Sunday, June 7, 2020
முகப்பு வாழ்க்கை பெண் தொழு நோயாளிகளின் உலகிற்கு வருகிறீர்களா ?

தொழு நோயாளிகளின் உலகிற்கு வருகிறீர்களா ?

-

நைட்டு படுக்கும் போது கால்ல ஐஞ்சி வெரலும் இருந்துச்சி, காலையில எழுந்துப் பார்த்த புண்ணா இருந்த நடுவிரல, காணோம், சொல்லாமக் கொள்ளாம என் விரலை ஆட்டையப் போட்டுடுச்சே எலி, எத்தன நாய்க்கும், பூனைக்கும் சோறு போடுறேன், பசினு சொல்லியிருந்தா எலிக்கும் சோறுப் போட்டுறுப்பேனே” என வேதனையை மறக்க வேடிக்கையாகப் பேசுகிறார்கள் மருத்துவமனையில் இருக்கும் தொழுநோயாளிகள்.

மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறும் உள் நோயாளிகளுக்கு முன்பு வாரத்தில் ஒருநாள் கறிச்சோறு உண்டு. ஆனால், சாப்பிடும்போது, கறியா தன் விரலா என்று தெரியாமல் தொழுநோயாளிகள் உணர்ச்சியற்ற விரலையே தின்றக் கொடுமையெல்லாம் இங்கு சாதாரணம்.

சிங்கமுக வடிவம்
நரம்புகள் இழுத்து சுருங்குவதால் முகம் உருமாறி சிங்க வடிவமாக தோன்றும்

தொழுநோய் மருத்துவமனையின் அருகாமைப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தால் நோயாளிகள் தப்பிக்க வழியுண்டு. வேற்று மாநிலம், வெளி ஊர்களிலிருந்து வந்தவர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியது. சுற்றத்தினர் துரத்தியவுடன் நோயின் கவனிப்பின்றி காது, மூக்கு, பிறப்புறுப்பில் ஏராளமாக புழு வைத்து…….. சீழ் வடிந்து எங்கு செல்வது என்று தெரியாமல்,ரோட்டில் மாண்டவர்கள் ஏராளம். தொழுநோயாளிகள் என்ற புறக்கணிக்கப்பட்ட உலகத்திற்குள் உங்களை அழைத்துச் செல்கிறோம்.

சென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் செங்கற்பட்டு நகரத்தை ஒட்டி இயற்கைச்சூழலில் 550 ஏக்கர் பரப்பளவில் அமைந்தள்ளது திருமணி மத்திய தொழுநோய் போதனா மற்றும் ஆராய்ச்சி மையம் (Central Leprosy Teaching and Research Institute). 1924ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து கிருத்துவ தேவாலாயத்தின் பங்களிப்புடன் துவக்கப்பட்டு தற்போது மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. தொழுநோயாளிக்களுக்கா ன 124 படுக்கை வசதிகளுடன் மற்றும் வெளிநோயாளிகளுக்கான மருத்துவ பிரிவு,ஆய்வக பிரிவு, அறுவைச்சிகிச்சை பிரிவு, தொற்றுநோய், புள்ளியல் பிரிவு என்று இவற்றின் கீ்ழ் 32 துணைப் பிரிவுகள் இயங்குகின்றன. அவற்றில் தோழுநோயாளிகளுக்கான காலணிகள்,உடைகள்,உணவு தயாரிக்கும்  பிரிவுகள் மற்றும் உயர் மருத்துவ ஆராய்ச்சிக்கான ஆய்வ பிரிவு,நூலக பிரிவு, என்று பரந்து விரிந்துள்ளது இம்மருத்தவமனை. ஒரு டஜனுக்கும் மேற்பட்ட துறைசார் அதிகாரிகள் கீழ் சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள்,ஊழியர்கள் மற்றும் அலுவலகப் பிரிவு என்று 300 க்கும் மேற்பட்டோர் இங்கு பணிபுரிகின்றனர்.

மொட்டையம்மாள்:

இவர், திருவண்ணாமலையின் வேளாந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர். கவுண்டமூட்டின் அதிஷ்டலட்சுமியாகப் பிறந்தவர். மொட்டையம்மாளின் குடும்பப் பொறுப்பும், சுறுசுறுப்பும், வாய் கணக்கும் குடும்பத்தினரை வியக்கவைத்தது. அப்பா, தன் 4 ஆண் பிள்ளைகளைக் காட்டிலும், மொட்டையம்மாள் மீது உயிரையே வைத்திருந்தார். அதிஷ்டமானவள் என்பதால், வீட்டின் விசேஷங்களிலும், விவசாய வேலைகளிலும் மொட்டையம்மாளைத்தான் முதல் ஆளாக நிற்க வைத்து அழகுப் பார்த்தார்கள். 16 வயதில் உறவுக்காரப் பையனுக்கு, சீர் செனத்தியுடன் மணம் முடித்தார்கள். திடீரென இவரது உடல் முழுவதும் கொப்பளம். முதலில் அம்மையோ, அலர்ஜியோ என்று கவனித்தது குடும்பம்.

நீண்டநாட்கள் இந்த மாத்திரையை உட்கொள்ளும் நோயாளிகள், சர்க்கரை, உப்பு(பிபி), கண்பார்வை இழப்பு, கிட்னி பெயிலியர் போன்ற ஏராளமான நோய்களுக்கு ஆட்படுகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு நோயாளி – நீண்டநாட்கள்  மாத்திரையை உட்கொள்ளும் நோயாளிகள், சர்க்கரை, உப்பு(பிபி), கண்பார்வை இழப்பு, கிட்னி பெயிலியர் போன்ற ஏராளமான நோய்களுக்கு ஆட்படுகின்றனர்.

