கடந்த மே 26 அன்று, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே “இந்திய – அமெரிக்க அரிய வகைக் கனிமங்கள் கட்டமைப்பு ஒப்பந்தம்” என்ற இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரும், தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான மார்கோ ரூபியோ மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். “குவாட்” கூட்டமைப்பு (அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா) நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக மார்கோ ரூபியோ இந்தியாவிற்கு வந்திருந்த போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
“அரிய வகைக் கனிமங்கள் மற்றும் அருமண் தனிமங்களின் சுரங்கம் மற்றும் பதப்படுத்துதலின் விநியோகச் சங்கிலியின் பாதுகாப்பை உறுதி செய்தல்” (Securing of Supply in the Mining and Processing of Critical Minerals and Rare Earths) என்ற அடிப்படையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது கனிமங்களை வெட்டி எடுத்தல், சுத்திகரிப்பது, மறுசுழற்சி மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது என ஒட்டுமொத்த கனிம விநியோகச் சங்கிலியிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.
மின்சார வாகனங்கள், ஆளில்லா விமானங்கள் (Drones), மின்கலன்கள் (Batteries) மற்றும் அதிநவீன தொழில்நுட்பச் சாதனங்களுக்குத் தேவையான அரிய வகைக் கனிமங்கள் மற்றும் அருமண் தனிமங்களின் உலகளாவிய விநியோகச் சங்கிலியில், சீனாவின் ஆதிக்கத்தை உடைப்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் என்று அமெரிக்கா வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. இது வெறும் வர்த்தக ஒப்பந்தம் அல்ல; மாறாக உலகளாவிய வளங்களை மறுபங்கீடு செய்வதற்கான அமெரிக்க-சீன ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மேலாதிக்கப் போட்டியின் அங்கமாகும். தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் அமெரிக்க உலக மேலாதிக்கம் சரிந்து வரும் சூழலில், அமெரிக்க பொருளாதாரம் மற்றும் போர்ச் சங்கிலியில் இந்தியாவை மேலும் நெருக்கமாக பிணைத்து சிக்கவைப்பதற்கான முக்கியமான நடவடிக்கை இதுவாகும்.
அரிய வகைக் கனிமங்களின் முக்கியத்துவமும்
சீனாவின் மேலாதிக்கமும்!
இன்றைய நவீன தொழில்நுட்பத்திற்கு அரியவகைக் கனிமங்கள் என்பது உயிர்நாடி போன்றது. மருத்துவம், இராணுவம், தகவல் தொழில்நுட்பம், மின்னணு – வர்த்தகம் (E-commerce) என அனைத்தும் செயற்கை நுண்ணறிவுமயமாகி வரும் சூழலில், அதற்குத் தேவையான “குறைக்கடத்திச் சில்லுகள்” (Semiconductor Chips) தயாரிப்பிற்கு இந்த அரிய வகைக் கனிமங்கள் இன்றியமையாதவை.
மறுபக்கத்தில் புதைபடிவ எரிபொருட்களின் பற்றாக்குறை, புவிவெப்பமயமாதல் போன்றவற்றால் பசுமை ஆற்றலை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால், மின்சார வாகனங்களின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களுக்கான மின்கலன்களின் உருவாக்கமும், திறன் பேசிகள், இராணுவத் தளவாடங்கள், விண்கலன்களின் உற்பத்தியும் இந்த அரிய வகைக் கனிமங்களை சார்ந்தே உள்ளது.

ஜெய்சங்கருடன், அமெ ரிக்க வெளியுறவுத்துறை
அமைச்சர் மார்கோ ரூபியோ.
