தோழர் கதிரவன் அவர்களுக்கு சிவப்பஞ்சலி! | தோழர் சிகப்பி

எங்கள் வர்க்க உணர்வும் போராட்ட உணர்வும் வற்றவில்லை. அவற்றை வற்றாமல் வளர்ப்பதற்கு தோழர் கதிரவனின் திட்டமிடலும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பும் தான் காரணம். அந்த பத்து நாள் அனுபவம் மேலும் பல சிறைகளுக்கு என்னை போக ஊக்கமளித்தது. சிறையில் 'நாம் என்ன செய்யவேண்டும்' என எனக்கு கற்றுத்தந்தது தோழர் கதிரவன் தான்.

ப்போது எல்லாம் நான் சின்னப் பையன். +2 பெயில் ஆன கையோடு, ஏதோ ஆர்வக் கோளாறில், சக நண்பர்களோடு இணைந்து கையெழுத்து பத்திரிகை நடத்தி வந்தோம். பின்னர் அச்சிலும் கொண்டு வந்தோம். அது 1992. எங்களுக்கு 16 வயது. பாபர் மசூதி பிரச்சனை இந்திய அரசியல் உலகில் மையம் கொண்டிருந்த காலம். (இடிக்கப்பட்டது, டிசம்பர் 6, 1992). என் நண்பர்களுக்கு பயம். பாபர் மசூதி பற்றி எழுதவே மாட்டார்கள். எனக்கு எழுத வராது. எழுதினாலும் “ஏழரை மாதிரி எழுதி இருக்கான்” என புறக்கணிக்கப்படும்.

புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், முன்னோடி ஆகிய பத்திரிகைகள் அறிமுகம் ஆகின. பு.ஜ மாதா மாதம் கிடைக்கும், பு.க இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கிடைக்கும். முன்னோடி வெளியானால் கிடைக்கும்.

கூடவே ம.க.இ.க தோழர்களின் தொடர்பும் கிடைத்தது. அவர்கள் சரியாகப் பேசினார்கள். பு.ஜவும் பு.கவும் சரியாக எழுதின. நட்பு வளர்ந்தது.

அப்படியான ஒரு சந்திப்பில் தான் தோழர் கதிரவன் அறிமுகமானார். அவ்வப்போது நான் பணிபுரியும் கம்பெனிக்கு வருவார். கம்பெனி பயங்கர ஸ்ரிக்ட்டு. வேலை நேரத்தில் யாரையும் பார்க்க அனுமதிக்க மாட்டார்கள். ஆனாலும், தோழர் வந்தால் அவருடன் வெளியே செல்வேன். தோழரே எனக்கு தேநீர் வாங்கித் தருவார். கம்பெனி நிலைமை தெரியாமல் பேசிக் கொண்டே இருப்பார். தோழரிடம் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் விழிப்பேன். ஆனாலும் தோழரின் பேசு பொருளும் அவர் வைக்கும் வாதங்களும் என்னைப் பேச விடாது ஆக்கிவிடும். அவர் பேசியதை மண்டையில் ஏற்றிக் கொண்டு என் நண்பர்களிடம் போய் பேசுவேன். பெரிய பலன் ஏதும் உருவாகவில்லை.

என் நண்பர்களை அறிமுகப்படுத்தச் சொல்லி கேட்பார் தோழர். “அவணுவோ சரிவர மாட்டாணுவோ தோழர்” என நானே வடிகட்டிவிடுவேன்.

நம்பிக்கை இருந்த போதும், நான் அவரது அமைப்பில் இணையவில்லை. எங்கள் வாண்டுப் பட்டாளத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றாலும் பயணித்தேன்.

ரசியப் புரட்சி நாள் விழாவிற்கு அழைத்தார் தோழர். விடுமுறை எடுத்துக் கொண்டு சென்றேன். தோழர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே என்னை அறிமுகம் செய்து வைத்தார் தோழர் கதிரவன். முதன் முறையாக காங்கிரஸ் சுவைத்தேன். உண்மையில் என் முதல் அசைவ உணவே அதுதான். எங்கள் வீட்டில் அனைவரும் பயங்கர ஆர்த்த’டாக்ஸ்’. ஆனால், எல்லா ஆண்களும் சாராயம் சிகரெட் பழக்கம் இருந்தது. தோழர் கதிரவன் தான் என்னை மாட்டிறைச்சி மீதான கருத்துக்களை தகர்த்தவர். அன்று அவர் என்னை உணவு உண்ண வலியுறுத்தவே இல்லை. நானாகவே விரும்பி உண்டேன். தோழர் அமைதியாக எதிரில் அமர்ந்து என்னை பார்த்துக் கொண்டே உண்டார்.

