த.வெ.க. அரசின் இரண்டு மாத ஆட்சி: திரைகிழியும் கவர்ச்சி நாயகனின் கார்ப்பரேட் முகம்

“மக்கள் நல ஆட்சி”, “அரசியல் மாற்றம்” என்ற கவர்ச்சிகரமான முழக்கங்களை முன்வைத்து ஆட்சிக்கு வந்த த.வெ.க. அரசின் முகமூடி மிகக் குறுகிய காலத்திலேயே கிழிந்து த.வெ.க. அரசின் கார்ப்பரேட் முகம் வெளிப்படத் தொடங்கிவிட்டது.

ரு பக்கம், போதை ஒழிப்பு “மாரத்தான்”, தமிழில் ஆங்கிலக் கலப்பு, சட்டமன்றத்தில் “ஸ்டைல்” என்ற பெயரில் சேட்டைகள் செய்வது என மக்களை முக்கியமான அரசியல் பிரச்சினைகளில் இருந்து திசைத்திருப்பிக் கொண்டிருக்கிறார் நடிகரும் முதலமைச்சருமான விஜய். இன்னொரு பக்கம், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி, மருத்துவம், மின்சாரம் போன்ற துறைகளில் தனியார்மயம், கார்ப்பரேட்மயத்தை தீவிரமாக அரங்கேற்றி வருகிறார்.

இந்த இரண்டு மாதங்களில் மட்டும், போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறை, கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளானது, இன்னும் ஓரிரு ஆண்டுகளிலேயே இத்துறைகள் முற்றிலும் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விலகி முழுமையாக கார்ப்பரேட்மயமாகிவிடும்; பாசிச பா.ஜ.க. அரசின் காவிமயமாக்கத்திற்கு ஆட்பட்டுவிடும் என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

த.வெ.க. அரசின் தற்போதைய நடவடிக்கைகள் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை தீவிரப்படுத்துவதாகவும், மாநில உரிமைகளையும், பொதுத்துறைகளில் இதுவரை இருந்து வந்த குறைந்தபட்ச அரசின் பங்களிப்பையும் கைவிடுவதாகவும் இருக்கின்றன.

  1. மின்வாரியத்துறை

தமிழ்நாடு மின்வாரியத்தின் (TNEB) தற்போதைய நிதிநிலை, உள்கட்டமைப்பு மற்றும் வருவாய் குறித்து மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கை, த.வெ.க. அரசின் மின்துறைக் கொள்கையின் திசையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

அந்த அறிக்கையின்படி, மார்ச் 31, 2026  நிலவரப்படி தமிழ்நாடு மின்வாரியத்தின் மொத்தக் கடன் ரூ.2.47 இலட்சம் கோடியை எட்டியுள்ளது. மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய நிதி அமைப்பில் மின்வாரியத்தை இயக்குவது சவாலாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், அரசு கூறும் இந்த ‘இக்கட்டான’ சூழலிலும் ரூ.49,532 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், 469 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் 20,449 பணியிடங்களை நிரப்பும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

முக்கியமாக, குறுகிய கால (Short-Term) மின் கொள்முதல் ஒப்பந்தங்களுக்குப் பதிலாக நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்களுக்கு மாற வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார். தற்போது சந்தை விலைக்கு ஏற்ப தினசரி அல்லது பருவகால அடிப்படையில் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சாரம் வாங்கப்படுவதால் செலவு அதிகரிக்கிறது என்றும், நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் விலை நிலைத்தன்மையை உருவாக்கி, ஆண்டுக்கு பல நூறு கோடி ரூபாய் வரை சேமிக்க முடியும் என்றும் அரசு கூறுகிறது.

மேலும், சூரிய மின் உற்பத்திக்கான அனுமதிகள் முழுமையாக இணையவழியாக மாற்றப்பட்டு, முதலீட்டாளர்கள் இடைத்தரகர் அல்லது லஞ்சம் இல்லாமல் விண்ணப்பிக்க புதிய இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இதன் மூலம் தனியார் முதலீட்டை அதிகரித்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை விரிவுபடுத்துவதே அரசின் நோக்கம் என்றும் கூறுகிறது.

