காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவோம்!
கண்டன ஆர்ப்பாட்டம்
இடம் : விருத்தாச்சலம், பாலக்கரை | நாள் : 12-08-2026 | நேரம் : மாலை 4.00 மணி
அன்பார்ந்த விவசாயிகளே! உழைக்கும் மக்களே!
கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுள்ள D.K.சிவக்குமார், “மேகேதாட்டு அணை கட்ட தமிழ்நாடு அரசின் அனுமதி தேவையில்லை, அணையை கட்டியே தீருவோம்” என்று கூறி அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இவ்வாண்டு தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய காவிரி நீரையும் துளி அளவில் கூட கொடுக்காமல் இருக்கிறார். தற்போது அதீத மழையின் காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், வேறு வழியில்லாமல் வினாடிக்கு 25,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை மறுக்கும் இந்த அடாவடி போக்கானது தொடர்ந்து நீடித்தே வருகிறது.
பெங்களூருவில் வளர்ந்து வரும் காரப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்காகவும் தஞ்சை டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் அகழ்ந்து எடுப்பதற்காகவும் தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீர் தொடர்ந்து மறுக்கப்படுகிறது.
காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகளும் அவற்றுடன் கூட்டணி வைத்துள்ள பிற கட்சிகளும் இப்பிரச்சனையை திசைதிருப்புவதற்கு அரசியல் லாவணிகளில் ஈடுபடுவதும் சிலர் இனவெறியை கிளப்பி விடுவதும் தான் நடக்கிறது.
மேகேதாட்டு அணை ஏன் கட்டப்படக்கூடாது?
தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, கரூர், அரியலூர் போன்ற மாவட்டங்ள் காவிரி நீரையே நம்பியுள்ளது. குறுவை சாகுபடி அதன்பிறகு நடக்கும் சம்பா, தாளடி சாகுபடிகளும் மேலும் பல நகரங்கள், கிராமங்கள் குடிநீருக்காகவும் இந்தக் காவிரி நீரையே சார்ந்துள்ளன.
ஏற்கனவே காவிரி மீதான தமிழ்நாட்டின் உரிமை வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது என்பதே கடந்த கால வரலாறு. 1924-இல் ஆண்டிற்கு 575.68 டிஎம்சி-யாக வழங்கப்பட்ட நீரின் அளவு தொடர்ந்து நீதிமன்றங்களால் குறைக்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைக்கப்பட்டது.
இறுதியாக 2018-ஆம் ஆண்டு தீர்ப்பின் படி 177.25 டிஎம்சி-யாக குறைக்கப்பட்டு விட்டது. இந்த நீரைக்கூட சரியாக நேரத்திற்கு வழங்காமல், மழைக்காலங்களில் மட்டும் நீரைத் திறந்து விடுவது, ஆண்டின் இறுதியில் அந்நீரைக் கணக்குக் காட்டுவது என கர்நாடக அரசு தொடர்ந்து மோசடி செய்து வருகிறது.
மேலும் மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் மேற்கண்ட குறுவை, சம்பா, தாளடி சாகுபடிகள் பெருமளவு பாதிக்கப்படுவதோடு டெல்டா பகுதி பாலைவனமாக்கப்படும். இச்சாகுபடிகளை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்கிடமற்ற வகையில் அழிக்கப்படும்.
கடைமடைக்கு தண்ணீர் வராத போது கடல்நீர் நிலப்பகுதிக்குள் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறும்; இதனால் கடைமடைப் பகுதியின் வாழ்வாதாரமும், சுற்றுச்சூழல் சமநிலையும் முற்றிலும் பாதிக்கப்படும்.
கடல் அருகிலிருந்து நிலத்தைக் காக்கும் முகத்துவாரப் பகுதிகளும் அலையாத்திக் காடுகளும் அழிந்து கடலின் உயிர்ச் சமநிலை பெரிதும் பாதிக்கப்படும்.
இது மீன்கள், இறால்கல் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தைத் தடுத்து, ஒட்டுமொத்த நில மற்றும் கடல்வாழ் உணவுச் சங்கிலியை சீர்குலைக்கும். புவி வெப்பமயமாதல், எல்நினோ, காலநிலை மாற்றம் போன்ற சிக்கல்களால் விவசாயம் கேள்விக்குறியாக இருக்கும் போது இந்த அணை கட்டப்படுவதென்பது தமிழ்நாட்டின் டெல்டா விவசாயத்தை அழிப்பதே அன்றி வேறல்ல.

தமிழ்நாட்டின் மீதான ஒடுக்குமுறை
1980 காலகட்டத்திலிருந்தே கர்நாடக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமலும், மேல் முறையீடு செய்தும் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய நீரை மறுத்து வருகிறது.
இந்த ஆண்டு ஜூன் – ஜூலை கால அட்டவணைப்படி சுமார் 31 டிஎம்சி நீர் திறக்கப்பட வேண்டிய சூழலில் ஜூலை 22 வரை சுமார் 3.5 டிஎம்சி நீரை மட்டுமே திறந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி மற்றும் அதன்பின் நடக்கும் சம்பா சாகுபடியும் மிகவும் பாதிக்கப்படும்.