டிசம்பர் 6, பாபர் மசூதி இடிக்கப்பட்டது. என் பயங்கொள்ளி பயல்களிடம் சலனமே இல்லை. வெறுப்பாக இருந்தது.

காட்-டங்கல் ஒப்பந்தம் பேசு பொருள் ஆனது.

நாட்கள் மாதங்களாகவும் வருடங்களாகவும் ஓடின.

1994 ஏப்ரல் 15. காட் ஒப்பந்தம் கையெழுத்தாகும் நாள். ரயில் மறியல் செய்யத் திட்டமிட்டது அமைப்பு. தோழர் கதிரவன் என்னை வரச்சொன்னார். என் பயங்கொள்ளிகள் சகவாசம் என்னிடமும் இருந்தது. நான் தோழரிடம் “வீட்டில் பிரச்சனை ஆயிறும் தோழர்” என்றேன். “சரி பரவாயில்லை தோழர். கேமரா இருக்கா? போராட்டத்தைப் படம் பிடிக்க முடியுமா?” என்றார். படம் எடுத்தேன், கொடுத்தேன். பு.ஜவில் என் முதல் பங்கு இடம் பெற்றது.

“இன்னும் எவ்வளவு நாள் தாங்க இப்படியே இருக்கப் போறீங்க? இப்படியே இருந்தீங்கன்னா, நீங்க புரட்சி எல்லாம் செய்ய மாட்டீங்க. புரட்சி நடக்கும் போது வேடிக்கை தான் பாப்பீங்க!” என ஒரு நாள் கூறினார் தோழர் கதிரவன்.

சிறுகச் சிறுக அமைப்பு வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தேன். ஒவ்வொரு முறையும் என் அனுபவங்களை ஆர்வமுடன் கேட்பார் தோழர் கதிரவன். என்னை அறியாமலேயே பு.ஜ விற்பனையாளர் ஆனேன்.

பகுதி அமைப்புச் செய்திகளையும், பிற சிறு சிறு விவரங்களையும் தொகுத்து எழுதவும் பு.ஜவுக்கு அனுப்பவும் ஊக்குவிப்பார் தோழர் கதிரவன்.

1995 மே நாள்.

சீர்காழி.

விளைநிலங்களை பாலையாக்கும் இறால் பண்ணை அழிப்புப் போராட்டம்!

நாடு மீண்டும் காலனியாவதை தடுப்போம்! என்ற போராட்டம். தோழர் கதிரவன் தலைமையில்..

மக்கள் ரயிலில் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பயணப் பட்டோம். கூடவே சில கியூ பிரிவு மோப்ப நாய்களும் வந்தது அப்போது எனக்குத் தெரியாது. வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையத்தில் இறங்கும் போதே எங்களை சுற்றி வளைத்தது காவல்துறை. ரயிலின் முன்பெட்டிகளில் லேடீஸ் கம்பார்ட்மெண்டில் இருந்த பெண் தோழர்கள், காவர்களைக் கண்டதும் ரயில் பாதையோடே நடந்து முள்ளுக்காட்டிற்குள் பதுங்கி விட்டனர். அவர்களைப் பின்தொடர்ந்து செல்ல பெண் போலீசுக்கு தெம்பு இல்லை.

தனி ஒரு நபராக காவல் கண்காணிப்பாளரிடம் வாதிட்டார் தோழர் கதிரவன். “பேசாம எங்கள காலைல சீர்காழி வரை போக விடுங்க. இல்லைன்னா இந்த தண்டவாளத்துல ரயிலே போக முடியாத படி ஆயிறும். பாத்துக்குங்க. நீங்க தான் பொறுப்பு. எங்களுக்கு எங்கன்னாலும் போராட்டம் தான்.” என போலீசை மிரட்டினார் தோழர் கதிரவன். அதுவரை எங்களை மிரட்டியும் அதிகாரம் செய்தும் பேசி வந்த எஸ்.பி இப்போது பணிய ஆரம்பித்தார்.

தோழர்கள் நூற்றுக்கணக்கில் இருந்தோம். யாரும் ஒரு சொல்லும் பேசவில்லை. படைத்தலைவரின் கட்டளைக்கு காத்திருப்பவர்களாக, போராட்டத் தலைவர் தோழர் கதிரவனின் கட்டளைக்கு காத்திருந்தோம். தண்டவாளத்தில் பாய தயாராக ஒவ்வொருவரும் இருந்தோம்.

இறுதியில் நாங்கள் சீர்காழி செல்ல போலீசு அனுமதித்தது.

