நாங்குநேரி, ஆலங்குளம்… தொடரும் சாதிவெறியாட்டங்கள்: மக்களை பிளவுப்படுத்தும் சதிவலை!

பாசிச கும்பல் தனது அடித்தளத்தை விரிவுப்படுத்திக்கொள்ள தமிழ்நாட்டில் சாதியத் தாக்குதல்களை திட்டமிட்டு தூண்டி வருகிறது. இதனால்தான் நாங்குநேரி, நெட்டூர் சாதிவெறியாட்டங்கள் தொடர்கதையாகின்றன.

டந்த மார்ச் மாதத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து, இந்திரா காலனிக்குள் புகுந்த மறவர் சாதிவெறிக் கும்பல் கண்ணில் கண்டவர்களையெல்லாம் அரிவாளால் வெட்டி இரண்டு பேரை படுகொலை செய்தது. இந்த சாதிவெறியாட்டத்தின் சுவடுகள் மறைவதற்குள், தற்போது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா, நெட்டூர் கிராமத்தில் மீண்டுமொரு சாதிவெறித் தாக்குதல் அரங்கேறியுள்ளது. கடந்த மே 29 அன்று, மறவர் சாதிவெறிக் கும்பலால் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் மீது இக்கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தையடுத்து, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக நெட்டூர் கிராமத்தில் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மறவர் சாதி இளைஞர்கள் ஒன்பது பேர் மற்றும் மறக்குடி ரஸ்தா பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் என மொத்தம் 12 பேர் கொண்ட சாதிவெறிக் கும்பல் இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. கடந்த மே 29-ஆம் தேதி மாலை 6 மணியளவில், நெட்டூர் மாதா கோயில் தெருவில் நின்றுகொண்டிருந்த தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் இருவர் மற்றும் இளைஞர்கள் என மொத்தம் ஏழு பேரை இக்கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளது.

இக்கொலைவெறித் தாக்குதலால் இப்பகுதி தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இப்படியான அச்சத்தை உருவாக்குவதன் மூலம் தங்களது சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதே இந்த சாதிவெறி, கொலைவெறியாட்டத்தின் முதன்மை நோக்கமாக உள்ளது.

000

நெட்டூரில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக பூர்வகுடிகளாக வாழும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர், சுமார் 300 குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள். இக்கிராமத்தில் மறவர் சாதி மக்கள் சுமார் 1,000 குடும்பங்களுடன் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மேலும், நெட்டூரைச் சுற்றியுள்ள பல கிராமங்களும் மறவர் சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளாகவே உள்ளன.

எனினும், நெட்டூர் கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர், மறவர், நாடார், பறையர், அருந்ததியர், கோனார், மூப்பனார், ஆசாரி, செட்டியார், பிள்ளைமார் எனப் பல சாதி மக்களும் தங்களுக்குள் எந்தப் பகையுமின்றி, உழைக்கும் மக்களாக ஒன்றிணைந்தே வாழ்ந்து வருகின்றனர்.

1990-களில் கொடியங்குளம் கலவரம் ஏற்பட்ட போது, நெட்டூர் தேவேந்திரகுல வேளாளர் சாதியைச் சேர்ந்த மக்களைத் தாக்குவதற்காக வெளியூரிலிருந்து வந்திருந்த தேவர் சாதிவெறியர்களைத் தடுத்து, “நாங்களும் அவர்களும் ஒரு தாய் பிள்ளையைப் போல வாழ்கிறோம், அவர்கள் அப்பாவிகள், நாங்கள் அவர்களைத் தாக்குவதற்கு விடமாட்டோம்” என்று மறவர் சாதி மக்கள் அரணாக நின்றனர்.