இந்நடவடிக்கைகளை நிதிச் சீர்திருத்தம், செலவுக் கட்டுப்பாடு என்று த.வெ.க. அரசு நியாயப்படுத்திக் கொண்டாலும், அதன் மக்கள் விரோத கார்ப்பரேட் நலன் அப்பட்டமாக பல்லிளிக்கிறது.

தமிழ்நாடு ஏற்கெனவே அதானி, வேதாந்தா போன்ற தரகு அதிகார கார்ப்பரேட்டுகளையே மின் கொள்முதலில் பெருமளவில் சார்ந்துள்ளது. அதி.மு.க. ஆட்சிக் காலத்தில் (2013–2016) மின்வாரியத்திற்குத் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதில் அதானி குழுமம் தரம் குறைந்த நிலக்கரியை அதிக விலைக்கு விநியோகம் செய்ததாக இலஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியது. இதனால் மின்வாரியத்திற்கு சுமார் ரூ.3,000 கோடி இழப்பு ஏற்பட்டது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டிற்கு அதானி குழுமம் அதிக விலைக்கே மின் விநியோகம் செய்து வருகிறது.

இந்நிலையில், தற்போதைய அதிக விலைகளை அடிப்படையாகக் கொண்டு 15 அல்லது 25 ஆண்டுகளுக்கான நீண்டகால ஒப்பந்தங்கள் செய்யப்பட்டால், எதிர்காலத்தில் சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தின் சந்தை விலை குறைந்தாலும், பழைய ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட அதிக விலையையே அரசு தொடர்ந்து செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNERC) தரவுகளின்படி, மின்வாரியம் தனது சொந்த நிலையங்களில் மின்சாரம் தயாரிக்கும் செலவை விட, தனியாரிடம் வாங்கும் மின்சாரத்திற்கு அதிகத் தொகை செலுத்துகிறது.

மேலும், இத்தகைய தனியார் ஒப்பந்தங்களில் இடம்பெறும் “பயன்படுத்து அல்லது பணம் செலுத்து” (take-or-pay) விதியின்படி, ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட அளவு மின்சாரம் பயன்படுத்தப்படாவிட்டாலும் திறன் கட்டணத்தை (Capacity charges) அரசு செலுத்தியே ஆக வேண்டும். மின் தேவை குறையும், குளிர் மற்றும் மழைக் காலங்களிலும் இந்தச் சுமை தொடரும். புதிய நீண்டகால ஒப்பந்தங்கள் இந்தச் சுமையை அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிரந்தரமாக்கிவிடும்.

சுருக்கமாகச் சொன்னால், இவ்வாறு அதிக விலைக்கு கொள்முதல் செய்து அதனை மானிய விலையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விநியோகிப்பதே மின்வாரியம் தொடர்ந்து நட்டத்தில் இயங்குவதற்கான அடிப்படைக் காரணம். எனவே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான மானிய விநியோகத்தை நிறுத்தி, அரசே சொந்தமாக மின் உற்பத்தி நிலையங்களை நிறுவி உற்பத்தி செய்வதுதான் இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கு உதவும். ஆனால், தனியாரிடம் போடப்படும் இத்தகைய ஒப்பந்தங்கள் அந்த வாய்ப்பை அடியோடு அழித்துவிடும்.

இவ்வாறு, அரசே புதிய மின் உற்பத்தி நிலையங்களில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, தனியாருடன் நீண்டகால ஒப்பந்தங்களை அதிகரித்தால், மின்வாரியம் உற்பத்தியைக் கைவிட்டு வெறும் இடைத்தரகராகச் சுருங்கிவிடும்.

ஸ்மார்ட் மீட்டருக்கான முன்னெடுப்பு

அதேபோல், அமைச்சர் நிர்மல் குமார் தனது உரையில், வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும், முதற்கட்டமாக ஒன்றிய அரசின் ‘அழுத்தம்’ காரணமாக சுமார் ஆறு இலட்சம் அரசு அலுவலகங்களில் பொருத்தப்படும் என்றும் தெரிவித்தார். இது தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான படிப்படியான முன்னெடுப்பே அன்றி வேறில்லை.