பிறகு, இது தொழுநோயின் ஒரு வகை என உறுதியானது. அதன் பிறகு, அவரது வாழ்க்கையே பட்டுப்போனது. தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு செங்கல்பட்டு திருமணி ஆஸ்பத்திரியே கதியானது. குடும்பத்தினர் நோயைப் பற்றி வெளியில் சொன்னால் மானம் போய்விடும் என ஊராரிடம் மறைந்தனர். கணவனோ, சீர் செனத்தியெல்லாம் திருப்பி அனுப்பிவிட்டு, தான் கட்டிய தாலிக் கொடுத்துவிடும்படியும், தனக்கும், அவளுக்கும் ஒன்றுமில்லை என்று ஊர்ப்பஞ்சாயத்தைக் கூட்டி, அடுத்து, தன் மறுமணத்தை உடனே முடித்துக் கொண்டார்.

இன்றும் சிகிச்சையில் இருக்கும், மொட்டையம்மாள் மனமுடைந்துச் சொல்வது “நோயின் கொடூரமும், வலியும்கூட எனக்கு நோகல… என் குடும்பம் என்னை ஒதுக்கியதுதான் என்னால தாங்க முடியாத நோய்” என்பார். “நீ இருந்தா உன் தம்பிகளுக்கு பொண்ணு கிடைக்காது” ன்னு அம்மா சொன்னாங்க. இப்ப அதே வார்த்தையை தம்பிகள், தன் பிள்ளைகளின் கல்யாணத்துக்கும் சொல்றாங்க. ஆனா கூடவே, “நீ சம்பாதிக்கறதுல அத்தை முறைக்கு செய்ய வேண்டிய சீரை செஞ்சிடுன்னுறாங்கமா” , “எனக்கு தோல் மட்டும்தான் மறத்துப் போச்சி, மனசு மறத்துப்போகலையேம்மா” னு அழுவார்.

இப்போது இவர் வெளிநோயாளியாக சிகிச்சை எடுத்துக் கொண்டே,திருவாண்ணாமலையில் கலா கார்மெண்ட்ஸ்சில் உதவியாளராகச் சேர்ந்து, தையல்காரராக உயர்ந்து தைரியத்துடன் வாழ்ந்து வருகிறார். வாங்கும் சம்பளத்தில், சிறு பகுதியை அங்கிருக்கும் அனாதை இல்லத்துக்கு உதவுகிறார்.

விஜயா:

கும்பகோணம் வலங்கைமானைச் சேர்ந்தவர். பள்ளியில் நீளம் தாண்டும் போட்டி வீராங்கனை. காதல் திருமணம். திடீரென இவரது உடல் முழுவதும் கொப்பளம் வெடித்து தொழு நோய் என்று தெரிந்தது. குஷ்ட நோயாளியின் கணவர் என்ற கேலிப்பேச்சால் தூக்கில் தொங்கினார் அவரது கணவர். உடல் முழுவதும் கொப்பளம் வெடித்த வலியைத் தாங்குவதா, காதல் கணவன் இறந்த துக்கத்தை தாங்குவதா? பிறந்த குழந்தையை காப்பதா? என்று திக்குத் தெரியாமல் கலங்கியது வாழ்க்கை.

அவரது இயல்பே துடுக்குத்தனம் என்பதால், மருத்துவம் பார்க்கும் ஆஸ்பத்திரியிலும்   நடத்தையில் பழி சுமத்துகின்றனர். இவ்வளவு வேதனையியிலும், தன்னைப்போல நோயுற்ற முதியவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை மனமுவந்துச் செய்கிறார். இரண்டு கால்களும், கைவிரல்களும் இல்லாத சக நோயாளி அரியை திருமணம் செய்துக் கொள்கிறார். தாம்பரம் மெப்ஸ்இல் கிடைத்த வேலையை செய்துக் கொண்டு மகளையும் கொண்ட கணவரையும் காப்பாற்றுகிறார்.

முத்துசா:

‘பாம்பென்றால் படையே நடுங்கும் என்பார்கள், ஆனால் முத்துசா என்றால் பாம்பே நடுங்கும். பல வகையான கொடிய பாம்புகளுடன் விளையாடிவர் முத்துசா.

தொழுநோயாளிகளை சுத்தமான சூழ்நிலையில் வைத்து அவர்களை ஆரோக்கிய மனிதர்களாக்குவதில் முக்கியமானவர்கள் துப்புரவுத்தொழிலாளர்கள். மற்றவர்கள் பார்ப்பதர்க்கே மிரளும் புழுக்கள் கொட்டும் அழுகிய தசை,ரத்தம்,சீழ் இவற்றோடு அவர்களது மலத்தையும் வாரும் புனிதர்கள்.
தொழுநோயாளிகளை சுத்தமான சூழ்நிலையில் வைத்து அவர்களை ஆரோக்கிய மனிதர்களாக்குவதில் முக்கியமானவர்கள் துப்புரவுத் தொழிலாளர்கள். மற்றவர்கள் பார்ப்பதற்க்கே மிரளும் புழுக்கள் கொட்டும் அழுகிய தசை,ரத்தம்,சீழ் இவற்றோடு அவர்களது மலத்தையும் வாருகிறார்கள் இந்த தொழிலாளிகள்.

