எல் நினோ வெப்பத்தால் பலியாகும் உழைக்கும் வர்க்கம்!

ஏசி அறைகளோ, ஊதியத்துடன் கூடிய விடுப்போ இல்லாத இந்த முறைசாரா மற்றும் கிக் தொழிலாளர்கள் மீதுதான், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான ஒட்டுமொத்த பொருளாதாரச் சுமையும் ஈவுஇரக்கமின்றித் திணிக்கப்படுகிறது. அவர்கள் தங்களின் ஆரோக்கியத்தையும் வருமானத்தையும் விலையாகக் கொடுத்தே இந்த அதீத வெப்பத்தை சமாளித்து வருகின்றனர்.

மீபகாலமாகச் செய்திகளில் நம்மைப் பெரிதும் அச்சுறுத்தும் ஒரு சொல்லாக “எல்-நினோ” (El Niño) மாறியிருக்கிறது. “கொதிக்கும் கடல், அச்சுறுத்தும் வெப்பம்” என அன்றாடம் செய்தி வெளியிடும் ஊடகங்கள், மக்களிடையே பரபரப்பு ஊட்டுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. மாறாக, எல்-நினோவால் அதிகம் பாதிப்படையப் போவது யார், இயற்கை பேரிடர்கள் தீவிரமாவதற்கு காரணம் என்ன, இதற்கு யார் பொறுப்பேற்பது போன்ற கேள்விகளுக்கு அவை பதிலளிப்பதில்லை. ஏனெனில், இத்தகைய கேள்விகளுக்குப் பதிலளித்தால் ஆளும் வர்க்கத்தின் கோர முகம் அம்பலமாகிவிடும் என்பதே உண்மை.

எல் நினோ என்றால் என்ன?

பசிபிக் பெருங்கடலின் பூமத்திய ரேகையை ஒட்டிய மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில், கடலின் மேற்பரப்பு வெப்பநிலை (Sea Surface Temperature) சராசரியை விட அதிகரித்தால் அதை “எல் நினோ” என்கிறார்கள். இதற்கு நேர்மாறாக, கடலின் வெப்பநிலை சராசரியை விடக் குறைந்தால் அது “லா நினா” (La-Niña ) எனப்படுகிறது.

பொதுவாக, இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் இந்த எல் நினோ நிகழ்வு ஒன்பது முதல் பதினெட்டு மாதங்கள் வரை நீடிக்கலாம்.

பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியை விட 0.5 டிகிரி செல்சியஸ் முதல் 1.5 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தால் அது சாதாரண எல் நினோ என்றும், இந்த வெப்பநிலை உயர்வு 2.0 டிகிரி செல்சியஸ்க்கு மேல் அதிகரிக்கும் போது அது “சூப்பர் எல் நினோ” என்றும் அழைக்கப்படுகிறது.

அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அமைப்பு, இந்த ஆண்டு சூப்பர் எல் நினோ உருவாவதற்கான வாய்ப்பு 96 சதவிகிதம் இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் விளைவாக, 2026 அல்லது 2027-ஆம் ஆண்டு நவீன மனித வரலாற்றிலேயே “மிகவும் வெப்பமான ஆண்டாக” மாறப்போகிறது.

பொதுவாக எல் நினோ ஆண்டுகளில், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் கடுமையான வறட்சியும், பருவமழைப் பொய்ப்பும் ஏற்படும். அதேநேரம், பெரு, ஈக்வடார் போன்ற தென் அமெரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாகக் கடுமையான மழையும் வெள்ளப்பெருக்கும் ஏற்படும். கடல் நீர் வெப்பமடைவதால், மீன்களின் உணவான பாசிகள் அழிந்து, மீன் வளம் கடுமையாகப் பாதிப்படையும். கோடைக்காலத்தில் வழக்கத்தை விடக் கடுமையான வெப்ப அலைகள் (Heatwaves) வீசக்கூடும்.

அதிலும், முதலாளித்துவத்தின் கட்டற்ற இயற்கை வளச் சுரண்டலால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் இயற்கை பேரிடர்களைத் தீவிரப்படுத்தி வரும் சூழலில், எல் நினோ நிகழ்வும் காலநிலை மாற்றத்தினால் பெரும் வீரியமடைந்துள்ளது. இதனால், வரலாறு காணாத வெப்ப அலைகளும், தீவிர இயற்கை சீற்றங்களும் உருவாகும். ஐரோப்பிய நாடுகள் தற்போது எதிர்கொண்டு வரும் வரலாறு காணாத வெப்ப அலையே இதன் தீவிரத்தை உணர்வதற்குப் போதுமான சான்றாகும்.

