மோடியை ஓட்டம் பிடிக்கவைத்த டெல்லி மாணவர் போராட்டம்!

அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது துணை இராணுவப் படையும் டெல்லி போலீசும் தடியடி நடத்தி அவர்களின் தலையையும் கழுத்தையும் உடைத்துள்ளது. எனினும், தலையில் இரத்தம் வழிந்த போதும் மாணவர்கள் தொடர்ந்து பேரணி செல்ல முயன்றது இந்த கட்டமைப்பின் மீதான மாணவர்கள், இளைஞர்களின் கோபத்தையும் அவர்களின் துணிச்சலையும் வெளிக்காட்டுகிறது.

0

தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் உள்ளிட்ட தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்; நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்; சூழலியல் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்கை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று (20.07.2026) பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் நாடாளுமன்ற முற்றுகை பேரணி நடத்தியது டெல்லியை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. பாசிச மோடி அரசுக்கு பீதியூட்டியுள்ளது.

தேர்வு மோசடிகளை கண்டித்தும் ஒன்றிய கல்வியமைச்சர் பதவி விலக கோரியும் கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” (CJP) தலைமையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

போராட்டத்தின் அடுத்த கட்டமாக ஜூலை 20-ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்தப்படும் என்று அக்கட்சி அறிவித்திருந்தது. இப்போராட்டம் இந்தியா முழுவதும் பெரும் ஆதரவைப் பெற்றுவந்த நிலையில் அதனை ஒடுக்குவதற்காக நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி செல்லும் முக்கிய சாலைகளை மூடியும் ஜந்தர் மந்தரை சுற்றிவளைத்தும் பி.என்.எஸ். பிரிவு 163-இன் கீழ் தடை உத்தரவைப் பிறப்பித்தது டெல்லி போலீசு. அத்துடன் மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்வதைத் தடுப்பதற்காக ஜந்தர் மந்தர் மற்றும் சன்சாத் மார்க் பகுதிகளில் பல அடி உயர இரும்பு தடுப்புகளை அமைத்தது டெல்லி போலீசு.

ஆனால், போலீசின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரா, பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், பொதுமக்கள் தேர்வு மோசடிகளுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் தன்னெழுச்சியாகத் திரண்டனர்.


படிக்க: லடாக்கை பிரித்தாளத் துடிக்கும் பா.ஜ.க.: ஒற்றுமையுடன் முன்னேறும் மக்கள் போராட்டம்


மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தடுப்புகளை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேற முயன்ற போது போலீசு தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களை கட்டுப்படுத்த முடியாமல் சில தடுப்புகளை அகற்றி பேரணி செல்ல அனுமதிக்க வேண்டிய நிலைக்கு போலீசு தள்ளப்பட்டது.

ஆனால், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி முன்னேறிச் சென்றபோது சாஸ்திரி பவன், பிரஸ் கிளப் மற்றும் கான்ஸ்டியூசன் கிளப் அருகே துணை இராணுவப் படை மற்றும் டெல்லி போலீசு மாணவர்கள் மீது கடுமையான தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் வன்முறையில் ஈடுபட்டுள்ளது. பல மாணவர்களின் தலையையும் கழுத்தையும் அடித்து உடைத்துள்ளது. பலரையும் கைது செய்துள்ளது. போலீசு தாக்கியதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். போலீசின் இக்கொடூரத் தாக்குதலால் 12 வயது சிறுமி ஒருவரும் காயமடைந்துள்ளதாக சி.ஜே.பி. செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்துள்ளார்.

எனினும், தலையில் இரத்தம் வழிந்த போதும் மாணவர்கள் தொடர்ந்து பேரணி செல்ல முயன்றது இந்த கட்டமைப்பின் மீதான மாணவர்கள், இளைஞர்களின் கோபத்தையும் அவர்களின்  துணிச்சலையும் வெளிக்காட்டுகிறது.

மாணவர்களின் வீரியமிக்க போராட்டத்தை கண்டு அஞ்சிய பாசிச கும்பல் மாணவர்கள் பெருமளவில் பங்கேற்பதைத் தடுப்பதற்காக ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள ஐந்து மெட்ரோ நிலையங்களை மூடியுள்ளது. அத்துடன் போராட்ட செய்திகள் பரவக் கூடாது என்பதற்காக நாடாளுமன்றத்தைச் சுற்றி இணையச் சேவைகளை முடக்கியுள்ளது. இப்போராட்டத்தை பதிவு செய்து கொண்டிருந்த “மோலிடிக்ஸ்” (Molitics) ஊடகத்தின் முதன்மை ஆசிரியர் நீரஜ்-ஜா என்பவரை டெல்லி போலீசு தடுத்து வைத்துள்ளதாகவும், அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை என்றும் அந்த ஊடகத்தின் துணை ஆசிரியர் நிவேதிதா ஷாண்டில்யா தெரிவித்திருப்பது மோடி அரசின் ஒடுக்குமுறையை காட்டுகிறது.

மேலும், மாணவர்கள் பேரணியாக சென்றதை பயன்படுத்திக்கொண்டு போராட்டக் களத்திற்குள் நுழைந்த போலீசு அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அகற்றியுள்ளது. அவற்றுடன் மாணவர்களையும் பலவந்தமாக வெளியேற்றியுள்ளது. முன்னதாக, சோனம் வாங்சுக் போராட்டக் களத்திலிருந்து அடாவடித்தனமாகக் கொண்டு செல்லப்பட்ட போது அமைதியான முறையில் போராட்டக் களத்தை காலி செய்ய வேண்டும் என்று நாடகமாடிவந்த போலீசு, தற்போது பல்வந்தமாக போராட்டக் களத்தை அகற்றி தனது உண்மை முகத்தைக் காட்டியுள்ளது.

ஆனால், அனைத்துவித ஒடுக்குமுறைகளையும் மீறி மாணவர்கள் உறுதியுடன் போராடியதால், கடந்த முப்பது நாட்களாக மாணவர்களுடன் எந்தவித பேச்சுவார்த்தைக்கும் முன்வராத ஒன்றிய மோடி அரசு தற்போது பேச்சுவார்த்தைக்கு பணிந்துள்ளது. அரசு தரப்பில் மாவட்ட ஆட்சியர், மத்திய அரசுச் செயலாளர் மற்றும் பிற அதிகாரிகளைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்வந்துள்ளது. ஆனால், பிரதமர் மோடி அல்லது ஒன்றிய கேபினட் அமைச்சருடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று சி.ஜே.பி. கட்சியினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், மோடி அரசின் பாசிச ஒடுக்குமுறையை நேரடியாக எதிர்கொண்டும் ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். மாணவர்களின் இப்போராட்டம் இத்துடன் முடிவடையப் போவதில்லை; பாசிச கும்பலை பணியவைப்பதை நோக்கி முன்னேறும். அதேசமயம், கார்ப்பரேட் கொள்ளைக்கானதாக மாறியுள்ள நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை இரத்து செய்வது; அக்கொள்ளையை நிறுவனமயமாக நடத்திவரும் தேசிய தேர்வு முகமையை (NTA) கலைப்பது; மாற்று கல்வி கட்டமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நோக்கி இப்போராட்டமானது வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதன் மூலமே தேர்வு முறைகேடுகளையும் மாணவர்கள் தற்கொலையையும் நிரந்தரமாகத் தடுக்க முடியும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க