17.07.2026

செங்கல்பட்டு: ஊனைமாஞ்சேரி, நல்லம்பாக்கம் ஊராட்சிகளில் இயங்கும்
சட்டவிரோத கிரஷர்களைப் பறிமுதல் செய்!

பத்திரிகைச் செய்தி

சென்னையை அடுத்த வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையிலிருந்து நல்லம்பாக்கம் செல்லும் பிரதான சாலையில் உள்ள ஊனைமாஞ்சேரி, நல்லம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் 100க்கும் மேற்பட்ட கிரஷர்கள் (பெரிய பாறைகளை உடைத்து, சிறிய கற்கள், சரளை, மணல் அல்லது பாறை தூசியாக மாற்றப் பயன்படும் ஒரு கனரக இயந்திரம்), தார் பிளான்ட்டுகள், கான்கிரீட் பினான்ட்டுகள் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. இதனால் ஏற்படும் புழுதி நிறைந்த சாலைகளினால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

இங்குள்ள 100க்கும் மேற்பட்ட கிரஷர்கள், தார் பிளான்ட்கள் (சாலைகள் போடுவதற்குத் தேவையான தார் கலவையைத் தயாரிக்கும் பெரிய இயந்திரம்), கான்கிரீட் பிளான்ட்கள் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. இதில் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் மூடி போடாமலும், தண்ணீர் ஊற்றி அரைக்காமலும் திறந்தவெளியில் சக்கை கற்கள், ஜல்லி கற்கள், எம்சாண்ட் அரைப்பதால் இதிலிருந்து கரும்புகை மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த புகை வெளியேறுகிறது.

இதனால் ஊனைமாஞ்சேரி, கொளப்பாக்கம், நெடுங்குன்றம் நல்லம்பாக்கம், கீரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் சுவாச கோளாறு மற்றும் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் பாதிக்கப்படுகின்றனர்.

இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு காலில் போடும் ஷூ மற்றும் ஹெல்மெட் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் வேலை வாங்குவதால் தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. இதனால் இயந்திரங்களில் சிக்கி அடிக்கடி உயிர்ப் பலி ஏற்படும் அவலநிலை உள்ளது.

மேலும் மேற்படி கிரஷர்களை சுற்றி வனப்பகுதி உள்ளதால் அதில் தூசி படர்வதால் நாளுக்குநாள் காடுகளின் வளர்ச்சியும் குன்றி வருகிறது.

ஆனால் நெடுஞ்சாலைத் துறை விதிகளின் படி 18 டன்னுக்கு மேல் கனிமங்களை ஏற்றிச் செல்லக்கூடாது. ஆனால் 60 டன்னுக்கு மேல் கனிமங்களை ஏற்றிச் செல்கின்றனர். தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட லாரிகள் சென்னை புறநகர்ப் பகுதிக்குச் செல்கின்றன. மேலும் இங்கு வந்து போகும் லாரிகளினால் அப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையும் குண்டும் குழியுமாக மாறி வருகிறது.

இது குறித்து மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசே,

  • ஊனைமாஞ்சேரி, நல்லம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் இயங்கும் சட்டவிரோதமான கிரஷர், கார் பிளான்ட், கான்கிரீட் பிளான்ட் முதலியவற்றை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும்.
  • உரிய முறையில் வழக்குப் பதிவு செய்து அதன் உரிமையாளர்களைக் கைது செய்ய வேண்டும்.
  • அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக டன் கணக்கில் கனிமங்களைக் கொண்டு செல்லும் லாரிகளை பறிமுதல் செய்ய வேண்டும். குறிப்பிட்ட லாரி உரிமையாளர்களைக் கைது செய்ய வேண்டும்.
  • மாசை கட்டுப்படுத்தத் தவறிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தி ஆதாரம்: தினகரன்


தோழர் அமிர்தா,
சென்னை மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
73584 82113

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க