அமெரிக்கா இக்கனிமங்களை “அந்நாட்டின் பொருளாதார அல்லது தேசிய பாதுகாப்பிற்கு இன்றியமையாதவை” என்று வரையறுத்திருப்பது, இவற்றின் உலகளாவிய முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
அமெரிக்கா மொத்தம் 60 கனிமங்களை அரிய வகைக் கனிமங்களாக வகைப்படுத்தியுள்ளது. இதில் கிராஃபைட், கேலியம், ஆர்சனிக் உள்ளிட்ட 11 முதல் 15 கனிமங்களைப் பொறுத்தவரை அமெரிக்கா முற்றிலும் இறக்குமதியையே சார்ந்துள்ளது. மீதமுள்ள லித்தியம், கோபால்ட், துத்தநாகம், டைட்டானியம் போன்ற 30-க்கும் மேற்பட்ட கனிமங்களின் தேவையில் 50 முதல் 99 சதவிகிதம் வரை இறக்குமதியையே நம்பியிருக்கிறது. இதில் பெரும்பகுதி சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.
காரணம், உலகளவில் அருமண் தனிமங்களைச் சுத்திகரித்துப் பிரித்தெடுப்பதில் 90 சதவிகிதமும், அதன் சுரங்க உற்பத்தியில் 70 சதவிகிதமும் சீனாவின் ஏகபோகக் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அமெரிக்காவின் “எம்.பி. மெட்டீரியல்ஸ்” (MP Materials) என்ற நிறுவனம் அந்நாட்டில் அருமண் தனிமங்களை வெட்டியெடுத்தாலும், ஏப்ரல் 2025 வரை அவற்றை சீனாவில்தான் சுத்திகரித்து வந்தது. ஏனெனில், இந்த சுத்திகரிப்பு தொழில்நுட்பம் சிக்கலானதும், அதிக செலவு பிடிப்பதும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதுமாகும். கடந்த முப்பது ஆண்டுகளில், சீனா மிகவும் திட்டமிட்டு, அரசு மானியங்கள் மற்றும் தளர்வான சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி, இத்துறையில் ஒரு முழுமையான ஏகபோகத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள், இத்தகைய தொழில்களை எல்லாம் அன்றைய காலகட்டத்தில் வளர்ந்துவரும் மற்றும் பின்தங்கிய நாடுகளுக்குத் தள்ளிவிட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போரில், சீனா தனது கனிம வள ஆதிக்கத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக, டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபரான, உலக நாடுகள் மீது கட்டவிழ்த்துவிட்ட வரிப் பயங்கரவாதத்தின் ஓர் அங்கமாக சீனா மீதும் அடாவடியாக வரி விதித்தது. இதற்குப் பதிலடி தரும் விதமாக, சீனா கனிமங்கள் ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்தது. மின்சார வாகன மோட்டார்கள் மற்றும் ஏவுகணை உற்பத்திக்கு இன்றியமையாத அருமண் காந்தங்களின் ஏற்றுமதியைச் சீனா முற்றிலுமாக முடக்கியது. 2023 முதல் குறைக்கடத்திகளுக்குத் தேவையான கேலியம் மற்றும் ஜெர்மானியம் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் 2025-இல் மேலும் தீவிரமாக்கப்பட்டன.
சீனாவின் இந்தத் திடீர் முடக்கம் அமெரிக்காவின் ஒட்டுமொத்த உற்பத்தித் துறையையும் உலுக்கியது. அமெரிக்காவின் முன்னணி கார் நிறுவனமான ஃபோர்டு (Ford), தனது புகழ்பெற்ற “எக்ஸ்ப்ளோரர்” (Explorer) ரக கார்களின் உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. அமெரிக்காவின் அதிநவீன எஃப்-35 (F-35) போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் உற்பத்திச் சங்கிலியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவானது.
இதனால், வேறுவழியின்றி டிரம்ப் அரசு சீனாவுடன் சமரசம் செய்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. கடந்த 2025 அக்டோபரில், தென் கொரியாவின் புசான் நகரில் நடைபெற்ற “ஏபெக்” (APEC) மாநாட்டில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே வர்த்தகக் கட்டுப்பாடுகளையும் பழிவாங்கும் வரிகளை விதிப்பதையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான உடன்படிக்கை எட்டப்பட்டது.
