ஒரு கையில் புத்தகப்பை. இன்னொரு கையில் தண்ணீர்ப் புட்டி. நெஞ்சில் பல ஆண்டுகளாகச் சுமந்த கனவு. “எங்கள் வினாத்தாளை விற்றது யார்? எங்கள் எதிர்காலத்தைத் திருடியது யார்?” என்ற கேள்வியுடன் மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி நடந்தார்கள்.
அவர்களிடம் பதில் சொல்லக் கல்வி அமைச்சர் வரவில்லை. தடுப்பரண்கள் வந்தன. துணை ராணுவம் வந்தது. கண்ணீர்ப்புகை வந்தது. லத்திகள் வந்தன.
நாடாளுமன்றத்தின் குளிரூட்டப்பட்ட மண்டபத்திற்குள் தேசம், ஜனநாயகம், இளைஞர்களின் எதிர்காலம் என்று ஆட்சியாளர்கள் பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில், வெளியே அந்த “தேசத்தின் எதிர்காலம்” அடித்து நொறுக்கப்பட்டது.
ஜூலை 20 அன்று டெல்லியில் நடந்த நாடாளுமன்றப் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். சில மதிப்பீடுகள் கூட்டம் 50,000-ஐத் தாண்டியதாகக் கூறுகின்றன. தடியடியிலும் கண்ணீர்ப்புகைத் தாக்குதலிலும் பலர் தலைக்காயம், எலும்பு முறிவு, இரத்தக் கட்டு, ஆழமான வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். ஆனால் தடியடி விழுந்ததும் கூட்டம் கரைந்துவிடவில்லை. தாக்குதலின் காட்சிகள் பரவியபோது, அதுவரை வீட்டில் இருந்தவர்களும் தெருவை நோக்கி வந்தனர். டெல்லியில் எழுந்த குரல் மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் எதிரொலித்தது.
மறுநாள் ஜந்தர் மந்தரில் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் இருந்தவர்களை மட்டும் எண்ணி, “ஐயாயிரம் பேர்” என்று மோடி ஊடகங்கள் செய்தி போட்டன. முதல் நாளில் டெல்லியை நிரப்பிய மக்கள் வெள்ளத்தையும், நாடெங்கும் பரவிய ஆதரவையும் அந்தச் சிறிய சட்டகத்துக்குள் அடைத்துவிட முயன்றன. ஆனால் ஒரு போராட்டத்தின் அளவைப் போலீசு வளையத்துக்குள் நிற்க அனுமதிக்கப்பட்ட தலைகளின் எண்ணிக்கையால் அளக்க முடியாது. அடிக்கப்படும் ஒவ்வொரு உடலுக்குப் பதிலாக எத்தனை புதிய கரங்கள் உயர்கின்றன என்பதில்தான் அதன் வலிமை இருக்கிறது.
டெல்லியில் வெடித்தது ஒரு நாள் கோபமல்ல. பல ஆண்டுகளாக இளைஞர்களின் நெஞ்சுக்குள் அடைக்கப்பட்டிருந்த அவமானம், ஏமாற்றம், வேலையின்மை, எதிர்காலமின்மை ஆகியவற்றின் வெடிப்பு.
தோல்வியடைந்தது மாணவர்கள் அல்ல
ஆட்சியாளர்களுக்கு இளைஞர்கள் தேவை. ஆனால் தலையாட்டும் இளைஞர்களாக…
விலையுயர்ந்த பயிற்சி மையங்களுக்கு இலட்சக்கணக்கில் பணம் செலுத்த வேண்டும். தேர்வு எழுத வேண்டும். வினாத்தாள் கசிந்தால் மீண்டும் எழுத வேண்டும். வேலை கிடைக்காவிட்டால் மேலும் படிக்க வேண்டும். வயது கடந்துவிட்டால் தங்களையே குற்றம் சொல்ல வேண்டும். அரசு வேலைவாய்ப்புகளை அழித்தாலும், “உன்னிடம் திறமை இல்லை” என்ற அவமானத்தை அமைதியாகச் சுமக்க வேண்டும்.
அத்தகைய இளைஞர்களைத்தான் அவர்கள் “புதிய இந்தியா” என்று புகழ்கிறார்கள்.
