நாடாளுமன்றக் குதிரை பேரமும் பா.ஜ.க-வின் பாசிச சதித்திட்டமும்!

2029 நாடாளுமன்றத் தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றி பெறுவதற்காக, இந்துராஷ்டிரத்திற்கான அடிக்கட்டுமானங்களான தொகுதி மறுவரையறை மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தத் துடிக்கிறது. அதற்காகத்தான் தன் குதிரை பேர அரசியலை உக்கிரப்படுத்தியுள்ளது, பா.ஜ.க.

பாசிச பா.ஜ.க. ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, நிலவும் போலி ஜனநாயகக் கட்டமைப்பைப் பயன்படுத்தி நீட், ஜி.எஸ்.டி., மூன்று குற்றவியல் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பாசிச சட்டத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் மூலம் அரசுக் கட்டமைப்பையும் அரசியலமைப்பையும் மறுவார்ப்பு செய்து, இந்துராஷ்டிரத்தைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறது. அதனால்தான், இப்பாசிச சட்டத் திட்டங்களை இந்துராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானங்கள் என்கிறோம்.

தற்போது, இந்த இந்துராஷ்டிர அடிக்கட்டுமானங்களில் மிக முக்கியமான இரண்டு பாசிச திட்டங்களை நடைமுறைப்படுத்தப் பாசிச கும்பல் தீவிரமாக முயற்சித்து வருகிறது.

முதலாவது, தொகுதி மறுவரையறை. பா.ஜ.க. வெற்றி பெறும் வகையிலும், இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்கு ஏதுவாகவும், நாடு முழுவதும் உள்ள தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஏற்கெனவே, தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்ட அசாம் மற்றும் ஜம்மு – காஷ்மீரே இதற்குச் சான்றுகளாகும்.

இரண்டாவது, “ஒரே நாடு ஒரே தேர்தல்”. இந்துத்துவ மற்றும் தேசவெறியூட்டும் போலிப் பிரச்சாரங்கள் மூலம் மாநிலங்களிலும் ஒன்றியத்திலும் ஒரே நேரத்தில் வெற்றி பெறுவது; அதன் மூலம் மற்ற அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒழித்துக்கட்டி, ஒரு கட்சி சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துவது; இறுதியில், தேர்தல்கள் அனைத்தையுமே மொத்தமாக ஒழித்துக்கட்டி அப்பட்டமான பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதே இந்தத் திட்டத்தின் இறுதி இலக்காகும்.

இவ்விரண்டு மசோதாக்களும் அரசியலமைப்பில் திருத்தங்களை கோருவதால் அவற்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு, பா.ஜ.க-விற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியமாகிறது. எனவே, அந்தப் பெரும்பான்மையைப் பெறுவதற்கான திரைமறைவு வேலைகளில் கடந்த சில மாதங்களாகப் பா.ஜ.க. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதற்காக, “ஆபரேஷன் தாமரை” என்ற பெயரில், எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மிரட்டிப் பணிய வைப்பது, விலைக்கு வாங்குவது, பதவி ஆசை காட்டித் தன் பக்கம் ஈர்ப்பது போன்ற குதிரை பேர அரசியலைப் பா.ஜ.க. கையில் எடுத்திருக்கிறது.

இதன் மூலம், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து 7 மாநிலங்களவை உறுப்பினர்களை விலக்கிப் பா.ஜ.க-வில் இணைத்திருக்கிறது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவிலிருந்து 6 மக்களவை உறுப்பினர்களை விலக்கி, தன் கூட்டணிக் கட்சியான ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவில் இணைத்திருக்கிறது. மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசு கட்சியிலிருந்து 20 மக்களவை உறுப்பினர்களை விலக்கி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணையவுள்ள இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைத்திருக்கிறது.

543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுவதற்கு 362 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 293 மக்களவை உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எனினும், திரிணாமுல் காங்கிரசு மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனாவிலிருந்து விலகி வந்த உறுப்பினர்களால் என்.டி.ஏ-விற்கான ஆதரவு தற்போது 319-ஆக அதிகரித்துள்ளது.

அதைப்போல, 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுவதற்கு 164 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆம் ஆத்மியிலிருந்து விலகி வந்தவர்களையும் சேர்த்து என்.டி.ஏ-விற்கு 152 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. திரிணாமுல் காங்கிரசு கட்சியிலிருந்து மூன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி விலகியிருப்பதால், அந்த மூன்று இடங்களையும் தன் அதிகார பலத்தின் மூலம் பா.ஜ.க. கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மாநிலங்களவையில் என்.டி.ஏ-விற்கான ஆதரவு 155-ஆக அதிகரிக்கும்.