ஐரோப்பிய நாடுகளை வாட்டி வதைக்கும் வெப்பம்

காலநிலை மாற்றத்தின் விளைவாக, உலகிலேயே மிக வேகமாக வெப்பமடைந்து வரும் கண்டமாக ஐரோப்பா மாறியுள்ளது. தற்போது, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், எல் நினோ இந்நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

தற்போது ஐரோப்பிய நாடுகளை வாட்டி வதைத்துவரும் வெப்பத்திற்கு “ஹீட் டோம்” (Heat Dome) என்ற நிகழ்வு முக்கிய காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இது உயர் அழுத்த வளிமண்டலம் காரணமாக, சூடான காற்று வெளியேறவிடாமல் நிலப்பரப்பிலேயே அடைத்து வைக்கப்படும் நிகழ்வாகும்.

இந்நிலை நீடிக்கும் போது, ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனப் பகுதியிலிருந்து வரும் கடுமையான வெப்பக் காற்றும் இந்த உயர் அழுத்த மண்டலத்தோடு இணைந்து ஐரோப்பாவிலேயே தங்கிவிடுகிறது. தற்போது நிலவும் எல் நினோ சூழல் இந்த வளிமண்டல முடக்கத்தை  மேலும் வலுப்படுத்துகிறது. இவை அனைத்தும் ஒன்றிணைந்துதான், ஐரோப்பாவில் தற்போது நிலவும் வரலாறு காணாத வெப்ப அலைக்கு வழிவகுத்துள்ளது.

ஐரோப்பாவில் கடும் வெப்பத்தால் உருகியிருக்கும் இரயில் தண்டவாளங்கள்.

பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் தீவிரமான வெப்ப அலை காரணமாக “ரெட் அலர்ட்” (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது; பள்ளிகளும் சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.

பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கோல்ஃபெக் (Golfech) அணுமின் நிலையத்தில், அணு உலையைக் குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் அருகிலுள்ள ஆற்றின் நீர்நிலை 28 டிகிரி செல்சியஸ் என்ற பாதுகாப்பான அளவைத் தாண்டி வெப்பமடைந்ததால், அங்கிருந்த ஓர் அணு உலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கத்தால் இரயில் தண்டவாளங்கள் வளைவது, தார் சாலைகள் உருகுவது போன்ற பாதிப்புகளால் மக்கள் பயணங்களை தவிர்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன் உச்சமாக பிரான்சில் கடுமையான வெப்பத்தைத் தாங்க முடியாமல், பாதுகாப்பு இல்லாத நீர்நிலைகளில் குளித்ததில் இதுவரை 55 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த அவலம் அரங்கேறியுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்று அந்நாட்டுப் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளார். இத்தாலியின் பார்மா (Parma) நகரில், 3 நாட்களில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்டோர் வெப்பப் பாதிப்புகளால் மருத்துவமனைகளின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவில் உள்கட்டமைப்புகள் மற்றும் வீடுகள் (ஏசி வசதிகள் குறைவு) குளிர்ச்சியான காலநிலைக்கு ஏற்பக் கட்டப்பட்டவை என்பதால், மக்கள் வீட்டிற்குள்ளும் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்தியாவின் உழைக்கும் மக்கள்
எதிர்கொண்டிருக்கும் அபாயம்

இதற்கு முன்னர் 2014–2016 காலக்கட்டத்தில் ஏற்பட்ட சூப்பர் எல் நினோ, இந்தியாவில் கடுமையான பாதிப்புகளை உண்டாக்கியது. மகாராஷ்டிராவின் மராத்வாடா போன்ற பகுதிகளில் மழையின்றி கடுமையான வறட்சியையும் விவசாய அழிவையும் அது ஏற்படுத்தியது; அதே வேளையில் தமிழ்நாட்டில், சென்னையில் வரலாறு காணாத பெருவெள்ளத்தையும் பெருஞ்சேதத்தையும் உண்டாக்கியது.