இவர் ஒரு தொழு நோயாளி. செங்கல்பட்டில் யார் வீட்டில் பாம்பு புகுந்தாலும் அவர்கள் அலறும் அலறல் முத்துசா என்றே இருக்கும். பாம்பு கடிக்கான பச்சிலை வைத்தியமும் தெரிந்தவர். பலமுறை பாம்பு கடித்தும் தன் வைத்தியத்தால் பிழைத்தவர். தன் ஊர் பிள்ளைகளுக்கும் பாம்பின் மீதிருந்த பயத்தை போக்கி, அவர்களுக்கும் பாம்பு பிடிக்கும் வித்தையைக் கற்றுத் தந்தவர். கடைசியில், செங்கல்பட்டு அரசு அதிகாரி வீட்டில் புகுந்த நல்ல பாம்பை பிடிக்கும் போது கடித்துவிட்டது. உடன் இருந்தவர் பாம்பை அடிக்க முற்பட, முத்துசா விடவில்லை. “வேணாம் வாயில்லாத ஜீவன்” என்று தடுத்துவிட்டார். உடனே கையை கயிற்றினால் கட்டிவிட்டு பச்சிலையை மருந்தைச் சாப்பிட்டார். தனக்கு விஷம் இறங்காததை தெரிந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லச் சொன்னார்.

மருத்தவமனை ஊழியர்களுக்கோ, கையில் கட்டியிறுந்த கயிறை கழற்றினார்கள் ஆனால் முத்துசா கயிற்றை கழற்றவேண்டாம். பாம்பு கடித்த இடத்தை கிழித்து இரத்தம் வடிய செய்யுங்கள் என்றார். ஆனால் அதை காதில் வாங்காத பயிற்சி மருத்துவர்கள் கயிற்றை அவிழ்த்ததும் சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. மக்கள் அனைவருமே கண்ணீர் வடித்து, மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 டிக்கு, கஸ்தூரி:

சக நோயாளிகளுக்கு இட்லி, சுண்டல், டீ விற்று காலம் தள்ளுகிறார்கள். இப்பவும் டீ 5 ரூபாதான். கோபால் அண்ணன் டீக்கு துப்புரவு பணியாளர்களும், கட்டுகட்டுபவர்களும் வாடிக்கையாளர்கள்.
சக நோயாளிகளுக்கு இட்லி, சுண்டல், டீ விற்று காலம் தள்ளுகிறார் ஒரு தொழு நோயாளி. இப்பவும் டீ 5 ரூபாதான். கோபால் அண்ணன் டீக்கு துப்புரவு பணியாளர்களும், கட்டுகட்டுபவர்களும் வாடிக்கையாளர்கள்.

மூன்று வயதிலேயே தொழுநோயால் பாதிக்கப்பட்டார் கஸ்தூரி. செங்கல்பட்டு மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சையுடன் வளர்ந்தவர். அவர் வயசுக்கு வந்ததும் மருத்துவமனையில்தான். உடனிருந்த நோயாளிகளே தன் பெண் மாதிரி சடங்கெல்லாம் மகிழ்ச்சியாக செய்தனர். இதைப் போலவே, சிறு வயதிலேயே நோயால் பாதிக்கப்பட்ட டிக்கு என்ற ஒரிசா முஸ்லீம் சிறுவனும் மருத்துவமனையிலே வளர்ந்தவன். இருவரும் விரும்பினர். இவர்கள் திருமணத்தையும் உடனிருந்த நோயாளிகளே முன்னிருந்து நடத்தினர். ஆனால் இவர்கள் குழந்தை பெற்று கொள்ளக் கூடாது. எனென்றால், கஸ்தூரியும் டிக்குவும் சாப்பிட்ட மாத்திரைகளின் பக்கவிளைவுகள் அப்படி. பிறக்கும் குழந்தை கை,கால் இல்லாமல் இறக்கை விரிந்த மாதிரி இருக்கும். தலையே இல்லாமல் கூட பிறக்கும் என்றனர் மருத்துவர்கள்.

அதனாலென்ன…. இருவரும் தன் சகநோயாளியின் பெண் குழந்தையை தத்தெடுத்தனர். இப்போது டிக்கு மீன் வியாபாரி. கஸ்தூரி ஒயர் கூடை பின்னுபவர். தன் மகள் சந்தியாவுக்கு பொறுப்பான தாய் தந்தையாக வாழ்க்கை நடத்துகின்றனர்.

முஸ்லீம் கணவனின் ரம்ஜானையும், தனது இந்துபண்டிகையும், சேர்த்து தற்போது மாறியிருக்கும் கிறித்துவ பண்டிகையையும் கொண்டாடும்

இவர்களின் வாழ்க்கையில் மதபேதம் இல்லை.

செல்லம்மா வயது 72:

நோய்க்கு வைத்தியம் பார்த்துக் கொண்டே வயதானவர்கள் பிசினசுக்கு ( பிச்சைக்கு) கிளம்பிவிடுகிறார்கள்.
நோய்க்கு வைத்தியம் பார்த்துக் கொண்டே வயதானவர்கள் பிசினசுக்கு                ( பிச்சைக்கு) கிளம்பிவிடுகிறார்கள்.

 

கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர். கணவர் நகை ஆச்சாரி. இவருக்கு ஆண், பெண் என்று இரண்டு பிள்ளைகள். செல்லாம்மாவின் 60வயது வரை இந்நோய் இருப்பது அவருக்கு தெரியவில்லை. தனக்கு ஏற்படும் சாதாரணக் காயங்கள்கூட ஆறாமல் இருப்பதைக் கண்டு வருத்தமடைந்தார். பிறகு ஆய்வில் தொழுநோயின் பாதிப்பு தெரியவந்தது. தன் அம்மா தங்களை வளர்த்து ஆளாக்கியதை நினைத்து கடைசிவரை கவனிப்புடன் பாரத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர் அவரது பிள்ளைகள். ஆனால், குடியிருக்கும் வீட்டிலோ, தங்கள் குடும்பத்துக்கும் அந்நோய் தொற்றிவிடும் உடனே வீட்டை காலி செய்ய வேண்டும் கூறிவிடுகின்றனர். இப்படி இரண்டு வீடுகள் மாறிய குடும்பத்துக்கு மறுபடியும் வீடுமாறுவதில் சிக்கல் . கடைசியில் அம்மாவை திருமணி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு சென்றுவிடுகின்றனர்.

