நெல்லை ராதாபுரத்தில் தார் தொழிற்சாலை அமைப்பதற்கு மக்கள்-விவசாயிகள் எதிர்ப்பு!

இக்கிராமத்தில் பல ஆண்டுகளாக விவசாயம் நடைபெற்று வருகிறது. தொழிற்சாலை அமைவிடத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வடக்குக்குளம் மழைநீரைச் சேமித்து, சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கும் நிலத்தடி நீர் வளத்திற்கும் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. இங்கு தார் தொழிற்சாலை செயல்பாட்டிற்கு வந்தால் விவசாய நிலங்கள், பயிர்கள், மண் வளம், நிலத்தடி நீர் வளம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் தார் தொழிற்சாலை அமைக்க தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தனக்கர்குளம் கிராம மக்களும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, தனக்கர்குளம் கிராம மக்கள் ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சதீஷ் கிறிஸ்டோபருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தடையில்லா சான்றிதழ்:

“நாங்கள் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகாவைச் சேர்ந்த தனக்கர்குளம் கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள். எங்களது விவசாய நிலங்களுக்கு அருகிலுள்ள சர்வே எண் 540-ல் தார் தொழிற்சாலை அமைப்பதற்காக தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் பல ஆண்டுகளாக விவசாயம் நடைபெற்று வருகிறது. இத்தொழிற்சாலை செயல்பாட்டிற்கு வந்தால் விவசாய நிலங்கள், பயிர்கள், மண் வளம், நிலத்தடி நீர் வளம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடும் என்ற நியாயமான அச்சம் எங்களுக்கு உள்ளது. மேலும், தொழிற்சாலை அமைவிடத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் வடக்குக்குளம் அமைந்துள்ளது. இக்குளம் மழைநீரைச் சேமித்து, சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கும் நிலத்தடி நீர் வளத்திற்கும் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. தொழிற்சாலை அமைவிடத்தில் இருந்து சுமார் 964 மீட்டர் தொலைவில் தனக்கர்குளம் கிராமம் அமைந்துள்ளது. தொழிற்சாலையில் இருந்து வெளிப்படக்கூடிய புகை, தூசி மற்றும் பிற மாசுபடுத்தும் துகள்கள் நீர்நிலைகள், சுற்றுச்சூழல், விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்களின் உடல்நலனை பாதிக்கும் அபாயம் இருப்பதாக நாங்கள் அச்சப்படுகிறோம்.

விவசாய நிலங்கள்:

மேலும், தொழிற்சாலை அமைவிடத்தைச் சுற்றியுள்ள பெரும்பாலான நிலங்கள் விவசாய நிலங்களாக உள்ளன. அப்பகுதியில் உள்ள காலி நிலங்கள் தற்போது உள்ளூர் மக்களால் மாடுகள் மற்றும் ஆடுகளின் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தொழிற்சாலை செயல்பட்டால் அந்த மேய்ச்சல் நிலங்களும் மாசுபட்டு, கால்நடைகளின் உடல்நலனும் பாதிக்கப்படக்கூடும்.

நடவடிக்கைகள்:

மேலும் அம்மனுவில், பொதுமக்களின் எதிர்ப்பு, விவசாய நிலங்கள், வடக்குக்குளம் நீர்நிலை மற்றும் அருகிலுள்ள குடியிருப்புகள் போன்ற முக்கிய அம்சங்கள் இருந்த போதிலும், பொதுக் கருத்துக் கேட்பு நடத்தப்பட்டதா, உரிய கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா, சம்பந்தப்பட்ட துறைகளின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் பெறப்பட்டனவா, அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து எங்களுக்கு நியாயமான சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

