ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள சமர்லகோட்டா மண்டலத்திற்கு உட்பட்ட வெட்லபாலெம் (Vetlapalem) கிராமத்தில் செயல்பட்டு வந்த சூர்யா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 21 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விவசாய வயல்களுக்கு நடுவே அமைந்துள்ள இந்த பட்டாசு ஆலையில் பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று வழக்கம்போல் 20 முதல் 35 தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டுள்ளனர். மதியம் 2 மணிக்கு திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் தொடர்ந்து வெடித்ததால் உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் நூறு அடிக்கு பறந்து அருகிலுள்ள விவசாய வயல்களுக்குள் சிதறியுள்ளது.
சம்பவம் குறித்து கிராம மக்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த பயங்கர வெடிச் சத்தம் ஐந்து கிலோ மீட்டர் வரை கேட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். பக்கத்துக் கிராமத்தில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியின் அலமாரியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள் எனக் கூறப்படுகிறது. ஒன்பது பேர் 90 முதல் 100 சதவீத தீக்காயங்களுடன் காக்கிநாடா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
பசுமை சூழ்ந்த நெற்பயிர் வயல்களின் நடுவில் உள்ளூர் மக்கள் உரப் பைகளால் செய்யப்பட்ட தாள்களில் சடலங்களை எடுத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகி மனதை உலுக்குகின்றன. பலரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் சிலரின் உடல் முழுமையாகக் கருகியுள்ளதால் டி.என்.ஏ மூலம் அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்களைச் சேமித்து வைத்திருந்த ரசாயன டிரம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஆலை உரிமையாளர்களான ஆதாபா நானி மற்றும் அடபால வீரபாபு குடும்ப உறுப்பினர்கள் மீது அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சமர்லகோட்டா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை; விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
படிக்க: பட்டாசுத் தொழிலாளர்கள் நலன்காக்க என்ன செய்ய வேண்டும்?
இந்நிலையில் வருவாய் பிரிவு அதிகாரி, துணை காவல் கண்காணிப்பாளர், மாவட்ட தொழிலாளர் மற்றும் தீயணைப்பு அதிகாரி ஆகியோரை இடைநீக்கம் செய்துள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர்களின் குழந்தைகளுக்கு இலவச குடியிருப்பு, பள்ளிக் கல்வி அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படும், காயமடைந்தவர்களின் சிகிச்சையை அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் “விரிவான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களைக் கைது செய்வதோடு மட்டுமல்லாமல், வழக்குப் பதிவு செய்து, அவர்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்குவோம்,” என்று தெரிவித்துள்ளார்.
பட்டாசு தொழிற்சாலைக்கு அனுமதி பெறப்பட்டிருந்தாலும், போதுமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது. வெடிபொருட்களைக் கையாள்வதற்கான கட்டாய பாதுகாப்பு நடைமுறைகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து பட்டாசு உற்பத்தி நிலையங்களின் விவரங்களையும் சேகரித்து, தற்போதுள்ள விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யப்படும் என அறிவித்துள்ள சந்திரபாபு நாயுடு “தற்போதைய நெறிமுறைகள் போதுமானதாக இல்லை. அத்தகைய பகுதிகளில் சி.சி.டி.வி கேமராக்கள் நிறுவப்பட்டு கட்டுப்பாட்டு அறைகளுடன் இணைக்கப்படும். இனி அனுமதிகள் வழங்கும் நடைமுறைகள் கடுமையாக்கப்படும்,” என தெரிவித்துள்ளார்.
பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றிச் செயல்படுகின்றதா என்பது குறித்து அரசு ஆய்வு செய்வதில்லை; கண்காணிப்பதில்லை மாறாக விபத்து ஏற்பட்ட பிறகு தன்னுடைய தவறை திட்டமிட்டு மறைப்பதற்காகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவிப்பது, பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்வது, விதிமுறைகளைக் கடுமையாக்குவது போன்றவற்றை மேற்கொள்கின்றன. இவையும் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் அல்லாமல், மக்களின் கோபத்தைத் தனிப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதே போன்றதொரு விபத்து ஏற்பட்டபோது, இரண்டு நபர் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், அதன் பரிந்துரைகள் எதுவும் நடைமுறைப்படுத்தப் படவில்லை. எனவே, 21 பேரைப் படுகொலை செய்த ஆலை நிர்வாகமும் அரசும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











