உளுந்தூர்பேட்டை: இளம்பெண் ஆணவப் படுகொலை | ம.அ.க

நன்றாக நீச்சல் தெரிந்த அபிஷா கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை. அவரது தந்தை கூறுவதிலிருந்து இது ஒரு ஆணவப் படுகொலையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம். ஆனால் போலீசோ இது ஒரு தற்கொலை என்ற வரம்பில் மட்டுமே வழக்குப்பதிவு செய்துள்ளது.

ள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுக்கா பா. கிள்ளனூர் கிராமத்தில் அபிஷா என்ற இளம்பெண் மர்மமான முறையில் இறந்து விவசாயக் கிணற்றில் சடலமாகக் கிடந்துள்ளார். இச்சம்பவம் களமருதூர் போலீஸ் நிலையத்தில் தற்கொலை வழக்காகப் பதியப்பட்டுள்ள நிலையில், அபிஷாவின் குடும்பத்தினர் அவரது மரணம் தற்கொலையல்ல ஆணவப்படுகொலை என்று தெரிவித்துள்ளனர். இக்கோரச் சம்பவம் குறித்து அவரது தந்தை வீராமணி கூறியவை:

சம்பவத்தின் பின்னணி

“எனக்குத் திருமணமாகி 28 வருடங்கள் ஆகிறது. எனது மனைவி இந்திராகாந்தி (49) மற்றும் பிள்ளைகள் வனிதா (26), சங்கர் (25), சினேகா (21), அபிஷா (20) ஆகியோருடன் வசித்து வருகிறேன். இதில் இரண்டு மகள்களுக்குத் திருமணமாகிவிட்டது. மகன் சங்கர் மற்றும் மகள் அபிஷாவிற்கு இன்னும் திருமணமாகவில்லை. நான் பட்டியல் சாதி (இந்து ஆதிதிராவிடர்) சமூகத்தைச் சேர்ந்தவன். நானும் எனது மனைவியும் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறோம்.

எனது மகள் அபிஷாவும், கூவாடு கிராமத்தில் வசிக்கும் செல்வராஜின் மகன் கோகுல்ராஜும் (20) (வன்னியர் சமூகம்), உளுந்தூர்பேட்டையில் உள்ள ஐ.டி.ஐ-யில் (ITI) ஒன்றாகப் படித்தபோது காதலித்து வந்தனர். எனது மகள் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று நன்கு தெரிந்தே கோகுல்ராஜ் அவரிடம் பழகிக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியும். இதில் கோகுல்ராஜின் தாயாரான தமிழ்ச்செல்வி, “உனக்கு வேறு பெண்ணே கிடைக்கவில்லையா? ஒரு பறைச்சியைத் தான் காதலிப்பாயா? நீ அவளைத் திருமணம் செய்து கொண்டு வீட்டுக்குக் கூட்டி வந்தால், நான் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வேன்” என்று கூறி, சாதியைக் காரணம் காட்டி அவர்களது காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அபிஷாவும் கோகுல்ராஜும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்று, அங்கு இருவரும் ஒன்றாகத் தங்கி வேலை பார்த்து வந்தனர். ஒரு மாதத்திற்கு முன்பு இருவரும் சொந்த ஊருக்குத் திரும்பினர். அதன்பிறகு, அபிஷா தனது தோழியான மகாலட்சுமியுடன் சென்னைக்குச் சென்று, அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போதெல்லாம் கோகுல்ராஜ் செல்போனில் பேசும்போதெல்லாம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும் என்றும், அது குறித்து அபிஷா தன்னிடம் சொல்லி அழுவார் என்றும் மகாலட்சுமி எங்களிடம் கூறினார். இந்நிலையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அபிஷாவும் மகாலட்சுமியும் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சம்பவத்தன்று நடந்தவை

கடந்த 28.04.2026-ஆம் தேதி இரவு சுமார் 9.30 மணியளவில், கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவைப் பார்ப்பதற்காக எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு டாடா ஏசி (TATA ACE) வாகனத்தில் சென்றனர். அந்த வாகனத்தில் எனது மகள் அபிஷாவும், அவரது தோழி மகாலட்சுமி (20) சென்றிருந்தனர். இரவு சுமார் 10.00 மணியளவில் அவர்கள் கூவாகத்தில் இருந்தபோது, கோகுல்ராஜ் அங்கு வந்துள்ளார்.

