27.07.2026

திருப்பத்தூர் ஜோலார்பேட்டை: அரசுப் பள்ளி மாணவர்களை
கழிவு நீரை அகற்ற வைத்த அவலம்! | ம.அ.க. கண்டனம்

பத்திரிகைச் செய்தி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கேதாண்டப்பட்டியில் அரசினர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக செந்தில் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர், ஜூலை 24 அன்று, பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறை நிரம்பி உள்ளதால் அதிலிருந்து வெளியேறும் கழிவு நீரை அப்புறப்படுத்த ‌அதே பள்ளியின் மாணவர்களை பணியில் அமர்த்தி பள்ளம் தோண்டச் செய்துள்ளார்.

இந்த பள்ளி மாணவர்கள் வேலை செய்வதை அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் இது குறித்து அந்த மாணவர்களிடம் கேள்வி எழுப்பிய போது, “தலைமையாசிரியர் தான் இந்த வேலையைச் செய்யச் சொன்னார். இதற்கு முன்பு கழிவறையில் அடைப்பு ஏற்பட்டதை நாங்கள் தான் சரி செய்தோம். அதேபோல இன்றும் நாங்களே வேலை செய்கிறோம்” என்றும் “வேலையாட்கள் வராததால் தலைமையாசிரியர் எங்களை வேலை செய்யச் சொன்னார்” என்றும் கூறியுள்ளனர்.

ஏற்கெனவே, ஏப்ரல் 2025-இல் இதே மாவட்டத்தில் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆவரங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில், பள்ளி நேரத்தில் மாணவர்கள் ஆபத்தான முறையில் குடிநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட அவலம் அரங்கேறி உள்ளது.

பள்ளி வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைச் சுத்தம் செய்ய மாணவர்களைப் பள்ளி நிர்வாகம் பயன்படுத்தியது. மேலும் மாணவர்கள் தொட்டியின் உள்ளே இறங்கி சுத்தம் செய்யும் புகைப்படங்கள் ஆதாரத்துடன் வெளியாகின. இதனையடுத்து இப்புகார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

“பள்ளி வளாகத்தில் கற்றல் பணிகளைத் தவிர வேறு எந்தப் பணிகளிலும் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது” என்ற விதியை மீறியதற்காக, திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (CEO) ஆர். புண்ணியகோட்டி விசாரணை நடத்தி, அப்பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ். உமா ராணியை உடனடியாகப் பணி இடைநீக்கம் (Suspension) செய்து உத்தரவிட்டார்.

இது போன்ற தொடர் சம்பவங்கள் நிகழ்ந்து வருவதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இது போல் மாணவர்களை பணியில் அமர்த்தும் தலைமையாசிரியரைப் பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கிருஷ்ணகிரி மாவட்டக் குழு கேட்டுக்கொள்கிறது.

 திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமே!

  • பள்ளி வளாகத்தில் கற்றல் பணிகளைத் தவிர வேறு எந்தப் பணிகளிலும் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது என்பதை உறுதி செய்,
  • மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளையும் உடனடியாக ஆய்வு செய்!
  • மாவட்டத்தின் அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் கற்றல் பணியைத் தவிர வேறு எதுவும் செய்யக் கூடாது என கவுன்சிலிங் கொடு!


இவண்,
தோழர் இரஞ்சித்,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க