ஆனால் அந்த இளைஞர்கள் ஒன்றாக நின்று, “வினாத்தாள் எப்படிக் கசிந்தது?”, “கல்வி அமைச்சர் ஏன் பதவி விலகவில்லை?”, “எங்கள் தோழர்களின் மரணத்திற்கு யார் பொறுப்பு?” என்று கேள்வி கேட்டவுடன், அரசின் மொழி மாறிவிடுகிறது. நேற்று வரை “தேசத்தின் எதிர்காலம்” என்று புகழப்பட்டவர்கள் இன்று “சட்டம்–ஒழுங்குக்கான அச்சுறுத்தலாக” மாற்றப்படுகிறார்கள்.
ஒரு வினாத்தாள் கசிவு என்பது சில கேள்விகள் முன்கூட்டியே வெளியான சம்பவமல்ல. அதன் பின்னால் ஒரு குடும்பத்தின் முழு வாழ்க்கை இருக்கிறது. நிலத்தை அடமானம் வைத்த விவசாயி இருக்கிறார். நகையை விற்ற தாய் இருக்கிறார். ஓய்வூதியத்தை எடுத்த தந்தை இருக்கிறார். ஒரு பிள்ளையின் படிப்புக்காக மற்ற பிள்ளைகளின் தேவைகளை ஒதுக்கிய வீடு இருக்கிறது.
கல்வி அவர்களுக்கு அறிவைப் பெறுவதற்கான வாய்ப்பு மட்டும் அல்ல. வறுமையிலிருந்தும் சாதிய இழிவிலிருந்தும் பாதுகாப்பற்ற உடல் உழைப்பிலிருந்தும் தப்பிக்கலாம் என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத்தான் தேர்வு மாஃபியாக்களும் பயிற்சி மைய முதலாளிகளும் ஊழல் அதிகாரிகளும் விலைக்கு விற்கிறார்கள்.
இந்தத் தேர்வு முறையே சமமானதல்ல. பணக்காரனின் பிள்ளைக்கு உயர்கட்டணப் பள்ளி, தனிப்பட்ட ஆசிரியர், பயிற்சி மையம், ஆங்கிலப் புலமை, தடையற்ற இணையம். ஏழையின் பிள்ளைக்கு ஆசிரியரில்லாத அரசுப் பள்ளி, நூலகமில்லாத கிராமம், வேலை செய்துகொண்டே படிக்க வேண்டிய வாழ்க்கை. தேர்வறைக்குள் நுழைவதற்கு முன்பே வர்க்கமும் சாதியும் மொழியும் மாணவர்களின் முடிவுகளை எழுதத் தொடங்கிவிடுகின்றன.
இந்த அநீதியான முறையில் மிச்சமிருந்த குறைந்தபட்ச நியாயத்தையும் வினாத்தாள் கொள்ளை அழித்துவிட்டது. அதனால்தான் டெல்லியில் எழுந்தது ஒரு தேர்வை மீண்டும் நடத்தக் கோரும் கூட்டமல்ல. தங்களைத் திட்டமிட்டுத் தோற்கடிக்கும் அமைப்புக்கு எதிராக விழித்தெழுந்த தலைமுறை.
வேலையற்ற இளைஞர்களைக் “கரப்பான்பூச்சிகள்” என்று அவமதித்தார்கள். அந்த இழிசொல்லையே அவர்கள் தங்கள் கொடியாக மாற்றிக் கொண்டார்கள். இணையத்தில் எழுந்த நையாண்டி தெருவில் மக்கள் இயக்கமாகியது. மீம் துண்டறிக்கையானது. கைப்பேசி கேமரா அரசின் குற்றத்துக்குச் சாட்சியானது.
தோல்வியடைந்தது மாணவர்கள் அல்ல, அவர்களின் உழைப்பைக் கொள்ளையடித்த இந்த அரசும், கல்வியைச் சந்தையாக மாற்றிய இந்த அமைப்பும்தான்…
சீருடையைக் கழற்றிய பாசிச அரசு
டெல்லியில் மாணவர்களைத் தாக்கியது சீருடை அணிந்த போலீசு மட்டும் அல்ல. சாதாரண உடையில், பெயர்ப் பட்டையின்றி, நீளமான கம்புகளுடன் போலீசின் வரிசையில் நின்ற ஆட்களும் மாணவர்கள் மீது பாய்ந்தனர்.
“நீங்கள் யார்? ஏன் சீருடை இல்லை?” என்று ஒரு மாணவர் கேட்டார். பதிலாக மீண்டும் தடியடி விழுந்தது.