அப்போது கோகுல்ராஜும் அபிஷாவும் பேசிக்கொண்டிருந்தபோது, கோகுல்ராஜின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி (Message) வந்தது. அதற்கு அவர் பதில் அனுப்பியதைக் கண்ட அபிஷா, கோகுல்ராஜின் செல்போனை வாங்கிப் பார்த்துவிட்டு, “இவ்வளவு செய்திகள் அனுப்பியிருக்கிறாயே, யார் இந்தப் பெண்?” என்று கேட்டுள்ளார். அதற்கு கோகுல்ராஜ் கோபமாக, “இந்தப் பெண் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த எங்களுடைய சாதிப் பெண். அவளைத்தான் நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அபிஷா, ‘என் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டு இப்போது வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வாயா? என்னுடன் பழகும்போது தெரியாத எனது சாதி, இப்போதுதான் உனக்கும் உன் அம்மாவுக்கும் தெரிந்ததா? நான் கர்ப்பமாக இருக்கிறேன், உன்னைச் சும்மா விடமாட்டேன், என்ன ஆனாலும் நீதான் என்னை மணக்க வேண்டும்’ என்று கோபமாகச் சத்தமிட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அந்த ஆத்திரத்தில் தனது செல்போனையும் கீழே போட்டு உடைத்துள்ளார்.

அதற்கு கோகுல்ராஜ், ‘நான் மாத்திரை வாங்கித் தருகிறேன், கர்ப்பத்தைக் கலைத்துவிடு; இல்லையென்றால் நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள், உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. நான் சம்மதித்தாலும் என் அம்மா உன்னை ஏற்க மாட்டார். உன்னைத் திருமணம் செய்ய முடியாது, நீ இருந்தால் இரு, இல்லையென்றால் செத்துத் தொலை; எனக்கு வேலை மிச்சம்’ என்று கூறியுள்ளார்.

மேலும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அபிஷா தனது அக்கா சினேகாவின் ஊரான ஆனத்தூருக்குச் சென்று, தனது காதல் விவகாரத்தைக் கூறி அழுதுள்ளார். அப்போது அபிஷா, கோகுல்ராஜுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது, கோகுல்ராஜின் தாயார் தமிழ்ச்செல்வி குறுக்கிட்டு, “வன்னியர் சாதிப் பையன் உனக்கு கேட்கிறதா? என் வீட்டுக்கு நீ வரக்கூடாது. அவன் உன்னுடன் பழகியிருந்தாலும் நீ வேறு யாரையாவது பார்த்துக்கொண்டு போ” என்று ஆபாசமாகவும், சாதியைக் குறிப்பிட்டு இழிவாகவும் பேசியுள்ளார்.

அதன்பிறகு, கடந்த 29.04.2026 அன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில், எனது மகள் அபிஷா, தனது தோழியான மகாலட்சுமி ஆகிய இருவரையும், கோகுல்ராஜ் தனது இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். அன்று காலை சுமார் 9.30 மணியளவில், எனது மகள் அபிஷா எனது அக்கா நாவம்மாள் (60), க/பெ சுப்புராயன் என்பவரது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது எனது மனைவி இந்திராகாந்தி, அபிஷாவை எழுப்பி, “அப்பாவிற்குச் சாப்பாடு கொடு” என்று கூறிவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார்.

மரணமும் சட்ட நடவடிக்கையும்

இந்நிலையில், 30.04.2026 அன்று மதியம் சுமார் 12.30 மணியளவில், எங்கள் வீட்டிற்கு எதிரே உள்ள சவுக்குத் தோப்பில் விவசாயம் செய்து கொண்டிருந்த அரசலிங்கம் என்பவர், களமருதூர் கிராமத்தைச் சேர்ந்த அஷ்ரப் அலி என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் எனது மகள் அபிஷா சடலமாகக் கிடப்பதாகத் தெரிவித்தார். இந்தத் தகவலைத் தொடர்ந்து நாங்கள் அங்குச் சென்று பார்த்தபோது, கிணற்றில் எனது மகள் இறந்த நிலையில் கிடந்தார். இதையடுத்து, கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டு அமரர் ஊர்தி மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தோம். எனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நாங்கள் தெரிவித்ததையடுத்து, அவரது உடல் விரிவான பரிசோதனைக்காகக் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. என் மகளுக்கு நன்றாக நீச்சல் தெரியும்; அவர் தற்கொலை செய்து கொள்ளக் கூடியவர் இல்லை.

