10.07.2026

அரசு மருத்துவமனைகளில் ஆதார் ஓ.டி.பி. கட்டாயம்:
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை ஒழித்துக்கட்டும்
த.வெ.க. அரசின் சதி!

பத்திரிக்கை செய்தி

ரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு அனுப்பப்படும் ஒருமுறை கடவுச்சொல் (OTP) சரிபார்ப்பைக் கட்டாயமாக்கி, அதனைச் சத்தமின்றி நடைமுறைப்படுத்தி வருகிறது த.வெ.க. அரசு.

கடந்த சில நாட்களாக அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் (OP) சீட்டை வழங்குவதற்கு நோயாளிகளிடம் ஆதார் ஓ.டி.பி. எண் கேட்கப்படுகிறது. இதனால், முதியவர்கள், ஏழை-எளிய மக்கள், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் இல்லாதவர்கள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இச்சரிபார்ப்புப் பணிக்கு அதிக நேரம் எடுப்பதால் சிகிச்சையாக்கத் தாமதமாவதுடன், மருத்துவமனைகளில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களே ஆவர். அவர்களிடம் ஸ்மார்ட்-போன் இருக்க வேண்டும் அல்லது ஓ.டி.பி. பெறும் வசதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மனிதநேயமற்ற அணுகுமுறையாகும்.

இது, மக்களை தனியார் – கார்ப்பரேட் மருத்துவமனைகளை நோக்கி நெட்டித் தள்ளுவதுடன், ஏழை – எளிய மக்களுக்கு மருத்துவத்தைப் புறக்கணிக்க வழிகோலும் மனிதத்தன்மையற்ற நடவடிக்கையாகும். உயிர் காக்கும் சிகிச்சை பெறும் உரிமையை தொழில்நுட்ப நடைமுறைகளால் தாமதப்படுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

மருத்துவ சேவை என்பது மக்களின் அடிப்படை உரிமையாகும். அதை ஆதார், ஓ.டி.பி. போன்ற நிர்வாக நடைமுறைகளுடன் இணைத்து சிக்கலாக்கக் கூடாது; அவசர சிகிச்சை எந்த நிலையிலும் மறுக்கப்படவோ, தாமதப்படுத்தப்படவோ கூடாது.

இதற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ஆதார் ஓ.டி.பி. எண் பெற முடியாதவர்களுக்குப் பழைய முறையில் எழுத்துப்பூர்வமாக ஓ.பி. சீட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சரிபார்ப்புப் பணிக்கு முதன்முறையே தாமதமாகும் என்றும் இதன் மூலம் நோயாளிகளின் மருத்துவ விவரங்கள் டிஜிட்டல்மயமாக்கப்படுவதால், அடுத்தடுத்த முறைகளில் இவ்விவரங்களைக் கொண்டு தமிழ்நாட்டின் பிற மருத்துவமனையிலும் எளிதாக சிகிச்சையளிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இவையெல்லாம் இப்புதிய நடைமுறைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் கார்ப்பரேட் சதியை மறைப்பதற்கான கண்துடைப்பு நாடகமாகும்.

பாசிச மோடி அரசின் “ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்” என்ற திட்டமானது நாடு முழுவதும் உள்ள மக்களின் மருத்துவ விவரங்களை டிஜிட்டல் மயமாக்கி ஒரே தளத்தின் கீழ் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனடிப்படையிலேயே அரசு மருத்துவமனைகளில் ஆதார் ஓ.டி.பி. சரிபார்ப்பு நடைமுறை கொண்டுவரப்பட்டு அதன் மூலம் நோயாளிகளின் மருத்துவ விவரங்கள் டிஜிட்டல் முறையில் திரட்டப்படுகின்றன. ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இத்திட்டம் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

உண்மையில், இந்த பிரம்மாண்ட தகவல் திரட்டலின் பின்னணியில் கோடிக்கணக்கான இந்திய மக்களின் மருத்துவ விவரங்களை கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்த்து அவர்களின் கொள்ளையைத் தீவிரப்படுத்தும் சதித்திட்டமே ஒளிந்துள்ளது. இதன் மூலம் மருத்துவ சந்தையில் மக்களின் விவரங்கள் சந்தைப் பொருளாக மாற்றப்படும் அபாயம் உள்ளது. மோடியின் ஆட்சியில் விவசாயம், கல்வி உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல் முறையில் பிரம்மாண்ட தகவல் திரட்டல் நடந்து வருவதும், ஆதார் உள்ளிட்ட மக்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிவதும் விற்பனை செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருவதும் இதனை நிரூபிக்கின்றன.

த.வெ.க. அரசு ஆட்சி வந்த இரண்டே மாதங்களிலேயே மருத்துவத்துறை கார்ப்பரேட்மயமாக்கலை தீவிரப்படுத்துவதில் முனைப்புக் காட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே இந்த நடைமுறையையும் திணித்துள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு இந்த கட்டாய ஓ.டி.பி. சரிபார்ப்பு நடைமுறையை முற்றிலுமாக கைவிட வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.


இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க