ஆதிக்கம் செய்வது என்பது உழைக்கும் வர்க்கத்தின் பண்பல்ல. அந்த உழைக்கும் வர்க்க சிந்தனையோடுதான் நெட்டூரைச் சேர்ந்த மறவர் சாதி உழைக்கும் மக்கள் தேவேந்திரகுல வேளாளர் மக்களோடு இன்றுவரை நிற்கின்றனர்.

ஆனால், சாதிவெறி ஊட்டப்பட்ட சில மறவர் சாதி இளைஞர்கள், தேவேந்திரகுல வேளாளர் மக்கள் வசிக்கும் பகுதியில் இருசக்கர வாகனங்களை முறுக்கிக் கொண்டு அதிவேகமாக செல்வது, சத்தமாக ஒலி எழுப்புவது, கூட்டத்திற்குள் புகுந்து ஓட்டுவது எனத் திட்டமிட்டு வம்பிழுத்து வருகின்றனர். இத்தகைய சாதிவெறி ஆத்திரமூட்டல்களையும் மீறி, “பிரச்சினை எதுவும் வேண்டாம், ஒதுங்கிப் போங்கள்” என்று தங்கள் பகுதி இளைஞர்களை நெட்டூர் தேவேந்திரகுல வேளாளர் பெரியவர்கள் அமைதிப்படுத்தி வந்துள்ளனர்.

மாதா கோயில் தெரு அருகே நாடார் சாதிவெறியனான ஆர்த்தி முத்து நடத்தும் பன்றி மேய்க்கும் குடிசை உள்ளது. இது, இப்பகுதியில் கஞ்சா-மது அருந்துவதற்கும், சமூக விரோதச் செயல்களுக்கும், சாதிவெறி, கொலைவெறித் தாக்குதல்களுக்கு சதித் திட்டமிடுவதற்கும் மையப்புள்ளியாக மாறியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம், இந்த பன்றிக் குடிசை அருகே மது அருந்திக் கொண்டிருந்த ஆர்த்தி முத்து அவனது கூட்டாளிகளும், அவ்வழியாக வந்த தேவேந்திரகுல வேளாளர் இளைஞர் ஒருவரைச் சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியுள்ளனர். மேலும், மறவர் சாதி இளைஞர்களை வரவழைத்து அந்த இளைஞரை அடித்துள்ளனர். ஆனால், ஊர் மக்கள் பிரச்சினை வேண்டாம் என புகார் எதுவும் கொடுக்காமல் அந்த இளைஞரை சமாதானப்படுத்தியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் மாதத்தில் 12-ஆம் வகுப்பைச் சார்ந்த மாணவர் உள்ளிட்ட சில மறவர் சாதி இளைஞர்கள், மீண்டும் தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்களைத் தாக்கியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆலங்குளம் போலீசு நிலையத்தில் புகார் அளித்தனர். எனினும், சம்பந்தப்பட்ட மாணவனின் படிப்பு கெட்டுவிடக் கூடாது என்பதற்காக புகாரைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர். ஆனால், ஆலங்குளம் போலீசு இந்தச் சாதிவெறிக் கும்பலைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து மெத்தனமாகவே இருந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, நெட்டூர் தேவேந்திரகுல வேளாளர் சாதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் திருமணத்திற்காக மே 28 அன்று இரவு மாதா கோயில் தெருவின் எதிர்ப்புறத்தில் பேனர் ஒன்றை வைத்துள்ளனர். அப்போது, ஏற்கெனவே வழக்கிலிருந்து தப்பித்த அந்த மறவர் சாதி மாணவன், “இங்கே பேனர் வைக்கக் கூடாது” என பிரச்சினை செய்துள்ளான். அந்தப் பேனரிலும், திருமண நிகழ்விற்காகக் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியிலும் சிறுநீர் கழித்து வக்கிரமாக நடந்துகொண்டதோடு, “ஆர்த்தி முத்துவை அடித்தவன் எவன்டா?” என மிரட்டிவிட்டுச் சென்றுள்ளான்.