எனவே, தாங்கள் பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

  1. சர்வே எண் 540-ல் முன்மொழியப்பட்டுள்ள தார் தொழிற்சாலை அமைவிடத்தில் உடனடியாக நேரடி கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
  2. வழங்கப்பட்ட தடையில்லாச் சான்றிதழ் மற்றும் தொடர்புடைய அனைத்து அனுமதிகளின் சட்டப்பூர்வத்தன்மையை சுயாதீனமாகவும், வெளிப்படையாகவும் விசாரிக்க வேண்டும்.
  3. விசாரணை நிறைவடையும் வரை தொழிற்சாலை தொடர்பான அனைத்து பணிகளையும் உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும்.
  4. விதிமீறல்கள் அல்லது முறைகேடுகள் கண்டறியப்பட்டால் வழங்கப்பட்ட தடையில்லாச் சான்றிதழ் மற்றும் பிற அனுமதிகளை உடனடியாக இரத்து செய்ய வேண்டும்.
  5. விசாரணையில் தடையில்லாச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் ஏதேனும் விதிமீறல்கள், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் அல்லது சட்டவிரோத செயல்பாடுகள் இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டால், அதற்கு பொறுப்பான தாசில்தார் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் சட்டப்படி துறை ரீதியான மற்றும் சட்ட ரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  6. விவசாய நிலங்கள், நீர்நிலைகள், நிலத்தடி நீர் வளம், கால்நடைகள், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் உடல்நலனைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
  7. இம்மனுவின் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து எழுத்துப்பூர்வமாக எங்களுக்கு தகவல் வழங்க வேண்டும்.

எங்களின் வாழ்வாதாரமான விவசாயம், சுற்றுச்சூழல், நீர்நிலைகள் மற்றும் பொதுமக்களின் உடல்நலனைப் பாதுகாக்க தாங்கள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிராக அப்பகுதி பொதுமக்கள் ஏற்கெனவே அமைதியான போராட்டம் நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்படாது என்று உறுதியளித்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், கடந்த மே 21, 2026 அன்று பொதுமக்களுக்கும் அருகிலுள்ள நில உரிமையாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் எந்தவித முன்னறிவிப்பும் வழங்காமல் தார் தொழிற்சாலைக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தனக்கர்குளம் கிராம மக்கள் தார் தொழிற்சாலையின் பாதிப்பு அறிந்து முன்னெச்சரிக்கையாகவே விழித்துக் கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

தற்போது நாடெங்கும் பல்வேறு நெடுஞ்சாலைகள் ஆறு வழி, எட்டுவழிச் சாலைகளாக மாற்றப்பட்டு வரும் சூழலில், அதற்கான தார் உற்பத்தியை விவசாய நிலங்களை பாழ்படுத்தி மேற்கொள்ள அரசு முனைந்து வருகிறது. எந்த மக்களும் தங்களுக்கு ஆறுவழி, எட்டுவழிச் சாலைகள் வேண்டுமென எங்கும் கேட்கவில்லை. இவை மக்களின் அடிப்படைத் தேவைக்கானதும் அல்ல. மாறாக பெருநிறுவனங்களின் சரக்கு போக்குவரத்திற்காகவே நெடுஞ்சாலைகள் விரிவாக்கப்பட்டு வருகின்றன.

முக்கியமாக, தார் தொழிற்சாலை மீதான தனக்கர்குளம் கிராம பொதுமக்களின் அச்சம் நியாயமானதும், ஆதாரப்பூர்வமானதும் ஆகும்.

பிப்ரவரி 2023-இல் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் மேலப்பாகனூர் பகுதியில் செயல்பட்டு வந்த தார் தொழிற்சாலையில் அதிகப்படியான நச்சுப்புகை வெளியாகி 13-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட‌ பொதுமக்கள் மயக்கமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த தொழிற்சாலையை தொடங்கக் கூடாதென முன்னமே அக்டோபர் 2, 2022 அன்று கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால், அரசு நிர்வாகம் மக்களின் கிராமசபைத் தீர்மானத்தை துளியும் பொருட்படுத்தாமல் தொழிற்சாலையை செயல்பட அனுமதி அளித்திருந்தது.

