சமீபத்தில் சென்னை கண்ணகி நகரில் உள்ள நகர்ப்புற சமூக நல மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறையால் மெர்ஸி என்ற கர்ப்பிணிப் பெண் தன் குழந்தையைப் பறிக்கொடுத்த அவலம் அரங்கேறியது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர், மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையால் உழைக்கும் மக்கள் உயிரிழப்பதும் பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
ஆனால், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசானது, அரசு மருத்துவமனைகளில் நிலவும் இத்தகைய அடிப்படைக் குறைபாடுகளைச் சரிசெய்வதை விடுத்து, தனியார் மருத்துவமனை உரிமையாளர்களின் கோரிக்கைகளைத் நிறைவேற்றுவதையே முதன்மை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மருத்துவக் கட்டமைப்பு சிறந்து விளங்குவதாகக் கூறப்படுகிறது. ஆனால், சமீப ஆண்டுகளில் மருத்துவக் கட்டடங்கள், மருத்துவக் கல்லூரிகள், காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் விரிவுபடுத்தப்பட்டாலும், மருத்துவத்துறையின் அடிப்படை தூண்களான மனிதவளம், நிரந்தர வேலைவாய்ப்பு, இலவச மருத்துவ சேவை மற்றும் பொதுநலக் கொள்கைகள் படிப்படியாக பலவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு படிப்படியாக கார்ப்பரேட்மயத்தின் பாதையில் நகர்த்தப்படுகிறது.
மருத்துவக் கட்டமைப்பில்
வெட்டிச் சுருக்கப்படும் மனித வளங்கள்
2021-22 முதல் 2024-25 வரையிலான காலகட்டத்தில் குறிப்பாகக் கொரோனா பெருந்தொற்றுப் பரவலுக்குப் பிறகு அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 49 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள், சிறப்பு மருத்துவ மையங்கள் மற்றும் மருத்துவமனைக் கட்டடங்கள் கட்டப்பட்டதால் மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையும் 37 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ஆனால், இந்த உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு இணையாக மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நிபுணர்கள் மற்றும் பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்பதே உண்மை நிலையாகும். மருத்துவக் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் உள்ள மருத்துவர் பணியிடங்களில் சுமார் 35 சதவிகிதம் நிரப்பப்படாமல் உள்ளன.
நிலைமை இவ்வாறிருக்க, தமிழ்நாட்டில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு, ஏற்கெனவே உள்ள 15 மருத்துவக் கல்லூரிகளின் இளநிலை மருத்துவர்களை (Junior Resident) ஆட்குறைப்பு செய்து, அவர்களைப் பணி நிரவல் (Deputation) செய்யக் கடந்த தி.மு.க. அரசு ஆணை பிறப்பித்தது.
புதிய மருத்துவர்களைப் பணியமர்த்தி ஆள் பற்றாக்குறையைச் சரிசெய்வதற்குப் பதிலாக, ஏற்கெனவே பற்றாக்குறையுடன் இயங்கும் மருத்துவமனைகளிலிருந்து மருத்துவர்களைப் புதிய இடங்களுக்குப் பணி நிரவல் செய்வதால், நோயாளிகளைக் கவனிப்பதில் கடும் தொய்வு ஏற்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்; மருத்துவர்கள் கடும் அழுத்தத்திற்கும் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்துத் “தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம்” (TNGDA) மற்றும் “அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு” (FOGDA) ஆகியவற்றின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தேசிய முதியோர் நல மையத்தில் அனுமதிக்கப்பட்ட மருத்துவர் பணியிடங்களில் கணிசமான அளவு காலியாக உள்ளது; செவிலியர் பணியிடங்களும் முழுமையாக நிரப்பப்படவில்லை. பல மருத்துவமனைகளில் தற்காலிக மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களை நம்பியே சேவைகள் நடக்கின்றன.
இது ஒரு நிர்வாக ரீதியான தவறு மட்டுமல்ல. கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்து மனிதவளத்தில் முதலீடு செய்யாதது, பொதுத்துறை மருத்துவத்தின் தரத்தைத் திட்டமிட்டுக் குறைக்கும் செயலாகும். பொது மருத்துவத்துறைக்கு மாற்றாகத் தனியார் மருத்துவத்துறையை மக்களிடம் திணிப்பதற்கான தயாரிப்புப் பணியாகும்.