மற்ற நோயாளிகளின் அவல நிலையைப் பார்த்ததும் தனக்கும் தொழு நோய் என்பதை ஏற்க செல்லம்மாவின் மனம் மறுக்கிறது. பேரன் பேத்தி என்ற வாழ்ந்த செல்லம்மா தான் புறக்கணிக்கப்பட்டு கடைசிவரை மருத்துவமனையிலே இருந்துவிடவேண்டியதை நினைத்து, சாப்பிட மறுக்கிறார். சிகிச்சை எடுத்துக்கொள்ள மறுக்கிறார். காயங்கள் பெரிதாகி விரல்களை இழக்கும் நிலைக்குச் சென்றதும், மனநோயாளியானார். இப்போது, மனநோய்க்கும் மருந்து எடுப்பதில்லை. வாரம் ஒரு முறை பாசத்துடன் வரும் தன் பிள்ளையையும் எதிரியைப் போல் பார்க்கிறார். இப்படி மருத்துவமனையின் உள்நோயாளியாக வருடக்கணக்கில் சிகிச்சைப் பெற்றாலும், சுற்றியிருப்பவர்கள் நடத்தும் விதத்தில் மனநோய்க்கு ஆளானவர்கள் ஏராளம்.

மனநோய்க்கு மட்டுமல்ல, சமூக புறக்கணிப்பால், இரயில் முன் விழுந்து தற்கொலை செய்துக்கொணடவர்கள் ஏராளம்.

தொழுநோயால் பெண்கள் பாதிக்கப்பட்டால், கணவன் அவர்களை விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். ஆனால், பெண்களோ கணவனுக்கு தொழுநோய் என்றால், இறக்கும்வரை உடனிருந்து கவனிப்பார்கள்.

இப்படி பல முகங்கள், பல கதைகள்.

இந்த நோய் ஒழுக்கக் கேட்டாலோ, பாவம் செய்வதாலோ வருவது இல்லை. ஊட்டச்சத்து குறைப்பாட்டாலும், நோய் எதிர்ப்பு குறைவதாலும் தோன்றி வீரியமடைகிறது. அதைப்போல், இது பார்த்தவுடன் தொற்றுவதோ, பழகியதும் தொற்றுவதோ கிடையாது. இதனை ஏர் பார்ன் டிசீஸ் [Air Born Disease] என்று வகைப் படுத்துவார்கள். நோயாளிகள் விடும் மூச்சுக்காற்றில் கிருமிகள் வெளிப்படும். அருகில் இருப்பவர் நோய் எதிர்ப்பு சக்தியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்தால் தொற்ற வாய்ப்பில்லை. இரண்டும் குறைந்தால் வாய்ப்புக்கள் அதிகம். தொற்றியதும் உடனேயும் வெளிப்பாடாது. வருட கணக்கில் கழித்துத்தான் தெரிய வரும். முக்கியமாக, தொழுநோயின் பாதிப்பு இரண்டு வகைகளில் வெளிப்படும். பொதுவில் தொழுநோய் எளிதில் பரவும் ஒரு நோய் இல்லை எனலாம்.

முதல் வகையில், இஎன்எல் ரீயக் ஷன்(ENL Reaction) இதற்கான மருந்து, ப்ரட்னி சோலான் [Prednisolone] எனும் சிறாய்ட் மாத்திரைகள் மற்றும் ஊசி, டிஎல்டி எனப்படும் [Thalidomide], மற்றும் தடுப்பு மருந்தான எம்பி-எம்டிடி[MB -MDT] அட்டை மாத்திரை. இது 12 மாதத்திற்கானது.

இதை நோயாளிகள் “வாத்தியார் மாத்திரை” என்றே அழைப்பர். ஆனால் தொழுநோய் மட்டுமே உள்ள நோயாளிகளை பலவித புதிய நோய்களுக்கு ஆளாக்குவதும் இந்த வாத்தியார் மாத்திரைதான். நீண்டநாட்கள் இந்த மாத்திரையை உட்கொள்ளும் நோயாளிகள், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கண்பார்வை இழப்பு, சிறு நீரக பாதிப்பு போன்ற ஏராளமான நோய்களுக்கு ஆட்படுகின்றனர்.

நரம்புகள் இழுத்து சுருங்குவதால் முகம் உருமாறி சிங்கம், குரங்கு எலிப் போன்ற மிருகங்களின் தோற்றத்தை பெறுவார்கள்.
நீண்டநாட்கள் இந்த மாத்திரையை உட்கொள்ளும் நோயாளிகள், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கண்பார்வை இழப்பு, சிறு நீரக பாதிப்பு போன்ற ஏராளமான நோய்களுக்கு ஆட்படுகின்றனர்

டிஎல்டி மாத்திரையை உட்கொள்ளும்போது, கண்டிப்பாக நோயாளிகள் மருத்துவமனையில்தான் இருக்கவேண்டும். இதன் பக்கவிளைவுகள் கொடூரமானது. இது தொழுநோயைக் கட்டுப்படுத்தும் ஆனால், பல்வேறு பல நோய்களைக் கொண்டு வரும். நரம்புகள் இழுத்து சுருங்குவதால் முகம் உருமாறி சிங்கம், குரங்கு எலிப் போன்ற மிருகங்களின் தோற்றத்தை பெறுவார்கள். மூக்கு முழுவதுமாக அழுந்தும். மூச்சு விடுவதற்கும் சிரமம். அதில், முழு நேரமும் தூக்கம். உடல் ஊதிப்போதல் இருக்கும்.  முக்கியமாக, பெண்கள் குழந்தைப் பெற்றுக் கொள்ளக்கூடாது. மீறிப் பிறந்தால், இறக்கைப்போன்ற கைகள், தலையில்லாத முண்டம் போன்று பல்வேறு குறைபாடுகளோடும், சேதங்களோடும் குழந்தை பிறக்கும். இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது நல்ல ஓய்வு, சத்தான சாப்பாடு என்ற நல்ல கவனிப்பு இருக்க வேண்டும். ஆனால் இந்த வாய்ப்பு இவர்களுக்கு இல்லை. இது பக்க விளைவுகளை இன்னும் அதிகப்படுத்துகிறது.