அதுமட்டுமன்றி, அந்த பேனரில் மறவர் சாதியினரையும், அச்சாதி பெண்களையும் இழிவுபடுத்தும் வாசகங்கள் இருந்ததாக ஊருக்குள் மறவர் சாதிவெறிப் பிடித்த இளைஞர்கள் புரளியைக் கிளப்பினர். ஆனால், எந்தவிதச் சாதி அடையாளத்துடனோ அல்லது பிறரைத் புண்படுத்தும் நோக்கிலோ அந்தப் பேனர் வைக்கப்படவில்லை என்பதே ஆதாரப்பூர்வமான உண்மையாகும்.

மறுநாள் மே 29 மாலை 6 மணியளவில், 12 பேர் கொண்ட அந்தச் சாதிவெறிக் கும்பல், நான்கு இருசக்கர வாகனங்களில் எண் பலகைகளைக் (Number Plates) கழற்றிவிட்டு, தலைக்கவசம் மற்றும் துணிகளால் முகத்தை மூடிக்கொண்டு மாதா கோயில் தெருவுக்குள் புகுந்தது. கண்ணில் கண்டவர்கள் மீதெல்லாம் அரிவாளால் சரமாரியாக கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. மாதா கோவில் தெருவில் அமர்ந்திருந்த மூவரைச் சூழ்ந்துகொண்டு வெட்டியதில், தற்காப்பிற்காக கல்லை எடுத்த ஒருவரின் கையிலும், தலைக்கு வந்த வெட்டைத் தடுத்த மற்றொருவரின் இரு கைகளிலும் பலத்த வெட்டு விழுந்தது.

“நான் வெளியூரிலிருந்து திருமணத்திற்கு வந்தவன்” என்று சொல்லியும் ஒரு இளைஞரின் காலில் ஆழமாக வெட்டியுள்ளனர். திருமண வீட்டிற்கு மேளம் வாசிக்க வந்த நாடார் சாதியைச் சார்ந்த இளைஞர், சமையல் மாஸ்டர் ஆகியோரும் இக்கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாயினர். மேலும் அங்கிருந்த கடை, குளிர்சாதனப் பெட்டி, நின்றுகொண்டிருந்த காரின் கண்ணாடி ஆகியவற்றை அடித்து நொறுக்கிய அக்கும்பல், உணவுப் பந்தலில் போடப்பட்டிருந்த நாற்காலி, மேசைகளையும் அரிவாளால் கொத்திச் சேதப்படுத்தியது.

ஆதிக்கச் சாதிவெறி கும்பலால் கொலைவெறித் தாக்குதலுக்குள்ளான இளைஞர்.

இத்தாக்குதலில் அருண் மாறன், அவரது தந்தை மாற்கு ரமேஷ், ராயப்பன், ராம்குமார், சந்தோஷ்குமார் மற்றும் ட்ரம்ஸ் வாசிக்க வந்த மாடசாமி ஆகிய ஆறு பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் இருவர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையிலும், நால்வர் நெல்லை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

வெட்டுப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தேவேந்திரகுல வேளாளர் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் பட்டியல் பிரிவில் வரமாட்டார்கள் எனக் கூறி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்படவில்லை. வெளியூரிலிருந்து வந்து வெட்டுப்பட்ட ராம்குமார் மட்டும் இந்து என்பதால், அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதங்களைக் கடந்து, அப்பட்டமான சாதியக் கண்ணோட்டத்தில் நடத்தப்பட்ட இத்தாக்குதலை சாதிய வன்கொடுமையாக பதிவு ஏற்காமல் சட்டம் தன் கண்களைக் கட்டிக்கொண்டு இருளுக்குள் நிற்கிறது.