காட்சிகள் பரவிய பிறகு டெல்லி போலீசே உண்மையை ஒப்புக்கொண்டது. அவர்கள் வெளியில் இருந்து வந்த “அடையாளம் தெரியாதவர்கள்” அல்ல; சீருடையின்றி நிறுத்தப்பட்ட போலீசுதான் என்று. சட்டம்–ஒழுங்குப் பணிக்கான கூடுதல் படை என்று அதற்கு விளக்கம் வேறு கூறப்பட்டது.
போராட்டத்தைக் கண்காணிக்கச் சாதாரண உடையில் போலீசை நிறுத்துவது வேறு. பெயரை மறைத்து, தடிகளுடன் மக்களைத் தாக்க அனுப்புவது வேறு. இது காவல் பணி அல்ல; அரசே நடத்திய குண்டர் தாக்குதல்.
சீருடை அணிந்த போலீசு தடுப்பரணை அமைத்தது. சீருடையைக் கழற்றிய போலீசு தடிகளுடன் பாய்ந்தது. அடிபட்ட மாணவர்கள் மீதே பின்னர் வழக்குகள் போடப்பட்டன. டெல்லி போலீசு அமித்ஷாவின் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. ஆகவே இந்தத் தாக்குதல் சில போலீசின் தன்னிச்சையான அத்துமீறல் அல்ல. மோடி–அமித்ஷா அரசின் நேரடிப் பொறுப்பு.
இதுவரை சங்கப் பரிவாரக் குண்டர்களை போலீசு பாதுகாத்தது. ஜே.என்.யூ-வில் முகமூடி அணிந்த ஏ.பி.வி.பி. குண்டர்கள் மாணவர்களையும் ஆசிரியர்களையும் தாக்கியபோது போலீசு அருகில் நின்றது. குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களில் காவிக் கும்பல்கள் இஸ்லாமிய மக்கள் மீது பாய்ந்தபோது போலீசு அவர்களுக்கு அரணாக இருந்தது. விவசாயிகள் டெல்லி எல்லையில் முகாமிட்டபோது, “உள்ளூர் மக்கள்” என்ற பெயரில் ஆளும் கட்சியின் குண்டர்கள் தடுப்பரண்களைக் கடந்து அனுப்பப்பட்டனர்.
இப்போது ஒரு படி மேலே சென்றிருக்கிறார்கள். சங்கப் பரிவாரக் குண்டர்களைப் பாதுகாப்பதோடு நிற்காமல், தங்கள் போலீசையே சீருடையைக் கழற்றிச் சங்கப் பரிவாரக் குண்டர்களின் வேலையைச் செய்ய வைத்திருக்கிறார்கள்.
சீருடையில் அடிப்பதும் அவர்கள்தான். சீருடையைக் கழற்றி அடிப்பதும் அவர்கள்தான். காவிக் குண்டரை அனுப்புவதும் அவர்கள்தான். பின்னர் “இரு தரப்பினரிடையே மோதல்” என்று செய்தி வாசிக்கச் செய்வதும் அவர்கள்தான்.
இது ஒரு தடியின் கதை அல்ல. ஆர்.எஸ்.எஸ்.–பா.ஜ.க. பாசிச ஆட்சியின் அரசியல் முறை.
டெல்லியிலிருந்து சென்னை வரை ஒரே தடி
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு முதல்வர் விஜய், டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதை பெயரளவிற்குக் கூட கண்டிக்காமல், நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்கிறார். டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாகச் சென்னையில் போராடிய இளைஞர்களைக் கைது செய்யத் த.வெ.க. அரசின் போலீசு அனுப்பப்படுகிறது.
சென்னை எழும்பூரில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் வலுக்கட்டாயமாகத் தடுத்து வைக்கப்பட்டனர். தலைமைச் செயலகத்தின் முன்பு நீட் எதிர்ப்பு முழக்கம் எழுப்பிய பாடகர் அறிவுவை போலீசு பிடித்து இழுத்துச் சென்றது. எதிர்ப்பு எழுந்த பின் அவரை முதல்வர் சந்தித்தார். ஆனால் முதலில் போலீசு வண்டியில் ஏற்றிய கரங்களை அந்தச் சந்திப்புப் புகைப்படம் மறைத்துவிடாது.
“சாலைகள் போராட்டம் நடத்துவதற்கான இடமல்ல” என்று த.வெ.க. அமைச்சர் கூறுகிறார். அப்படியானால் மக்கள் எங்கே போராட வேண்டும்? அரசு மேடை அமைத்து, போலீசு நேரம் குறித்து, போக்குவரத்துக்குத் தொந்தரவு வராதபடி, ஆட்சியாளர்களின் தூக்கம் கலைக்காதபடி முழக்கம் போட வேண்டுமா?