பொதுவாக ஸ்மார்ட் மீட்டர்கள் மூலம், மின் பயன்பாட்டைத் துல்லியமாக அளவிட முடியும், மின் திருட்டு குறையும், பில் தயாரிப்பு தானியங்கியாகும் என்று அரசு வாதிட்டாலும், எதிர்காலத்தில் முன்பணம் முறை அறிமுகப்படுத்தப்படும் அபாயம் உள்ளது. தொலைதூரத்திலிருந்தே மின் இணைப்பை துண்டிக்கும் வசதி இருப்பதால் ஏழை எளிய குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோகத் துறைத் திட்டத்தின் (RDSS) கீழ் தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தும் ரூ.19,000 கோடி மதிப்பிலான திட்டத்தை செயல்படுத்த மின்வாரியம் முடிவு செய்தது. இதில், சென்னை உள்ளிட்ட முக்கிய மண்டலங்களுக்கான (சுமார் 82 இலட்சம் மீட்டர்கள்) ஒப்பந்தத்தை அதானி குழுமத்தின் ”அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ்” (AESL) நிறுவனம் பெற்றது.

இதற்கிடையே, அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி குழுமத்தின் மீது பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான லஞ்சக் குற்றச்சாட்டுகள் எழுந்ததாலும், மற்ற மாநிலங்களை விட அதிக விலை தமிழ்நாட்டில் கோரப்பட்டதாலும் எழுந்த எதிர்ப்புகளால், தமிழ்நாடு மின்வாரியம் அந்த ஒப்பந்தத்தை இரத்து செய்தது.

கடந்த காலத்தில் அதானி போன்ற கார்ப்பரேட்டுகளிடமிருந்து கொள்ளை விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டு மின்வாரியம் நட்டத்திற்குத் தள்ளப்பட்டது. இன்று த.வெ.க. அரசும் அதே கார்ப்பரேட் பாதையில் “நீண்டகால” தனியார் ஒப்பந்தங்களை ஊக்குவிப்பது, இவர்களின் மக்கள் விரோத கார்ப்பரேட் சார்பு கொள்கையை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறது.

இதனால் மீட்டர் அளவெடுத்தல் உள்ளிட்ட நிரந்தரப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் வேலைவாய்ப்பும் பறிபோகும் அபாயம் உள்ளது.

20,000 வேலை” –
ஒளிந்திருக்கும் உழைப்புச் சுரண்டல்

வெள்ளை அறிக்கையில், கடந்த இருபது ஆண்டுகளில் மின்வாரியத்தில் பணியாளர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பதும், ஓய்வு பெறும் ஊழியர்கள் தொடர்ந்து அதிகரிப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் 20,449 பேர் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஆனால், அறிவிக்கப்பட்ட இந்தப் பணியிடங்களில் பெரும்பாலானவை கேங்மேன், கள உதவியாளர்கள், கம்பிப் பிரிவு, தொழில்நுட்பப் பிரிவு என அடிமட்டப் பணிகளுக்கானவை. இவற்றை நேரடி நிரந்தரப் பணியிடங்களாக நிரப்பாமல், தனியார் மனிதவள முகமைகள்  (அவுட்சோர்சிங் ஏஜென்சிகள்) மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பவே அரசு திட்டமிட்டுள்ளது.

மின்வாரியத்தில் ஏற்கெனவே 10 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்துவரும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி நிரந்தரத்திற்காகப் போராடி வருகின்றனர். அவர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல் கைவிட்டுவிட்டு, புதிய இளைஞர்களை மீண்டும் ஒப்பந்த முறையில் சுரண்ட த.வெ.க. அரசு முற்படுகிறது.

இந்த வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. மேலும், நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் காலமுறை ஊதியம், அகவிலைப்படி, இ.பி.எஃப். (EPF), இ.எஸ்.ஐ. (ESI), ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு என எந்த பலனும் இவர்களுக்குக் கிடைக்காது. மிகக் குறைந்த தொகுப்பூதியத்தில், ஆபத்தான மின்துறை களப்பணிகளில் இவ்விளைஞர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

மொத்தத்தில், “20,000 பேருக்கு வேலை” என்ற கவர்ச்சிகரமான முழக்கத்தின் பின்னே இருப்பது இளைஞர்களின் உழைப்பை அற்பக் கூலிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் நவீன கொத்தடிமை முறையாகும்.

  1. தூய்மைப்பணி

த.வெ.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற சில வாரங்களிலேயே, தமிழ்நாட்டின் 12 மாநகராட்சிகளில் (ஆவடி, தாம்பரம், வேலூர், ஓசூர், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி) குப்பையை சேகரித்தல், கிடங்குகளுக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பணிகளை அரசு – தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய தனியார் நிறுவனங்களிடம் ஏலம் கோரியது.

