கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கணையார் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 25 குடும்பங்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு என்று கூறி இடிக்கும் முயற்சியில் வருவாய்த்துறையும் போலீசுதுறையும் இறங்கியுள்ளது. வீடுகள் இடிக்கப்பட்டால் தாங்கள் நடுத்தெருவில் நிறுத்தப்படுவோம் என மக்கள் கதறி அழுதனர். வருவாய்துறை வீடுகளை இடிக்க முயன்றதால் அப்பகுதி பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்; இரண்டு பெண்கள் மயக்கமடைந்துள்ளனர். இதனால் இடிப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டாலும், வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி மக்களை அகதியாக்குவதற்கு வருவாய்துறை குறியாக உள்ளது.
இந்த இடிப்புப் பணியின் போது, “இவ்விடத்தை விட்டு விரட்டியடித்தால் எங்களுக்கு போவதற்கு நாதியில்லை. விஷம் கொடுத்து எங்களை கொன்றுவிட்டு வீடுகளை இடித்துக் கொள்ளுங்கள்” என்று அம்மக்கள் கதறி அழுத காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி நம் நெஞ்சை பிழிகின்றன. இதில், தற்போது ஆக்கிரமிப்பு என்று இடிக்கப்படும் வீடுகள் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டவை என்பதே இன்னும் அவலமான செய்தியாகும்.
000
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் எலவனசூர் கோட்டை வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட கணையார் கிராம எல்லையில் உள்ள சிறுமேடு கிராமத்தில் (புல எண் – 138 ,139) வன்னியர், ஆதிதிராவிடர், உடையார் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 25 குடும்பங்கள் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகின்றனர்.
கணையார், மலையனூர், சேலம் பகுதியில் இருந்து இங்கு ஊர்பஞ்சாயத்துக்கு பணம் கட்டி விவசாயம் மற்றும் கால்நடை தொழில் செய்து வருகின்றனர். சிலர் விலை கொடுத்து இடம் வாங்கி வசித்து வருகின்றனர்.
குறிப்பாக, அப்பகுதியின் பெரிய ஏரியின் பின்புறத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்தில் புல்லூர் – கீழ்பாளையம் கோட்டை சாலை ஓரமாக இம்மக்கள் வசித்து வருகின்றனர். இது நாள் வரையில் எந்த ஒரு காலத்திலும் மழைக் காலங்களிலும், சுனாமி, தானே புயல், உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் இந்த மாவட்டத்தை புரட்டி போட்ட போதும் கூட இந்தப் பகுதியில் எந்தவிதமான வெள்ளமோ சேதாரமோ ஏற்பட்டதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது இம்மக்கள் வசிக்கும் பகுதி நீர்நிலை ஆக்கிரமிப்பு அல்ல என்பதை காட்டுகிறது. மேலும், 1985-86-இல் இந்திராகாந்தி குடியிருப்பு திட்டம் மூலம் அரசுதான் இம்மக்களுக்கு வீடுக்கட்டி கொடுத்துள்ளது.
ஆனால், இதே பகுதியைச் சேர்ந்த ராஜ கோபால் மகன் சரவணன் என்பவர் இம்மக்களை அப்புறப்படுத்த வேண்டும் உள்நோக்கத்தோடு ஆக்கிரமிப்பு நடந்துள்ளதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, மின் இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை அட்டை, வங்கிப் புத்தகங்கள், பான் கார்டு என அரசின் அனைத்து ஆவணங்களையும் பெற்று, மின்சார கட்டணம், நிலவரி உள்ளிட்டவற்றை முறையாக செலுத்திவரும் அந்த மக்களின் வீடுகளை இடிப்பதற்கு வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இப்பகுதி தென்னார்க்காடு மாவட்டமாக இருந்தது முதல் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது வரை பல ஆண்டுகளாக தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி இம்மக்கள் பல்வேறு முயற்சிகளையும் சட்டப் போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, தென்னார்க்காடு மாவட்டமாக இருக்கும் போது பட்டா வழங்கிட கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் கொடுத்து அதன் அடிப்படையில் பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது; அதற்கான வேலை நடந்து கொண்டிருக்கும்போது விழுப்புரம் மாவட்டமாக பிரிக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டமாக உருவாக்கப்பட்ட பிறகும் கூட மேற்படி குடியிருக்கும் நபர்கள் ஒவ்வொரு முறையும் அரசு நடத்துகின்ற சமபந்தி கூட்டங்களிலும், குறை தீர்ப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டங்களிலும் விண்ணப்பம் கொடுத்து வருகின்றனர். இதற்கிடையில் 2018-ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பட்டா வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுபதற்கான உத்தரவையும் பெற்றுள்ளனர்.
ஆனால், இவை குறித்தெல்லாம் எந்த அக்கறையும் பொறுப்புணர்வும் இன்றி மக்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறையாக விசாரிக்காமலும் மற்ற இடத்தில் வீடு கட்டி கொடுக்காமலும் மக்களை அகதிகளாகும் அநீதியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதனை காரணம் காட்டி மக்களை விரட்டி அடிப்பதில் குறியாக இருந்து வந்த வருவாய்த்துறை, தற்போது அனைத்து வீடுகளையும் இடித்து தரைமட்டமாக்குவோம், மின்சாரம் துண்டிக்கப்படும் என்றெல்லாம் மக்களை அச்சுறுத்தியும் பீதியில் ஆழ்த்தியும் வந்தது.
இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இடத்தில் இருந்து குழந்தை குட்டிகளோடு எங்கே செல்வது என்று மக்கள் தவித்து வந்த நிலையில்தான் தற்போது புல்டோசர்களைக் கொண்டு வீடுகளை இடிப்பதற்கு வருவாய்த்துறை முயன்றுள்ளது.
எனவே இந்த இடத்தை நீர் நிலை பிடிப்பு என்று சொல்லி மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மக்கள் அதிகார கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. வீடுகளை இடிப்பதை உடனடியாக நிறுத்தி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
கணையார் மக்களின் தொடர் போராட்டங்கள்:
29/06/2026 வட்டாட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.
30/06/2026 அனைத்து அரசியல் கட்சியினர், ஜனநாயக சக்திகள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கள ஆய்வு செய்தனர்.
01/07/2026 மீண்டும் வட்டாட்சியரை சந்திக்க அனைத்து கட்சியினரும் பொதுமக்களும் சேர்ந்து மண்டல துணை வட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர் மனு பெற்று கொண்டு அதிகாரிகளிடம் கொண்டு செல்வதாக கூறினார்.
“மாலையில் மாவட்ட ஆட்சியிரை நேரில் சந்தித்து முறையிட்டுதன்படி ஆவணங்கள் சரிபார்த்து நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை அரசு நடவடிக்கை எடுக்காது” என்று உறுதியளித்தனர்.
02/07/2026 அரசு இடிப்பு நடவடிக்கை எடுப்பதாக இருந்தது மக்களின் தொடர் போராட்டத்தின் விளைவாகவும் மக்கள் அதிகாரக் கழகம் உள்ளிட்ட கட்சிகளின் அழுத்ததின் விளைவாகவும் அரசின் நடவடிக்கை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
06/07/2026 அன்று மாலையில் 1.30மணிக்கு வட்டாட்சியர் மக்களிடம் மீண்டும் சென்று வீடுகளை ஒரிரு நாட்களுக்குள் காலி செய்யுங்கள் என்று எச்சரிக்கை விடுத்து சென்றார்.
07/07/2026 மக்கள் தன் எதிர்ப்பை சுவரொட்டிகள் மூலம் பதிவு செய்தும் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து வட்டாட்சியரை சந்தித்து முறையிட்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது சட்டரீதியாக சந்திக்க கால அவகாசம் வேண்டும் கோரிக்கை வைத்தனர். இதனை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்று பின்னர் தகவல் சொல்வதாக கூறினார்.
ஆகையால் ஒவ்வொரு நபரும் குடியிருக்கும் இடத்தை அளவீடு செய்து அவர்களுக்கான குடிமனை பட்டா வழங்கிட வேண்டும்; கால அவகாசம் அளிக்க வேண்டும்; அதுவரை அரசின் நடவடிக்கை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தவறுபட்சத்தில் தொடர்ச்சியாக மக்கள் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று பத்திரிக்கை செய்தி வெளியிட்டோம்.
இதனைத் தொடர்ந்து, எம்.பி. ரவிக்குமார், அமைச்சர் வன்னியரசு ஆகியோரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து வருவாய், ஊராட்சி நிர்வாகம், மின்சார வாரியம் சிறுமேடு மக்களை காலி செய்ய வலியுறுத்தி வருகின்றன. இதனால் மக்கள் கடுமையான மன உளைச்சலிலும் பயத்திலும் உள்ளனர்.
14/07/2026 மீண்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர். அவர் “நீங்கள் பட்டா வாங்கிட்டு போங்க; 10 நாட்கள் அவகாசம் தருகிறேன்” என்று கூறி மக்களை அனுப்பி வைத்தார்.
மாலையில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவைத்து “17/07/2026க்குள் காலி செய்து வெளியேற வேண்டும்” என்றும் “பட்டா குறைந்த பேருக்கு தான் தருவோம்” என்றும் “25 குடும்பத்திற்கு தர முடியாது” என்று கையெழுத்து சிலரிடம் மிரட்டி வாங்கி அனுப்பியுள்ளனர்.
இரவு 8.00 மணிக்கு மின்சார வாரிய அதிகாரிகள் சிறுமேடு பகுதிக்கு வந்து மின்சாரத்தைத் துண்டிக்க வட்டாச்சியர் அலுவலகத்திலிருந்து ஆணை வந்துள்ளது. இவற்றை பெற்று ஒத்துழைப்பு தருமாறு கேட்டனர்; ஆனால், மக்கள் ஆணையைப் பெறாமல் திருப்பி அனுப்பினர்.
16/07/2026 சிலருக்கு வேறு இடத்திற்கு பட்டா கொடுக்க வந்தனர். மக்கள் வாங்க மறுத்து திருப்பி அனுப்பினர்.
மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரைச் சந்தித்து மனு கொடுத்தும் இதுவரை நேரடியாக மக்களை சந்திக்காமல் புறக்கணித்து வருகின்றனர்.
தோழர் வினாயகம்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்.
7200112838
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





