சிவகாசி செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் பலி‌: அரசு அதிகாரிகளே முதன்மைக் குற்றவாளிகள்!

கடந்த ஜூலை 26, 2026 அன்று காலை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல் சிதறி பலியாயினர். 90% கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொரு தொழிலாளியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்தது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் பட்டாசு தயாரிப்பு கூடத்தில் கடந்த ஜூலை 26, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் உரிமையாளர் உட்பட மொத்தம் 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

தொழிலாளர்கள் அதிகாலை வேளையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வு அல்லது வெடிப்பு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறி கரும்புகை சூழ்ந்தது.

இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல் சிதறி பலியாயினர். 90% கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொரு தொழிலாளியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்தது.

உயிரிழந்தவர்களின் விபரம்:-

ராம்பிரகாஷ் (வயது 32) – (இடத்தின் உரிமையாளர் / பட்டாசு தயாரிப்பாளர்)

ராமச்சந்திரன் (வயது 40) – (ராம்பிரகாஷின் சகோதரர், தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்)

இன்னாசிமுத்து (வயது 44)

பாண்டித்துரை (வயது 35)

ஐயப்பராஜா (வயது 37) ஆகியோர் உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர். இடிபாடுகளுக்குள் மற்றும் அருகில் உள்ள கிணற்றிலும் சோதனைகள் நடத்தப்பட்டு உடல் பாகங்கள் மீட்கப்பட்டன.

இந்த விபத்தையடுத்து, சிவகாசி கிழக்கு போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தி, விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 11 பேரைக் கைது செய்துள்ளனர்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ₹4 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விதிமுறைகளும், கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகளும்!

உரிய அனுமதியின்றி தகர செட்டுகளிலும் ரகசியமாக பட்டாசு தயாரிக்கப்படுவது, பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாதது, நள்ளிரவு, அதிகாலை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொழிலாளர்களைக் கொண்டு ரகசியமாக பட்டாசு தயாரிப்பது, ஒரு அறையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்ற விதியை மீறி, கூட்டமாக அமர வைக்கப்படுவது, உராய்வினால் தீப்பொறி ஏற்படுவதைத் தடுக்க ரப்பர் பாய்கள், செப்பு கருவிகள் (Copper tools) மற்றும் தொழிலாளர்களுக்கான முகக்கவசங்கள் ஆகிய விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் ஆகியவை கடைப்பிடிக்கப்படாததால் விபத்துகள் அதிகளவில் நடக்கின்றன.

ஆனால் இவ்வாறான ஆய்வுகள் எதுவும் முறையாக நடத்தப்படுவதில்லை. தற்போது செங்கமலப்பட்டி பகுதியில் நடைபெற்ற விபத்தில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தகரக் கொட்டகையில் இயங்கிய பட்டாசு தயாரிப்புக் கூடம் எவ்வித முறையான உரிமமும், அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக மற்றும் ரகசியமாக நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் இயக்கப்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. விபத்துகள் நடந்தபின் கைது, ஆய்வு என்று கண்துடைப்புக்காக சில நடவடிக்கைகள் மேற்கொண்டு தொடர் விபத்துகள் ஏற்பட முக்கியமான காரணமாக அரசு அதிகாரிகள் இருக்கின்றனர்.

அதிகாரிகளே பொறுப்பு!

சட்டவிரோத பட்டாசு ஆலைகளைக் கண்காணித்துத் தடுப்பதில் கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் போலீசாரின் சட்டப்பூர்வ கடமைகள் மற்றும் அவர்களின் பொறுப்புகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு மிகக் கடுமையான உத்தரவுகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது.