ஆனால், தன்னுடைய கனிமவள ஆதிக்கத்தை சீனா ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவதை டிரம்ப் – எலான் மஸ்க் பாசிச கும்பல் விரும்பவில்லை. எனவேதான், சீனாவின் கனிமவள மேலாதிக்கத்தை முறியடிக்கும் வகையில் சர்வதேச அளவில் முக்கியக் கனிமங்களின் விநியோகச் சங்கிலியைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் டிரம்ப் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தற்போது இந்தியா-அமெரிக்கா இடையே கையெழுத்தாகியிருக்கும் இருதரப்பு ஒப்பந்தத்தை இந்தப் பின்னணியிலிருந்தே பார்க்க வேண்டும். உலகளாவிய கனிமவளப் போட்டியில் சீனாவின் மேலாதிக்கத்தை முறியடிக்கும் நோக்கத்தில் செயல்பட்டுவரும் டிரம்ப் – மஸ்க் பாசிச கும்பலுக்கு அடிமைச் சேவகம் புரிவதற்காகவும், இந்தியாவின் இயற்கை வளங்களையும் மலிவான உழைப்புச் சக்தியையும் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரைவார்ப்பதற்காகவுமே இந்த இருதரப்பு ஒப்பந்தத்தில் பாசிச மோடி அரசு கையெழுத்திட்டுள்ளது.
கனிம விநியோகச் சங்கிலியைக்
கைப்பற்றத் துடிக்கும் அமெரிக்கா,
அடிமைச் சேவகம் செய்யும் இந்தியா!
கடந்த பிப்ரவரி 2 அன்று, டிரம்ப் “பாதுகாப்புப் பெட்டகம்” (Project Vault) என்ற புதிய உத்திசார் திட்டத்தைத் தொடங்கினார். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், அதிநவீனத் தொழில்நுட்பத்திற்குத் தேவையான அரிய வகைக் கனிமங்களை அமெரிக்காவிற்குள் முன்கூட்டியே குவித்து வைப்பதாகும்.

இதற்காக அமெரிக்க ஏற்றுமதி-இறக்குமதி வங்கி 10 பில்லியன் டாலரும், கார்ப்பரேட் நிறுவனங்கள் 2 பில்லியன் டாலரும் முதலீடு செய்ய உள்ளன. இதில், ஃபோர்டு, டெஸ்லா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கு எந்தெந்தக் கனிமங்கள் எவ்வளவு தேவை என்பதை முன்கூட்டியே தெரிவித்து, ஒரு காப்பீட்டுத் தொகை (Premium) போல பணத்தைச் செலுத்தும். அந்தப் பணத்தைக் கொண்டு மெர்குரியா (Mercuria) போன்ற உலகளாவிய வர்த்தக நிறுவனங்கள் மூலம் அரிய வகைக் கனிமங்கள் வாங்கப்பட்டு இந்தப் பாதுகாப்புப் பெட்டகத்தில் சேமிக்கப்படும்.
இதன்மூலம், சீனா மீண்டும் கனிம ஏற்றுமதிக்குத் தடை விதித்தாலும், இந்தக் கையிருப்பைக் கொண்டு அமெரிக்க நிறுவனங்கள் உற்பத்தியைத் தடையின்றித் தொடர வேண்டும் என்பது டிரம்பின் திட்டமாகும்.
ஆனால், டிரம்ப் இத்திட்டத்தைத் தொடங்கினாலும், உடனடியாக சீனாவைத் தவிர்த்து வேறு எங்கும் கனிமங்களை வாங்க முடியாது. ஏனெனில், சுத்திகரிப்புத் திறன் சீனாவிடம்தான் உள்ளது. எனவே, இப்போதைக்குத் தனது திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட கனிமங்களைச் சீனாவிலிருந்து தடையின்றி வாங்குவதே டிரம்பின் தற்போதைய நோக்கம். சமீபத்தில் சீனாவிற்கு டிரம்ப் மேற்கொண்ட பயணத்தின் போதும் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
இதைப்போல், கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தலைமையில் அரிய வகைக் கனிமங்கள் தொடர்பான ஒரு மாநாடு நடைபெற்றது. சீனாவின் கனிமவள மேலாதிக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் சர்வதேசக் கூட்டணியை உருவாக்கும் நோக்கத்தில் அமெரிக்கா நடத்திய முதல் உலகளாவிய உச்சி மாநாடு இதுவாகும். கனடா, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் இம்மாநாட்டில் பங்கேற்றன.