இருப்பினும், பெரும்பான்மை பெறுவதற்கு மக்களவையில் இன்னும் 43 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 9 உறுப்பினர்களும் பா.ஜ.க-விற்கு குறைவாக உள்ளனர். இந்த எண்ணிக்கையை ஈடுசெய்ய காங்கிரசு, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேரத்தின் மூலம் தன் பக்கம் இழுப்பதற்கான சதித்திட்டங்களில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. எனவே, வரும் மாதங்களில் பல கட்சித் தாவல்கள் அரங்கேறலாம். மேலும், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தி.மு.க-வின் ஆதரவைப் பெறுவதற்கும் பா.ஜ.க. பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குதிரை பேர அரசியலுக்கு விலைபோன ஆம் ஆத்மியின் எம்.பி-களை வரவேற்கும் பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் நிதின் நபின்.

இவ்வாறு, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று, இந்த ஆண்டு மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற வேண்டும்; அதன் மூலம் 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் நாடு முழுவதும் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. எத்தனித்து வருகிறது.

அத்துடன், அடுத்த சில ஆண்டுகளில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவையும் நிறைவேற்றி, 2029 நாடாளுமன்றத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்ற இலக்குடனும் செயல்பட்டு வருகிறது. இவ்விரு பாசிச சட்டங்களையும் நடைமுறைப்படுத்துவது, 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தான் மீண்டும் வெற்றி பெறுவதற்கு இன்றியமையாதது என்று பா.ஜ.க. கருதுகிறது.

ஏனென்றால், விவசாயிகள், இஸ்லாமியர்கள் எனப் பலதரப்பட்ட மக்கள் போராட்டங்களால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல் தோல்வி முகத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வால் தனிப்பெரும்பான்மை கூட பெற முடியாமல், கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்து ஆட்சி அமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகான மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல்களிலும் எஸ்.ஐ.ஆர்., போலி வாக்குகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேடுகள் உள்ளிட்ட தேர்தல் மோசடிகள் மூலமே பா.ஜ.க. ஆட்சியைத் தக்கவைத்து வருகிறது. இழந்த தன்னுடைய மக்கள் அடித்தளத்தை மீண்டும் பெறுவது என்பது பாசிச கும்பலுக்கு தற்சமயத்தில் இயலாத காரியமாகவே உள்ளது. நாளுக்குநாள் பாசிச மோடி அரசின் உண்மை முகம் அம்பலப்பட்டு நாறி வருகிறது. இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் எனப் பலதரப்பட்ட உழைக்கும் மக்கள் பாசிச கும்பலுக்கு எதிராகக் களத்தில் நின்று போராடி வருகின்றனர்.

எனவேதான், 2029 நாடாளுமன்றத் தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றி பெறுவதற்காக, இந்துராஷ்டிரத்திற்கான அடிக்கட்டுமானங்களான தொகுதி மறுவரையறை மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தத் துடிக்கிறது. அதற்காகத்தான் தன் குதிரை பேர அரசியலை உக்கிரப்படுத்தியுள்ளது.

வரும் மழைக்காலக் கூட்டத்தொடருக்குள் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற முடியவில்லை என்றாலும், அதன் பிறகும் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு மேற்கண்ட பாசிச நோக்கங்களை நிறைவேற்ற பாசிச கும்பல் நிச்சயம் முயலும். இதனை தடுத்து நிறுத்த வேண்டிய எதிர்க்கட்சிகளோ தங்களுக்குள் பிளவுப்பட்டு மக்களிடமிருந்து தனிமைப்பட்டு இருக்கின்றன. சந்தர்ப்பவாத அரசியல் மூலம் மக்களுக்கு துரோகமிழைத்து வருகின்றன.

ஆகவே, இந்துராஷ்டிரம் கட்டியெழுப்பப்படுவதைப் இக்கட்சிகளால் தடுத்து நிறுத்த முடியாது; மாறாக, சமரசமற்ற மக்கள் திரள் போராட்டங்கள் மூலமே தடுத்து நிறுத்த முடியும். அத்தகைய வீரியமிக்க மக்கள் போராட்டங்களை அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்ப வேண்டியது, புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க