அதுபோல திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் மெய்யூர் ஊராட்சி ராஜபாளையம் கிராமத்தில் அமைக்கப்படவிருந்த தார் தொழிற்சாலையை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராடினர். ஆனால், அந்தக் கிராமத்தில் இருந்து அதே பூண்டி ஒன்றியம் சோமதேவன்பட்டு ஊராட்சி கொரக்கதண்டலம் கிராமத்தில் நிறுவனத்தின்‌ சார்பில் குளிர்பான தொழிற்சாலை கிடங்கு அமைக்கப் போவதாக பொய்யுரைத்து தார் தொழிற்சாலையை அமைக்க முற்பட்டனர். அங்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது போன்று திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் சின்னக்கந்திலி ஊராட்சி தெல்லபெண்டா கிராம பகுதியில் தார் தொழிற்சாலையை அமைக்கும் பணியை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பழம்பூண்டி கிராமத்தில் இயங்கிவரும் தார் தொழிற்சாலையினால் ஏற்படும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளை தாங்க முடியாமல் அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்து போராடினர்.

சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள மாதாப்பூர் பகுதியில், அனுமதியின்றி செயல்பட்டு வரும் தார் தொழிற்சாலை மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகள், விவசாயம், கோழிப்பண்ணை உற்பத்தி ஆகியவற்றிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை எதிர்த்து தொழிற்சாலையை மூட வலியுறுத்தி வருகின்றனர்.

மக்களின் வாழ்வாதாரத்தையும் உடல்நலத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கின்ற வகையிலான தொழிற்சாலைகளையே நாட்டின்‌ வளர்ச்சிக்கான கட்டமைப்புகளாக முன்னிறுத்தி உருவாக்குவதில் அனைத்து அரசுகளும் மும்முரமாக உள்ளன. அதன்படியே அரசு நிறுவனங்களும் அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனர். அதற்கேற்பவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள், தொழிற்சாலை அமைப்பு சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு இயங்கும்போது ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி மக்கள் போராடினால் தொழிற்சாலை தொடங்கும் போது என்ன செய்தார்கள், ஏன் எதிர்க்கவில்லை என்ற கேள்விகள் அதிகாரமற்ற மக்களை நோக்கி முன்வைக்கப்படும். ஆனால் பெரும்பாலான கேடு விளைவிக்கும் நிறுவனங்களை தொடங்கும் போது அப்பகுதி மக்களிடம் அதற்கான கருத்துகேட்பு கூட்டங்கள் அதிகாரிகளால் நடத்தப்படுவதில்லை. மக்கள் தங்களது அரசியலமைப்பு அதிகாரத்தின்படி, கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினாலும் மதிக்கப்படுவதில்லை; கிராபசபைக் கூட்டங்கள் வெறும் சடங்காக மாற்றப்பட்டுவிட்டன.

அந்தவகையில், தனக்கர்குளம் கிராம பொதுமக்கள் முன்கூட்டியே பாதிப்பை உணர்ந்து தங்கள் விவசாய நிலங்களையும் நீர்நிலைகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முன்வந்துள்ளது வரவேற்கத்தக்க விடயமாகும்.

தனக்கர்குளம் கிராம மக்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதி மக்கள் அனைவரும் இந்த தார் தொழிற்சாலை எதிர்ப்பு‌ நடவடிக்கையில் ஈடுபட்டு தங்களது வாழ்வாதாரத்தையும் இருப்பையும் தக்கவைத்துக் கொள்ளும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆகவே, தனக்கர்குளம் பகுதி பொதுமக்களிடம் எந்தவொரு கருத்துகேட்பும் கள ஆய்வும் இன்றி தார் தொழிற்சாலை அமைக்க அளிக்கப்பட்டுள்ள தடையில்லா சான்றிதழ் இரத்து செய்யப்பட வேண்டும்.

முறையின்றி அனுமதி அளித்த அதிகாரிகள்‌ மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நாடெங்கும் கார்ப்பரேட் பெருநிறுவனங்களின் வளர்ச்சிக்காக இயற்கை வளங்கள்‌‌ சூறையாடப்பட்டும், சுற்றுச்சூழல் வாழ்வதற்கு தகுதியற்றதாக மாற்றப்பட்டும் வருகிறது. மக்கள் விரோத, பாசிச திட்டங்ளை எதிர்த்து உழைக்கும் மக்களும் விவசாயிகளும் ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து களமிறங்கினால் மட்டுமே நச்சு ஆலைகளை அகற்றி உயிர்மூச்சினை தக்கவைக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.


எழில்

செய்தி ஆதாரம்: தினத் தந்தி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க