நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் கதிரவனின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி மற்றும் தமிழ்நாடு தழுவிய இரங்கல் நிகழ்ச்சிகள்!

தோழரின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் மக்களிடம் கொண்டுசென்று சேர்க்கும் விதமாக தோழரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியும் தமிழ்நாடு முழுவதும் இரங்கல் நிகழ்ச்சிகளும் மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளால் நடத்தப்பட்டன.

க்சல்பாரிப் புரட்சியாளர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் கதிரவன் (வயது 81) வயது மூப்புக் காரணமாக கடந்த ஜூலை 13, 2026 அன்று மதுரையில் உயிரிழந்தார்.

தனது வாழ்நாளில் ஐம்பது ஆண்டு காலத்தை புரட்சிகர அரசியலுக்கு அர்ப்பணித்த தோழர் கதிரவன், எளிமை, நேர்மை, தோழமை, தியாகம் ஆகிய உயர்ந்த கம்யூனிசப் பண்புகளை உயர்த்திப் பிடித்து தனது இறுதி மூச்சிருக்கும் வரை மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தார். தோழரின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் மக்களிடம் கொண்டுசென்று சேர்க்கும் விதமாக தோழரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியும் தமிழ்நாடு முழுவதும் இரங்கல் நிகழ்ச்சிகளும் மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளால் நடத்தப்பட்டன.

தோழரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியானது ஜூலை 17 அன்று காலை 10.30 மணியளவில் மதுரையில் அவரது வீட்டில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ம.க.இ.க. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராமலிங்கம் தலைமை தாங்கினார். புரட்சிகர அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் விண்ணதிர முழக்கமிட்டவாறு அணிவகுத்து வந்து தோழர் கதிரவனின் உடலுக்கு மலர் வளையம் சூட்டி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், தோழர் சுகுணா, ம.க.இ.க., தோழர் உமா, ம.க.இ.க., தோழர் வெற்றிவேல் செழியன், மாநில பொதுச் செயலாளர், ம.அ.க., தோழர் ராஜாங்கம், ஆரியப்பட்டி, தோழர் கல்யாணி, ஆரியபட்டி, தோழர் சிவகாமு, மதுரை மேற்கு மாவட்டச் செயலாளர், ம.அ.க., தோழர் வேல்முருகன், தி.க., தோழர் பசும்பொன் பாண்டியன், தலைவர், அ.தி.ம.மு.க., தோழர் சு.க.முருகவேல் ராஜன், தலைவர், ம.வி.க., தோழர் சீமான் சிக்கந்தர், மதுரை தெற்கு மாவட்டத் தலைவர், எஸ்.டி.பி.ஐ., தோழர் ஜெயகுமார், சி.பி.ஐ., தோழர் மீ.த.பாண்டியன், த.ம.ப.க., தோழர் தீபன், பு.மா.இ.மு., தோழர் ஐயப்பன், வழக்கறிஞர் மற்றும் தோழர் குருசாமி, கழக இணைச் செயலாளர், ம.அ.க. ஆகிய புரட்சிகர அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும் ஜனநாயக சக்திகளும் தோழர் கதிரவனை நினைவுகூர்ந்து உரையாற்றினர்.

