காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைத் தாக்குதலில் இதுவரை 60,737 குழந்தைகள் பெற்றோர் இருவரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் அதிர்ச்சிகரமான அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
ஜூலை 29 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி 52,095 குழந்தைகள் தந்தையையும், 5,929 குழந்தைகள் தாயையும் இழந்துள்ளனர். 2,713 குழந்தைகள் பெற்றோர் இருவரையும் இழந்துள்ளனர். மேலும், 8,858 உறுப்பினர்களைக் கொண்ட 2,726 குடும்பங்கள் குடிமக்கள் பதிவேட்டிலிருந்தே முழுமையாக அழிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபரில் போடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இனவெறி இஸ்ரேல் காசா முழுவதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. போர்நிறுத்தத்திற்குப் பின்னர் மட்டும் 1,100-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 3,000-த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஜூலை 30 ஆம் தேதி அன்று, காசா முனையின் தெற்குப் பகுதியில் உள்ள கான் யூனிஸ் (Khan Younis) பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடார முகாமின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. தாக்குதலால் வீடுகளை இழந்த இடம்பெயர்ந்த மக்களுக்காக அமைக்கப்பட்ட கூடாரத்தின் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரு ஆடவரும், எட்டு வயது சிறுமி ஒருவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய காசாவில் உள்ள புரேஜ் (Bureij) அகதிகள் முகாமில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 மாதக் குழந்தை உயிரிழந்ததுடன், குறைந்தது 8 பேர் காயமடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் ஜூலை 30 அன்று காசா நகரில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கியிருந்த கூடார முகாம் அருகே பைக் ஓட்டிச் சென்ற பாலஸ்தீனர் ஒருவரை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; 10 பேர் காயமடைந்துள்ளனர்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு நாளும் 600 லாரிகள் நிறைய மனிதநேய நிவாரணப் பொருட்கள் காசாவிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும். இருப்பினும், இஸ்ரேலிய அதிகாரிகள் இந்த அத்தியாவசியப் பொருட்களின் வருகையைத் தொடர்ந்து கட்டுப்படுத்தி வருகின்றனர். இதனால் காசா மக்கள் பட்டினியாலும், உரிய மருத்துவம் கிடைக்காமலும் சொல்லொணா துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் இனவெறி இஸ்ரேல் மக்களின் தற்காலிக முகாம்கள் கூடாரங்கள் மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள் குறிவைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். குழந்தைகளின் பெற்றோர்கள் கொல்லப்பட்டு அனாதைகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இதுவரை 73,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1.74 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளனர். இதில் அதிகளவில் குழந்தைகளும், பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே காசா மீதான இஸ்ரேலின் பாசிசத் தாக்குதலுக்கு எதிராகவும் அதற்கு ஆயுதங்களை வழங்கி இனப்படுகொலைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்ற பாசிச மோடி அரசுக்கு எதிராகவும் உலக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். காசா குழந்தைகளுக்காக ஒவ்வொருவரும் குரல் கொடுக்க வேண்டும்.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











