நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்தன. இப்போராட்டத்திற்கு அடிபணிந்து ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகினார். இது மாணவர் போராட்டத்திற்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும்.
அத்துடன், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவது, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்தவித வழக்குகளும் பதிவு செய்யாமல் இருப்பது ஆகிய கோரிக்கைகளை ‘கொள்கை அளவில்’ (in principle) ஏற்றுக்கொள்வதாக ஒன்றிய பா.ஜ.க. அரசு உறுதியளித்தது.
ஆனால், மாணவர் எழுச்சியைக் கண்டு அஞ்சிய பாசிச மோடி அரசு இதுபோன்ற மாணவர் எழுச்சிகள் இனிமேல் நடைபெறக்கூடாது என்பதற்காக மாணவர்களை வேட்டையாடி வருகிறது. அதிலும். இஸ்லாமிய மாணவர்களே அதிகம் குறிவைக்கப்பட்டு வருகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஜுனைத் டெல்லியில் போராடிய மாணவர்களுக்கு இறுதி வரை உணவும் குடிநீரும் வழங்கும் தன்னார்வலராகச் செயல்பட்டு வந்தார். ஜூலை 24 ஆம் தேதி இரவு வெறிநாய்க் கடிக்கு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது அவரை டெல்லி போலீஸ் என்று கூறிக்கொண்டு காரில் ஏற்றிக்கொண்டு போய் மறைவான இடத்தில் வைத்து, அவரின் கண்களைக் கட்டி உணவு வழங்குவதற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் காலையில் உத்தராகண்டில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். மேலும் அவரின் வயதான தந்தையை விசாரணை என்ற பெயரில் அழைத்து சித்திரவதை செய்வது, குடும்பத்தினரின் ஆவணங்களை வாங்கி வீட்டைச் சோதனையிட்டு மிரட்டுவது போன்ற கொடூரங்கள் அரங்கேறியுள்ளன.
ஆனால், மாணவர்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கையை பா.ஜ.க. அரசு இதற்கு முன்னரே தொடங்கிவிட்டது. ஜூன் 20 ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராடும் மாணவர்களைக் கண்காணிப்பதற்கு நிரந்தரக் கண்காணிப்பு கோபுரங்கள், பிரத்தியேக புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வீடியோகிராபர்கள் மூலம் மக்களின் நடமாட்டங்கள் தொடர்ச்சியாகப் பதிவு செய்யப்பட்டன.
மேலும், ‘இக்ஷணா’ (Ikshana) என்ற ஏ. ஐ அடிப்படையிலான மொபைல் கண்காணிப்பு வாகனங்கள் மற்றும் சுற்றியுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் போராட்டக்காரர்களின் முகங்கள் நேரலையாகச் சேகரிக்கப்பட்டு, முக அங்கீகாரத் தொழில்நுட்பம் (FRT) வழியாகச் சரிபார்க்கப்பட்டன. இது தவிர, போராட்டக் களத்தில் இருக்கும் போலீசார் ஸ்மார்ட் கண்ணாடிகள் (Smart Glasses) மற்றும் உடலில் அணியும் கேமராக்களைப் (Body-Worn Cameras) பயன்படுத்தி மாணவர்களை நேரடியாகப் படம் பிடித்துத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களைக் கலைப்பதற்காக நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் சமூக ஊடகங்களில் பெருமளவில் வெளியானது. ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மாணவர்கள் மீது போலீசு கொலைவெறித்தாக்குதல் நடத்தியதானது தற்போது தான் ஊடக வெளிச்சம் பெற்றுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.
மேற்கு வங்கத்தில் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இடதுசரி மாணவர் அமைப்பினர் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இணைந்து சீல்டா முதல் தொரினா சந்திப்பு வரை அமைதி பேரணி நடத்தினர். பேரணி தொரினாவை அடைந்ததும் அங்கிருந்த ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் போலீசார் மீதும் செய்தியாளர்கள் மீதும் கற்கள், பாட்டில்கள் மற்றும் காலணிகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட போலீசு மாணவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியது. இதில் காயமடைந்த மாணவர்கள் கல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் போலீசு மற்றும் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது போலீசு. குண்டாஸ் எனப்படும் மேற்கு வங்க பொதுப் பாதுகாப்பு மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் கட்டுப்பாட்டுச் சட்டம், 2026- ஐ பயன்படுத்தி 14 பேரைக் கைது செய்துள்ளது. இவர்களில் 13 பேர் முஸ்லீம் மாணவர்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
இச்சட்டமானது சந்தேக நபர்களை விசாரணையின்றி ஒரு வருடம் வரை காவலில் வைக்கவும், குறிப்பிட்ட மாவட்டங்களை விட்டு வெளியேற உத்தரவிடவும், சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கிறது. இதிலிருந்தே பா.ஜ.க. அரசின் முஸ்லீம் மாணவர்கள் மீதான ஒடுக்குமுறையைப் புரிந்து கொள்ள முடியும்.