நெட்டூரில் இக்கோரத் தாண்டவத்தை முடித்துவிட்டு தப்பிய கும்பல், மானூர் போலீசு எல்லைக்குட்பட்ட தெற்குப்பட்டி கிராமத்தின் வழியே அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்றது. அப்போது சாலையில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள், “ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்கள்?” என மறித்துக் கண்டித்ததால் ஆத்திரமடைந்த அக்கும்பல், அவர்களையும் அரிவாளால் வெட்டியது. இந்த இரண்டாவது தாக்குதலில் தெற்குப்பட்டியைச் சேர்ந்த முபாரக் (30), அப்துல் ரகுமான் (35) ஆகிய இருவர் படுகாயமடைந்தனர்.

அங்கிருந்த சில பெண்களையும் வெட்ட முயன்றபோது, அவர்கள் வீடுகளுக்குள் ஓடிச் சென்று கதவைப்பூட்டிக் கொண்டதால் உயிர் தப்பினர். ஒருவேளை பொதுமக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் புகாமல் எதிர்த்து நின்றிருந்தால், 20-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியிருக்கக் கூடும் என்ற அளவிற்கு அக்கும்பல் வெறியோடு வந்துள்ளது.

நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் எப்படி முகமூடி அணிந்த கும்பல் கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டிச் சாய்த்ததோ, அதே போன்றதொரு கொடூரம் ஆலங்குளம் நெட்டூரிலும் அரங்கேறியிருப்பது தமிழ்நாட்டு மக்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாங்குநேரி பெரும்பத்து வன்முறையைப் போலவே, நெட்டூர் தாக்குதலில் ஈடுபட்டவர்களும் 16 முதல் 22 வயதுக்குட்பட்ட இளம் வயதினரே ஆவர்.

இந்தச் சாதிவெறிக் கும்பலைத் தூண்டிவிட்டதோடு, தன் உறவினர்களையும் இதில் களமிறக்கியவன், நெட்டூர் மறவர் சமூகத்தைச் சேர்ந்த அப்பு என்ற அப்புரானந்தம். இவனது தூண்டுதலால்தான் இக்கொலைவெறித் தாக்குதல் நடந்துள்ளது. அப்பு, உள்ளூரில் கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம் எனச் சாதிவெறிக் கூலிப்படையாக வலம் வருபவன். இந்தச் சம்பவத்தில் அப்பு, அவனது மகன் மற்றும் அக்கா மகன் ஆகியோர் நேரடியாக ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறவர் சாதி மக்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், அம்மக்கள் விவசாயம் தவிர்த்து, பெரும்பாலும் லாரி ஓட்டுநர்களாகவோ, கூலி வேலை செய்பவர்களாகவோ வெளியூர்களுக்குச் சென்றுவிடுகின்றனர். உள்ளூர் மோதல்களிலோ வன்முறைகளிலோ அவர்கள் தலையிடுவதில்லை.

மறவர் சாதியைச் சேர்ந்த பெரியவர் ஒருவரிடம் இச்சம்பவத்தை பற்றி விசாரித்த போது, பாதிக்கப்பட்ட மக்களுடனான தனது வாழ்வியல் நெருக்கத்தைக் கூறி கண்கலங்கினார். “நாங்கள் ஒற்றுமையாகவே வாழ்கிறோம்; எங்களுக்குள் வரும் சின்னச் சின்ன பிரச்சினைகளை நாங்களே பேசித் தீர்த்துக் கொள்வோம்” என்று கூறினார்.

எனவே, நெட்டூர் சாதிவெறித் தாக்குதலை உள்ளூரில் உருவாகி வரும் ஒரு ரவுடிக் கும்பலின் வெறிச்செயல் என்று நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

நாங்குநேரி பெரும்பத்து, ஆலங்குளம் நெட்டூர் ஆகிய இரு நிகழ்வுகளுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டிலும் இணக்கமாக வாழ்ந்த இருவேறு சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் மத்தியில் திட்டமிட்டுப் பதற்றத்தை உருவாக்கிப் பிளவை உண்டாக்க நினைக்கும் சாதிவெறிக் கும்பல்கள்; நேரடியாகக் குற்றத்தில் ஈடுபட்டவர்களை மட்டும் கைது செய்துவிட்டு, அதன் பின்னணியில் இருக்கும் உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்கவிடும் போலீசு; நாங்குநேரி பெரும்பத்து சாதிவெறித் தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்திரா காலனி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியும் கூட, அதைச் சற்றும் மதிக்காத அதிகார வர்க்கம். இதில் உள்ள ஒரே வித்தியாசம்: அன்று தி.மு.க. அரசு, இன்று த.வெ.க. அரசு.

