மேற்குவங்கத்தின் பஸ்சிம் வர்த்தமான் மாவட்டம் ரானிகஞ்ச் மோர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 19-இன் அருகில் நிறுவப்பட்டிருந்த மார்க்சிய எழுத்தாளர் தோழர் ராகுல் சாங்கிருத்தியாயனின் 9 அடி உயர முழு உருவச் சிலையை ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் உடைத்து திருடிச் சென்றுள்ளது.
வரலாற்று ஆசிரியரும் மார்க்சிய ஆய்வாளருமான ராகுல் சாங்கிருத்தியாயனின் “வோல்கா முதல் கங்கை வரை” நூல் உலகப் புகழ் பெற்றது. மேலும், இவர் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடி மூன்று ஆண்டுகள் சிறை சென்றவர். விவசாய சங்கமான அகில இந்திய கிசான் சபாவின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவர். சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக சி.பி.ஐ (எம்) ஆட்சியில் ஏப்ரல் 9, 1994, தோழரின் பிறந்தநாளன்று சிலை நிறுவப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரர் பினாய் கிருஷ்ணா சௌத்ரி என்பவரால் இச்சிலை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில்தான், பாசிச கும்பல் திட்டமிட்ட சதியின் பேரில், கடந்த ஜூலை 13 அன்று இரவு அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை செயலிழக்கச் செய்து, தெருவிளக்குகளை அணைத்துவிட்டு தோழர் சாங்கிருத்தியாயனின் சிலையை உடைத்து அகற்றியுள்ளது.
இந்த வன்முறைக்கு மேற்குவங்க ஜனநாயக எழுத்தாளர்கள் சங்கம், மக்கள் எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் இடதுசாரி கட்சிகள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்; அதே இடத்தில் மீண்டும் சிலையை நிறுவ வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூலை 14-ஆம் தேதி அன்று கலை – இலக்கியவாதிகள் சிலை நிறுவப்பட்டிருந்த இடத்தில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த இடிப்பானது இப்பகுதியின் கலாச்சார பாரம்பரியத்தின் மீதான தாக்குதல் என்றும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அறிஞரின் மற்றும் அறிவுஜீவியின் பாரம்பரியத்தை அழிக்கும் முயற்சி என்றும் கண்டித்துள்ளனர்.
இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத பா.ஜ.க. கும்பல், அன்று மாலை சியர்கோல் கிராமத்தில் உள்ள உள்ளூர் சி.பி.எம். அலுவலகத்திற்குச் சென்று, “சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக பா.ஜ.க. அல்லது மாநில அரசை விமர்சிப்பதை சகித்துக்கொள்ள முடியாது” என்று மிரட்டல் விடுத்துள்ளது. இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, உள்ளூர் மக்களும் கட்சி ஆதரவாளர்களும் அங்கு திரண்டதால் பா.ஜ.க-வினர் அங்கிருந்து சென்றுள்ளனர்.
மேலும், இந்த வன்முறை தொடர்பாக ஜூலை 14-ஆம் தேதி காலையில் ரானிகஞ்ச் போலீசு நிலையத்திலும் பஸ்சிம் வர்த்தமான் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீசு கண்காணிப்பாளரிடமும் சி.பி.எம். சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மால்டாவில் நடைபெற்ற இந்திய தொழிற்சங்க மையத்தின் (CITU) மாநிலக் குழு கூட்டத்திலும் இதனை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குவங்க மாநிலத்தில் மே மாதத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்ற உடனேயே முர்சிதாபாத் மாவட்டத்தின் ஜியாகஞ்ச் பகுதியில் அமைந்திருந்த பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனினின் சிலையை காவி கும்பல் உடைத்து சேதப்படுத்தியது. தற்போது மார்க்சிய எழுத்தாளர் ராகுல் சாங்கிருத்தியாயனின் சிலையையும் உடைத்து அகற்றியுள்ளது.
ஆனால், பாசிச கும்பலால் மார்க்சிய ஆசான்கள், ஆய்வாளர்களின் சிலைகளை அகற்ற முடியுமே தவிர மார்க்சிய தத்துவத்தையும் சிந்தனையையும் கனவிலும் அழிக்க முடியாது. உலக மக்களின் விடுதலைக்கான மார்க்சியம் இந்தியாவிலும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க-வின் பாசிசத்திலிருந்து மக்களை விடுவிக்கும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை!
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











