
16.07.2026
கும்மிடிப்பூண்டியில் மீண்டும் தொழிற்சாலை விபத்து:
தொடரும் தொழிலாளர்களின் பலி! ஆலை நிர்வாகமும், அரசுமே குற்றவாளி!
பத்திரிகைச் செய்தி
இறால் தொழிற்சாலையில் அமோனியா விசவாயு கசிவினால் 18 தொழிலாளிகள் உயிரிழந்த சம்பவத்தின் பதட்டம் அடங்குவதற்குள், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள ஜெயின் மெட்டல் காப்பர் ( Jain Resource Recycling Ltd) தொழிற்சாலையில் மற்றொரு கொடூர விபத்து நேர்ந்துள்ளது.
ஜெயின் ரிசோர்ஸ் ரீசைக்கிளிங் நிறுவனம், தாமிரம், அலுமினியம் மற்றும் ஈயம் போன்ற கழிவுப் பொருட்களை வைத்து வாகன, மின்சார மற்றும் கட்டுமான தொழில்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களாக மாற்றி, இரும்பு அல்லாத உலோகப் பொருட்களை உற்பத்தி செய்கிறது.
நேற்று முன்தினம் அதிகாலை (14.07.2026) சுமார் 5:30 மணியளவில், காப்பர் உற்பத்திப் பணியில் தொழிலாளர்கள் வழக்கம்போல் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள பர்னஸ் (உலை) ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் வடமாநில தொழிலாளியான பீகாரைச் சேர்ந்த ரவி ரஞ்சன் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், பீகார் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த பூசன் குமார், ஓம் குமார், ரஞ்சித் குமார், ராஜா பாபு, ரன்வீர் குமார், பிரின்ஸ் குமார் உட்பட 9 வடமாநில இளைஞர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனை, வெங்கடேஸ்வரா மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரும்பு மற்றும் தாமிரம் உற்பத்தி தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. ஒவ்வொரு விபத்திலும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழக்கின்றனர்.
எனவே, தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக மக்களும் தொழிற்சங்கங்களும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
மேலும், இப்பகுதி மக்கள் பழைய பேட்டரி மற்றும் வயர்களை உருக்கும்போது வெளியாகும் கரும்புகையால் தாங்கள் மூச்சுத்திணறலால் அவதிப்படுவதாகவும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
இப்படி தொடர்ச்சியாக இப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் விபத்துகள் நடப்பதும், மக்கள் பாதிக்கப்படுவதும், தொழிலாளிகள் தொடர்ச்சியாக இறப்பதும் வலி மிகுந்த தொடர் கதையாக மாறியுள்ளது.
பல கட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் நிவாரணங்கள் வழங்குவதே அரசின் அதிகபட்ச நடவடிக்கையாகத் தொடர்கிறது; அல்லது கீழ்நிலை கண்காணிப்பாளர்களைத் தண்டிப்பது என்பதுடன் நடவடிக்கைகள் முடங்கிவிடுகிறது.
சுமார் 5 வருடங்களாக இயங்கி வரும் இந்தத் தொழிற்சாலையில் மூன்று ஷிப்டுகளில் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றாலும் இப்பகுதியில் உள்ள பல தொழிற்சாலைகள் முறையான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு தொடர்ச்சியாக எழுந்து வருகிறது.
தற்போது விபத்து நடந்துள்ள நிறுவனத்தின் உரிமையாளரிடம் கடந்த மாதம் 11-ஆம் தேதியே முறையான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்த நிலையில்தான் இந்த ஆலை தொடர்ச்சியாக இயக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது தெரிந்தும் நிறுவனத்தை அலட்சியமாகக் கையாண்ட அரசும், பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாமலும், குறிப்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்த பின்பும் விதியை மீறி ஆலையை இயக்கிய ஆலை நிர்வாகமுமே முதன்மையான குற்றவாளிகள்.
எனவே தமிழ்நாடு அரசு, இந்த ஆலையை சீல் வைப்பதுடன் இதை கண்காணிக்கத் தவறிய நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாளர் நலத்துறை சார்ந்த அதிகாரிகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்;
உயிரிழந்த தொழிலாளி ரவி ரஞ்சன் அவர்களுக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்கி அதை உறுதிப்படுத்திட வேண்டும்;
பாதிக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன் அவர்களுக்கான மொத்த மருத்துவ செலவையும் வாழ்வாதாரத்திற்கான தேவைகளையும் ஜெய்சன் நிறுவனமும், தமிழ்நாடு அரசும் உறுதிப்படுத்திட வேண்டும்;
உயிராபத்து விளைவிக்கும் இரசாயனங்களைக் கையாளும் தொழிற்சாலைகளில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் சமரசமின்றிக் கடைப்பிடிக்கப்படுவதைத் தமிழ்நாடு அரசு உடனடியாக சிறப்புக் குழுக்கள் அமைத்து உத்தரவாதப்படுத்த வேண்டும். அதனை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும்;
புலம்பெயர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டங்களை உறுதிப்படுத்த வேண்டும்;
கும்மிடிப்பூண்டியைச் சுற்றி இரும்பு மற்றும் காப்பர் தொழிற்சாலைகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்வதுடன் அதைக் கண்காணிக்கத் தவறிய அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்;
என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.
மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிடவும், தொடர்ச்சியாக அரங்கேறும் தொழிற்சாலை விபத்துகளையும், தொழிலாளர்கள் பலியிடப்படுவதையும் தடுத்து நிறுத்திட இந்த நச்சு ஆலைகளால் வாழ்வாதார பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் பகுதிவாழ் மக்களையும், பாதுகாப்பற்ற நிலையில் பணிபுரியும் தொழிலாளிகளையும் ஒருங்கிணைத்த போராட்டங்களை தொழிற்சங்கங்களும் ஜனநாயக சக்திகளும் வலுவாக முன்னெடுத்திட வேண்டும்.
![]()
தோழர் ஆகாஷ்,
மக்கள் அதிகாரக் கழகம்,
சென்னை மாவட்டம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