மறுபுறம், இந்திய அரசோ தொழுநோய் ஒழிக்கப்பட்டுவிட்டதாக கணக்கு காட்டுகிறது. இது அப்பட்டமானப் பொய் என்பதற்கு தற்போது சிகிச்சையில் இருக்கும் கேரளாவைச் சேர்ந்த நெஸ்லா, தமிழ்நாட்டைச் சேர்ந்த சித்ராவும், பீகாரைச் சேர்ந்த பூஜா மீனாக்குமாரி என்று தினமும் புதிய நோயாளிகளே வரும் குழந்தைகளே சாட்சி.

இரண்டாவது வகை, அல்சர் ஊண்ட்(Ulcer wound). இதில் கை, கால்களில் உணர்ச்சியற்ற தன்மை அதிகமாக இருக்கும். இதனால், கை, கால்களில் புண்கள் உண்டாகும். எலும்புகள் சக்தியை இழந்து மணல் போல சிதறும், வலி தெரியாததால், விரல்கள் மடங்கி புண்களில் புழு வைக்கும். அடுத்தவர் அதன் நாற்றத்தை தாங்காமல் துரத்தும் வரை,அவர்களுக்கு புண்ணின் தீவிரம் தெரிவதில்லை. இந்த புண்களுக்குப் பிரதான மருந்து யூசால் (EUSOL-Edinburgh University Solution of lime)என்று சொல்லக்கூடிய பிளிச்சிங் தண்ணீர். இந்த வகை நோயாளிகள் சோறு இல்லாமல் கூட இருப்பார்கள். ஆனால் தினமும் கட்டு- டிரஸிங்- இல்லாமல் இருக்க முடியாது. பிற நோய்களில், புண்களின் கட்டைப் பிரிக்கும்போது புண்ணிலிருந்து சீழ் , இரத்தம் வரும். ஆனால் இக்கட்டைப் பிரிக்கும்போது நூற்றுக்கணக்கில் சின்னதும் பெரியதுமாகக் புழுக்கள் கொட்டும். இதை முதலில் பார்க்கும் பயிற்சி மருத்துவர்களும் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்கள்.   ஆனால், கட்டு கட்டுபவர்கள் மிரண்டால் தொழுநோய் புண் தீராது. இல்லை என்றால் புழுக்களே விரல்களை அரித்து தின்றுவிடும்.

புழுவுடன் வரும் நோயாளிகளை கட்டுகட்டுபவர்கள் விளையாட்டாக, “என்னா உன் புள்ளக்குட்டியோட வந்து சேர்ந்துட்டியா?” என்பார்கள். “கிண்டல் பண்ணாதம்மா, தீபாவளி, கிறிஸ்மஸ், பொங்கல்-னு பண்டிகை நாளா வந்திடுச்சி பிசினசுக்குத் {பிச்சை} தொடர்ந்துப் போயிட்டேன், அதான் கவனிக்கமுடியல புழு வெச்சிடுச்சி” என்று சிரிப்பார்கள். தொழுநோயாளிகளை சுத்தமான சூழ்நிலையில் வைத்து அவர்களை ஆரோக்கிய மனிதர்களாக்குவதில் முக்கியமானவர்கள் துப்புரவுத்தொழிலாளர்கள். மற்றவர்கள் பார்ப்பதர்க்கே மிரளும் புழுக்கள் கொட்டும் அழுகிய தசை,ரத்தம்,சீழ் இவற்றோடு அவர்களது மலத்தையும் வாருகிறார்கள் இந்த தொழிலாளிகள்.

நோயாளிகள் விடும் மூச்சுக்காற்றில் கிருமிகள் வெளிப்படும். அருகில் இருப்பவர் நோய் எதிர்ப்பு சக்தியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்தால் தொற்ற வாய்ப்பில்லை. இரண்டும் குறைந்தால் வாய்ப்புக்கள் அதிகம்.
நோயாளிகள் விடும் மூச்சுக்காற்றில் கிருமிகள் வெளிப்படும். அருகில் இருப்பவர் நோய் எதிர்ப்பு சக்தியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்தால் தொற்ற வாய்ப்பில்லை. இரண்டும் குறைந்தால் வாய்ப்புக்கள் அதிகம்.

அடுத்து,கட்டுக்கட்டுபவர்களை தொழுநோயாளிகள் தன் வினையை தீர்க்கவந்த தெய்வமாகவே பார்ப்பார்கள். “எங்கள சுத்தியிருக்கறவங்க, சொந்தகாரங்களே எங்களை தொட பயப்படுறாங்க, ஆனா, யார் பெத்த பிள்ளைகளோ எங்க பாவத்தை இப்படி சுத்தப்படுத்தறீங்க” னு உணர்ச்சி வசப்பட்டு …அழுவார்கள். “கை, கால்களில் எந்த வெரல் அழுகியிருக்கோ பார்த்து எடுங்க”, என்றும் கெஞ்சுவார்கள். கட்டுகட்டும் முறைகள் பல உண்டு, ஆனாலும் இவர்கள் கொலுசுக்கட்டு கட்டுமா என்று விரும்பி கேட்பார்கள். புண்ணிருக்கும் விரல்களுக்கு மட்டும் கட்டக்கூடாது, கெண்டைக்காலையும் சேர்த்து கட்டு கட்டவேண்டும் அதுதான் கொலுசு.