மனிதநேய ஜனநாயகக் கட்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், தமிழ் தேச குடியரசு இயக்கம், நாட்டு மாடு நலச்சங்கம், சி.பி.எம்., சி.பி.ஐ., இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி, ஆதித்தமிழர் விடுதலைக் கட்சி, மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம், தி.வி.க., ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம், எஸ்.கே.எம். உள்ளிட்டு பல கட்சிகள், இயக்கங்களைச் சார்ந்த தோழர்களும் ஜனநாயக சக்திகளும் வழக்கறிஞர்களும் தோழருக்கு சிவப்பஞ்சலி செலுத்தினர். தோழர் கதிரவனின் குடும்பத்தினர், உறவினர்கள், நீண்டகால நண்பர்கள், அமைப்புப் பணிகளில் அவரோடு ஒன்றிணைந்து ஈடுபட்டவர்கள், ஆரியப்பட்டி பொதுமக்கள் என 600-க்கும் மேற்பட்ட மக்கள் தோழரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் திரளாக பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக கைகளில் செங்கொடி ஏந்திய செஞ்சட்டை தோழர்கள் அணிவகுக்க, முழக்கங்கள் விண்ணதிர தோழரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில், தோழர்கள், ஜனநாயக சக்திகள், வழக்கறிஞர்கள், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். வழி நெடுக கட்டப்பட்டிருந்த செங்கொடிகள் தோழரின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் பறைசாற்றுவதாக அமைந்தன. மேலும், நிகழ்ச்சியில் சாதி ஆதிக்கத்திற்கு எதிராக புரட்சிகர அமைப்புகள் சார்பாக அண்மையில் கொண்டுவரப்பட்ட வெளியீடுகள், ஆகாஷ் கொட்டடிப் படுகொலைக்கு நீதிக் கேட்டு முன்னெடுக்கப்பட்ட இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தான அறிக்கை போன்றவை மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஜூலை 19 அன்று தோழர் கதிரவனுக்கு படத்திறப்பு நினைவேந்தல் கூட்டம் அவரது வீட்டில் நடைபெற்றது. இதற்கு மக்கள் அதிகாரக் கழக இணைச் செயலாளர் தோழர் குருசாமி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் தோழர்கள், தோழர் கதிரவனின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ஜனநாயக சக்திகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கோத்தகிரி
காஞ்சிபுரம்
கோவை
வேலூர்

இவையன்றி, தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விருத்தாச்சலம், உளுந்தூர்பேட்டை, திருவாரூர், கோயம்புத்தூர், கோத்தகிரி, கிருஷ்ணகிரி, மதுரை, உசிலம்பட்டி, திருமங்கலம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டப் பகுதிகளிலும் புதுச்சேரியில் அரியூர் பகுதியிலும், உள்ளூர் அளவிலும் இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட்டன. குறிப்பாக, மதுரை கிழக்கு மாவட்டம் மற்றும் தூத்துக்குடியில் மட்டும் எட்டு இடங்களில் இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இவை யாவும் தோழர் கதிரவனை தமிழ்நாடு முழுவதும் மக்கள் மத்தியில் கொண்டுசேர்ப்பதாக அமைந்தன.

தோழரின் மறைவையொட்டி மதுரையில் 1,000-க்கும் மேற்பட்ட சுவரொட்டிகளும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் 2000-க்கும் அதிகமான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. அதைப்போல், தோழரின் இறுதி அஞ்சலி மற்றும் படத்திறப்பு நினைவேந்தல் கூட்டத்தை ஒட்டி மதுரையில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட தட்டிகள் வைக்கப்பட்டன. இத்துடன், சமூக வலைத்தளங்களில் புரட்சிகர அமைப்புகளால் பகிரப்பட்ட இணைய போஸ்டர்கள் மூத்த நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் கதிரவனின் இறப்புச் செய்தியை மக்களிடமும் புரட்சிகர – ஜனநாயக சக்திகளிடமும் கொண்டுசென்று சேர்த்தன.

இவற்றை பார்த்து பல தோழர்களும் தோழருடன் இணைந்து செயல்பட்டவர்களும் தோழருக்கு நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் சிவப்பஞ்சலி செலுத்தினர். தோழரின் தலைமைப் பண்பு, அர்ப்பணிப்பு,  போர்க்குணம் குறித்து சமூக வலைத்தளங்களில் எழுதி மரியாதை செலுத்தினர்.

புரட்சிகர அமைப்புகளின் இந்நடவடிக்கைகளாவன நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் கதிரவனையும் அவர் ஏற்றுக்கொண்ட புரட்சிகர அரசியலையும் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதாக அமைந்தன. தோழர்கள் மத்தியிலும் சமூக மாற்றத்தை விரும்பக் கூடிய சக்திகளிடையேயும் தோழர் கதிரவனின் உயர்ந்த கம்யூனிசப் பண்புகளையும் அவர் ஏற்றுக்கொண்ட கம்யூனிச இலட்சியத்தையும் விதைப்பதாக அமைந்தன.


ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்.

(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க