பொதுவாக, எல் நினோ இந்தியாவின் தென்மேற்குப் பருவமழையைப் பாதிக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த பருவமழையில் 75 சதவிகிதம் தென்மேற்குப் பருவமழையையே சார்ந்துள்ளது. மேலும், இந்தியாவின் முக்கிய விவசாயப் பருவமான “காரிஃப் பருவம்” முற்றிலும் தென்மேற்குப் பருவமழையை மையப்படுத்தியே தொடங்குகிறது. இந்த ஆண்டு எல் நினோ தாக்கத்தால் தென்மேற்குப் பருவமழை 10 சதவிகிதத்திற்கும் மேல் கடுமையாகக் குறையும் என இந்திய வானிலை மையம் (IMD) கணித்துள்ளது. இது விவசாயிகளுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 150 முதல் 200 மாவட்டங்கள், எல் நினோவால் விவசாயத்தில் அதிக பாதிப்படையக்கூடிய அபாயகரமான (High-risk) மாவட்டங்களாக ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.

இப்பருவமழை வெறும் பயிர்களுக்கு மட்டுமின்றி, நாட்டின் முக்கிய நதிகளின் நீர்வரத்திற்கும், பிரம்மாண்ட அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் (Reservoirs) நிரம்புவதற்கும் காரணமாகிறது. எனவே, இப்பருவமழை குறைவதால் இந்தியாவில் பல பகுதிகள் கடுமையான நீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும்.

விவசாயிகளுக்கு அடுத்து எல் நினோவின் அதீத வெப்பத்தின் நேரடித் தாக்குதலுக்கு மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுபவர்கள் முறைசாரா தொழிலாளர்களும் கிக் (Gig) தொழிலாளர்களும் ஆவர். அதீத வெப்பத்தில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் டெலிவரி தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், வெயிலில் வேலை செய்யும் கட்டுமானப் பணியாளர்கள் ஆகியோர் தலைவலி, மயக்கம், வாந்தி, நீர்ச்சத்து இழப்பு, காய்ச்சல் மற்றும் வெப்பவாதம் (Heatstroke) போன்ற கடுமையான உடல்நலக் கோளாறுகளை எதிர்கொள்கின்றனர்.

முறைசாரா தொழிலாளர்களின் வருமானம் அவர்களின் அன்றாட உழைப்பை மட்டுமே நம்பியுள்ளது. அதீத வெப்பம் காரணமாக அவர்கள் மதிய நேரங்களில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டியுள்ளது அல்லது அவர்களது உடல் சோர்ந்துவிடுகிறது. வேலைக்குச் செல்லாத நாட்கள் என்பது அவர்களுக்கு வருமானம் இல்லாத நாட்களாகும். ஓர் ஆய்வின்படி, சராசரி தினசரி வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் உயரும்போது, திறந்தவெளி முறைசாரா தொழிலாளர்களின் வருமானம் 16 சதவிகிதம் குறைகிறது.

கிக் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, அவர்களை வேலைக்கு அமர்த்தும் பெருநிறுவனங்கள் போதிய ஓய்விடங்களையோ, குடிநீர் வசதிகளையோ அல்லது வெப்ப அலை குறித்த முறையான எச்சரிக்கைகளையோ வழங்குவதில்லை. அவர்கள் போக்குவரத்து நெரிசலில், சுட்டெரிக்கும் சாலைகளில் பல மணிநேரம் தவிக்கின்றனர்; டெல்லியில் மதிய நேரங்களில் சாலையின் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் இருசக்கர வாகனத்தின் மேற்பரப்பு 47 முதல் 55 டிகிரி செல்சியஸிற்கு மேல் பதிவாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

வீட்டு வேலை செய்யும் பெண்கள், தெருவோர வியாபாரிகள், கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் நெசவாளர்கள் போன்ற முறைசாரா பெண் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் மோசமானது.

சுருக்கமாகச் சொன்னால், ஏசி அறைகளோ, ஊதியத்துடன் கூடிய விடுப்போ இல்லாத இந்த முறைசாரா மற்றும் கிக் தொழிலாளர்கள் மீதுதான், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான ஒட்டுமொத்த பொருளாதாரச் சுமையும் ஈவுஇரக்கமின்றித் திணிக்கப்படுகிறது. அவர்கள் தங்களின் ஆரோக்கியத்தையும் வருமானத்தையும் விலையாகக் கொடுத்தே இந்த அதீத வெப்பத்தை சமாளித்து வருகின்றனர்.