சர்வதேசிய நீர்ப் பங்கீடு சட்டப்படி ஓர் ஆற்றின் நீர் அந்த ஆற்றின் இயற்கை வடிநிலத்திற்குள் (River Basin) வாழும் மக்களின் பயன்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
ஆனால் பெங்களுரு நகரமோ காவிரி ஆற்றிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதன் எந்த பகுதியும் காவிரியின் கரையில் அமையவில்லை. பெங்களூருவை பெருநகர பிராந்தியமாக 8,000 சதுர கிமீ பரப்பளவிற்கு விரிவாக்கி அப்பகுதிகளுக்கும் காவிரி நீரை கொண்டு சேர்க்க நினைக்கிறது கர்நாடக அரசு. இது சட்டப்படியும் தார்மீக அடிப்படையிலும் அயோக்கியத்தனமாகும்.
தமிழ்நாடு மற்றும் மத்திய அரசின் நிலைப்பாடுகள்
மேகேதாட்டு அணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் இயற்றப்பட்டது. இத்தீர்மானத்தில் மேகேதாட்டு விவகாரத்தை புதிய நதிநீர்ச் சிக்கலாகக் கருதி புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கையை முதல்வர் விஜய் உடனடியாக இணைத்துக் கொண்டார்.
ஆனால் புதிய நடுவர் மன்றம் கோருவது இதுவரை தமிழ்நாட்டு மக்கள் போராடிப் பெற்ற குறைந்தபட்ச சட்டபூர்வ உரிமைகளையும் நீர்த்துப்போகச் செய்யும் துரோகச் செயலாகும்.
ஏற்கனவே, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவுகளை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறது. இந்நிலையில் புதிய நடுவர் மன்றம் அமைக்கப்பட்டால் இறுதித் தீர்ப்பு வர 10 முதல் 15 ஆண்டுகள் ஆகலாம். இந்த நீண்ட இடைவெளியில் நீதிமன்றத் தடைகளின்றி கர்நாடக அரசு மேகேதாட்டு அணையை வேகமாக கட்டி முடித்துவிடும்.
மேலும் வழக்கு விசாரணையைக் காரணம் காட்டி பழைய தீர்ப்புகளின்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தருவதை தட்டிக் கழிக்கும்.
எனவே புதிய நடுவர் மன்றம் அமைப்பது தீர்வாக அமையாது. அது தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையைப் பறிப்பதற்கே வழிவகுக்கும்.
இந்நிலையில் மத்திய அரசின் நீர் வளத்துரை இணையமைச்சரான ராஜ் பூஷன் சௌத்ரி “மேகேதாட்டு அணையைக் கட்ட கர்நாடக அரசு யாருடைய அனுமதியையும் பெறத் தேவையில்லை” என்று கர்நாடகாவிற்கு சாதகமாக பேசியுள்ளார். இது குறித்து வாய் திறக்காமல் கள்ள மௌனம் சாதித்து வருகிறார் முதல்வர் விஜய்.
இறுதியாக 67.16 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மேகேதாட்டு அணையின் நீரில் 4.75 டிஎம்சி மட்டுமே பெங்களூரு மற்றும் சுற்றுப்புறங்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதுபோக இவ்வணையின் பெரும்பங்கு நீர் பெங்களூருவில் பெருகிவரும் பன்னாட்டு கார்ப்பரேட் தரவு மையங்களுக்கே தாரை வார்க்கப்பட உள்ளது.
அதனால் தான் பாசிச பாஜக அரசும் கர்நாடக காங்கிரசு அரசும் மேகேதாட்டு அணையை கட்டியே தீரவேண்டும் என்று ஒரே குரலில் ஒலிக்கின்றன.
ஆகையால் மேகேதாட்டு அணை கட்டுவதற்கு எதிராகவும் காவிரியில் தமிழ்நாட்டின் நீர் உரிமைக்காகவும் உழைக்கும் மக்கள் என்ற வகையில் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிராக ஒன்றிணைவோம்!
காவிரி நீரில் தமிழ்நாட்டின் மாநில உரிமையை மறுக்கும் பாசிச பாஜக அரசின் கர்நாடக காங்சிரசு அரசின் சதித்திட்டங்களை முறியடிப்போம்!
தமிழ்நாட்டின் உரிமை பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் தவெக அரசின் துரோகத்தை திரை கிழிப்போம்!
தமிழ்நாடு – கர்நாடக விவசாயிகளின் கூட்டு கமிட்டி அமைத்து காவிரி நீர் பிரச்சனைக்கு முடிவு
காண்போம்! கார்ப்பரேட் ஆதிக்கத்தை முறியடிப்போம்!
உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே!
காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கு எதிராக ஒன்றிணைவோம்!
மக்கள் அதிகாரக் கழகம்,
கடலூர் மாவட்டம்.
9443849915
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