நான் கொடுத்த புகாரின் அடிப்படையில், களமருதூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 111/2026-ன் கீழ், BNSS பிரிவு 194, BNS 2023 பிரிவு 108, மற்றும் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) திருத்தச் சட்டம் 1989-ன் பிரிவு 3(2)(v) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கின் முதல் எதிரியான கோகுல்ராஜ், கடந்த 30.04.2026 அன்று இரவு பூச்சிக்கொல்லி மருந்தை (குருணை மருந்து) உட்கொண்டதால், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு, அவரை காவல்துறையினர் 05.05.2026 அன்று கைது செய்தனர். இருப்பினும், இவ்வழக்கின் மற்றொரு எதிரியான தமிழ்ச்செல்வியை இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை.”

நன்றாக நீச்சல் தெரிந்த அபிஷா கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை. அவரது தந்தை கூறுவதிலிருந்து இது ஒரு ஆணவப் படுகொலையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம். ஆனால் போலீசோ இது ஒரு தற்கொலை என்ற வரம்பில் மட்டுமே வழக்குப்பதிவு செய்துள்ளது.

கோரிக்கைகள்:

  • தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது ஒரு ஆணவப்படுகொலை என்ற அடிப்படையில் இதை கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும்.
  • இரண்டாவது குற்றவாளியான தமிழ்ச்செல்வியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
  • உரிய இழப்பீட்டுத் தொகை: வன்கொடுமை தடுப்பு விதிகளின்படி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டிய முழு நிவாரணத் தொகையையும் (Relief Amount Rs 12 லட்சம்) எவ்விதத் தாமதமுமின்றி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இரு தவணைகளாக முழுமையாக வழங்க ஆவன செய்ய வேண்டும்.

நிதி வழங்கப்படும் படிநிலைகள் (Stages of Payment):

75% தொகை: பிரேதப் பரிசோதனை (Post-mortem) அறிக்கை முடிந்தவுடன், FIR பதிவான 7 நாட்களுக்குள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

25% தொகை: நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை (Charge Sheet) தாக்கல் செய்யப்பட்டு, கீழ் நீதிமன்றத்தில் விசாரணை முடிவடையும் போது வழங்கப்பட வேண்டும்.

  • அரசு வேலை: குடும்பத்தின் முக்கிய வருவாய் ஆதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பத்தில் தகுதியுள்ள ஒரு நபருக்கு, அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து அரசு வேலை (Government Job) வழங்கிட வேண்டும்.
  • மாதாந்திர பென்ஷன்: குடும்பத்தின் வாழ்வாதாரப் பாதுகாப்பிற்காகச் சட்டப்படி வழங்கப்பட வேண்டிய மாதாந்திர சிறப்பு ஓய்வூதியத் தொகையை (Pension) உடனடியாக வழங்க வேண்டும்.
  • இலவச வீடு (Rehabilitation): குடும்பத்தின் தங்குமிடச் சூழலைக் கருத்தில் கொண்டு, அரசு சிறப்பு வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இலவசமாகப் புதிய வீடு கட்டிக் கொடுத்து முறையான மறுவாழ்வு (Rehabilitation) நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • மாவட்ட ஆட்சியர் மற்றும் நிர்வாக நடுவர் விசாரணை (Executive Magistrate / Collector)

சட்டத்தின் விதி 6-ன் படி (Spot Inspection by District Magistrate/SDM):

வன்கொடுமை சம்பவம் நடந்ததாகத் தகவல் கிடைத்தவுடன், மாவட்ட ஆட்சித்தலைவர் (District Collector / District Magistrate) அல்லது கோட்டாட்சியர் (Sub-Divisional Magistrate / RDO) உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் செல்ல வேண்டும்.

அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து, இழப்பு மற்றும் சேதங்களை நேரில் ஆய்வு செய்து, துரித நிவாரணம் வழங்குவதற்கான உத்தரவுகளை உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும்.

  • சாதிய வன்முறையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பத்தின் நிலையை உணர்ந்து, மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் இணைந்து சட்டப்பூர்வமான நீதியையும், பாதுகாப்புடன் கூடிய மறுவாழ்வுச் சலுகைகளையும் விரைந்து பெற்றுத்தர வேண்டும்.
  • ஆணவப் படுகொலை தடுப்புச் சிறப்பு சட்டம் உடனே இயற்ற வேண்டும்.

தோழர் விநாயகம்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்.
7200112838

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க