காசா பயணத்தில் முதல் இந்தியர் | நேர்காணல்

நிகிதா நாயுடு நேரில் கண்ட சூழல்கள், இந்த முயற்சியில் பங்கேற்கத் தூண்டிய காரணங்கள் குறித்தும் உணவு, உடை, தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு உதவ முன்வந்தவர்களின் பணியை உலக அரசுகள் இனியும் புறக்கணிக்க முடியாது என்பது குறித்தும் இந்நேர்காணலில் பேசியுள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் நீதி போராளி நிகிதா நாயுடு, “உலக மனிதாபிமானப் பயணக் குழுவின்” வட ஆப்பிரிக்க தரைவழிப் பயணத்தில் இணைவதற்காக லிபியா சென்றபோது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். காசாவுக்கான கடல்வழி மனிதாபிமானப் பயணத்தை கிரேக்கத்தின் “கிரீட்” தீவு அருகே இஸ்ரேல் கடற்படை தடுத்து நிறுத்திய அதே நேரத்தில், இந்த தரைவழிப் பயணத்தில் இணைந்த முதல் இந்தியர் அவரே ஆவார்.

காசா மீதான முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக பொதுமக்கள் முன்னெடுத்த மிகப்பெரிய மனிதாபிமான முயற்சியாக இந்தப் பயணம் கருதப்படுகிறது. இதில் பங்கேற்றவர்களின் உறுதியும் மனவலிமையும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்களுள் கிரெட்டா துன்பெர்க், சய்ஃப் அபு கேஷெக் மற்றும் தியாகோ அவிலா ஆகியோர் அடங்குவர். லிபியாவில் தடுப்பு மற்றும் கைது நடவடிக்கைக்கு பிறகும் அவர்கள் தங்கள் முயற்சியைத் தொடர்ந்தனர்.

உணவு மற்றும் மருந்துகளை ஏற்றிச் சென்ற ஆயுதமற்ற பொதுமக்களின் கப்பல்களை, தனது அதிகார எல்லைக்கு வெளியே உள்ள கடற்பகுதியில் இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது சர்வதேச சட்டம் தொடர்பான பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், காசா மக்கள் நீண்டகாலமாக சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் வாழ்ந்து வருவதையும், உலக நாடுகள் பெரும்பாலும் அதைக் கண்டும் காணாதது போல இருந்து வருவதையும் இந்த முயற்சி மீண்டும் உலகிற்கு நினைவூட்டியுள்ளது.

இந்த மனிதாபிமானப் பயணத்தின் சரக்கு வாகனங்கள் மேற்கு லிபியாவில் உள்ள சிர்டே எல்லைப் பகுதியில் பல நாட்களாகக் காத்திருந்தன. கிழக்கு லிபியாவிற்குள் செல்ல அனுமதி கிடைக்கவில்லை. கிழக்கு லிபிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் லிபிய செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட தகவல் தொடர்பு சிக்கலே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டது.

என்.டபிள்யூ.எஸ். (NWS) செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் ராகுல் தேவுலபள்ளி, மே 16 அன்று நிகிதா நாயுடுவுடன் குரல் செய்தி வாயிலாக உரையாடினார். நிகிதா நாயுடு மே 7 அன்று திரிப்போலியில் இந்த தரைவழிப் பயணத்தில் இணைந்தார். இந்தப் பயணம் ஏப்ரல் 30 அன்று மௌரிடானியாவில் தொடங்கப்பட்டது.

பயணத்தின் போது தகவல் தொடர்பு வசதிகள் சீராக இல்லாவிட்டாலும், நிகிதா நாயுடு தனது அனுபவங்களைப் பகிர நேரம் ஒதுக்கினார். அவர் நேரில் கண்ட சூழல்கள், இந்த முயற்சியில் பங்கேற்கத் தூண்டிய காரணங்கள் மற்றும் உணவு, உடை, தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு உதவ முன்வந்தவர்களின் பணியை உலக அரசுகள் இனியும் புறக்கணிக்க முடியாது என்பது குறித்து வெளிப்படையாகப் பேசினார்.

செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் கேட்ட கேள்விக்கு நிகிதா நாயுடு அளித்த பதில்கள்:

கப்பல்கள் தற்போது எங்கு உள்ளன?

நாங்கள் லிபியாவின் கிழக்கு எல்லைக்கு 6 கி.மீ. தொலைவில் உள்ளோம். 12 நாட்களாக கப்பலில் உள்ளோம். மேலும் எல்லைக்கு அருகில் முகாம் அமைத்துக்கொண்டிருக்கிறோம். எங்களிடம் குறைந்த அளவே உணவும், தண்ணீரும் உள்ளது. மேலும், தகவல் தொடர்பும் மோசமாக உள்ளதால் குடும்பம் மற்றும் நண்பர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால், இதனை காசாவில் தினந்தோறும் மக்கள் படும் துயரங்களோடு ஒப்பிட முடியாது. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. எங்களது கப்பலை தடுத்து நிறுத்த பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர். லிபியாவிற்குள் லிபியர்கள் மட்டுமே செல்ல முடியும் எகிப்தில் எகிப்தியர்கள் மட்டுமே செல்ல முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. “மாக்ரெப் பிராந்தியத்தில்” நுழைய விசா கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உங்களை இந்த குழுவில் இணையத் தூண்டியது எது?

இது இப்போது தோன்றிய எண்ணமல்ல. 2023-இல் இஸ்ரேல் – காசா போர் தொடங்கியதிலிருந்தே காசாவிற்குள் நாங்கள் சிலபேர் சென்று அந்த மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. கப்பல் அணிவகுப்பு சர்வதேச அணிவகுப்புக்கு அழைப்பு விடுத்த போது அதில் பங்கேற்க விரும்பினேன். கடந்த வருடம் செப்டம்பர் – ஆகஸ்ட் மாதங்களில் நடந்த முதல் அணிவகுப்பில் சேர முயற்சித்தேன். ஆனால் அந்த அணிவகுப்பு ஒரு மாதத்திற்கு முன்னரே தள்ளி வைக்கப்பட்டது. அதனால் உடனடியாக என்னால் அதில் பங்கேற்க முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக இந்த வருடம் ஜனவரி இறுதியில் செல்வதாக இருப்பது தெரிய வந்ததால் உடனடியாக பங்கேற்க தயாரானோம். ஆனால் படகுகளில் செல்ல பல தடைகள் இருந்ததால் தரை வழியாகவே வந்து சேர்ந்தோம்.

இந்த பயணத்தைப் பற்றி உங்கள் குடும்பத்திடம் ஆலோசித்தீர்களா?

எங்கள் குடும்பத்திடம் இதைப்பற்றி கலந்தாலோசிக்க ஒன்றுமில்லை என நினைக்கிறேன். அவர்கள் என்ன முடிவு எடுப்பேன், எதற்கு இந்த மாதிரி முடிவு எடுத்தேன் என்பதை நன்கு அறிவார்கள். எனவே, நான் மேற்கொள்ளவிருக்கும் இந்தப் பணியைப் பற்றியும், அது என் வாழ்க்கையிலும் அவர்களின் எதிர்காலத்திலும் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களைப் பற்றியும் அவர்களைத் தயார்படுத்துவதே என்னால் செய்யக்கூடியது. “இதை ஒரு விவாதம் என்று சொல்வதைவிட ஒரு முன்னேற்பாடு என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்”.

நீங்கள் இந்த பயணத்தில் வரக்கூடிய அபாயங்களையும் பின்விளைவுகளையும் மதிப்பிட்டீர்களா?

இங்கு நாம் ஒரு பரந்த கண்ணோட்டத்துடன் சிந்திக்க வேண்டும். காசா ஏன் ஒரு மோதல் பகுதியாக மாறியுள்ளது? மனிதாபிமான உதவிப் பணிக்குச் செல்ல விரும்புபவர்களுக்கு கூட ஏன் இத்தகைய தடைகளும் சிக்கல்களும் இருக்கின்றன?

நீங்கள் உங்கள் முழு கவனத்தையும் காசா மக்களின் துயரத்தின் மீது செலுத்தினால், அதன் பிறகு என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இங்கு ஒவ்வொரு அடியும் ஒரு போராட்டம்; ஒவ்வொரு முயற்சியும் ஒரு சவால். எத்தகைய சூழ்நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டே ஆக வேண்டும்.