சென்றோம். போராடினோம். கைது செய்யப் பட்டோம். நீதி மன்றத்தில் போராட்டம். ரிமாண்ட் செய்ய இழுத்தடித்த நீதிபதிக்கு எதிராக கோர்ட் அறை வாசலில் குழந்தைகளை படுக்கப் போட்டு நீதிபதியை கெரோ செய்தோம். போராட்டத் தலைவரின் கட்டளை அது. இறுதியில் ரிமாண்ட் செய்யப் பட்டோம்.

திருச்சி மத்தியச் சிறை.

மே 4 அன்று அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து பாசிச ஜெயாவுக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் அறிவித்திருந்தனர். எனவே, மாநிலம் முழுவதிலும் அனைத்து எதிர்கட்சியினரையும் ‘முன் எச்சரிக்கை கைது’ செய்து சிறையில் அடைத்தது பாசிச ஜெயா அரசு.

ஒவ்வொருவராக அங்க, மச்ச அடையாளங்கள் பார்த்து உள்ளே தள்ளியது சிறைத்துறை. நாங்களே ஆயிரத்திற்கும் அதிகமான தோழர்கள். பெண் தோழர்கள் தனியாக பிரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டு விட்டனர். (வேலூர் சிறை என்பது நினைவு) 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தாய்மாருடன் சிறையில் அடைக்கப்பட்டனர். 5-18 குழந்தைகளை வெளியே அமைப்பு பராமரித்தது.

எங்கள் ஆயிரம் பேரை விடவும் அதிகமான எதிர்கட்சிக்காரர்களை கொண்டு வந்திருந்தது போலீசு.

சிறைக்கு வெளியே தொடங்கியது கொண்டாட்டம். பாடல்கள், நாடகங்கள், பார்ப்பன (இந்து) மதவெறிக்கு எதிரான உரைகள், மறு காலனியாக்கம் பற்றிய உரைகள்… சுமார் ஐயாயிரம் அரசியல் கைதிகள். சும்மா சக்கை போடு போட்டது நம் பொதுக்கூட்டம். கூட்டத்தலைவர் தோழர் கதிரவன்.

திருச்சி சிறையில் ‘கோரண்டி’ என்று அழைக்கப்படும் இடத்தில் அனைவரையும் அடைத்தனர். திறந்த வெளி தான். யாருக்கும் இடம் ஒதுக்கவில்லை சிறை நிர்வாகம்.

நமது அமைப்பு இரண்டு பெரிய வேப்ப மரத்தை கைப்பற்றி நம் போராட்டப் பதாகையை கட்டி விட்டனர். அப்போது எல்லாம் பிளக்ஸ் என்ற தொழில்நுட்பம் கிடையாது. கையால் எழுதிய பதாகை தான். அதன் கீழே நம் தோழர்கள் அனைவரும் அடைந்தோம்.

பிற அரசியல் கட்சியினர் யாரும் யாரோடும் ஒன்றியவே இல்லை. சுய கட்சிக்காரர்களோடு கூட ஒன்ற வில்லை. சிலர் மரத்தடியில் போர்வையை விரித்து சீட்டு விளையாடினர். சிலரின் தோள் துண்டு அவர்கள் நடக்கும் போது, அவர்களின் பின்னால் திடலில் புரளும். வசதியுள்ள எதிர் கட்சிக்காரர்களுக்கு சாப்பாடு கேரியரில் வரும். அவர்கள் தின்றது போக மீதமுள்ள எலும்புத் துண்டுகளை சிறைச்சாலை காக்கைகள் தூக்கிச் செல்லும். அடிமட்ட தொண்டர்கள் சிறை வாயில் அருகே சிறை வழங்கும் உணவுக்காக அடித்துக் கொள்வார்கள்.

நமக்கு சோறு பிரச்சனையே இல்லை. சிறை நிர்வாகத்திடம் முதல் நாளே பேசிவிட்டார் சிறைக்கமிட்டி தலைவர் தோழர் கதிரவன். நமக்கான உணவை சிறை வாயிலிலேயே நம் தோழர்கள் பெற்றுக் கொண்டு பாதுகாப்பாக நம் மரத்தடிக்கு கொண்டு வந்து விடுவார்கள். சுற்றிலும் தோழர்கள் கைகளை கோர்த்துக் கொண்டு செயின் கட்டி நிற்பார்கள். நாங்கள் உண்போம். பின் நாங்கள் செயின் கட்டுவோம், அவர்கள் உண்பார்கள். நம் தோழர்கள் தவிர வெளியாட்கள் யாரையும் செயினை தாண்டி உள்ளே போக அனுமதிக்க மாட்டோம்.

