கொடைக்கானல் – பூம்பாறை பகுதியில் சாதியப் படுகொலை | ம.அ.க. கண்டனம்

ராமரின் வீட்டிற்கு வந்த முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ரகு என்பவர் அவர்களது குதிரை தனது நிலத்தில் மேய்ந்ததாகக் கூறி ராமரையும் பிரசாந்தையும் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, 5 பேர் கொண்ட சாதிவெறி கும்பல், இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். சம்பவ இடத்திலேயே ராமர் உயிரிழந்தார். உடன் சென்ற பிரசாந்த் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

 01.08.2026

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், பூம்பாறை பகுதியில்
சாதியப் படுகொலை

மக்கள் அதிகாரக் கழகம் கண்டனம்

பத்திரிகைச் செய்தி

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களான ராமர் (26) மற்றும் பிரசாந்த் (20) ஆகியோர் மலைப்பகுதியிலிருந்து காய்கறிகளைக் குதிரையில் கொண்டு வந்து வாகனத்தில் ஏற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 30.07.2026 அன்று இரவு, ராமரின் வீட்டிற்கு வந்த முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ரகு என்பவர் அவர்களது குதிரை தனது நிலத்தில் மேய்ந்ததாகக் கூறி ராமரையும் பிரசாந்தையும் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, 5 பேர் கொண்ட சாதிவெறி கும்பல், இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். சம்பவ இடத்திலேயே ராமர் உயிரிழந்தார். உடன் சென்ற பிரசாந்த் படுகாயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்குதலில் சம்பந்தப்பட்ட ரகு என்பவர் மட்டும் போலீசில் சரணடைந்துள்ளார். சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் அதுவரை ராமரின் உடலை வாங்க மாட்டோம் என்றும் அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்திற்கு ஜனநாயக சக்திகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட ரகு என்பவர் ஏற்கெனவே பல கொலை மற்றும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளவர். அப்படி இருந்தும் போலீஸ் சாதிவெறியர்களுக்கு ஆதரவாக மெத்தனப் போக்கோடு தாக்குதலில் ஈடுபட்ட மற்றவர்களைக் கைது செய்யாமல் இருந்து வருகிறது. போலீசின் இந்த அலட்சியப் போக்கை மக்கள் அதிகார கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறது.

சமீப காலமாக தமிழ்நாட்டில் சாதிய வன்முறைகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களின் மீது வன்முறை தொடுக்கப்பட்டு வரும் நிலையில் பெரும்பாலான சூழலில் அவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கால் ஊன்றுவதற்காக ஆர்.எஸ்.எஸ். கும்பல் சாதி சங்கங்களை நிறுவி அதன் மூலம் மக்களிடையே ஆதிக்கச் சாதி வெறியைப் பரப்பி வருகிறது. இதுவே தமிழ்நாட்டில் சாதிய தாக்குதல்கள் அதிகரிப்பதற்கு பிரதான காரணமாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்-இன் செல்வாக்கு அதிகரித்து வருவதை தொடரும் ஆதிக்கச் சாதி வெறி தாக்குதல்களோடு பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசே!

  • ஆதிக்கச்சாதி வெறியைத் தூண்டும் சாதி சங்கங்களைத் தடை செய்!
  • பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கு!
  • தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்!


இவண்,
தோழர் சிவகாமு,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை மேற்கு மாவட்டம்.
7826847268

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க