நாங்குநேரி வன்கொடுமை
உண்மை அறியும் குழுவின் அறிக்கை

தலித் அறிவு ஜீவிகள் குழுமம் (DIC)
மற்றும்
தமிழ்நாடு பறையர் பேரவை

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பத்து கிராமத்தில் 02/03/2026 அன்று இரவு சுமார் 7:00 மணியளவில் 3 இருசக்கர வாகனங்களில் 9 பேர் கும்பல் சந்திரன் என்பவருக்கு சொந்தமான தெருமுனை கடைகள் எதிரில் இருந்தவர்களை பயங்கரமான ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டியிருக்கிறார்கள். இதில் கடை எதிரிலுள்ள பெரும்பத்து இந்திரா காலனி பறையர் சமூகத்தைச் சார்ந்த ஜான் மார்க் (42) (கிருத்துவ பறையர்) என்பவரும், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி திரிநாத் கட்டா (50) என்பவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் நாடார் சமூகத்தை சேர்ந்த பிரபாகரன், நெல்சன், கணேசன், ராமசாமி ஆகியோரும் மற்றும் புளியங்குளத்தில் வசித்து வரும் கோனார் சமூகத்தை சேர்ந்த சசிகுமார் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தை தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்த நாங்கள், எங்கள் உண்மை அறியும் குழுவோடு 06/03/2026 அன்று சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரி கொலை வழக்கு விபரம்:

  1. காவல் நிலையம் – நாங்குநேரி, திருநெல்வேலி மாவட்டம்
  2. தொடர்பு எண் 9698415453
  3. புகார்தாரர் – பிரபாகரன் (பாதிக்கப்பட்ட டீக்கடைக்காரர்)
  4. குற்ற எண் – 143/2026.
    பிரிவுகள் – BNS (2023) – 191(2), 192(3), 296(b), 118(1), 109(1), 103(1), The Arms Act (1959) 25(1A), The Explosive Substances Act (1908) 3
  5. விசாரணை அதிகாரியின் பெயர் – சுப்பரமணியன் (காவல் ஆய்வாளர்)

நாங்குநேரி கொலை குற்றவாளிகள்:

(1) கண்ணன் (21), சுடலை கண்ணுவின் மகன், தென்னிமலை.

(2) உச்சிமகாலி @ மிட்டாய் (20), ஆண்டியின் மகன், வள்ளியூர்.

(3) வசந்த குமார் (21), முருகனின் மகன், நெடுங்குளம்.

(4) அந்தோணி மைக்கேல் (18), பன்னீர் செல்வத்தின் மகன், தென்னிமலை.

(5) சுப்பையா @ சுபாஷ் (19), முருகனின் மகன், தென்னிமலை.

(6) கல்யாணி (19), சுடலை கண்ணுவின் மகன், தென்னிமலை.

(7) ராஜா @ இசக்கிராஜா (19), முத்தையாவின் மகன், நம்பி நகர், நாங்குநேரி.
ஏழு பேரும் 18-21 வயதுக்குட்பட்டவர்கள்.

கள ஆய்வு செய்தவர்கள்:

  1. பேரா. C. லஷ்மணன் (Dalit Intellectual Collective, சென்னை)
  2. பேரா.K. கதிரவன் (பறையர் பேரவை, சென்னை)
  3. Ms. பிரியா மனோகரன் (அரசியல் செயற்பாட்டாளர், திருநெல்வேலி)
  4. Mr.து. பிரவின் M.L (வழக்குரைஞர், புதுச்சேரி)
  5. Mr.ஏ. சத்தியராஜ் Ph.D (ஜெய்பீம், அமைப்பு, புதுச்சேரி)
  6. Mr.ஆசை கதிரவன், வழக்குரைஞர் (மக்கள் தேசம் கட்சி)
  7. Mr. சரண் (அரசியல் செயற்பாட்டாளர், புதுச்சேரி)

கள ஆய்வில் சந்தித்தவர்கள்:

  1. ஜான் மார்க் குடும்பத்தினர்
  2. ஜான் மார்க் அவர்களிடம் சம்பவத்தின் போது பேசிக் கொண்டிருந்தவர்
  3. நெல்சனின் தங்கை மற்றும் குடும்பத்தினர்
  4. கணேசனின் மனைவி குடும்பத்தினர்
  5. வீராங்குளம் கணேசனின் மனைவி மற்றும் குடும்பத்தினர்
  6. டீ கடை உரிமையாளர் பிரபாகரன் – பாதிக்கப்பட்டவர்

பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப விபரம்:

  1. ஜான் மார்க்கின் குடும்பம்
    கண்ணகி (இந்து பறையர்) – ஜான் மார்க்கின் மனைவி
    குழந்தைகள்: கன்னிமரியா (8 ஆம் வகுப்பு),
    நவினா (5 ஆம் வகுப்பு)
    நம்பியம்மாள் – ஜான் மார்க்கின் அம்மா
  2. திரிநாத் கட்டாவின் குடும்பம்
  3. நெல்சனின் குடும்பம்
  4. கணேசனின் குடும்பம்
  5. பிரபாகரனின் குடும்பம்
  6. ராமசாமியின் குடும்பம்
  7. மாவட்ட ஆட்சியர் (திருநெல்வேலி மாவட்டம்)
  8. Mr. ஜெயப்பிரகாஷ் (மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்)

பெரும்பத்து கிராமத்தினரின் வாக்குமூலம்

  1. ஜான் மார்க் அம்மா – எமது குழுவினரிடம் கூறியதாவது:

இறந்துபோன எனது மகன் ஜான் மார்க் (45) மாற்றுத்திறனாளி. அவனது மனைவி கண்ணகியும் (இந்து பறையர்) மாற்றுத்திறனாளி; வாய் பேச முடியாதவர். ஜான் மார்க்கின் குழந்தைகள் கன்னிமரியா (13), நவினா (10) உட்பட நாங்கள் பெரும்பத்து இந்திரா காலனியில் வசித்து வருகிறோம். எனது மகன் பெயிண்டிங் வேலைக்கு செல்பவர். அவருடைய வருமானத்தில்தான் குடும்பமே இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது என் மகனை இந்த பாவி பசங்க கொன்றுவிட்டார்கள்; இதற்கு அப்புறம் இந்த குடும்பம் எப்படி ஆகப்போகுதோ என்று தெரியவில்லை என்று கதறி அழுதார்.

  1. இறந்துபோன ஜான் மார்க் உடனிருந்தவர் எமது குழுவினரிடம் கூறியதாவது:

02/03/2026 அன்று சுமார் இரவு 7:00 மணியளவில் எங்கள் பெரும்பத்து இந்திரா காலனி தெரு முகப்பில் உள்ள கணேஷ்பாபு வெல்டிங் பட்டறை அருகில் நான், ஜான் மார்க் அண்ணன், தங்கபாண்டி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் திடீரென்று எங்களை நோக்கி அரிவாளுடன் தாக்க ஓடி வருவதை கண்டு நாங்கள் மூவரும் அவர்களிடமிருந்து தப்பிக்க ஊருக்குள் ஓடினோம். ஆனால் ஜான் மார்க் அண்ணன் வலது கால் ஊனமுள்ள மாற்றுத்திறனாளி என்பதால் அவரால் ஓட முடியவில்லை; ஜான் அண்ணனை தலை, மார்பு, கை, கால், கழுத்து என சரமாரியாக வெட்டினார்கள். இதில் ஜான் அண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

  1. பிரபாகரன் (52), த/பெ பால்நாடார் (டீ கடை உரிமையாளர்)- பாதிக்கப்பட்டவர் எமது குழுவினரிடம் கூறியதாவது:

நான் நாங்குநேரி ஒன்றியம், பெரும்பத்து மேலத்தெருவில் மனைவி பாக்கியலட்சுமி, 1 மகன், 2 மகள்களுடன் வசித்து வருகிறேன். பெரும்பத்து மெயின் ரோட்டில் உள்ள எங்கள் ஊரைச் சேர்ந்த தவசிநாடார் மகன் சந்திரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கடந்த 4 வருடங்களாக டீ கடை நடத்தி வருகிறேன். 02/03/2026 அன்று இரவு சுமார் 7:00 மணியளவில் எனது டீ கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது 3 இருசக்கர வாகனங்களில் வந்த நபர்கள் (பார்த்தால் அடையாளம் தெரியும்) எனது கீழ்பக்கம் உள்ள பெரும்பத்து மெயின் ரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு கையில் அரிவாள்களுடன் ஓடிச் சென்று பெரும்பத்து இந்திரா காலனி தெரு முகப்பில் உள்ள கணேஷ்பாபு வெல்டிங் பட்டறை அருகில் நின்று கொண்டிருந்த இந்திரா காலனியைச் சேர்ந்த வேதநாயகம் மகன் ஜான் மார்க் என்பவரை அரிவாளால் தலை, வலது மார்பு மற்றும் கை, கால்களில் சரமாரியாக வெட்டினார்கள். அதை பார்த்த தெருவில் உள்ளவர்கள் சத்தம் போட்டு அந்த நபர்களை பிடிக்க ஓடி வரவும், அவர்கள் ஊர்காரர்களை பார்த்து “ஏல பெரும்பத்துகார சானா தேவடியா மவனுகளா, உங்கள் இன்னைக்கு கொல்லாமல் விடமாட்டோம்” என்று மிரட்டிக்கொண்டே மேற்காக ஓடி வந்தார்கள்.

அப்போது ரோட்டில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி திரிநாத் கட்டா (40) என்பவரை சைக்கிளோடு கீழே தள்ளி நடுரோட்டில் போட்டு இரண்டு நபர்கள் அவரது தலை, கழுத்து, தாடை, உச்சந்தலை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டிப் போட்டுவிட்டு என் கடையை நோக்கி ஓடி வந்தார்கள். அப்போது ஒருவன் என் கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த பெரும்பத்து தெற்கு தெருவைச் சேர்ந்த ராமசாமி த/பெ வைகுண்ட நாடார் என்பவரை “ஏல சானா தேவிடியா மவனே சாவுல” என்று சொல்லி தலையிலும் முதுகிலும் வெட்டினர். அதை பார்த்த என் கடையில் டீ குடித்து கொண்டிருந்தவர்களும் கீழ்பக்கம் நின்றிருந்தவர்களும் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

அந்த சமயத்தில் பழனி என்பவர் கடையிலிருந்து மாவு வாங்கிக்கொண்டு என் கடைக்கு தெற்கே வந்த பெரும்பத்து மேலத்தெருவைச் சேர்ந்த நெல்சன் ஜோசப் த/பெ ஆபிரகாம் என்பவரை 2 நபர்கள் அரிவாளால் தலை, தோள்பட்டை, இரண்டு உள்ளங்கைகள், வயிறு ஆகிய பகுதிகளில் வெட்டி சாய்த்தனர். அப்போது 2 நபர்கள் ஓடிவந்து என் கடைக்கு டீ குடிக்க வந்த வீராங்குளத்தைச் சேர்ந்த கணேசன் த/பெ ஆறுமுக நாடார் என்பவரை அரிவாளால் வலது கன்னம், தலை, மூக்கு ஆகிய இடங்களில் வெட்டிவிட்டு பின்னர் டீ கடை பட்டறை முன்பு நின்று கொண்டிருந்த என்னை ஒருவன் அரிவாளால் “ஏலே சாண பயலே” என்று சொல்லி உச்சந்தலை மற்றும் வலது கை ஆகிய பகுதியில் வெட்டி கீழே தள்ளவும், நான் எழுந்து ரோட்டில் தெற்காக ஓடினேன்.