இறுதியில், சில செயல்கள் மற்ற அனைத்தையும் விட முன்னுரிமை கொடுக்க வேண்டிய தருணங்கள் உண்டு. எனக்கு அந்த முன்னுரிமை என்பது காசா மக்களுக்கு உதவுவதுதான். அவர்களுக்குத் தேவையான எந்த உதவியையும் செய்ய முடிந்தால், அல்லது அவர்கள் பெற வேண்டிய உதவிகள் கிடைக்க நான் ஒரு பாலமாகச் செயல்பட முடிந்தால், அதைத்தான் நான் செய்ய விரும்புகிறேன். அதுவே எனது நோக்கமும் விருப்பமும் ஆகும்.

இந்தியாவிலிருந்து லிபியா வரை உங்கள் பயணத்தைப் பற்றி கொஞ்சம் கூறுங்கள்

இந்தியாவிலிருந்து லிபியா சென்ற பயணம் உண்மையில் மிகவும் குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்டு விரைவாக நடந்தது. கடல்வழி மனிதாபிமானப் பயணத்தில் எங்களால் இணைய முடியாது என்பது உறுதியானதும், அதற்குப் பதிலாக தரைவழி மனிதாபிமானப் பயணத்தில் இணையலாம் என்று எங்களிடம் தெரிவித்தனர்.

ஆனால், ஆரம்பத்தில் நாங்கள் விரும்பிய திட்டம் அது அல்ல. ஏனெனில் வட ஆப்பிரிக்க தரைவழிப் பயணம் என்பது இயல்பாகவே வட ஆப்பிரிக்க நாடுகளை மையமாகக் கொண்ட முயற்சியாக இருந்தது. கடல்வழிப் பயணத்திற்குப் பிறகு, ஆசியா அல்லது உலகின் பிற பகுதிகளில் இருந்து தனித்த மனிதாபிமானப் பயணத்தை ஒருங்கிணைக்கலாம் என்ற எண்ணமே எங்களிடம் இருந்தது.

உண்மையில், நான் புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் விமானச் சீட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அதுவரை இது வெறும் யோசனையாகவே இருந்தது; நிச்சயமான திட்டமாகத் தோன்றவில்லை. சீட்டுகள் பதிவு செய்யப்பட்ட அந்தத் தருணத்தில்தான், இந்தப் பயணம் உண்மையில் நடைபெறப்போகிறது என்ற உணர்வு எனக்குள் உருவானது.

பிறகு நீங்கள் விசா உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து லிபியாவிற்குப் புறப்பட்டீர்களா?

ஆம். அதன் பிறகு விசா மற்றும் பிற பயண ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து, நேரடியாக லிபியாவிற்கு பயணம் செய்தோம். தரைவழி மனிதாபிமானப் பயணத்தில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தப் பயணம் ஏப்ரல் 30 அன்று மௌரிடானியாவில் தொடங்கியது. பின்னர் அது அல்ஜீரியா மற்றும் துனிசியா வழியாக முன்னேறியது.

மீதமுள்ள குழுவினர் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு லிபியாவில் எங்களுடன் இணைந்தனர். அதன் பின்னர், திரிப்போலியில் இருந்து கிழக்குத் திசை நோக்கி எங்கள் பயணத்தைத் தொடர்ந்துவருகிறோம். எங்கள் நம்பிக்கை என்னவென்றால், எகிப்து வழியாகச் சென்று, இறுதியில் ரஃபா எல்லையை அடைந்து, அதன் மூலம் காசா பகுதிக்குள் நுழைய முடியும் என்பதாகும்.

கான்வாயின் பயணத்தின்போது ஏதேனும் சவால்களை எதிர்கொண்டீர்களா?