இந்தியாவில் தீவிரமாகும் நீர்ப் பற்றாக்குறை

இந்தியாவில் உள்ள 166 முக்கிய நீர்த்தேக்கங்களில் தற்போது அவற்றின் மொத்த கொள்ளளவில் வெறும் 28.28 சதவிகிதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. குறிப்பாக, ஏப்ரல் 30 முதல் மே 14 வரையிலான வெறும் இரண்டு வார காலகட்டத்தில் மட்டும் சுமார் 8 பில்லியன் கன மீட்டர் (BCM) நீர் இருப்பு குறைந்துள்ளது.

தென்னிந்திய நீர்த்தேக்கங்கள் மிகக் கடுமையான அழுத்தத்தில் உள்ளன; அங்கு வெறும் 20.98 சதவிகிதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. கர்நாடகாவின் பத்ரா அணையில் 3.17 சதவிகிதம், கபினி அணையில் 17.08 சதவிகிதம், மற்றும் தமிழ்நாட்டின் வைகை அணையில் 10.88 சதவிகிதம் என்ற மிகக் குறைந்த அளவிலேயே நீர் உள்ளது.

ஜார்க்கண்டின் சந்தன் அணை, மகாராஷ்டிராவின் பீமா-உஜானி, உத்தரப் பிரதேசத்தின் மௌதாஹா ஆகிய அணைகள் கிட்டத்தட்ட முழுமையாக வறண்டு, சுழிய (பூஜ்ய) நீர் இருப்பு என்ற நிலையை எட்டியுள்ளன.

உலகிலேயே அதிக அளவு நிலத்தடி நீரை (ஆண்டுக்கு சுமார் 240 பில்லியன் கன மீட்டர்) உறிஞ்சும் நாடாக இந்தியா உள்ளது. போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர் மீளுருவாக்கம் செய்யப்படுவது தடுக்கப்படுகிறது. இந்தியாவின் கிராமப்புறங்களில் 85 சதவிகித குடிநீர் தேவையும், நகர்ப்புறங்களில் 50 சதவிகித குடிநீர் தேவையும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பியுள்ளன. நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்குச் செல்வதால் பாசனச் செலவுகள் அதிகரிப்பதோடு, கோடிக்கணக்கான மக்களின் அன்றாட குடிநீர்த் தேவை பெரும் கேள்விக்குறியாகிறது.

நீர்ப்பற்றாக்குறையின் தீவிரம் காரணமாக, புனே போன்ற முக்கிய நகரங்களில் குடிநீர் விநியோகம் ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற அளவில் ரேஷன் முறையில் (Water rationing) வழங்கப்பட்டு வருகிறது. 2030-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் நீர் தேவை இருமடங்காக அதிகரிக்கும் என்றும், இதனால் இந்தியாவின் மக்கள்தொகையில் 40 சதவிகிதம் பேர், அதாவது சுமார் 50 கோடி (500 மில்லியன்) மக்கள் குடிநீர் வசதியின்றித் தவிக்கும் பேராபத்து உள்ளதாகவும் தரவுகள் எச்சரிக்கின்றன.

இந்தியாவில் குடிநீருக்காகப் பெண்கள் படும் துயரம் மிக அதிகம். மராத்வாடா மற்றும் புந்தேல்கண்ட் போன்ற வறட்சியான பகுதிகளில், பெண்கள் குடிநீர் தேடி நாளொன்றுக்கு 4 முதல் 6 மணி நேரம் வரை வெயிலில் அலைய வேண்டியுள்ளது. இது அவர்களின் உடல்நலனைக் கெடுப்பதுடன், சிறுநீர் பாதை தொற்றுகள் (UTIs) மற்றும் மகப்பேறு சிக்கல்களுக்கும் வழிவகுக்கிறது.

000

காலநிலை மாற்றம் என்பது புதிதாக எதையும் உருவாக்குவதில்லை; மாறாக, இயற்கை பேரிடர்களின் தீவிரத்தன்மையை பல மடங்கு அதிகரிக்க செய்கிறது. ஓர் ஆண்டில் பெய்ய வேண்டிய ஒட்டுமொத்த மழையும் ஒரே நாளில் கொட்டித் தீர்ப்பதே இதன் வெளிப்பாடு. சான்றாக, கடந்த 2023-இல் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 95 செ.மீ. மழை பெய்து, ஒட்டுமொத்தப் பகுதியையும் பெருவெள்ளக் காடாக்கியது.