போராட்டம் ஆட்சியாளர்கள் வழங்கும் அனுமதிச் சீட்டு அல்ல. அநீதியால் நசுக்கப்பட்ட மக்கள் கைப்பற்றிக்கொள்ளும் ஜனநாயக உரிமை.
டெல்லியில் மாணவர்களை அடிப்பது பா.ஜ.க. அரசின் போலீசு. சென்னையில் அவர்களின் குரலை நெரிப்பது த.வெ.க. அரசின் போலீசு. கொடிகளின் வண்ணம் வேறாக இருக்கலாம். ஆனால் போராடும் மக்களை எதிர்கொள்ளும்போது இந்த வர்க்க அரசுகளின் தடி ஒரே மொழியைத்தான் பேசுகிறது.
மெரினாவில் மாணவர்களையும் மீனவ மக்களையும் தாக்கியதும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களைச் சுட்டுக் கொன்றதும், இன்று நீட் எதிர்ப்பாளர்களைக் கைது செய்வதும் ஒரே பாடத்தைத் திரும்பத் திரும்பச் சொல்கின்றன: தேர்தல் கட்சிகள் மாறலாம்; மக்களைக் கட்டுப்படுத்தும் அரச இயந்திரத்தின் வர்க்கக் குணம் தானாக மாறாது.
பா.ஜ.க-வின் பாசிசத்தையும் எதிர்க்க வேண்டும். அதே போலீசு அரசியலைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தும் த.வெ.க. அரசின் இரட்டைவேடத்தையும் அம்பலப்படுத்த வேண்டும். மக்களின் போராட்டத்தை எந்தத் தேர்தல் கட்சியின் கருணையிடமும் ஒப்படைக்க முடியாது.
மாணவர் குரலோடு விவசாயியின் கரம்
மாணவர்கள் தனியாக இல்லை.
ரகேஷ் திகாயத் தலைமையில் சுமார் 500 விவசாயிகள் ஜந்தர் மந்தருக்கு வந்து, மாணவர் போராட்டத்துடன் இணைந்தனர். சம்யுக்த கிசான் மோர்ச்சா போலீசுத் தாக்குதலைக் கண்டித்ததுடன், கல்வி அமைச்சரின் பதவி விலகல் உள்ளிட்ட மாணவர்களின் கோரிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவித்தது.
இது வெறும் அனுதாபச் சந்திப்பு அல்ல. தேர்வறையில் அமர்ந்திருக்கும் இலட்சக்கணக்கான மாணவர்கள் விவசாயிகளின் பிள்ளைகள். மாணவரின் எதிர்காலம் கொள்ளையடிக்கப்படும்போது, அதன் வலி முதலில் விழுவது கிராமத்து வீட்டில்தான்.
அதே நேரத்தில் பஞ்சாபிலிருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் பேருந்துகள், டிராக்டர்கள், பிற வாகனங்களில் டெல்லியை நோக்கிப் புறப்பட்டனர். இந்தியா–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் வேளாண்மையையும் பால் உற்பத்தியையும் அமெரிக்கப் பெருநிறுவனங்களுக்கு திறக்கக் கூடாது; இரகசியமாக நடைபெறும் பேச்சுவார்த்தையின் ஆவணங்களை வெளியிட வேண்டும் என்பவை அவர்களின் கோரிக்கைகள். ஆனால், ஹரியானா போலீசு அவர்களை ஹரியானா-பஞ்சாப் எல்லையிலேயே தடுத்து நிறுத்தியது.
மாணவர்களின் கோரிக்கையும் விவசாயிகளின் கோரிக்கையும் வெவ்வேறாகத் தோன்றலாம். ஆனால் அவர்களை நசுக்கும் கரம் ஒன்றே.
மாணவரின் தேர்வுத் தாளைப் பயிற்சி மைய முதலாளிக்கும் தேர்வு மாஃபியாவுக்கும் விற்கிற அரசு, விவசாயியின் வயலையும் பால் சந்தையையும் அமெரிக்கப் பெருநிறுவனத்துக்குத் திறக்கிறது. ஒருவரின் எதிர்காலத்தை விற்கிறது; இன்னொருவரின் வாழ்வாதாரத்தை விற்கிறது. எதிர்த்துக் கேட்டால் மாணவருக்குக் தடியடி; விவசாயிக்குத் தடுப்பரண்.