மற்றொருபுறம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 2 மணி நேர பணி என நியமிக்கப்பட்ட இவ்வூழியர்கள், 8 மணி நேரத்திற்கு மேலாக வேலை வாங்கப்படுகின்றனர். துறை சார்ந்த பணி மட்டுமின்றி பிற துறை பணிகளையும் செய்கின்றனர். ஆனால், இவர்களுக்கு நாளொன்றுக்கு வெறும் ரூ.183-தான் (மாதம் சுமார் ரூ.5,500) ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்த அற்பத் தொகையிலிருந்தே அவர்கள் மருத்துவ உபகரணப் பராமரிப்பு, எழுதுபொருட்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும். நிரந்தரப் பணியாளர் உரிமைகள், சமூகப் பாதுகாப்பு மற்றும் வேலை நிலைத்தன்மை (Job Security) எதுவுமின்றியே இவர்கள் உழைத்து வருகின்றனர்.
இவர்கள் மட்டுமின்றி புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு மருத்துவக் கட்டமைப்பிலும் புதிய நிரந்தரப் பணியிடங்கள் உருவாக்கப்படுவதில்லை. மாறாக, தற்காலிகப் பணியமர்த்தலையும் பணி நிரவல் முறையையுமே தமிழ்நாடு அரசு பின்பற்றி வருகிறது.
நிரந்தர ஊழியர்களை நியமிப்பதற்குப் பதிலாக குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தப் பணியாளர்களை அமர்த்தும் சுரண்டல் முறையை அரசே முன்னின்று நடத்தி வருகிறது. தனியார் நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசே, திட்டமிட்டு நிரந்தரப் பணியிடங்களைக் குறைத்தும், காலியிடங்களை நிரப்பாமலும், முறையான பணி உயர்வை வழங்காமலும் ஒப்பந்தத் தொழிலாளர் முறையைத் தீவிரமாக அமல்படுத்துகிறது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதில், எட்டு பாடப் பிரிவுகளைத் தவிர மற்ற பிரிவுகளுக்கான சேவை ஒதுக்கீட்டு இடங்களை இரத்து செய்வதற்கான “அரசாணை எண் 151”-ஐ மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கடந்த ஜூலை 1, 2024 அன்று வெளியிட்டது.
ஏற்கெனவே 2017-ஆம் ஆண்டு இரத்து செய்யப்பட்ட இந்த சேவை அடிப்படையிலான ஒதுக்கீடு, மூன்று ஆண்டுகாலம் நீதிமன்றத்தில் போராடி மீண்டும் பெறப்பட்டது. அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டின் காரணமாகத்தான் தேவையான அளவு மருத்துவப் பேராசிரியர்கள் உருவாக்கப்பெற்று, அதன் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளும் அதிகளவில் தொடங்கப்பட்டன. இதனால், கிராமங்கள், தாலுகாக்களில் மக்களுக்கு இலவச மருத்துவம் உறுதி செய்யப்பட்டது.
இத்தகைய சூழலில் தி.மு.க. அரசின் மேற்கண்ட அரசாணையானது, மருத்துவக் கட்டமைப்பை சீரழிப்பதை அடிப்படையாகக் கொண்டதாகும்.
இவ்வாறு, மருத்துவமனைகள் அதிகரிக்கின்றன; ஆனால் மருத்துவர்கள் அதிகரிக்கப்படுவதில்லை. நோயாளிகள் அதிகரிக்கின்றனர்; ஆனால் செவிலியர்கள் அதிகரிக்கப்படுவதில்லை. இதன் விளைவாக மருத்துவ சேவையின் தரம் பாதிக்கப்படுவதுடன், சிகிச்சைக்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகிறது.
இத்தகைய சூழல் என்பது “திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நெருக்கடி”யாகும். அதாவது, பொதுத்துறையை போதுமான முதலீடு மற்றும் மனிதவளமின்றி பலவீனப்படுத்தி, அதனைத் தனியார் – கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் நயவஞ்சகத் திட்டமாகும்.
அரசு மருத்துவமனைகளுக்குள்
திணிக்கப்படும் தனியார்மயம்
மருத்துவத்துறையின் மற்றொரு முக்கிய பிரச்சினையாக மருந்துத் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட வேண்டிய அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காததால், பல மருத்துவமனைகள் திறந்தவெளி சந்தையில் இருந்து மருந்துகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அரசு மருத்துவமனைகளின் நிர்வாகச் செலவுகள் அதிகரிப்பது ஒருபுறமிருக்க, மறுபுறம் ஏழை நோயாளிகளே கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இலவசமாகக் கிடைக்க வேண்டிய மருந்துகள் கிடைக்காத போது, சாமானிய மக்கள் தனியார் மருந்தகங்களை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அரசு மருத்துவச் சேவையை வழங்கும் பொறுப்பிலிருந்து படிப்படியாகக் கை கழுவி வரும் போக்கையே இது பிரதிபலிக்கிறது.