இம்மாநாட்டில், அதுவரை வெறும் ஆலோசனைக் குழுவாக இருந்த “மினரல்ஸ் செக்யூரிட்டி பார்ட்னர்ஷிப்” (MSP) என்ற அமைப்பிற்கு மாற்றாக, “போர்ஜ்” (FORGE – Forum on Resource Geostrategic Engagement) என்ற புதிய உத்திசார் பன்னாட்டு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. மேலும், அரிய வகைக் கனிமங்களுக்கான ஒரு “குறைந்தபட்ச விலை வரம்பை” (Price Floor) நிர்ணயிப்பது பற்றியும் இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
இந்த வாஷிங்டன் மாநாட்டின் நீட்சியாகவே, இந்தியா–அமெரிக்கா இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும், குறைக்கடத்திகளுக்கான அரிய வகைக் கனிமங்களின் விநியோகச் சங்கிலியைத் தன் பிடிக்குள் வைப்பதற்காக அமெரிக்காவால் வடிவமைக்கப்பட்ட “பாக்ஸ் சிலிக்கா” (Pax Silica) கூட்டணியிலும் இந்தியா அதிகாரப்பூர்வமாகத் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.
மேலும், இந்திய–அமெரிக்க இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தான அதே நாளில், குவாட் (Quad) கூட்டமைப்பின் சார்பாக, “குவாட் முக்கியக் கனிமங்கள் முன்முயற்சிக் கட்டமைப்பு” (Quad Critical Minerals Initiative Framework) என்ற புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், உலகளாவிய சுரங்கத் தொழில், கனிமப் பதப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி ஆகிய பணிகளுக்காகப் பொது மற்றும் தனியார் கூட்டு மூலதனத்திலிருந்து 20 பில்லியன் அமெரிக்க டாலர் வரை நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் கனிம வளங்களை அமெரிக்கா, ஜப்பானின் தொழில்நுட்பத்தோடும் பன்னாட்டு நிதி மூலதனத்தோடும் பிணைப்பதன் வழியாக, உலகளாவிய முக்கியக் கனிமங்களின் விநியோகச் சங்கிலியைத் தன் ஏகபோகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அமெரிக்கா முயற்சிக்கிறது.
இதுவரை உலக நாடுகள் பலவும் கனிமங்களை வெட்டி எடுத்தாலும், அவற்றைச் சுத்திகரிப்பதற்காகச் சீனாவிற்கே அனுப்பி வந்தன. தற்போதைய அமெரிக்காவின் புதிய கூட்டு ஒப்பந்தங்களின்படி, இந்தியாவில் அரிய வகைக் கனிமங்களை சுத்திகரிப்பதற்கான உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும். அமெரிக்க கார்ப்பரேட்டுகள் நம் நாட்டின் கனிம வளங்களைச் சூறையாடுவதுடன், இங்குள்ள மலிவான உழைப்புச் சக்தியை பயன்படுத்தி, சுத்திகரிப்பு என்ற பெயரில் நம் நாட்டின் நிலத்தையும் நீரையும் பாழாக்கப் போகின்றன. அமெரிக்காவிற்கு அடிமை விசுவாசத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் பாசிச மோடி அரசு அமெரிக்க மேலாதிக்க நலனுக்காக நம் நாட்டின் வளங்களையும், மக்களின் வாழ்வுரிமையையும் சூறையாடுவதற்கு திறந்துவிட்டுள்ளது.
சூறையாடப்படும் இந்தியாவின் கனிம வளங்கள்!
உலக அருமண் தனிமங்களின் ஒட்டுமொத்த இருப்பில் இந்தியா 8 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால், உலகளாவிய அரிய கனிமங்களின் உற்பத்தியிலோ இந்தியா ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே பங்களிப்பு செய்கிறது. இந்த இடைவெளியை குறைக்க வேண்டும், கனிம வளங்களை கட்டற்ற முறையில் சூறையாட வேண்டும் என்ற நோக்கத்திலிருந்தே பாசிச மோடி அரசு செயல்பட்டு வருகிறது.
