21.06.2026

கோவை: தேவாலயம் கட்டுவதற்கு இந்துத்துவ கும்பல் எதிர்ப்பு!

இந்துத்துவா கும்பலின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் தீர்ப்பு வழங்கும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்!!

பத்திரிகைச் செய்தி

கோயம்புத்தூர் நகரம் காளப்பட்டியிலுள்ள மாரியம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள நிலத்தில் சி.எஸ்.ஐ கிறிஸ்து அரசர் தேவாலயம் கட்டுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை மே 29 அன்று வழங்கியபோது, நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு மதக் கலவரங்களைத் தூண்டும், இந்துத்துவ கும்பலுக்குத் துணை போகும் கருத்துகளைத் தெரிவித்துள்ளது.

2010-ஆம் ஆண்டில், கோயிலுக்கு அருகிலுள்ள நிலத்தில் ஒரு தேவாலயம் கட்டுவதற்கு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினார். 2011-ஆம் ஆண்டில், மாரியம்மன் கோவில் பக்தர்கள் என்ற போர்வையில் இந்துத்துவ கும்பல் முன்மொழியப்பட்ட கட்டுமானத்திற்கு எதிராக கோயம்புத்தூர் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் ஒரு உரிமையியல் வழக்கைத் தாக்கல் செய்தனர். அந்த வழக்கு நிலுவையிலிருந்தபோது, மாவட்ட ஆட்சியரும் கோயம்புத்தூர் வடக்கு வருவாய் கோட்ட அலுவலரும் மே 2023-ல் தேவாலய கட்டுமானத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கி உத்தரவுகளைப் பிறப்பித்தனர். இருப்பினும், தேவாலய கட்டுமானத்திற்கு எதிராக இந்துத்துவ கும்பல் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பின்னர் மாவட்ட ஆட்சியர் ஜூன் 2023-ல் கட்டுமானத்தை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பித்தார்.

தென்னிந்திய திருச்சபை (CSI), மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு எதிராக 2024-ல் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்தது. அதனை நீதிபதி எம். தண்டபாணி 2026, ஏப்ரல் 28 அன்று தீர்ப்பளித்து, 2011-ஆம் ஆண்டு உரிமையியல் வழக்கு முடிவடைந்த பிறகு, கட்டுமானத்திற்காக ஒரு புதிய விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய சி.எஸ.ஐ-க்கு அனுமதி வழங்கினார். அதன் பிறகு, இந்துத்துவ கும்பலைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (RDO) ஆகியோரால் 2023-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து ரிட் மனுவை 2026, மே மாதம் தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான வழக்கின் தீர்ப்பில் நீதிபதிகள், “கோயம்புத்தூர் ஒரு மத உணர்வு மிகுந்த நகரம். இங்கு குண்டுவெடிப்புகளும், இரத்தம் சிந்தும் மதக் கலவரங்களும் நிகழ்ந்துள்ளன. முன்மொழியப்பட்ட தேவாலயம், தற்போதுள்ள மாரியம்மன் கோவிலிலிருந்து கல் எறியும் தூரத்தில் அமையவுள்ளது. இங்கு ஒரு சில கிறிஸ்தவக் குடும்பங்களே உள்ளன. மாரியம்மன் கோவிலின் அருகாமையில் ஒரு பெரிய தேவாலயம் கட்ட முன்மொழியப்பட்டால், அதில் தீய நோக்கங்கள் இருக்கக்கூடும் என்பதை மறுக்க முடியாது.” என்று மதக் கலவரத்திற்குத் துணை போகும் வகையிலான கருத்துகளை தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். இவையன்றி, மனுதாரரின் வழக்கறிஞர் முன்வைத்த மதக்கலவர, சிறுபான்மையினர் மீதான வெறுப்பு கருத்துகளை நீதிபதிகள் ஏற்று அதனை தங்களது தீர்ப்பிலும் முன்மொழிந்துள்ளனர்.

மேலும் முன்மொழியப்பட்ட கட்டடம் மத மாற்றத்திற்காகப் பயன்படுத்தப்படலாம் என்ற மனுதாரரின் வழக்கறிஞரின் ஆதாரமற்ற அவதூறை அங்கீகரிக்கும் வகையில் நீதிபதிகள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

தேவாலயம் கட்டுவதற்கு இந்துத்துவ கும்பல் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் இந்துக்கள் பெரும்பான்மையினர் எதிர்ப்பு தெரிவித்ததாக நீதிபதிகள் பொய்யான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இது தமிழ்நாட்டில் மக்களிடையே நிலவிவரும் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் கருத்துகளாக உள்ளன.

இவ்வாறு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதக்கலவரத்தைத் தூண்டுவதற்குத் திட்டமிட்டு வேலை செய்து வரும் இந்துத்துவ கும்பலின் செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உகுந்த வகையிலும் தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையிலும் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துகளை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.


இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கோவை மாவட்டம்.
9488902202

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க