இதேபோல், “டயாலிசிஸ்” (Dialysis) எனப்படும் சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு மையங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசியச் சுகாதாரச் சேவைகள் தற்போது அரசு – தனியார் கூட்டாண்மை (PPP) அடிப்படையில் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் கட்டடம், இடம், மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் அரசே தனது பொதுச் சொத்திலிருந்து வழங்குகிறது. ஆனால், அதன் சேவை நிர்வாகம், பணியாளர் நியமனம் மற்றும் செயல்பாட்டுப் பொறுப்புகளைத் தனியார் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
அதாவது, பொதுச் சொத்தைப் பயன்படுத்தி அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசே செய்து கொடுக்க, அதிலிருந்து வரும் இலாபத்தை மட்டும் தனியார் – கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்காகவே இந்த அரசு – தனியார் கூட்டாண்மை என்பது செயல்படுத்தப்படுகிறது.
ஏற்கெனவே கலைஞர் காப்பீட்டுத் திட்டம், அம்மா காப்பீட்டுத் திட்டம் போன்ற காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் மக்களின் பணம் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், “இன்னுயிர் காப்போம் – நம்மை காப்போம் 48” போன்ற திட்டங்கள் விபத்தில் சிக்குபவர்களுக்கான அவசரச் சிகிச்சை என்ற பெயரில் மக்கள் பணத்தை நேரடியாகவே தனியார் மருத்துவமனைகளுக்கு தாரைவார்க்கிறது. உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் போன்ற அனைத்து பணிகளும் தி.மு.க., அ.தி.மு.க. என கட்சி பேதமின்றி இரண்டு ஆட்சி காலத்திலும் கார்ப்பரேட்மயமாக்கப்பட்டுள்ளன.
அதேபோல், அரசு மருத்துவமனைகளில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) நிதியை நிர்வகிப்பதற்காகத் தனி அமைப்புகளை உருவாக்குவதற்கான ஆணையை 2025-இல் தி.மு.க. அரசு வெளியிட்டுள்ளது. இது, மருத்துவத் துறையில் அரசின் பங்களிப்பைக் குறைத்துக் கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான முயற்சியாகும்.
மக்களுக்கு மருத்துவம் வழங்குவது அரசின் கடமை என்ற அடிப்படைக் கொள்கை இதன் மூலம் சிதைக்கப்படுகிறது. இவ்வாறு, அரசு மருத்துவத்துறையில் கார்ப்பரேட்டுகளின் நிதிப் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம், பொது மருத்துவக் கட்டமைப்பில் கார்ப்பரேட் நிறுவனங்களின் நுழைவைத் தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றுவதுடன், அந்நிறுவனங்களின் செல்வாக்கு தமிழ்நாடு அரசின் மருத்துவக் கொள்கைகளின் மீது ஆதிக்கம் செலுத்தவும் இது வழிவகை செய்கிறது.
கார்ப்பரேட்டுகளுக்கான இச்சேவைகள் போதாதென்று, அரசு மருத்துவமனைகளுக்கு உள்ளேயே “கட்டண உள்நோயாளிகள் பிரிவை” (Pay Wards) அனுமதித்து, அரசு மருத்துவக் கட்டமைப்புக்குள்ளேயே அப்பட்டமான தனியார்மயத்தைத் தி.மு.க. அரசு புகுத்தியுள்ளது.
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய அரசு மருத்துவமனைகளில் தனி அறைகள், குளிர்சாதன வசதி, சிறப்புச் செவிலியர் சேவை போன்ற கூடுதல் வசதிகளுடன் கட்டணப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கான கட்டணமாக ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ.1,000, இருவர் தங்கும் அறைக்கு ரூ.1,500, நால்வர் தங்கும் அறைக்கு ரூ.2,000 என மருத்துவமனை நிர்வாகங்கள் அதிகாரப்பூர்வ கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர் ஒருவர் கூறுகையில், “பிற நோயாளிகள் தங்கி இருக்கும் பொது அறை மற்றும் கழிப்பறைகளை ஒருமுறைதான் சுத்தம் செய்ய சொல்வார்கள்; ஆனால், கட்டணப் பிரிவை இரண்டு முறை சுத்தம் செய்ய சொல்வார்கள். மருத்துவமனைக்குள் தரப்படும் இலவச பால், ரொட்டி மற்றும் உணவுப் பொருட்களை பொதுப் பிரிவுகளில் இருப்பவர்கள் அவர்களே வந்து வாங்கிக்கொள்ள வேண்டும்; ஆனால் கட்டணப் பிரிவில் உள்ளவர்களுக்கு பணியாளர்களே வந்து கொடுத்துவிட்டு செல்வர். அதேபோல், மருத்துவர்களும் குறித்த நேரத்திற்குச் சென்று கட்டணப் பிரிவு நோயாளிகளை சோதிப்பர்; கட்டணப் பிரிவில் இதற்கென்று சிறப்பு செவிலியர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்” என்கிறார். சுருக்கமாக சொல்வதெனில், எப்படி கோவில்களில் பொது தரிசனம், சிறப்பு தரிசனம் என்ற ஏற்றத்தாழ்வு உள்ளதோ அதேபோல் மருத்துவமனையில் இந்த கட்டணப் பிரிவு மூலம் அப்பட்டமான வர்க்க ஏற்றத்தாழ்வு கடைப்பிடிக்கப்படுகிறது.