இதற்காக, “கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம் 2023”, “வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தச் சட்டம் 2023” போன்ற பல பாசிச சட்டங்களை இயற்றி வருகிறது. இச்சட்டங்கள் மூலம் பூர்வகுடி மக்களிடமிருந்து அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு, அவர்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக விரட்டியடிக்கப்படுகின்றனர். நம் நாட்டின் வளங்கள் கட்டற்ற முறையில் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கப்படுகிறது.
சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் “நக்சல் வேட்டை” மற்றும் “ஆபரேஷன் ககர்” போன்ற பெயர்களில், இக்கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடும் பழங்குடியின மக்கள் கொன்றொழிக்கப்படுகின்றனர்; பழங்குடியினப் பெண்கள் மீது துணை இராணுவப் படைகளால் பாலியல் வன்முறைகள் ஏவப்படுகின்றன. அதேபோல், கடந்த மூன்று ஆண்டுகளாகப் பற்றி எரிந்து கொண்டிருக்கும் மணிப்பூரில், குக்கி பழங்குடியின மக்கள் மீது ஏவப்பட்ட இன அழிப்புக் கலவரத்திற்குப் பின்னணியிலும், மணிப்பூர் மலைகளில் உள்ள இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதற்கான கார்ப்பரேட் சூழ்ச்சியே ஒளிந்துள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து (பிரிவு 370) இரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் துண்டாடப்பட்ட பிறகு அம்மாநிலத்தில் லித்தியம் எனும் அரிய வகைக் கனிமம் பெருமளவில் இருப்பது கண்டறியப்பட்டது, பாசிச மோடி அரசின் சதித்திட்டத்தை அம்லப்படுத்தியது. இவ்வாறு நாடு முழுவதும் கனிம வளங்களைச் சூறையாடுவதற்காகப் பாசிச மோடி அரசு மேற்கொண்டு வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளின் பட்டியல் நீள்கிறது.
சமீபத்தில் 2026-2027 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ஒடிசா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய கடலோர மாநிலங்களில் அரிய வகைக் கனிமங்களைப் பிரித்தெடுத்துச் சுத்திகரிப்பதற்கான “அருமண் தாது வழித்தடங்கள்” (Rare Earth Corridors) அமைக்கும் பேராபத்துமிக்க திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களின் கடற்கரைகளில், அருமண் தனிமங்களில் ஒன்றான “மோனசைட்” (Monazite) எனும் கனிமம் 1.31 கோடி டன் அளவிற்கு நிறைந்துள்ளது. இந்த மோனசைட்டில் 72.3 லட்சம் டன்கள் அருமண் ஆக்சைடுகள் (Rare Earth Oxides – REOs) இருப்பதாக இந்திய அரசு மதிப்பிட்டுள்ளது. ஆனால், இந்த மோனசைட் கனிமத்தில் அதீத கதிரியக்கத் தன்மை இருப்பதால், அதன் சுத்திகரிப்பு முறை சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும்.
சான்றாக, ஒன்றிய அரசின் “இந்திய அருமண் நிறுவனம்” (IREL) தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மணவாளக்குறிச்சிப் பகுதியில் பல ஆண்டுகளாகக் கடற்கரை மணலில் இருந்து கனிமங்களைப் பிரித்தெடுத்து வருகிறது. இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்குத் தேவையான தோரியம் (Thorium-232) இந்த மோனசைட்டில் இருந்துதான் பிரித்தெடுக்கப்படுகிறது. இக்கனிமங்களைப் பிரித்தெடுக்கும் ஆலைச் செயல்பாடுகளின் போது, காற்றில் கலக்கும் கதிரியக்கத் தன்மையுடைய மோனசைட் தூசியைச் சுவாசிப்பதாலும், அணுக்கழிவுகளால் மாசுபட்ட கடல் உணவுகளை உண்பதாலும், இப்பகுதி மீனவக் கிராமங்களில் புற்றுநோய் பாதிப்புகள் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாகப் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், தைராய்டு பாதிப்புகளும், பிறக்கும் குழந்தைகளுக்கு மரபணுக் குறைபாடுகளும் உண்டாகுகிறது. மேலும், தொடர் மணல் அகழ்வினால் கடல் அரிப்பு தீவிரமடைந்து, மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களும், கடலோரப் பல்லுயிர்ப் பெருக்கமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்தியா-அமெரிக்கா இடையே போடப்பட்டுள்ள “முக்கியக் கனிமங்கள் ஒத்துழைப்புக் கட்டமைப்பு” அடிமை ஒப்பந்தத்தின்படி, இந்த நச்சுச் சுத்திகரிப்பு ஆலைகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த இந்தியக் கடற்கரையையும் வாழத் தகுதியற்ற நச்சுப் பிரதேசமாக மாற்றிவிடும்.
