10.08.2026

மேட்டூர் அடிப்பாலாற்றில் குடில்களைப் பிய்த்தெறிந்து
மீனவர்களை விரட்டியடித்து வனத்துறை அட்டூழியம்

பத்திரிகைச் செய்தி

சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, மேட்டூர் அணையின் நீர்த்தேக்கமான அடிப்பாலாறு பகுதியில் சுமார் 45 ஆண்டுகளாக தங்கி மீனவ மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று (09.08.2026) வனத்துறை அதிகாரிகள் மீனவ மக்களின் குடில்களை சேதப்படுத்தி அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேட்டூர் அணை சுமார் 60 சதுர மைல் பரப்பளவு கொண்டதாகும். இங்கு மீன்வளத்துறை சார்பில் ஆண்டுக்கு 1 கோடி உயர் ரக மீன் குஞ்சுகள் அணையில் விடப்பட்டு வளர்க்கப்படுகிறது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்வளத்துறையிடம் உரிமம் பெற்று மேட்டூர் அணையில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மீன்வளத்துறை சார்பில் விடப்படும் மீன்கள் பெரிதானவுடன் உரிமம் பெற்ற மீனவர்களை கொண்டு மீன்கள் பிடிக்கப்பட்டு, மீனவர் கூட்டுறவு சங்கத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் மீன்கள் அதிகளவில் கிடைக்கின்றன. இதனால் மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளான பாலாறு, செட்டிப்பட்டி, கோவிந்தபாடி, பண்ணவாடி ஆகிய இடங்களில் மீனவர்கள் குடில்களை அமைத்து மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர்.

குறிப்பாக, கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரானது தமிழ்நாடு எல்லையான அடிப்பாலாறு வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேரும். இதனால் அடிப்பாலாறு காவிரி கரையில் ஏராளமான மீனவக் குடும்பங்கள் தற்காலிகக் குடில்களை அமைத்து பழைய பரிசல்கள், வலைகள் மூலம் 45 வருடங்களாக மீன்பிடித்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அங்கு வந்த ஈரோடு மாவட்ட வனத்துறை அதிகாரிகள், “இது வனத்துறைக்கு சொந்தமான பகுதி” எனக் கூறி மீனவர்களின் குடில்களை வலுக்கட்டாயமாக காலி செய்துள்ளனர். குடில்களை காலி செய்யாவிட்டால் குடில்களுக்கு தீ வைக்கப்படும் என்றும் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் ரவுடிகளை போல மிரட்டல் விடுத்து, பல குடில்களைப் பிய்த்து எறிந்து வனத்துறை அதிகாரிகள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் குடில்களை காலி செய்து தட்டுமுட்டு சாமான்களுடன் கண்ணீருடன் வெளியேறி வருகின்றனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், “நாள் ஒன்றுக்கு 5 முதல் 10 கிலோ வரை மீன்களை பிடித்து வாழ்வாதாரம் நடத்தி வந்தோம். தற்போது வனத்துறை அதிகாரிகள் குடில்களை காலி செய்ய சொல்கிறார்கள். இதனால் எங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்படுகிறது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

மீனவ மக்கள் மீதான வனத்துறையின் இந்த அராஜக நடவடிக்கையை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

வனத்துறையே! தமிழ்நாடு அரசே!

  • மீனவர்களின் பாரம்பரிய உரிமையைப் பறிக்காதே!
    மீனவ மக்களின் வயிற்றில் அடிக்காதே!
  • அடிப்பாலாறு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை மீண்டும் வழங்கு!
    மீனவர்களின் குடில்களை அமைத்துக் கொடு!
  • அட்டூழியத்தில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!


இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க