சட்டவிரோத பட்டாசு ஆலைகள் கிராமப்புறங்களில் பெருகுவதற்குப் போதிய கண்காணிப்பு இல்லாததே காரணம் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ஒரு வி.ஏ.ஓ. தனக்கு ஒதுக்கப்பட்ட வருவாய் கிராமத்திலேயே தங்கி வசிக்க வேண்டும் என்பது மிக முக்கியமான விதிமுறை. அவர்கள் தங்களுக்குரிய கிராமங்களில் தங்காமல் வெளியூர்களிலிருந்து வருவதால்தான், உள்ளூரில் நடக்கும் சட்டவிரோதப் பணிகள் அவர்களுக்குத் தெரிவதில்லை என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. “அந்தந்த கிராமத்தில் என்ன நடக்கிறது என்பது அங்குள்ள வி.ஏ.ஓ.-வுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அவர்களின் அனுமதியோ அல்லது கவனக்குறைவோ இல்லாமல் சட்டவிரோதப் பட்டாசு கூடங்கள் இயங்க முடியாது” என்று உயர் நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி தனது தீர்ப்பில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

கிராமத்தில் உரிமமின்றி பட்டாசு தயாரிப்பதோ, வெடிபொருட்களைப் பதுக்குவதோ அல்லது விவசாய நிலங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைப்பதோ கண்டறியப்பட்டால், அதுகுறித்து உடனடியாக வட்டாட்சியர் மற்றும் போலீசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டியது வி.ஏ.ஓ.-வின் சட்டப்பூர்வ கடமையாகும். தவறும்பட்சத்தில் அவர்கள் மீதும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பட்டாசு ஆலைகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அந்தந்தப் பகுதி வி.ஏ.ஓ. (VAO) மற்றும் உள்ளூர் போலீசாரே கூட்டுப் பொறுப்பு (Jointly Accountable) ஆவர் என்றும், இதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது குற்றவியல் மற்றும் துறை ரீதியான கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் தெளிவாகக் கூறுகின்றன.

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இதுவரை பல தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதுவரை ஒரு வி.ஏ.ஓ., போலீசார் கூட கைது செய்யப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை.

போலீசாரின் சட்டப்பூர்வ பொறுப்புகள்!

வெடி விபத்துகள் மற்றும் சட்டவிரோத உற்பத்தியைத் தடுப்பதில் போலீசாருக்குத் தனிப்பட்ட சட்டப்பூர்வ பொறுப்புகள் உள்ளன. வெடிபொருள் சட்டத்தின் கீழ் (Explosive Substances Act) பதிவாகும் வழக்குகளை விசாரிக்க, மிக நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட “சிறப்புத் தனிப்படை” (Special Team) ஒன்றை அமைக்க வேண்டும் என்று மாவட்ட போலீசு கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விபத்து நடந்தவுடன் உரிமையாளர்களை மட்டும் கைது செய்யாமல், உரிமமில்லாத தற்காலிக கூடங்களுக்குப் பட்டாசு தயாரிக்கத் தேவையான பேரியம் நைட்ரேட், சல்பர் போன்ற வெடிமருந்து வேதிப்பொருட்களை (Chemicals) விநியோகம் செய்யும் முக்கிய வினியோகஸ்தர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

பட்டாசு ஆலை விபத்துக்களை விசாரிக்கும் போலீசாருக்குப் போதிய தொழில்நுட்ப அறிவு இருக்க வேண்டும். அப்போதுதான் விபத்தின் உண்மையான காரணத்தைக் கண்டறிந்து, நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தர முடியும்.

“விபத்துகள் நடக்கும் போது தொழிலதிபர்களும், அவர்களுக்குத் துணையாக இருக்கும் அரசு அதிகாரிகளும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடுகிறார்கள். விலைமதிப்பற்ற ஏழைத் தொழிலாளர்களின் உயிர்களைக் காப்பது அதிகாரிகளின் தார்மீகக் கடமை; அது அவர்களின் விருப்ப உரிமை அல்ல (Statutory, not discretionary)” என நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.

உரிமம் ரத்து மற்றும் கூட்டுப் பொறுப்பு!