ஆம், நிச்சயமாக. பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம். நாங்கள் பயணித்த ஒவ்வொரு நாட்டின் அரசியல் சூழ்நிலையும் வேறுபட்டதாக இருந்தது. பாதுகாப்பு நிலைமைகளும் நாட்டுக்கு நாடு மாறுபட்டன. சில நேரங்களில் ஒரே நாட்டின் வெவ்வேறு பகுதிகளில்கூட ஆபத்துகளின் தன்மை மாறுபட்டது. ஆனால், கலாச்சார ரீதியாக இந்தப் பயணம் மிகவும் அருமையான அனுபவமாக இருந்தது. உலகின் பல நாடுகளிலிருந்து வந்த மக்களைச் சந்தித்து, தற்போதைய நிகழ்வுகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்தச் சூழ்நிலைக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது குறித்து தனிப்பட்ட முறையிலும், சிந்தனை ரீதியிலும், நடைமுறை ரீதியிலும் பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.

இந்தப் பயணத்தில் நான் பல சிறப்பான மனிதர்களைச் சந்தித்தேன். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், நூலகர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த இளைஞர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். மக்களையும் அவர்களின் கலாச்சாரங்களையும் அறிந்துகொள்வதன் அடிப்படையில் பார்க்கும்போது, இந்தப் பயணம் எனக்கு மறக்க முடியாத, அற்புதமான அனுபவமாக அமைந்துள்ளது.

இந்தியாவின் அணுகுமுறை குறித்து உங்கள் கருத்து என்ன?

இந்த விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை இன்னும் சிறப்பாகவும், நுட்பமானதாகவும், தங்களின் இறையாண்மை மற்றும் அடிப்படை உரிமைகளை இழந்து வரும் ஒரு மக்களின் துயரத்தைப் புரிந்துகொள்ளும் வகையிலும் இருந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். இந்திய அரசு இதைவிடச் சிறப்பாகச் செயல்பட முடியும். ஆனால் அது அவர்களின் அரசியல் முடிவுகளுடன் தொடர்புடையது. என்னால் இயன்றதை நான் செய்து வருகிறேன். இந்தியர்கள் அனைவரும், உலகின் எந்தப் பகுதியில் வாழும் மக்களாக இருந்தாலும் அவர்களுக்கு என்ன உரிமைகள் இருக்க வேண்டும் என்பதற்கான தங்களது நிலைப்பாட்டைத் தெளிவாக வரையறுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில், நாம் மற்றவர்களுக்கு பயன்படுத்தும் நீதியும் நெறிமுறைகளும் ஒரு நாள் நமக்கும் பொருந்தும்.

இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்சினையை முழுமையாகப் புரிந்துகொள்ளாதவர்களுக்கு இன்று ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன. உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மனிதாபிமானக் கப்பல் மற்றும் கான்வாய் முயற்சிகள் முக்கிய பங்காற்றியுள்ளன.

யாராக இருந்தாலும், தங்களுக்கு கிடைக்கும் தகவல் தளங்களைப் பயன்படுத்தி இந்த விவகாரத்தை ஆராயலாம். நாம் அனைவரும் இதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். ஏனெனில், இந்தப் பிரச்சினை அக்டோபர் 7, 2023 அன்று தொடங்கியதல்ல. இது பல தசாப்தங்களாக நீடித்து வரும் ஒரு பிரச்சினையாகும். “பாலஸ்தீன மக்களுக்கு நிகழ்ந்து கொண்டிருப்பது வெறும் இடம்பெயர்வு (Displacement) மட்டுமல்ல; அவர்களின் அடையாளம், வரலாறு மற்றும் இருப்பையே அழித்தொழிக்கும் முயற்சி (Erasure)” என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

காலநிலை நீதி (Climate Justice) செயற்பாட்டாளராக இருக்கும் உங்கள் பங்கு, பாலஸ்தீனப் போராட்டத்துடன் எவ்வாறு தொடர்புபடுகிறது?

காலநிலை நீதி மற்றும் சமூக, பொருளாதார, அரசியல் நீதியை தனித்தனியாகப் பார்க்க முடியாது என்று நான் கருதுகிறேன். சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி மக்களை தீவிரமான சூழ்நிலைகளுக்குத் தள்ளிய அதே அமைப்புதான் காலநிலை மாற்றத்திற்கும் காரணமாக உள்ளது.