பீகார் பந்த் போராட்டங்களின் போது பாட்னா, சாப்ரா, சிவன் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான மாணவர் – இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் போலீசு மாணவர்களைத் தேடித் தேடி தாக்கியது. சிவன் மாவட்டத்தில் போராடிய மாணவர்கள் மீது ஏ.கே 47-ஐ பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது போலீசு.
பாட்னா உட்பட முக்கிய நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் – இளைஞர்களின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்களை பொதுவெளியில் வெளியிட்டு போலீசு அவர்களை தேடப்படும் குற்றவாளிகள் போலச் சித்தரித்து அச்சுறுத்தி வருகிறது.
அசாம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மன்ஜூர் ரஹ்மான், அஷ்ரஃபுல் இஸ்லாம் மற்றும் அப்துல் காசிம் ஆகிய மூன்று இளைஞர்கள் நாடு முழுவதும் நடைபெற்ற மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக தங்கள் பகுதியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டனர். அதற்காக வாட்ஸ் அப் குழுவையும் உருவாக்கியுள்ளனர்.
இந்த மூன்று இளைஞர்களும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பிரிவுகள் 61(2)(b), 353(1) மற்றும் 152 ஆகியவற்றின் கீழ் (இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு எதிராகச் செயல்படுதல்) வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஜூலை 23 ஆம் தேதி அன்று போலீசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்மேந்திர பிரதான் பதவி விலகியதை அடுத்து கோவாவின் பனாஜி பகுதியில் உள்ள ஆசாத் மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது தானிஷ் என்ற இளைஞர் பொய்யான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர் செயற்பாட்டாளர்கள் உமர் காலித், ஷர்ஜில் இமாம் ஆகியோருக்கு ஆதரவாக அவர்களை விடுதலை செய்யக்கோரும் பதாகையை ஏந்தியிருந்தார். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத போலீசு தானிஷையும் செய்தியாளர்களிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற பொய்யான குற்றச்சாட்டில் சுதீன் தல்வி ஆகியோரை கைது செய்துள்ளது.
மேலும் போலீசின் ஒடுக்குமுறைக்கு எதிராக தீரத்துடன் போராடிய பெண்களைக் கண்டு அஞ்சிய சங்கி கும்பல் அவர்களை ஆபாசமாகச் சித்தரித்து தனிப்பட்ட வாழ்க்கை மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் மும்பையில் போலீசு வாகனத்தைத் தடுத்து நிறுத்திய பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை சங்கிகள் அச்சுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அவர் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.
குறிப்பாக மாணவர் போராட்டத்தில் பங்கேற்ற முகமது ஜுனைத் போன்ற முஸ்லீம் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாசிச மோடி அரசால் வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.
ஆனால் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நீட் (NEET) மோசடிக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய இரண்டு மாணவர்களை, காசியாபாத்தைச் சேர்ந்த ‘ஹிந்து வீர் சேனா’ (Hindu Veer Sena) அமைப்பின் தேசியத் தலைவரான சத்யம் பண்டிட் (Satyam Pandit) என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தடுத்து நிறுத்தி அவர்களின் பெயர்கள், வசிக்கும் இடம் மற்றும் மத விவரங்களைக் கேட்டுள்ளார்.
மேலும் “இந்துவாக இருந்து கொண்டு ஏன் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டாய்?” என மதவெறியுடன் மாணவர்களைக் கடுமையான தகாத வார்த்தைகளால் இழிவாகப் பேசி மாணவர் ஒருவரின் கன்னத்தில் அறைந்துள்ளார். அத்துடன் மாணவர்களை மன்னிப்பு கேட்க வைத்து, இனிமேல் பார்த்தால் கொடூரமாகத் தாக்குவேன் என்று மிரட்டி அனுப்பியுள்ளார். இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. ஆனால் தற்போது வரை போலீசு இவரைக் கைது செய்யவில்லை.
எனவே முஸ்லீம் மாணவர்கள் உள்ளிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்களை வேட்டையாடி வருகின்ற பாசிச மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை அனைவரும் கண்டிக்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவாக மாணவர் அமைப்புகள், புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகள் குரல் கொடுக்க வேண்டும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