அதைக் கட்டி முடிக்கும்போது முடிச்சிப்போடாதே சுருக்குப்போடு என்று கூறுவார்கள். எனென்றால், மறுநாள் கட்டை தானே பிரித்து தயராக இருக்கவேண்டும் அல்லவா? புண்ணைச் சுத்தம் செய்யும்போதும் நாத்தம் அதிகமானால், அவர்களே கூசிப் போவார்கள், “உப்பு வைச்சிக் கட்டுமா நாத்தம் தாங்கமுடியல” என்பார்கள். உப்பு என்பது மெக்னிசியம் சல்பேட். புண்ணில் மேல் இருக்கும் அழுகிய தசையை எடுக்கும். அடுத்து அவர்கள் “புண்ணு ஆறி மூட மாட்டேன்னுது, மேலே வளருது, நீலக் கல்லு தேய்ச்சிக் கட்டுமா” என்பார்கள், நீலக்கல்லு என்பது காப்பர் சல்பேட். “எனக்கு சிவப்பு மருந்து சேராது, யூசால் மட்டுமே வெச்சி கட்டுமா”, சிகப்பு மருந்து என்பது ப்பிடாடின் – இப்படியாக தன் புண்ணுக்கு என்ன, என்ன சிகிச்சை என்பதும் அவர்களுக்குத் அத்துப்படி. இவர்கள் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளலாம். இவர்களின் பிள்ளைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்கள். நோயாளிகளின் பிள்ளைகள் என்று சொல்லவே முடியாது.

இதை, மருத்துவமனை மருத்துவர்களே, புதிதாக மருத்துவம் பயிலும் மாணவர்களிடம், “கேஸ் ஷீட் பார்க்கறதைவிட நோயாளிகள் சொல்றதைக் கேளுங்க சரியாக இருக்கும்” என்பார்கள்.

இக்கட்டைப்பிரிக்கும்போது நூற்றுக்கணக்கில் சின்னதும் பெரியதுமாகக் புழுக்கள் கொட்டும். இதை முதலில் பார்க்கும் பயிற்சி மருத்துவர்களும் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்கள்.  ஆனால், கட்டுகட்டுபவர்கள் மிரண்டால் தொழுநோய் புண் தீராது. இல்லை என்றால் புழுக்களே விரல்களை அரித்து தின்றுவிடும்.
இக்கட்டைப்பிரிக்கும்போது நூற்றுக்கணக்கில் சின்னதும் பெரியதுமாகக் புழுக்கள் கொட்டும். இதை முதலில் பார்க்கும் பயிற்சி மருத்துவர்களும் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்கள்.

தனக்கு சிகிச்சைஅளிக்கும் மருத்துவமனை ஊழியர்களை உறவுமுறையில்தான் அழைப்பார்கள். மருத்துவர்களை அப்பா என்றும், செவிலியர்களை அம்மா என்றும் கட்டு கட்டுபவர்கள், துப்புரவு பணியாளர்களையும் அக்கா, அண்ணா என்றும் அன்போடு அழைப்பார்கள்.

கைகள், கால்கள் விரல்களின்றி மொட்டையாக இருந்தாலும், ஒயர்கூடைப் போடுவது, ஓவியம் வரைவது, கவிதை எழுவது, நாடகம் போடுவது என பார்ப்பவர்களை பிரமிக்க வைப்பார்கள்.

நோய்க்கு வைத்தியம் பார்த்துக் கொண்டே வயதானவர்கள் பிசினசுக்கு ( பிச்சைக்கு) கிளம்பி விடுகிறார்கள்.சிலர் சக நோயாளிகளுக்கு இட்லி, சுண்டல், டீ விற்று காலம் தள்ளுகிறார்கள். இப்பவும் டீ 5 ரூபாதான். கோபால் அண்ணன் டீக்கு துப்புரவு பணியாளர்களும், கட்டுகட்டுபவர்களும் வாடிக்கையாளர்கள்.

போன ஜென்மத்துல என்ன பாவம் செய்தோமோ குஷ்டத்துல கஷ்டப்படுறோமோ? என்று கூறும் இவர்களை சுற்றி இருப்பவர்கள் புறக்கணித்தாலும், வாழ்க்கையில் விரக்தி அடைவது இல்லை. கை, கால் விரல்கள் இல்லாமல் போனாலும், மடங்கிப்போனாலும், தன் வேலைகளை தானே செய்துக் கொள்கிறார்கள். எடுத்த பிச்சையையும், சக நோயாளிகளுடன் பங்கீட்டு சாப்பிடுவார்கள். முன்பெல்லாம், புறக்கணிக்கப்பட்ட பெண் நோயாளிகள் பாலியல் தொழிலில் தங்களை காத்து கொண்டனர். ஒரு சிலர் போதைப் பொருட்களை விற்பதற்கும், ரவுடியின் கையாட்களாகவும் இவர்களை பயன்படுத்துகின்றனர். சாராயம் காய்ச்சி விற்றவர்களும் உண்டு. இவர்களிடமும் போலீசு மாமூலுக்கு மிரட்டும். இப்படி வாழ்க்கை முடித்து இறப்பவர்களை அடக்கம் செய்ய இவர்களுக்குள் தனி குழு உண்டு.

மலர், செங்கமலம், ராஜி, தன்னை சுற்றியிருக்கும் நாய், பூனை மற்றும் குரங்குகளுக்கு இவர்கள் வைக்கும் பெயர்கள். தங்களை மற்றவர்கள் எப்படி நடத்தவேண்டும் என்பதை விலங்குகள் மீது இவர்கள் பாசம் வைத்திருப்பதை பார்த்தாலே தெரியும். ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சைப்பெறும்போது கையில் இருப்பதை திண்ணக் கொடுத்து எதாவது ஒரு விலங்கை நண்பனாக்கிக் கொள்வார்கள்.

