆட்சிக்கு வந்த இரண்டு மாதங்களில், சிறுபான்மை மக்களுக்கு எதிராக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு வழங்கிய மூன்று தீர்ப்புகள்:

  • பக்ரீத் பண்டிகையின் போது அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மாடு, கன்று பலியிடுவதற்குத் தடை!
  • கோயம்புத்தூர், காளப்பட்டியில், தேவாலயம் கட்டுவதற்கு “தீய நோக்கம் இருக்கக்கூடும்” என்று கூறி இடைக்காலத் தடை!
  • இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகைக்கு முன்னதாக, மதம் மாறிய இஸ்லாமியர்களின் இட-ஒதுக்கீட்டு உரிமை பறிப்பு!

“திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்” என்ற ஆர்.எஸ்.எஸ்-இன் கலவர திட்டத்திற்குத் துணைபோகும் வகையில், திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே கார்த்தீகை தீபம் ஏற்ற உத்தரவிட்டவரும் இவர்தான்.

ஆனால், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆர்.எஸ்.எஸ்-இன் திட்டங்களை தீர்ப்புகளாக வழங்குவதை த.வெ.க. அரசு கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது.

ஆனால், “சிறுபான்மையினருக்கான அரசு” என்று மார்தட்டிக் கொள்ளும் த.வெ.க. அரசு, கூடுதல் கால அவகாசம் கேட்டு பதில் மனுத் தாக்கல் செய்வதற்கோ, வழக்கைக் கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றுவதற்கோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

தற்போது “தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போகிறோம்” என்று அரசு அறிவித்திருப்பது அப்பட்டமான நாடகமும், இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கும் துரோகமுமாகும்.

காவிகளின் மதமாற்றத் தடை நிகழ்ச்சிநிரலுக்கு துணைபோகும் நீதிமன்றங்கள்

பன்னெடுங்காலமாக இந்தியாவில் கோலோச்சிவரும் பார்ப்பனிய ஆதிக்கத்தின் விளைவாக இந்திய சமூகமே சாதிய சமூகமாக மாற்றப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகங்கள் சாதிப் பாகுபாட்டிலிருந்து விடுபட மதம் மாறினாலும் அவர்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலைமை மாறிவிடுவதில்லை. அம்மக்கள் மீதான சாதிய ஒடுக்குமுறை தொடரவே செய்கிறது.

எனவே, மதம் மாறிய காரணத்திற்காக அம்மக்களின் இட-ஒதுக்கீட்டை மறுப்பது அப்பட்டமான அயோக்கியத்தனமாகும்.

கடந்த மார்ச் மாதத்தில், தலித் ஒருவர் கிறிஸ்தவராக மாறினால் அவர் பட்டியல் சாதி அந்தஸ்தைக் கோர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்பட்டமான பார்ப்பனிய இந்துத்துவக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட இத்தீர்ப்பின் அடியொற்றியே தற்போது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அடங்கிய அமர்வின் தீர்ப்பும் அமைந்துள்ளது.

இத்தீர்ப்புகள் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 25 வழங்கும் மத சுதந்திர உரிமையை மறுக்கின்றன; மதம் மாறினால் உரிமைகளை இழக்க நேரிடும் என்கிற அச்சுறுத்தலை விதைத்து, மறைமுகமாக மதமாற்றத் தடையை நிறுவும் சதி இதில் ஒளிந்துள்ளது.

இந்தியாவில் “இந்து மதம்” எனும் ஒற்றை மதத்தை நிறுவத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பல், பௌத்த, சீக்கிய மதங்களை விழுங்குவதையும் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை ஒழித்துக் கட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. “தாய் மதத்திற்குத் திரும்புதல்” (கர்வாப்சி) என்ற பெயரில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் தொடுக்கிறது. பாசிஸ்டுகளின் இந்த நிகழ்ச்சிநிரலுக்குச் சேவையாற்றுவதாகவே நீதிமன்றத் தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன.

கேள்விக்குறியாகும் மாநில உரிமை

நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறித்து அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றும் வகையில், மத்திய, மாநில பாஜக அரசுகள் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. அவை:

* குடியுரிமை திருத்தச் சட்டம் * வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் * முத்தலாக் தடைச் சட்டம் * கால்நடை பாதுகாப்பு மற்றும் இறைச்சி தடைச் சட்டம், * மத சுதந்திர மசோதா 2026 * கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் * கலவரப் பகுதிகள் சட்டம்

கர்நாடகாவில், முந்தைய பா.ஜ.க. ஆட்சியில், ஓ.பி.சி. பிரிவில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவிகித தனி உள் இட-ஒதுக்கீட்டை இரத்து செய்து, அதை லிங்காயத்துகள் மற்றும் ஒக்கலிகர்களுக்கு தலா 2 சதவிகிதம் எனப் பிரித்து வழங்கியது. இதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

மேற்குவங்கத்தில், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கொல்கத்தா உயர்நீதிமன்றம் 2024-இல் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, ஓ.பி.சி. இட-ஒதுக்கீட்டுப் பட்டியலிலிருந்து 77 இஸ்லாமியப் பிரிவினரை நீக்கி ஓ.பி.சி. இட-ஒதுக்கீடு 17-இலிருந்து 7 சதவிகிதமாக சுருக்கப்பட்டுள்ளது.

தற்போது, தமிழ்நாட்டில் மதம் மாறிய இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டும்தான் இஸ்லாமியர்களுக்கு தனி உள் இட-ஒதுக்கீடு வழக்கப்படுகிறது. ஒரு சமூக மக்கள் பின்தங்கியுள்ளனரா என்பதைத் தீர்மானித்து இட-ஒதுக்கீடு வழங்கும் உரிமை மாநில அரசுகளுக்கு உள்ளது.

மேற்கண்ட பாசிச சட்டங்களின் மூலம் மத்திய, மாநில அரசுகள் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் உரிமைகளைப் பறிப்பதுடன் மாநிலங்களின் உரிமையையும் பறித்து விடுகின்றன. இதற்கு நீதிமன்றங்களும் கரசேவை செய்கின்றன.

நீதிமன்றங்களே நீதியை மறுக்கின்றன;
சட்ட பூர்வமாக உரிமைகளைப் பறிக்கின்றன.
இந்த அரசியல் சட்டமே சங்கிகளுக்கு உகந்ததாக மாற்றப்படுகிறது.

ஆகையால், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித் மக்கள், பழங்குடி மக்கள், உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள்வோம்!
பாசிசத்திற்கு எதிரான ஜனநாயாகக் குடியரசமைக்கும் நோக்கில் கூட்டமைப்புகளைக் கட்டியமைப்போம்!
சமூக நீதி, சமத்துவத்தை வென்றெடுப்போம்!

இணைந்து பயணிக்க:
9962366321 – 9791653200
9444836642 – 7397404242

படிக்க: புதிய ஜனநாயகம்
பார்க்க: வினவு, பெருவிழா

நிதி ஆதரவு தாரீர்!

98402 49210 (G-Pay)

மக்கள் அதிகாரக் கழகம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு),
தமிழ்நாடு – புதுச்சேரி.
9962366321, 9791653200,
9444836642, 7397404242.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க