தேவேந்திரகுல வேளாளர் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சிறிய அளவிலான பொருளாதார முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டி, மறவர் சாதி இளைஞர்கள் மத்தியில் வன்மமான எதிர் மனநிலை கட்டமைக்கப்படுகிறது. “நாம் உயர்ந்தவர், அவர் தாழ்ந்தவர்” என்ற ஆதிக்கவெறி அவர்களின் மூளையில் ஏற்றப்படுகிறது. கையில் அரிவாளைப் பிடித்து, வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு, சினிமா வசனங்களையோ, பாடல்களையோ பின்னணியில் ஒலிக்க விட்டு இன்ஸ்டாகிராமில் (Instagram) ரீல்ஸ் போடுவது இந்த உளவியல் நோய்க்கு மிகப்பெரிய தீனியாக அமைகிறது. இதன் மூலம், இளம் வயதினரிடையே அரிவாள் கலாச்சாரத்தைப் புகுத்தி, சாதிவெறித் தாக்குதலுக்கான களம் உருவாக்கப்படுகிறது.

இவ்வாறு கூலிப்படையாக மாற்றப்பட்டு கைது, சிறை, வழக்கு, மீண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது, கைது, சிறை… எனப் பலிபீடத்தில் நிறுத்தப்படுவது ஆதிக்கச் சாதி இளைஞர்களின் வாழ்க்கையும்தான்; வீதியில் நிறுத்தப்படுவது உழைக்கும் மக்களான அவர்களின் குடும்பமும்தான்.

இதனை முன்னின்று மேற்கொள்வது ஆதிக்கச் சாதிவெறிச் சங்கங்களும் அதன் தலைவர்களும்தான். இந்தச் சங்கங்களை ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் பின்னணியில் இருந்து இயக்குகிறது. பாசிச கும்பல் தனது அடித்தளத்தை விரிவுப்படுத்திக்கொள்ள தமிழ்நாட்டில் சாதியத் தாக்குதல்களை திட்டமிட்டு தூண்டி வருகிறது. இதனால்தான் நாங்குநேரி, நெட்டூர் சாதிவெறியாட்டங்கள் தொடர்கதையாகின்றன.

தனித்தனியாக நியாய விலைக் கடைகள், மருத்துவமனைகள் அமைப்பது, குறிப்பிட்ட பகுதிகளைப் பதற்றம் நிறைந்த பகுதிகளாக அறிவித்து மீண்டும் போலீசின் கரங்களிலேயே அதிகாரத்தைத் தருவது போன்ற தற்காலிக நடவடிக்கைகள் இதற்கு நிரந்தரத் தீர்வாகாது. தமிழ்நாட்டில் தொடரும் சாதிவெறி – கொலைவெறித் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த, ஒடுக்கப்படும் மக்கள், ஆதிக்கச் சாதிப் பிரிவிலுள்ள உழைக்கும் மக்கள், வன்முறையை எதிர்க்கும் ஜனநாயக சக்திகள் என அனைவரும் ஒன்றிணைந்து, ஆதிக்கச் சாதிவெறிச் சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பலையும் வீழ்த்துவதற்கான சமரசமற்ற போராட்டங்களைக் களத்தில் கட்டியமைக்க வேண்டும்.


மக்கள் அதிகாரக் கழகம், நெல்லை – தூத்துக்குடி மாவட்டங்கள்.

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க