இந்த அரிய வகைக் கனிமங்களை வெட்டியெடுப்பது அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளுக்கு எந்தளவிற்கு அவசியமோ, அதே அளவிற்கு மோடி அரசு சேவை செய்யும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளான அதானி, அனில் அகர்வால் (வேதாந்தா) போன்ற கார்ப்பரேட்டுகளுக்கும் இன்றியமையாததாகும்.
இந்தியாவில் சூரிய மின்சாரத் துறையில் அதானி குழுமம் ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த மின்சார உற்பத்திக்கான சூரிய மின் தகடுகளை உற்பத்தி செய்வதற்கு அரிய வகைக் கனிமங்கள் இன்றியமையாதவை.

மேலும், இந்தியாவில் நிலக்கரிச் சுரங்கத் துறையில் அதானியும், கனிமங்களை வெட்டியெடுப்பதில் அனில் அகர்வாலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். எனவே, இந்த அரிய வகைக் கனிமங்களை வெட்டியெடுக்கும் புதிய ஒப்பந்தங்களும் இந்த கார்ப்பரேட் கும்பலுக்கே தாரைவார்க்கப்படும் என்பதில் ஐயமில்லை.
மொத்தத்தில், ஒட்டுமொத்த நாட்டின் வளங்களையும், உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையையும் அமெரிக்காவின் ஏகாதிபத்திய மேலாதிக்க நலனுக்காகவும், அதானி, அகர்வால் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறிக்காகவும் பாசிச மோடி அரசு அப்பட்டமாகச் சூறையாடி வருகிறது.
அதேசமயம், இதற்கெதிரான மக்கள் போராட்டங்களும் தீவிரமடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக மதுரை மக்கள் கிளர்ந்தெழுந்து போராடினர்; கன்னியாகுமரியில் ஒன்றிய அரசின் அணுக்கனிமச் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து கடலோர மக்கள் குரலெழுப்பினர்; ஒடிசாவில் வேதாந்தா நிறுவனத்தின் கனிமவளச் சூறையாடலுக்கு எதிராகவும், அரசின் பாசிச அடக்குமுறைகளுக்கு எதிராகவும் பழங்குடியின மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்; ஆரவல்லி மலைத்தொடரைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ராஜஸ்தான், ஹரியானா, குஜராத், டெல்லி மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
இவ்வாறு நாடு முழுவதும் பாசிச மோடி அரசின் கனிமவளச் சூறையாடலுக்கு எதிராக வெடித்துவரும் மக்கள் போராட்டங்களை, அமெரிக்கா – இந்தியாவிற்கு இடையே போடப்பட்டுள்ள இந்த இருதரப்பு ஏகாதிபத்திய அடிமை ஒப்பந்தத்திற்கு எதிரான பெருந்திரள் மக்கள் போராட்டமாகக் கட்டியமைக்க வேண்டியுள்ளது. இந்திய நாட்டின் இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் மக்களின் வாழ்வையும் பாதுகாக்க, உள்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிச கும்பலையும், சர்வதேச அளவில் டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பலையும் வீழ்த்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
அதேவேளையில், இன்றைய சர்வதேச சூழலில், நமது நாட்டின் இறையாண்மையையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் வகையிலான ஒரு தற்சார்புடைய “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு” அமைப்பதே இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாகும்.
![]()
மதி
(புதிய ஜனநாயகம் – ஜூன் 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