அங்கு கூட்டத்தில் இருந்த நெல்சன் ஜோசப் மகன் ஆல்வின், அருகில் மொபைல் கடை வைத்துள்ள சொர்ணராஜ், பாத்திரக்கடை வைத்துள்ள லார்சன் மற்றும் ஊர்காரர்கள் சேர்ந்து அவர்களை பிடிக்க முற்பட்டபோது, அவர்கள் பைக்கில் வைத்திருந்த இரண்டு பெட்ரோல் குண்டுகளை கூட்டத்தை பார்த்து வீசினார்கள். அந்த குண்டுகள் வெடிக்காமல் பாட்டில்கள் உடைந்து கீழே கிடந்ததை பார்த்து அவர்கள் “ஏலே உங்கள் ஊரோட அழிக்காமல் விடமாட்டோம்” என்று மிரட்டிவிட்டு வந்த பைக்குகளில் தெற்காக சென்றுவிட்டார்கள்.

அவர்கள் வெட்டியதில் ஜான் மார்க் என்பவரும் திரிநாத் கட்டா என்பவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்கள். காயம்பட்ட என்னையும், நெல்சன் ஜோசப் என்பவரையும் பாத்திரக்கடை லார்சன் அவர்கள் அவரது காரில் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வீராங்குளத்து கணேசன் மற்றும் பெரும்பத்து ராமசாமி ஆகியோரை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்கள். அங்கு நெல்சன் ஜோசப்பிற்கும், கணேசனுக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் மேலும் 1980களிலிருந்தே மறவர்களால் இது மாதிரி சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதை எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள் என்று கூறினார். இறுதியாக ஒன்றை சொன்னார்: அந்த ஜான் பையன் ஒரு அப்பாவி; அநியாயமாக கொன்றுவிட்டார்கள் என்று கதறி அழுதார்.

  1. நெல்சன் ஜோசப் அவர்களின் தங்கை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் எமது குழுவினரிடம் கூறியதாவது:

எனது அண்ணன் பெரும்பத்து மேலத்தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். பெரும்பத்து கிராமத்தில் ஆடியோ-ரேடியோ கடை வைத்துள்ளார். 02/03/2026 சம்பவத்தன்று வீட்டிலிருந்து கிளம்பி இரவு உணவிற்காக தோசை மாவு வாங்குவதற்கு பெரும்பத்து மெயின் ரோட்டில் உள்ள சந்திரன் என்பவருக்கு சொந்தமான காம்ப்ளெக்ஸுக்கு சென்றிருக்கிறார். அப்போது பழனி என்பவரது கடையிலிருந்து மாவு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பும் போது அங்கு திடீரென்று 2 நபர்கள் எனது அண்ணனை அரிவாளால் தலை, இரண்டு உள்ளங்கைகள், தோள்பட்டை, வயிற்றின் இடது புறம் ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்த தகவல் அறிந்து செல்லும் போது அங்கிருந்தவர்கள் எங்கள் அண்ணனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். இதற்கு அப்புறம் என் அண்ணனால் எந்த வேலையும் செய்ய முடியாது. தற்போது திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். மேலும் என் அண்ணி உடல்நிலை சரியில்லாதவர்; அவருக்கான எல்லா வேலைகளையும் என் அண்ணன் தான் செய்வார். இறுதியாக இப்படி செய்தவர்களை கடுமையான தண்டனை வாங்கிக் கொடுங்கள் என்றார்.

  1. திரிநாத் கட்டாவின் மனைவி எமது குழுவினரிடம் கூறியதாவது:

நான், இறந்துபோன கணவர் திரிநாத் கட்டா, எங்களது இரண்டு மகன்கள் 1. ஜெயதேவ் (18), பார்த்தவ் (13) ஆகியோருடன் ஒடிசா மாநிலம், பாலன்சீர் மாவட்டத்திலுள்ள காடியாஜோர் எனும் கிராமத்தில் வசித்து வந்தோம். நாங்கள் பிற்படுத்தப்பட்ட கௌடா சமூகத்தைச் சார்ந்தவர்கள். கடந்த 1 மாதத்திற்கு முன்பு எங்கள் ஊரிலிருந்து புலம்பெயர் தொழிலாளியாக குடும்பத்தோடு தமிழ்நாடு மாநிலம், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பத்து கிராமத்திற்கு செங்கல் சூளை வேலைக்கு வந்தோம். இந்நிலையில் கடந்த 02/03/2026 அன்று என் கணவர் கடைக்கு சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு சைக்கிளில் சென்றார். அவர் சென்ற கொஞ்ச நேரத்தில் பெரும்பத்து மெயின் நடு ரோட்டில் சில மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று செய்தி அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தேன்; என் கணவர் கொடூரமான முறையில் சடலமாக கிடந்தார்.

  1. வீராங்குளம் கணேசனின் மனைவி எமது குழுவினரிடம் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி ஒன்றியத்திற்குட்பட்ட வீராங்குளம் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு 4 பெண் பிள்ளைகளும், 1 ஆண் பிள்ளையும் உள்ளனர். எங்கள் கிராமத்தில் பேருந்து நிற்காது. திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் எனது மகள் ஸ்நேகா சிவில் இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்துக்கொண்டு இருக்கிறார். தினமும் பேருந்தில் சென்று வருவது வழக்கம். பாதிக்கப்பட்ட கணேசன் அவர்கள் வீராங்குளத்தில் பேருந்து எப்பொழுதும் நிறுத்தாத காரணத்தால் தனது மகளை காலை, மாலை இருவேளையும் பெரும்பத்து பேருந்து நிறுத்தத்தில் கல்லூரிக்கு அனுப்பவும், திரும்ப கூட்டிச் செல்லவும் செய்து வந்துள்ளார். கடந்த 02/03/2026 அன்று வழக்கம்போல் மாலை நேரத்தில் தனது வீட்டிற்கு கூட்டிச் செல்ல பெரும்பத்து பேருந்து நிறுத்தத்துக்கு சென்றுள்ளார். அப்போது பெரும்பத்து மெயின் ரோட்டில் உள்ள டீ கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது அவரை சில மர்ம நபர்கள் அரிவாளால் கன்னம், தலை, மூக்கு ஆகிய இடங்களில் வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தகவல் அறிந்து நாங்கள் நாங்குநேரி மருத்துவமனைக்கு சென்றோம். அதன்பிறகு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்றுவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்திப்பு:

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை 06.03.2026 அன்று மாலை 3 மணி அளவில் சந்திப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு எங்கள் குழு சென்றது. அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் வேலை நிமித்தமாக வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்ததால் வாசலிலேயே அவரை சந்தித்து, நாங்கள் நாங்குநேரி படுகொலை சம்பந்தமாக பேசுவதற்காக வந்திருக்கிறோம் என்று கூறினோம். அதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தான் நாங்குநேரி சென்று கொண்டிருப்பதாகவும், சந்திக்க வேண்டும் என்றால் அங்கு வருமாறு எங்களிடம் கூறினார். அதன் பிறகு நாங்கள் இரண்டு முறை நாங்குநேரி சென்றபோது மாவட்ட கண்காணிப்பாளர் துணை முதல்வர் வருகையை மேற்பார்வையிடச் சென்று விட்டதால், எங்களால் நாங்குநேரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விபரங்களை பெற இயலவில்லை.

மாவட்ட ஆட்சியாளருடன் சந்திப்பு:

எங்கள் குழுவானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாலை 6 மணி அளவில் மாவட்ட ஆட்சியாளரை சந்தித்தது. அதில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஒன்பது நபர்கள் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்; அதில் இரண்டு முக்கிய குற்றவாளிகள் இன்று வரை கைது செய்யப்படவில்லை மேலும், கைது செய்யப்பட்ட ஏழு குற்றவாளிகளில் இருவர் கடந்த வருடம் பள்ளி மாணவன் சின்னதுரை வெட்டப்பட்ட வழக்கிலும் முக்கிய குற்றவாளிகள் என்று கூறினோம். கடந்த வருடம் நாங்குநேரியில் வெட்டப்பட்ட சின்னதுரை சம்பவத்தின் அடிப்படையில் உண்மை அறியும் குழுவின் அறிக்கையிலும் இந்த குற்றவாளிகளுக்கு பிணை வழங்கக்கூடாது என்று நாங்கள் தெரிவித்திருந்தோம். ஆனால் சின்னதுரை தாக்கப்பட்ட வழக்கில் இரு குற்றவாளிகளுக்கும் பிணை வழங்கப்பட்டது என்று நாங்கள் தெரிவித்தபோது, ஆட்சியாளர் அவர்கள் பிணை வழங்கியதற்கு அரசுக்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது; இது நீதிமன்றத்தின் முடிவு என்று கூறினார். அதற்கு நாங்கள் நீதிமன்றத்திற்கு குற்றவாளிகள் மீதான தரவுகளை வழங்குவது மற்றும் குற்ற வழக்கு சம்பந்தமான தகவல்களை அளிப்பது மாவட்ட நிர்வாகமே என்பதை பதிவு செய்தோம். இந்த இரு குற்றவாளிகளும் பிணையில் இருக்கும் போதே ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தியதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது; அதிலும் இவர்கள் பிணை பெற்று சுதந்திரமாக வலம் வந்ததால் இவ்வாறான அடுத்தடுத்த குற்றங்களை செய்து வந்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளியான திரு ஜான் மார்க் அவர்களுக்கு மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் என்ன விதமான நிவாரணம் அளித்தீர்கள் என்று கேட்டபோது, ஆட்சியாளர் அவர்கள் அவர் மாற்றுத்திறனாளி என்பது எங்களுக்கு தெரியாது என்று கூறினார். குற்றம் நடைபெற்ற 2ஆம் தேதியிலிருந்து நாங்கள் சென்ற 6ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியாளர் பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு செல்லவில்லை; பாதிக்கப்பட்ட நபர்களையும் சென்று பார்க்கவில்லை. 6ஆம் தேதி அன்று துணை முதல்வர் அவர்கள் அரசு நிகழ்ச்சிக்காக திருநெல்வேலியில் முகாமிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது; ஆனால் அவரும் பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்க்கவில்லை.

எங்கள் குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம், கைது செய்யப்படாமல் இருக்கும் இரண்டு முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் நாங்குநேரி திமுக ஒன்றியச் சேர்மன் சுடலைமுத்து அவர்களின் அண்ணன் மகன் என்ற விவரத்தை தெரிவித்தபோது, “உங்களுக்கே தெரியும் போது எனக்கு தெரியாதா” என்று கூறி, விரைவில் கைது செய்து விடுவோம் என்று மாவட்ட ஆட்சியர் எங்களிடம் கூறினார்.

மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலருடன் உரையாடல்:

மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் எங்கள் குழு சந்திக்க சென்றது. அப்போது மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் அங்கு இல்லை; அங்கு இருந்த அலுவலர் மூலமாக மாற்றுத்திறனாளி அலுவலரின் தொலைபேசி எண்ணை பெற்று தொடர்பு கொண்டோம். அவர், கொலை செய்யப்பட்ட ஜான் மார்க் என்பவர் மாற்றுத்திறனாளி என்ற விவரம் எங்களிடம் தெரிவிக்கவில்லை என்று பதில் அளித்தார். மாற்றுத்திறனாளி நல அலுவலர் நேரடியாக கொலை செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட கிராமத்திற்கோ அல்லது பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று பார்க்கவில்லை. இந்த நிகழ்வு நடைபெற்ற ஒரு வாரமாக சமூக ஊடகங்களும், பத்திரிகைகளும், டிவி செய்திகளும் தொடர்ந்து கொலை செய்யப்பட்டவர் மாற்றுத்திறனாளி என்று கூறி வந்துள்ளன; ஆனால் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் “எனக்கு தெரியாது” என்று சொல்வது வருத்தத்துக்குரியது. சனிக்கிழமை அன்று மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் எங்கள் குழு உறுப்பினர் பேராசிரியர் லட்சுமணன் அவர்களிடம் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கொலை செய்யப்பட்ட ஜான் மார்க் அவர்கள் மாற்றுத்திறனாளிக்கான சான்றிதழ் அவரிடம் இல்லை என்றும், மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தின் மூலமாக ஒரு பணியாளர் பெரும்பத்து கிராமத்திற்கு சென்று விசாரித்ததில் இறந்த ஜான் மார்க் 25% மட்டுமே குறைபாடு உள்ளவர்; 40 சதவீதம் குறைபாடு இருந்தால் மட்டுமே மாற்றுத்திறனாளிக்கான நிவாரணத்திற்கு தகுதி பெறுவார்; ஆகையால் அவருக்கு வழங்க இயலாது என்று தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை அன்று மாநில மாற்றுத்திறனாளிக்கான செயலாளர் திரு சுகன், ஐஏஎஸ் அவர்களை தொலைபேசியின் வாயிலாக தொடர்பு கொள்ள முயன்றோம்; முடியாத காரணத்தினால் அவருக்கு தகவலை அளித்தோம். எங்களுடைய உண்மை அறியும் குழு சென்று வந்ததன் விளைவாக மாநில மாற்றுத்திறனாளிக்கான செயலாளர் நேரடியாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு இதனுடைய விபரங்களை கேட்டு கடிதத்தை 09.03.2026 அன்று அனுப்பி வைத்தார்.

கண்டறிந்தவை:

  1. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறைந்த வயதுள்ளவர்களாக (18-25) இருக்கிறார்கள். மேலும் இச்சம்பவத்திற்கு பின்னணியில் சாதிய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் இருக்கிறது என்பது தெளிவாக புலப்படுகிறது.
  2. இரட்டை கொலை நடந்திருந்த பெரும்பத்து கிராமத்திற்கு பார்வையிட மாவட்ட ஆட்சித்தலைவர் வரவே இல்லை. மாவட்ட கண்காணிப்பாளர் மட்டுமே சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.
  3. இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ள ஒன்பது நபர்களில் ஏழு பேர் மட்டும் கைது செய்துள்ளது, மற்ற இருவரையும் தேடி காவல்துறை வருகின்றனர்.
  4. கொலையுண்டவர்களும், கொலையாளிகளுக்கும் எவ்வித முன் விரோதமும் இருந்ததில்லை.
  5. கொலையுண்டவர்களும் மற்றும் வெட்டப்பட்டவர்களும் இதற்கு முன்பாக எவ்வித குற்ற பின்புலம் எதுவும் இல்லை.
  6. வன்முறை நடக்கும் பொழுது டீ கடையில் அமர்ந்திருந்த மறவர்கள் யாரும் தாக்கப்படவில்லை.
  7. பெரும்பத்து கிராமத்தில் போலீஸ் பூத் இருக்கிறது. ஆனால் செயல்பாட்டில் இல்லை.
  8. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரைக்கும் அரசு நிவாரணம் வழங்கவில்லை.
  9. ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரையை அரிவாளால் வெட்டிய வழக்கிலும், இவ்வழக்கிலுள்ள சுபாஷ் மற்றும் கல்யாணி குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர்.
  10. அருகிலுள்ள சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் அங்கு இருக்கிற மறவர் சாதி மாணவர்களால் மற்ற சமூக மாணவர்கள் எப்பொழுதும் தொந்தரவு என்கிறார்கள்.