தற்போதைய சூழலில், “பேரிடர்களுக்கு இடைப்பட்ட வாழ்க்கை” (Life between disasters) என்பதே சாமானிய மக்களின் புதிய இயல்புநிலையாக மாறிவிட்டது. புவி வெப்பமயமாதலின் தரவுகளின்படி, 1984 பிப்ரவரிக்குப் பின் பிறந்த எந்தவொரு குழந்தையும் தன் வாழ்நாளில் ஒரு சாதாரண (Normal) மாதத்தைக் கூட பார்த்ததில்லை என்பதே அறிவியல் உண்மை. ஒவ்வொரு ஆண்டும், முந்தைய ஆண்டை விடப் புவியின் வெப்பம் உக்கிரமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நடுத்தர மற்றும் மேட்டுக்குடி வர்க்கத்தினருக்கு வெப்பம் அதிகரித்தால், தங்களின் அறைகளில் உள்ள குளிரூட்டியின் (AC) அளவைக் குறைப்பது தீர்வாக உள்ளது. ஆனால், சமூகத்தின் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான அடித்தட்டு உழைக்கும் மக்களான கட்டுமானத் தொழிலாளர்கள், கிக் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தெருவோர வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரத்தையே முற்றிலுமாக இழந்து நிற்கின்றனர்.

ஆனால், நம்மை ஆளும் பாசிச ஒன்றிய மோடி அரசோ அல்லது மாநில அரசோ, இத்தகைய தீவிரப் பேரிடர்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மேற்கொள்வதில்லை. மிகக் கொடூரமாக, வெப்பத்தால் மடியும் ஏழை மக்களை, “வெப்ப அலையால் இறந்தனர்” (Heatwave Deaths) என்று அரசு நிர்வாகங்கள் முறையாக ஆவணப்படுத்துவது கூட இல்லை. அவ்வாறு ஆவணப்படுத்த மறுப்பதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குச் சென்றடைய வேண்டிய உரிய இழப்பீடுகளையும் தட்டிப்பறிக்கின்றனர்.

கிக் தொழிலாளர்களும் இதர முறைசாராத் தொழிலாளர்களும் காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்யக் கூடாது எனப் பருவநிலை ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். அந்த உச்சகட்ட வெப்ப நேரத்தில் வேலை செய்ய முடியாத டெலிவரி ஊழியர்கள், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீட்டை அரசே வழங்க வேண்டும். ஆனால், ஆட்சியாளர்கள் அத்தகைய வழிகாட்டுதல்களையோ, இழப்பீட்டையோ வழங்கத் துளியும் முன்வருவதில்லை.

விவசாயத் துறையைப் பொறுத்தவரை, விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களை எளிய முறையில் முறைப்படுத்த வேண்டும். வறட்சி மற்றும் வெள்ளக் காலங்களைத் தாங்கி வளரக்கூடிய பாரம்பரிய நெல் ரகங்களையும், சிறுதானியங்களையும் அரசு உடனடியாகக் கண்டறிந்து, அவற்றை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த ஆளும் அரசுகள் கிஞ்சித்தும் தயாராக இல்லை. அதிலும் பாசிச மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து காலநிலை மாற்றத்தை இன்னும் தீவிரமாக்கக்கூடிய இயற்கை வளச் சுரண்டல்களைத் தீவிரப்படுத்துவதையே முதன்மைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. உழைக்கும் மக்களின் உயிர் குறித்தோ, அவர்களின் வாழ்வாதாரம் குறித்தோ பாசிச கும்பலுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் பெருநிறுவனங்களின் கல்லாப்பெட்டிகளை நிரப்புவது மட்டுமே இக்கும்பலின் ஒரே நோக்கமாக உள்ளது.

எனவே, காலநிலை மாற்றத்தால் பேரிடர்கள் யாவும் அன்றாட இயல்புநிலையாக மாறிவரும் இச்சூழலில், நம் நிலத்தையும், வாழ்வாதாரத்தையும், நம் உழைக்கும் மக்களின் உயிரையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின், கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யும் ஆளும் பாசிச கும்பலை வீழ்த்துவது ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் முதன்மையான கடமையாகும்!


மதி

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க