NGO க்கள் தன் வெளிநாட்டு வருமானங்களை கூட்டுவதற்கு இவர்களை போட்டோ எடுத்து புராஜக்ட் செய்துவது தனிக் கதை. மறுபுறம், தொழுநோயாளிகளை இந்து, முஸ்லீம் மதத்தினர் அதிகம் வெறுத்து ஒதுக்குவதால், ஆதரவு காட்டுவதாக அவர்களை கிறித்துவ மதத்தினர் சுற்றி வருவதுண்டு. பழம், பிஸ்கட் என்று தீனிகளை வைத்தே நோயாளிகளை பிடிப்பதுண்டு. அவர்களுடன் ஒன்றியிருப்பதுப் போல் போட்டோ எடுத்து அவற்றை டாலராக மாற்றுக்கிறார்கள். வட்டியில் வயிறு பெருக்கும் மார்வாடிகள், தங்களின் பாவங்களை கழுவ தொழுநோயாளிகள் அவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். வருடத்திற்கு இரு முறை வண்டியில், ஒருவேளை உணவு, பழையதுணிகள் போர்வைகள் கொடுத்து புண்ணியம் தேடுகிறார்கள். இவர்களில் எவர் ஒருவரும் இவர்களின் நிரந்தர ஆரோக்கியம் பற்றி சிந்திப்பதில்லை.

50-60 களில் கண்டுப்பிடிக்கப்பட்ட மாத்திரைகளை தவிர புதியதாக எதுவுமே நோயாளிகளுக்கு இல்லை. ஆராய்ச்சி என்ற பெயரில் சுவர்களுக்கு பெயிண்டு அடிப்பது, தரைகளுக்கு டைல்ஸ்போடுவது பூச்செடிகளை பராமரிப்பதை தவிர வேறோன்றும் நடப்பது இல்லை.
ஆராய்ச்சி என்ற பெயரில் சுவர்களுக்கு பெயிண்டு அடிப்பது, தரைகளுக்கு டைல்ஸ்போடுவது பூச்செடிகளை பராமரிப்பதை தவிர வேறோன்றும் நடப்பது இல்லை.

படிக்காதவர்கள், விவரம் தெரியாத குடும்பத்தினர் மட்டுமல்ல, பார்த்தவுடன், பழகியவுடன் தொற்றிக்கொள்ளும் நோய் அல்ல என்று தெரிந்தும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இவர்களை நடத்தும் அவலம் சொல்லி மாளாது. நோயாளியை பார்த்து,”அட்டென்டர் இல்லாம பார்க்கமுடியாது”. “எட்டவே உட்காரு”. “உங்களுக்குனு இருக்கற ஆஸ்பத்திரியிலேயே போய் கட்டுபோட்டுக்கோ” என்று விரட்டுவிடுவார்கள்.

எதுக்கு வந்திருக்கிற? என்றுகூட கேட்காமல், அவர்களின் நோய்க்கும் சம்மந்தமில்லாத மாத்திரைகளை தலையில் கட்டி துரத்துவார்கள்.

அவர்களுக்கென்று இருப்பதாக சொல்லும் தொழுநோயின் ஆராய்ச்சி மருத்துவமனையின் நிலையோ அதைவிட அவலம். 700 ஏக்கர் நிலப்பரப்புடன் உள்ள பெரும் இயற்கை சூழல். சம்பளம் உட்பட அதன் மாத செலவு கோடிக்கணக்கில். மாதம் இலட்சத்திற்கும்மேல் சம்பளம் வாங்கும் மருத்துவர்கள். குளிரூட்டப்பட்ட அலுவலக அறைகள், கணினி மயமாக்கப்பட்ட விவரங்கள், காம்பவுண்டுக்குள்ளும் வெளியேயும் சுற்றி வர ஏராளமான வாகனங்கள், மினுக்கும் கட்டிடங்கள், என்று எங்கும் நோங்கினும் கண்ணுக்கு இனிமை. ஆனால், அதற்கு ஆதாரமான தொழுநோயாளிகளின் நிலையோ தீராதக் கொடுமை. 50-60 களில் கண்டுப்பிடிக்கப்பட்ட மாத்திரைகளை தவிர புதியதாக எதுவுமே நோயாளிகளுக்கு இல்லை. ஆராய்ச்சி என்ற பெயரில் சுவர்களுக்கு பெயிண்டு அடிப்பது, தரைகளுக்கு டைல்ஸ்போடுவது பூச்செடிகளை பராமரிப்பதை தவிர வேறோன்றும் நடப்பது இல்லை. தொழுநோயாளிகளின் சாதாரண சளிக்கும், வெளியில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் அவலமே நீடிக்கிறது.

பைபிள் காலத்தில் தொழுநோயாளிகளை ஊரை விட்டே விரட்டி தனி கொட்டடியில் வைத்திருந்த காலம் உண்டு. அவர்கள் மீது ஏசு நாதர் இரக்கம் காண்பித்த கதைகளையும் கேட்டிருப்போம். அன்றிலிருந்து கிட்டத்தட்ட 20 நூறாண்டுகள் கழிந்து விட்டன. எனினும் இந்தியாவில் தொழு நோயாளிகளின் சமூக நிலை பெரிதாக மாறிவிடவில்லை. குடும்பம், சுற்றம் துரத்துகிறது. ஏழ்மை காரணமாக ஆரம்பத்திலேயே குணப்படுத்த வேண்டிய நோய் இறுதியில் ஆட்கொல்லி நோயாக மாறுகிறது. குடும்ப ஆதரவும் இல்லாமல், வேறு தொழிலும் செய்ய முடியாமலும் அவர்கள் பிச்சை எடுத்தே வாழ நேர்கிறது. சிலர் தமது நோயின் தீவிரத்தை தணித்துக் கொண்டு சாதாரண வேலைகளை செய்து வந்தாலும் தனது நோயை மறைக்க பெரும்பாடுபடவேண்டியிருக்கிறது. பெண்கள் என்றால் இந்த சமூக அவலம் இன்னும் சோகத்தை கூட்டி சுமக்க வைக்கிறது.