எனவே, காலநிலை மாற்றம் தொடர்பான எனது பணியும், சமூக-பொருளாதார மற்றும் அரசியல் அநீதிகளுக்கு எதிரான எனது பணியும் எப்போதும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவையாகவே இருந்து வருகின்றன. தெளிவாகச் சொல்வதானால், நான் வெறுமனே ஒரு காலநிலை நீதி செயற்பாட்டாளர் மட்டும் அல்ல. கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக, காலநிலை நீதி என்ற ஒன்றை தனியாக எடுத்துச் செயல்பட்டதில்லை. எனது சமூகப் பணிகளிலும், பொதுவான செயற்பாடுகளிலும், அது சமூக மற்றும் பொருளாதார நீதியுடன் இணைந்தே இருந்து வருகிறது. இந்தப் பிரச்சினைகளை தனித்தனியாகப் பார்க்க முடியாது. “சமூக நீதி இல்லாமல் காலநிலை நீதி இருக்க முடியாது” என்பதே எனது நிலைப்பாடு.

இந்த மனிதாபிமானப் பயணத்தின் (Convoy) நோக்கம் என்ன?

என்னைப் பொறுத்தவரை, இந்தப் பயணத்தின் வெற்றி அதன் இறுதி விளைவால் தீர்மானிக்கப்படும். காசா மீதான முற்றுகையை உடைத்து, அங்கு நுழைந்து, பாலஸ்தீன மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க முடிந்தால் அதுவே வெற்றியாகும். அவர்கள் எதைச் செய்யச் சொல்கிறார்களோ, எவ்வளவு காலம் எங்களால் அங்கு இருக்க முடியுமோ, அந்த அளவுக்கு உதவுவது எங்கள் நோக்கம். சேதமடைந்தவற்றைச் சீரமைத்தல், மறுகட்டமைத்தல், மீட்டுருவாக்கப் பணிகளில் ஈடுபடுதல் போன்ற எந்த உதவியையும் செய்ய முடிந்தால், இந்தப் பயணத்தின் நோக்கம் நிறைவேறியதாக நான் கருதுவேன்.

நீண்டகால அளவில் பார்க்கும்போது, காசா மீதான முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவது மிகவும் சிக்கலான உலகளாவிய அரசியல் மற்றும் மனிதாபிமான பிரச்சினைகளுடன் தொடர்புடையது. அதற்கு உலக நாடுகளின் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. ஆனால் இப்போதைக்கு, பாலஸ்தீன மக்களிடம் சென்று, எனது அமைப்பு திறன்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு உதவ முடிந்தால், குறிப்பாக காசாவின் குழந்தைகளுடன் இருந்து அவர்களுக்கு ஆதரவாக இருக்க முடிந்தால், அது எனக்கு மிகப்பெரிய சாதனையாக இருக்கும். அதுவே இந்தப் பயணத்தில் பங்கேற்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

இந்தப் பயணத்தில் நீங்கள் மட்டுமே இந்தியராக இருக்கிறீர்களா?

ஆம். இந்த ஆண்டு நடைபெற்ற கடல்வழி மனிதாபிமானப் பயணத்தில் இந்தியாவிலிருந்து பத்து பேர் பங்கேற்கத் திட்டமிடப்பட்டிருந்தனர். அவர்களில் எட்டு பேர் உடல்நலப் பிரச்சினைகள், சட்டரீதியான சிக்கல்கள் மற்றும் விசா மறுப்பு போன்ற காரணங்களால் விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. மீதமிருந்த இருவர் அதிக ஆபத்து இருப்பதாகக் கருதி பங்கேற்பதைத் தவிர்த்தனர். ஆரம்பத்தில் இருந்த பத்து பேரில் மூவர் தரைவழிப் பயணத்தில் இணைய விண்ணப்பித்தனர். ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட குடும்ப உடல்நல அவசரநிலையால் அவர்களில் இருவரும் விலகினர். இவ்வாறு, இறுதியில் இந்த தரைவழி மனிதாபிமானப் பயணத்தில் பங்கேற்ற ஒரே இந்தியராக நான் மாறினேன்.

நன்றி: என்.டபிள்யூ.எஸ்.


அசுரன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க