இது வெறுமனே “வசதிக்கான கூடுதல் கட்டணம்” என்று அரசால் நியாயப்படுத்தப்பட்டாலும், உண்மையில் ஒரே அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் இரண்டு தரப்பட்ட சிகிச்சை முறைகளை இது உருவாக்குகிறது. பணம் செலுத்தும் நோயாளிகளுக்கு உயர்தரச் சிகிச்சை; பணமில்லாத ஏழைகளின் இலவசப் பிரிவுக்கு தரம் குறைந்த சிகிச்சை என்ற ஆபத்தான நிலையை நோக்கித் தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை தள்ளப்பட்டு வருகிறது.
அதாவது, கண்ணகி நகர் போன்ற அடித்தட்டு மக்கள் பயன்படுத்தும் ஆரம்பச் சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் திட்டமிட்டுச் சீரழிக்கப்படுகின்றன. அதே சமயத்தில் பெருநகர அரசு மருத்துவமனைகளில் மேட்டுக்குடியினருக்கான கட்டண வசதிகள் உருவாக்கப்படுகின்றன. இரண்டும் கார்ப்பரேட்மயமாக்கத்தின் இரு முகங்களே ஆகும்.
000
தமிழ்நாட்டின் அரசு மருத்துவத்துறையில் இன்று நாம் காணும் மருத்துவர் மற்றும் செவிலியர் பற்றாக்குறை, கடுமையான மருந்துத் தட்டுப்பாடு, உழைப்புச் சுரண்டல் நிறைந்த ஒப்பந்தத் தொழிலாளர் முறை, அரசு – தனியார் கூட்டாண்மை, கட்டண உள்நோயாளிகள் பிரிவு மற்றும் கார்ப்பரேட் நிதிச் சார்பு ஆகியவை தனித்தனி நிகழ்வுகள் அல்ல. அவை அனைத்தும் மருத்துவத்தை அரசின் பொறுப்பிலிருந்து கார்ப்பரேட் கொள்ளைக்கானதாக மாற்றத் துடிக்கும் ஒரே அரசியல் –பொருளாதாரக் கொள்கையின், அதாவது தனியார்மய – தாராளமய – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கையின் வெவ்வேறு வெளிப்பாடுகளேயாகும்.
கடந்த காலங்களில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் ஆட்சியிலும் அரசு மருத்துவத்துறையின் பொதுக் கட்டமைப்பை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்ப்பதற்கான தயாரிப்புப் பணிகள் திரைமறைவில் நடந்து வந்தன. தற்போது பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசோ, இந்த கார்ப்பரேட்மயமாக்கல் கொள்கைகளை இன்னும் தீவிரமாக, பாய்ச்சல் வேகத்தில் அமல்படுத்தி வருகிறது.
தற்போது இணைய வழியில் விண்ணப்பித்த 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கியிருப்பது மருத்துவத்துறையில் சீர்கேடுகளை விதைப்பதற்கான உச்சபட்ச நடவடிக்கையாகும். அரசு மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகள் மற்றும் பணியாளர் பற்றாக்குறையில் கவனம் செலுத்தாமல் ஆட்சிக்கு வந்த உடனேயே, தனியார் மருத்துவமனைகளுக்கு வெறுமனே இணையத்தில் விண்ணப்பித்தால் போதும்; தற்காலிக அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது, த.வெ.க. அரசின் மருத்துவக் கொள்கை யாருக்கானது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
எனவே, அரசுப் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பைக் கார்ப்பரேட்மயமாக்கும் போக்கானது மிகத் தீவிரமான முறையில் தமிழ்நாட்டில் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், ஆளும் அரசுகளின் மக்கள் விரோத மருத்துவக் கொள்கைகளுக்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆங்காங்கே தனித்தனியாகப் போராடி வருகின்றனர். இத்தகைய போராட்டங்களை, கார்ப்பரேட் கொள்ளைக்கு அடிப்படையாக அமையும் அரசின் மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டமாக ஒன்றிணைக்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
![]()
பாரி
(புதிய ஜனநாயகம் – ஜூலை 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