இந்த மக்களுக்கு வேலை செய்யும் மக்களின் அர்ப்பணிப்பு ஒன்றுதான் நோயாளிகளுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச நம்பிக்கை. ஒரு சிலர் இம்மக்களை அவர்களின் வீடுகளுக்கும் அழைத்துப் போவதுண்டு. கட்டுப் போடுபவர்கள் சிலருக்கும் இந்த நோய் தாக்குவதுண்டு. குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் இவர்கள் இல்லை என்றால் தொழுநோயாளிகளுக்கு மனித குலத்தில் பிறந்ததனால் எந்த பயனும் இருக்காது.

ஏதோ அரசு நிறுவனம் ஒன்று இருப்பதால் இந்த மக்களுக்கு ஒரு குறைந்தபட்ச சிகிச்சையாவது இருக்கிறது.  சுகாதாரத் துறையில் தனியார் மயம் பூர்த்தியானால் இம்மக்கள் அனைவரும் வலிந்து இறப்பதைத் தாண்டி வேறு வாழ்க்கையை நினைக்கவே முடியாது. செங்கல்பட்டுக்கு அருகில் இருக்கும் இம்மருத்துவமனையை ஒரு முறை நேரில் சென்று பாருங்கள். தொழுநோயின் நாற்றம் இச்சமூக அமைப்பின் நாற்றத்தை புரிய வைக்கும்.

– வினவு செய்தியாளர்கள்.

 

inner_design2

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. தொழு நோய் வரும் முன்பே கண்டிபிடித்தால் உடல் அழுகாமல் சிகிச்சை எடுத்து கொள்ளலாம் நான் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்த போது சுகாதார அதிகாரிகள் எங்களது பள்ளிகளுக்கே வந்து தொழுநோய் மாணவர்களுக்கு ஆரம்ப நிலையில் என்பதை பரிசோதிப்பார்கள் எல்லாரும் சட்டைகளை கழட்டி விட்டு வரிசையாக நிற்ப்போம் எனக்கும் தொழு நோய்கான ஆரம்ப அறிகுறி இருப்ப்தாக சொன்னார்கள் முதுகில் பத்து பைசா அளவுக்கு உணர்ச்சியற்ற தேமல் இருப்பதாக குண்டூசியால் குத்தி சோதித்து பார்த்து விட்டு மாத்திரை தந்தார்கள் ஆனால் அந்த மாத்திரைகள் விழுங்கிய கொஞ்ச நேரம் தலை சுற்றல் மட்டும் குமட்டல் இருக்கும் சிருநீர் சிகப்பு நிறத்தில் போகும் எப்பிடியோ அந்த மாத்டிரைகள உண்டதால் தேமல் மறைந்து போனது ஒவ்வொறு ஏரியாவுக்கும் எல்த் இண்ஸ்பெக்டருனு ஒரு ஆளு இருப்பாரே அவரு எல்லாம் எங்க போனாறுனே தெரியல நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது எங்களுக்கு மிட்டாய் வாங்கி குடுத்து ஏமாத்தி ஆள்காட்டி விரலில் ஊசியால் குத்து ரத்தத கண்ணாடி சிலைடுல தடவிட்டு போவாறு அவரு ரிடைடு ஆயிருப்பறு போல வில்லேஜ் கெல்த் நர்சு பிரசவம் பாக்குறது அம்மா பணம் பத்தாயிரம் வாங்க பரிந்துரை செய்வதுனு பிஸியாவே இருப்பாக இவங்க்ளுக்கு எங்க தொழுநோயின் அறிகுறிகளை பற்றி படிக்காத மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தநேரம் அதான் ஊத்தி மூடிட்டானுகளே தொழு நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டதுனு ,அப்புறம் எதுக்கு தொழு நோய் ஆராச்சி மையம் “சிவப்புநிற படை உணர்ச்சியற்ற தேமல் தொழு நோயின் அறி குறியாகும்” ஆனாலும் அரசு சொல்லுற கருத்தும் உண்மையாய் இருக்கலாம் எனென்றால் தொழு நோய் பாதிக்கப்பட்ட இளைஞர்கள யாரையும் நீங்க பேட்டி காணவில்லை அட்மிட் ஆகி சிகிச்சை பெறும் வயாதானவர்கள் கூட தொழுநோயின் அறிகுறியை பற்றி அறிவு இல்லாதவர்களாகவே இருக்கலாம், தொழுநோய் யாருக்கும் வரக்கூடாது …

 2. மனம் கனத்தது… கண்ணீர் வடித்தது…
  வாழ்க்கை இவ்வளவுதானா…
  கொடியது கொடியது நோய் கொடியது…
  வினவு நீர் நீடூழி வாழ்க…
  ஏழை, மற்றும் சாதாரண மனிதர்களின் வழியை நீ உணரவைக்கிறாய்.
  அவர்களுக்கு சேவகம் செய்பவர்களுக்கு ..ஏன் பாவங்களும் மன்னிக்கப்படலாம்…சொர்க்கம் நிச்சயமாகட்டுமாக…..
  உண் உள்ளம் மிகவும் மென்மையானது….
  வாழ்க உமது தொண்டு…
  பிராத்தனைகளுடன்…!!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க