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்.

ஏற்கெனவே, கடந்த தி.மு.க. ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் குப்பை மேலாண்மைப் பணிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. அதனைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் பணிப்பாதுகாப்பு மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களை பனையூரில் உள்ள தன் அலுவலகத்திற்கு வரவழைத்து ஆதரவு தெரிவித்தார் த.வெ.க. தலைவர் விஜய்.

ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்றதும் அதே கார்ப்பரேட்மயப் பாதையில் பயணிப்பது விஜய்யின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது. இந்த அறிவிப்பிற்கு தூய்மைப் பணியாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிப்பதற்காக வெளியிடப்பட்ட ஏல அறிவிப்பை அரசு இரத்து செய்தது. ஏலத்தை கோரியதற்கும் இரத்து செய்ததற்கும் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் தரவில்லை. எனினும், இது மக்கள் எதிர்ப்புக்குப் பணிந்து எடுக்கப்பட்ட தற்காலிக பின்வாங்கலே ஆகும். கார்ப்பரேட்மயத்தை அடிப்படை கொள்கையாகக் கொண்டிருக்கும் த.வெ.க. அரசு, வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு இதனை அமல்படுத்துவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருக்கின்றன.

  1. கல்வித்துறை

தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகளை வாக்கு சேகரிப்பாளர்களாகப் பயன்படுத்திய விஜய், வெற்றிபெற்ற பிறகு அந்தப் பிஞ்சு குழந்தைகளின் எதிர்காலத்தை இருண்டதாக்கியுள்ளார்.

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு மாறுவது தொடர்பான அங்கீகாரம் மற்றும் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்கும் நடைமுறை இனி முழுமையாக ஆன்லைனில் நடைபெறும் என்றும், ஜூலை 1, 2026 முதல் பள்ளி நிர்வாகங்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்தார்.

இதற்கு முன்பு சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்குவதற்குத் தடையில்லாச் சான்றிதழ் வாங்க ரூ.25 இலட்சம் வரை செலவு செய்ய வேண்டியிருந்தது; ஆனால் தற்போது ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் முதலமைச்சர் விஜய்யை உச்சி முகர்ந்து பாராட்டுகின்றனர்.

ஆனால், இவர்கள் கூறுவது போல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு என்.ஓ.சி. வாங்குவது அவ்வளவு கடினமான காரியம் இல்லை. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பள்ளிகளை இணைத்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணைப்புத் துணை விதிகளில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி ஒன்றிய அரசு திருத்தம் மேற்கொண்டது. அதன்படி, சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்க என்.ஓ.சி. இல்லாமலும் விண்ணப்பிக்கலாம். அவ்வாறான விண்ணப்பங்கள் குறித்து மாநில அரசின் கருத்துகளைக் கேட்டு கடிதம் அனுப்பப்படும்; அதற்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். பதில் வராத பட்சத்தில், மீண்டும் ஒருமுறை சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும். அதற்கும் 15 நாட்களுக்குள் பதில் ஏதும் வரவில்லை என்றால், மாநில அரசு அந்தப் பள்ளிக்குச் சி.பி.எஸ்.இ. அந்தஸ்து வழங்க எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று கருதி, சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் அளிக்கப்பட்டுவிடும்.

தற்போது, த.வெ.க. அரசு இந்த நடைமுறையை மேலும் எளிமையாக்கியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், தமிழ்நாட்டில் உள்ள 13,000 தனியார் பள்ளிகளில் 50 சதவிகிதப் பள்ளிகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக மாறிவிடும் என்று கல்வியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

தற்போது தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என அனைத்தும் ஒரே விதமான பாடத்திட்டத்தைக் கொண்ட சமச்சீர் கல்விமுறையையே பின்பற்றுகின்றன. புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் பல்வேறு கட்டப் போராட்டங்களின் விளைவாகப் பெறப்பட்ட இந்தச் சமச்சீர் கல்வியை ஒழித்துக்கட்டும் வேலையில்தான் தற்போது த.வெ.க. அரசு ஈடுபட்டு வருகிறது. ஏனெனில், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் ஒன்றிய அரசின் கீழ், தேசிய கல்விக் கொள்கையின் (NEP) அடிப்படையில் செயல்படுபவை ஆகும். மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பாசிச மோடி அரசின் காவி – கார்ப்பரேட் கொள்கைகள் அனைத்தும் இப்பள்ளிகளில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும்.

