31.07.2026

வந்தேமாதரம் கட்டாய மசோதா:
நாட்டின் பன்முகத்தன்மையின் மீதான பாசிச பா.ஜ.க.-வின் பயங்கரவாத தாக்குதல்

பத்திரிகைச் செய்தி

ஸ்லாமிய வெறுப்புணர்வை ஊட்டுகின்ற வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக்கும் வகையில் “தேசிய பெருமைகள் அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026” பாசிச பா.ஜ.க. அரசால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவை ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் கடந்த ஜூலை 4 அன்று மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார். பின்னர் ஜூலை 29 அன்று மாநிலங்களவையிலும், ஜூலை 30 அன்று மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம், தேசியப் பெருமைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வந்தே மாதரம் பாடலுக்கும் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் தேசிய கீதமான “ஜன கண மன” மட்டுமின்றி, தேசியப் பாடலான “வந்தே மாதரம்” பாடப்படுவதைத் தடுத்தாலோ அல்லது இடையூறு செய்தாலோ, அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

வந்தே மாதரம் என்கிற பாடல் அதன் அடிப்படையிலே இஸ்லாமியர் விரோதத்தைக் கொண்டுள்ளது. பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் எனும் இஸ்லாமிய வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட நாவலில் இடம்பெற்ற வரிகள்தான் வந்தே மாதரம் பாடல் ஆகும்.

அப்பாடலின் வரிகள், இஸ்லாமியர்களை அழிக்க வேண்டுமென்பதையும் இந்து தேசிய, பார்ப்பன, அகண்ட பாரதக் கனவையும் முன்வைக்கின்றன.

பல்வேறு இன, மத, மொழி, பண்பாட்டைக் கொண்ட பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டில் இந்துவெறி, இந்து தேசியவாதத்தை முன்வைக்கின்ற பாடலை பாடவில்லை என்றால் குற்றம் என்பது பலதரப்பட்ட மக்கள் மீது திணிக்கும் பயங்கரவாதமாகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

அரசியலமைப்புச் சபை வந்தே மாதரம் பாடலின் அனைத்து பத்திகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. நாடு குறித்து பாடிய முதல் இரண்டு பத்திகளை மட்டுமே ஏற்றுக் கொண்டதாகவும், மீதமுள்ளவை இஸ்லாமியர் விரோதமாக இருப்பதால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் தி.மு.க.-வின் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா அம்பலப்படுத்தியுள்ளார்.

இம்மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, ஆளுநர் அர்லேகர் பங்கேற்ற தமிழ்நாடு அமைச்சரவை பதவியேற்பிலும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைப் பட்டமளிப்பு விழாவிலும் வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களும் சமஸ்கிருதத்தில் பாடப்பட்டன.

தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு இழிவுபடுத்தப்பட்டது. இது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.

ஆனால் த.வெ.க. விஜய் அரசோ வலுவான எதிர்ப்பைக் காட்டாமல், பாசிச பா.ஜ.க. ஒன்றிய அரசுக்குப் பணிந்து கிடக்கிறது.

இந்த மசோதாவானது சமூகநீதியைப் பேசுபவர்கள், ஜனநாயகத்தை நேசிப்பவர்கள், நாட்டின் பன்முகத்தன்மையை விரும்புபவர்கள் ஆகியோருக்கு எதிராக தாக்குதல் தொடுப்பதற்கான முன்னேற்பாடே ஆகும்.

எனவே, தமிழ்நாடு அரசு ஒருபோதும் இம்மசோதாவை ஏற்கக் கூடாது என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது. “தேசிய பெருமைகள் அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா 2026”-க்கு எதிராக உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் போராட்டக் குரலை ஓங்கி எழுப்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது.


இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க