சட்டவிரோத சப்-லீஸ் (Sub-leasing) விடுவது அல்லது உரிம விதிகளுக்குப் புறம்பாகக் கூடுதல் ஆட்களை வைப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக உரிமங்களை ரத்து செய்ய வருவாய்த்துறை மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறைக்கு (PESO) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டாசு உற்பத்தியில் அதிக லாபம் ஈட்டுவதற்காக, விதிமுறைகளைத் தவிர்க்கும் சில ஆலை உரிமையாளர்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்குவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. உரிமம் பெற்ற பெரிய நிறுவனங்கள், தங்களின் பெயரில் சிறிய தற்காலிக கொட்டகைகளுக்கு உள்-குத்தகைக்கு விடுகின்றன. இதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருக்க அதிகாரிகளுக்கு பெருந்தொகை லஞ்சமாகக் கைமாறுவதாகக் கூறப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம் அல்லது தீயணைப்புத் துறையின் திடீர் சோதனையின் போது அனைத்தும் சரியாக இருப்பது போல் நாடகமாடப்படுகிறது.

கட்டட உறுதித்தன்மை, மின்சாரப் பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லாதபோதும், லஞ்சம் பெற்றுக் கொண்டு தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகப் புகார்கள் உள்ளன.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, இந்த லஞ்சக் கலாச்சாரம் மற்றும் அதிகாரிகளின் கடமை தவறுதல் குறித்துப் பலமுறை மிகக் கடுமையான கருத்துகளைப் பதிவு செய்துள்ளது. நீதிமன்ற விசாரணைகளின் போது, “ஒரு கிராமத்தில் நூற்றுக்கணக்கான கிலோ வெடிமருந்துகளைக் கொண்டு சட்டவிரோத பட்டாசு ஆலை இயங்குகிறது என்பது உள்ளூர் போலீசாருக்கும், வி.ஏ.ஓ.-வுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அவர்களின் லஞ்ச ஊழல் அல்லது தார்மீகக் குறைபாடே இதற்கு முதன்மைக் காரணம்” என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதிகாரிகள் மீதான சொத்துக் குவிப்பு விசாரணை:

முறைகேடான பட்டாசு ஆலைகளுக்குத் துணை போகும் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்களின் சொத்து விபரங்களை லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) மூலம் ஏன் சோதிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிவகாசி, விருதுநகர் மற்றும் சாத்தூர் பகுதிகளில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் (Directorate of Industrial Safety and Health), வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை (PESO) மற்றும் தீயணைப்புத் துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் நடத்திய சோதனைகளில் கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் பணமும், பட்டாசுப் பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆலை உரிமையாளர்களிடம் இருந்து தீபாவளி ‘அன்பளிப்பு’ மற்றும் மாதாந்திர லஞ்சம் வாங்கியதாகப் பல அரசு அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தும், இதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும் அது துளியளவும் கடைப்பிடிக்கப்படவில்லை. அதிகாரிகளின் இலஞ்சம் மற்றும் அலட்சியம், தொழிலதிபர்களின் இலாபவெறி ஆகியவை ஏழைத் தொழிலாளர்களின் உயிரைப் பணையம் வைத்துச் சட்டவிரோத வணிகம் தடையின்றி நடக்க வழிவகுக்கிறது.

ஆகவே பட்டாசு ஆலை விபத்துகள் தொடர் கதையாகி, தொழிலாளர்களின் உயிரும், வாழ்க்கையும் பலிவாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிகாரிகளையும், தொழிலதிபர்களையும் இதற்குப் பொறுப்பாக்கி தண்டிக்க வேண்டும். அவர்களின் முறைகேடான சொத்துக்களைப் பறிமுதல் செய்து பாதிப்புக்குள்ளான தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டும். இது சட்டம் மற்றும் நீதிமன்றத்தின் வழியாக நடப்பதற்கான வழிகள் ஏதுமில்லை. தொழிலாளர்கள், ஜனநாயக சக்திகளின் போராட்டத்தின் வழியாக மட்டுமே தொழிலாளர்கள் விபத்து என்கிற பெயரில் கொல்லப்படுவது தடுக்கப்படும். அப்படியான போராட்டத்தைக் களத்தில் கட்டியமைப்போம்.


இரஞ்சித்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க