இதேபோல், இப்பள்ளிகளில் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் உரிமை உட்பட அனைத்தும் மாநில அரசின் அதிகார வரம்பிலிருந்து ஒன்றிய அரசின் வசம் சென்றுவிடும். ஏற்கெனவே மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதே தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டண விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. தற்போது த.வெ.க. அரசின் இந்நடவடிக்கையால், தமிழ்நாட்டில் கட்டணக் கொள்ளை தீவிரமாகும்.

அதேபோல், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 848 தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பிப்பதற்கான ஆணை ஒரே நாளில் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் முறை “ஊழல், இடைத்தரகர் தலையீடு, அரசியல்வாதிகளின் செல்வாக்கு” ஆகியவற்றை ஒழித்து, ‘தகுதி’ அடிப்படையில் அனுமதி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறுகிறார். தனியார் முதலாளிகளின் கொள்ளைக்குத் துணைபோகக்கூடிய தமிழ்நாடு அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு, “நிர்வாக வெளிப்படைத்தன்மைக்கான முயற்சி” என்று நேர்மையற்ற முறையில், அயோக்கியத்தனமாக விளக்கம் கொடுக்கப்படுகிறது.

  1. போக்குவரத்துத் துறை

த.வெ.க. அரசு பதவியேற்ற பிறகு, முந்தைய தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் (KfW) நிதியுதவியுடன் அறிவிக்கப்பட்டிருந்த 500 மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை இரத்து செய்தது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, அந்த ஒப்பந்தத்தை இரத்து செய்ய ஜெர்மன் வளர்ச்சி வங்கியும் ஒப்புதல் அளித்துள்ளது.

ஆனால், இது வெறும் ஒப்பந்த இரத்து மட்டுமல்ல; அதற்குப் பதிலாக மொத்த செலவின அடிப்படையிலான ஒப்பந்தம் (GCC – Gross Cost Contract) என்ற புதிய முறையில் மீண்டும் ஒப்பந்தத்தை அறிவிக்க த.வெ.க. அரசு முடிவு செய்துள்ளது.

ஜி.சி.சி. முறையில், பேருந்துகளை தனியார் – கார்ப்பரேட் நிறுவனங்களே வாங்கும்; அவற்றின் உரிமையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமே இருக்கும்; இயக்குதல், பராமரிப்பு, ஓட்டுநர் மற்றும் பணியாளர்களை நியமித்தல் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் தனியார் நிறுவனங்களே மேற்கொள்ளும்; அரசு அல்லது போக்குவரத்துக் கழகம், பேருந்து இயக்கப்பட்ட தூரத்தின் (கிலோமீட்டர்) அடிப்படையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்தும். இவைதான் ஜி.சி.சி-யின் நோக்கங்களாகும்.

அரசு தரப்பில், இந்த முறை மூலம் போக்குவரத்துக் கழகங்களின் முதலீட்டுச் சுமை, பராமரிப்பு செலவு மற்றும் பணியாளர் செலவுகள் குறையும் என்று கூறப்படுகிறது. மாறாக, ஏற்கெனவே சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் (MTC) நூற்றுக்கணக்கான மின்சார பேருந்துகள் இதே ஜி.சி.சி. முறையில் இயக்கப்படுவதால், அரசுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.

இது வெறும் நிர்வாக மாற்றமல்ல; பொதுச் சொத்தாக இருந்த போக்குவரத்து துறையின் உற்பத்தி, பராமரிப்பு மற்றும் இயக்க உரிமையை அரசிடமிருந்து கார்ப்பரேட் முதலாளிகளிடம் படிப்படியாக தாரைவார்க்கும் மக்கள் விரோத நடவடிக்கையாகும். அரசுப் போக்குவரத்துக் கழகமானது, மக்களுக்கு நேரடியாக சேவை வழங்குவதில் இருந்து, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கும் வெறும் “நிர்வாக அமைப்பாக” மாறும் அபாயத்தை இந்த ஜி.சி.சி. முறை உருவாக்குகிறது.