பரிந்துரைகள்:

  1. வன்கொடுமை மற்றும் கொலை சம்பவங்கள் நடைபெறும் போது முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் உடனடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட நபர்களை சந்தித்து சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதற்கு துணை நிற்க வேண்டும்.
  2. இது போன்ற கொலை வெறி செயல் மற்றும் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு பிணை எக்காரணத்தைக் கொண்டும் வழங்கக் கூடாது.
  3. கொலை மற்றும் வன்கொடுமை செய்கின்ற குற்றவாளிகளுக்கு எக்காரணத்தைக் கொண்டும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் அரசியல் கட்சிகள் எவ்வித ஆதரவும் அளிக்கக்கூடாது.
  4. கவின் ஆணவக் கொலையில் ஈடுபட்ட கொலை குற்றவாளி சுர்ஜித்தின் தாயார் எஸ்ஐ கிருஷ்ணகுமாரியும் இன்று வரை கைது செய்யப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் குற்றவாளிகளை கைது செய்யாமல் காலம் தாமதம் செய்வதால் இது போன்ற வன்கொடுமை மற்றும் கொலைகள் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் அரங்கேறி வருகின்றன.
  5. தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் வன்கொடுமை நடந்தேறி வருவதால் இம்மாவட்டத்தை வன்கொடுமை மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
  6. இறந்துபோன ஜான் மார்க் குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் அவரது மாற்றுத்திறனாளி மனைவிக்கு அரசு வேலையும், மாதந்தோறும் 15000 பென்ஷன் வழங்க வேண்டும். மேலும் அவரின் இரண்டு பெண் குழந்தைகளின் படிப்பு செலவுகளை அரசு ஏற்க வேண்டும்.
  7. தலித் கிருத்துவர்களை எஸ்.சி/எஸ்.டி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கடந்த 2005 ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலித் கிருத்துவர்களையும், தலித் முஸ்லிம்களையும் எஸ்.சி/எஸ்.டி பிரிவில் சேர்க்குமாறு இந்த தரவுகளின் அடிப்படையில் மத்திய அரசிற்கு மாநில அரசு ஆவணம் செய்ய வேண்டும்.
  8. சமூக பகை உள்ள வழக்குகளை அடையாளம் கண்டு அங்கு பாதுகாப்பு தேவைப்படுகிறதா என்பதை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும், மாநகர ஆணையரும் இணைந்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இதற்கான செயல் திட்டங்களில் தலைமை செயலரும், தமிழ்நாடு காவல்துறை இயக்குநரும் இணைந்து செயல்பட வேண்டும்.
  9. பதற்றமான பகுதி என்பதால் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும்.
  10. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரிநாத் கட்டா அவர்களுக்கு 15 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
  11. நாங்குநேரி, கலக்காடு பகுதிகளில் செங்கல் சூளையில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்களை, அவர்கள் கொத்தடிமைகளா என்று கண்டறிந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும்.
  12. வீராங்குளம் பகுதியில் பேருந்து நிறுத்தம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.
  13. தலித்துகளுக்கு எதிரான வன்முறை என்பது வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல; அது வெறுப்பு அரசியலில் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஆகையால், அரசியல் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தி, இவ்வாறான வன்முறைகளைத் தடுக்கும் வகையில் உறுதியான செயல்திட்டத்தை முன்வைக்க வேண்டும். இந்த உறுதிப்பாடு 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிக்கைகளில் தெளிவாக இடம்பெற வேண்டும்.
  14. முதல்வர் தலைமையில் வருடத்திற்கு இருமுறை கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் மாநில அளவில் நடத்திட வேண்டும் என வன்கொடுமை சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் செயல் திட்டங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். இதனை போன்று மாவட்ட அளவிலும் தொடர்ந்து கண்காணிப்பு குழு நடத்திட வேண்டும்.

*

  1. உண்மையின் குழுவின் உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இவ்வரிக்கை வெளியிடப்படுகின்றது.
  2. உண்மை அறியும் குழுவின் இடமோ அரசியல் கட்சி இடமோ அல்லது என் ஜி ஓக்களிடமிருந்தோ எவ்வித நிதி உதவியினை பெறவில்லை, முற்றிலும் தலித் அறிவு ஜீவிகள் குழுமம் (DIC) மற்றும் பறையர் பேரவையின் தனிப்பட்ட முயற்சியாகும்.
disclaimerசமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க