மாணவரைத் தனியாக வைத்தால் அவரது கோபத்தை “தேர்வுப் பிரச்சினை” என்று அடைத்துவிடலாம். விவசாயியைத் தனியாக வைத்தால் அவரது போராட்டத்தை “வேளாண் பிரச்சினை” என்று ஒதுக்கிவிடலாம். தொழிலாளியின் வேலைநிறுத்தத்தை ஊதியத் தகராறாகச் சுருக்கலாம். இஸ்லாமிய மக்கள் தாக்கப்பட்டால் மதப் பிரச்சினை என்றும், தலித் மக்கள் தாக்கப்பட்டால் உள்ளூர் சாதிச் சண்டை என்றும் பிரித்துவிடலாம்.
நம்மைத் தனித்தனியாகப் பிரித்து, தனித்தனியாக அடிப்பதுதான் பாசிசத்தின் மிகப்பெரிய பலம்.
இனி தனித்தனியாக அடிபட மாட்டோம்!
இந்த நேரம் இன்னொரு தேர்தல் கூட்டணிக்காகக் காத்திருக்கும் நேரமல்ல. வாக்குப்பதிவு நெருங்கும்போது உருவாகி, முடிவுகள் வந்ததும் கரைந்துவிடும் தலைவர்களின் மேடை முன்னணி நமக்குத் தேவையில்லை.
தொழிற்சாலைகளில், வயல்களில், கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில், கிராமங்களில், தொழிலாளர் குடியிருப்புகளில் அடித்தளத்திலிருந்து பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்ட வேண்டிய நேரம் இது.
தொழிற்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களை மாணவர்களின் போராட்டத்துக்கு அழைக்க வேண்டும். விவசாயச் சங்கங்கள் கல்விக் கொள்ளைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். மாணவர் அமைப்புகள் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களுக்கும் விவசாயிகளின் போராட்டங்களுக்கும் செல்ல வேண்டும். பெண்கள், தலித், பழங்குடி, சிறுபான்மை மக்கள், ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் மீதான ஒவ்வொரு தாக்குதலையும் உழைக்கும் மக்கள் அனைவர் மீதும் நடத்தப்படும் தாக்குதலாக எதிர்கொள்ள வேண்டும்.
பரந்த ஜனநாயக ஒற்றுமை தேவை. ஆனால் அந்த ஒற்றுமை நாடாளுமன்றக் கட்சிகளின் தேர்தல் வண்டிக்குப் பின்னால் கட்டப்பட்ட வாலாக இருக்கக் கூடாது. தொழிலாளி வர்க்கம் தனது சுயாதீன அரசியலுடன் அதன் முதுகெலும்பாக நிற்க வேண்டும். விவசாயிகள் அதன் உறுதியான கூட்டாளிகளாக வேண்டும்.
அரசின் போலீசு ஏற்கெனவே அமைப்பாக நிற்கிறது. சங்கப் பரிவாரத்தின் குண்டர் படைகள் அமைப்பாக நிற்கின்றன. பெருநிறுவனங்கள் தங்கள் பணத்தோடும் ஊடகங்களோடும் அரசுக்குப் பின்னால் நிற்கின்றன. நம்மை மட்டும் சிதறிய மனிதர்களாக வைத்திருக்கிறார்கள்.
இனி பார்வையாளராக வீட்டில் அமர்ந்திருக்க முடியாது. அருகில் மாணவர்கள் போராடினால் அங்கு செல்லுங்கள். தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தால் அவர்களுடன் நில்லுங்கள். விவசாயிகள் சாலையில் தடுக்கப்பட்டால் அவர்களுக்கு வழி திறக்கக் குரல் கொடுங்கள். அமைப்பு இருக்கும் இடத்தில் இணையுங்கள்; அமைப்பு இல்லாத இடத்தில் உருவாக்குங்கள்.
மாணவரின் குரலுடன் விவசாயியின் கரம் இணையட்டும். விவசாயியின் கரத்துடன் தொழிலாளியின் பலம் இணையட்டும். தனித்தனியாக அடிபட்ட காலம் முடிவடையட்டும்!
ஆளும் வர்க்கமே—உங்கள் பலம் எமது அமைப்பின்மையில்தான் உள்ளது.
அந்த அமைப்பின்மையை இன்றே முடிவுக்குக் கொண்டுவருவோம்!
![]()
காதர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