லண்டன் மற்றும் இந்தியாவின் டெல்லி போன்ற நகரங்களில் ஜி.சி.சி. மற்றும் அரசு – தனியார் கூட்டாண்மை முறைகள் புகுத்தப்பட்ட போது, ஆரம்பத்தில் செலவு குறைந்தது போலத் தோன்றினாலும், பிற்காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் “கார்டெல்” அமைத்துக் கொண்டு அரசிடம் கிலோமீட்டருக்கான கட்டணத்தை உயர்த்திக் கோரின.

மேலும், ஜி.சி.சி. முறையில் இயக்கப்படும் பேருந்துகளில், ஓட்டுநர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களால் குறைந்த ஊதியத்திற்கு தற்காலிகமாக நியமிக்கப்படுவதால், பேருந்துகளின் பராமரிப்புக் குறைபாடும், விபத்துகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்வதாகப் போக்குவரத்து ஆய்வுகள் (UITP Reports) தெரிவிக்கின்றன.

இந்த முடிவை போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்துள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம், “பேருந்துகளை அரசே வாங்கி, அரசே இயக்க வேண்டும்; ஜி.சி.சி. முறை என்பது போக்குவரத்துத் துறையின் படிப்படியான தனியார்மயமாக்கலாகும்” என்று விமர்சித்துள்ளது. மின்வாரியத்தில் தனியார் மின் கொள்முதல் அதிகரித்ததால் ஏற்பட்ட நஷ்ட நிலைபோல, போக்குவரத்துத் துறையும் தனியார் நிறுவனங்களைச் சார்ந்த அமைப்பாக மாறும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

000

தொகுப்பாக, “மக்கள் நல ஆட்சி”, “அரசியல் மாற்றம்” என்ற கவர்ச்சிகரமான முழக்கங்களை முன்வைத்து ஆட்சிக்கு வந்த த.வெ.க. அரசின் முகமூடி மிகக் குறுகிய காலத்திலேயே கிழிந்து த.வெ.க. அரசின் கார்ப்பரேட் முகம் வெளிப்படத் தொடங்கிவிட்டது.

நிர்வாக வெளிப்படைத்தன்மை, ஊழல் ஒழிப்பு, இலஞ்ச ஒழிப்பு, நிதிச் சீர்திருத்தம் மற்றும் நவீன தொழில்நுட்பம் என்ற போர்வையில், கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வேட்டைக்காக மக்களின் பொதுச் சொத்துக்களை தாராளமாகத் திறந்து விடுகிறது. இப்போக்கு வரும் காலங்களில் மேலும் தீவிரமடையும்.

இதனால், ஏற்படும் சுமைகளை மக்கள் மீது ஏற்றினால் ஆட்சியின் மீது அதிருப்தி அதிகரித்து விடும் என்று உணர்ந்து இடைத்தேர்தல் வரை மின் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் போன்றவற்றை உயர்த்தாமல் தள்ளி வைத்துள்ளது விஜய் அரசு.

த.வெ.க-வின் இந்த தனியார்மய, கார்ப்பரேட்மய நடவடிக்கைகள் கூட்டணி கட்சிகளான சி.பி.ஐ., சி.பி.எம்., வி.சி.க. ஆகியவற்றிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. இதனால், “தாய்மாமன் சீர்” என அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்கம் வழங்கும் கவர்ச்சித் திட்டத்திற்கு பதிலாக, அதற்கு ஒதுக்கப்படும் ரூ.780 கோடி நிதியை, அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த பயன்படுத்துமாறு இக்கட்சிகள் கண்டிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளன.

இனியும், த.வெ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை விமர்சிக்க இன்னும் ஆறு மாத காலம் பொறுத்திருக்க வேண்டும் என்று மௌனம் காப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலாகும்; த.வெ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்குத் துணை போவதாகும். பாசிச மோடி அரசுக்கு எதிராக போராடிவரும் ஜனநாயக சக்திகள் த.வெ.க-வின் தனியார்மய, கார்ப்பரேட்மய நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவதும் அவசியமாகும். அவ்வாறு போராடாமல் தவிர்த்தால் த.வெ.க. அரசு பாசிசத்திற்கு பாதையமைத்துக் கொடுப்பதை தடுக்க முடியாது. இதனை உணர்ந்து அனைவரும் களத்தில் இறங்க வேண்டும்.


குழலி

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க