
21.06.2026
நீட் தேர்வு: தொடரும் பாசிச மோடி அரசின் படுகொலைகள்!
பத்திரிகைச் செய்தி
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை இந்தியா முழுவதும் 22.4 லட்சம் மாணவர்கள் எழுதினர். ஆனால், மே 8 ஆம் தேதி நீட் வினாத்தாள் கசிந்ததாகக் கூறி, தேசிய தேர்வு முகமை (NTA) தனது நிர்வாகத் தோல்வியை மறைக்க மறுதேர்வை அறிவித்தது. மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு அர்ப்பணிப்புடன் படித்து, தேர்வின் முடிவை ஆவலோடு எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு, தேர்வு ரத்து செய்யப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியது.
இந்த மன உளைச்சலின் காரணமாக, நாடு முழுவதும் இதுவரை 12-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மாணவர்களின் இந்தத் தொடர் உயிரிழப்புகளை ‘மோடி அரசின் படுகொலை’ என்று மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
கோவை மாவட்டம், கோவைப்புதூர் பாரூக் நகரைச் சேர்ந்தவர் செந்தில் பிரபு. இவரது மூத்த மகள் அனு கீர்த்தனா இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தோல்வியடைந்த நிலையில், மூன்றாவது முறையாக மே 3 அன்று தேர்வினை எழுதி நம்பிக்கையோடு காத்திருந்தார். இந்நிலையில், வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பால் ஏற்பட்ட கடும் மன அழுத்தத்தில் மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
இதைத் தொடர்ந்து, தற்போது சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள வெள்ளாளபுரத்தைச் சேர்ந்த கோபிகா (19) என்ற மாணவியின் தற்கொலைச் செய்தியும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவக் கனவோடு நீட் தேர்வுக்குத் தீவிரமாகத் தயாராகி வந்த அவர், ஏற்கெனவே இரண்டு முறை தேர்வை எழுதியிருந்தார். இந்த ஆண்டும் தேர்வை எதிர்கொண்டிருந்த அவருக்கு, தேர்வு ரத்து மற்றும் மறுதேர்வு அறிவிப்பு பெரும் விரக்தியை ஏற்படுத்தியது. இளம்பிள்ளை அருகே உள்ள சின்னப்பம்பட்டியில் தன் பாட்டி வீட்டில் தங்கியிருந்த கோபிகா, மீண்டும் தேர்வை எதிர்கொள்வதில் ஏற்பட்ட தொடர் மன அழுத்தத்தால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அதேபோல், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்தைச் சேர்ந்த மாணவி ரோஷினி (19), கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியைச் சேர்ந்த மாணவர் வெற்றியானந்தம் (20) ஆகியோரும் நேற்று (ஜூன் 20) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
கார்ப்பரேட் பயிற்சி நிறுவனங்களின் லாபத்திற்காக ஆண்டுதோறும் நமது வீட்டுப் பிள்ளைகள் எத்தனை பேரைப் பலிகொடுப்பது?
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்விலும் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், போலி தேர்வு மையங்கள் மற்றும் ‘கருணை’ மதிப்பெண்கள் எனப் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன. அப்போதே நாடு முழுவதும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல மாநிலங்களில் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. ஆனால், முறைகேடுகள் நடந்ததை வேறு வழியின்றி ஒப்புக்கொண்ட பாசிச மோடி அரசு, திமிர்த்தனமாக மறுதேர்வு நடத்த மறுத்துவிட்டது. தற்போது மீண்டும் அதேபோல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதற்கு எதிராகவும் நாடு முழுவதும் மாணவர்கள் போராடி வருகின்றனர்.
“தேசிய தேர்வு முகமை (NTA) போன்ற அமைப்புகளைக் கலைக்க வேண்டும்; நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்; கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்” என்கிற கோரிக்கைகளை முன்வைத்து, மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலமே நீட் தேர்வை ரத்து செய்ய வைக்க முடியும்.
![]()
இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