சிறையில் கிடைத்த கரிகட்டைகள், உடைந்த செங்கல்கள், ஓடுகளைக் கொண்டு சிறைச் சுவரெங்கும் மறு காலனிய எதிர்ப்பு, பார்ப்பன மதவெறி எதிர்ப்பு முழக்கங்களை எழுதினார்கள் தோழர்கள். இரண்டாள் உயரத்திற்கு ‘சங்கிலிகளை உடைத்தெறியும் அடிமை வீரன் ஸ்பார்டகஸ்’ ஓவியத்தை இரண்டு தோழர்களின் தோள்கள் மீது நின்றபடி வரைந்தார் ஒரு தோழர். தூரிகை வேப்பங்குச்சி தான் வேறு என்ன?

பகல் பொழுதெல்லாம் சிறு குழுக்களாக எங்களைப் அமைத்து எதிர்கட்சிக்காரர்களிடம் அரசியல் பேச அனுப்பினார் தோழர் கதிரவன்.

உண்மையான சமூக அக்கரை உள்ளவர்களை கண்டறிவது தான் அதன் நோக்கம்.

“என் மச்சானை ஒன்றிய செயலாளர் ஆக்கிட்டாணுங்க. அதான் கட்சி மாறிட்டேன்”

“அந்த ஆளுகளுக்கு சீட்டு குடுத்துறுச்சு சின்னம்மா. வேற வழி? நான் இந்த கட்சிக்கு மாறவேண்டியதாப் போச்சு! தலைவர் காலம் போல இல்லப்பா! சரக்கு ஓட்டியே ரெண்டு வீடு கட்டினேன்!”

“ஒரு காண்டிராக்ட் இல்ல, ஒரு கமஷன் இல்ல.. ஒரு மனுஷன் எப்படி பொழைக்க முடியும்?”

என்பது போலத் தான் அவர்களின் அரசியல் இருந்தது.

ஆக பிழைப்பு தான் அவர்களின் அரசியல்.

தோழர் கதிரவன் ஏன் எங்களை மற்றவர்களிடம் அரசியல் பேசச் சொல்லி அனுப்பினார் என்பது மெதுவாகத் தான் புரிந்தது.

நமது அரசியல் அக்கறை பற்றிய புரிதலும் கிடைக்கத் துவங்கியது.

மாலையில் பொதுக்கூட்டம். உரைகள், பாடல்கள், பட்டி மன்றங்கள் நடத்த வழிகாட்டினார் தோழர் கதிரவன். துண்டு வசூலும் கூட செய்தோம்.

மே 4, சிறையில் எங்களைத் தவிர வேறு யாருக்கும் சிறை நிர்வாகம் உணவு வழங்கவில்லை.

எதிர் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அடிமட்ட தொண்டர்கள் கொதித்துப் போய் இருந்தார்கள்.

இறுதியில் சிறை காவலர்களுக்கும் எதிர் கட்சி கைதிகளுக்கும் இடையில் கைகலப்பாகி விட்டது.

கலகம் துவங்கியது தான் தாமதம், நாங்கள் தோழர்கள் கையில் சிக்கிய கல், கம்பு, கட்டைகளை எடுத்துக் கொண்டு சிறைக் காவலர்களை தாக்க ஓடினோம்.

தோழர் கதிரவனின் கட்டளையோடு ஓடிவந்தனர் சிறை கமிட்டி தோழர்கள். கட்டளைப்படி அனைவரும் அணிவகுத்து நின்றோம். ஒருவர் கையை ஒருவர் கோர்த்தபடி செயின் கட்டி நின்றோம்.

சிறைக்காவலர்களோ போலீசோ துணை ராணுவமே என்றாலும் எதிர்கொள்ள தயாராகவும், தலைமையின் கட்டளைக்கு காத்திருந்த படியும், கால்களுக்கு கீழே கல், கம்பு, தடிகளை பாதுகாத்துக் கொண்டும் உறுதியாக நம் தோழர்கள் அனைவரும் நின்றோம்.

“எங்கள் மீது நம்பிக்கை இருந்தால் எங்கள் பின்னே வாருங்கள்! உங்களுக்கு நாங்கள் பாதுகாப்பு!” என உறக்க அறிவித்தார் தோழர் கதிரவன். பலர் வந்தனர்.

அப்படி இப்படி என ஒருவழியாக அரசின் கட்டுக்குள் வந்தது கலகம். அனைத்து கட்சி பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தியது அரசு, போலீசு, சிறை நிர்வாகம்.

முடிவுகளை ஒலிப்பெருக்கி மூலம் அனைத்து கட்சிக்காரர்களை பேச வைத்தனர்.

“நான் ராமசாமி, தி.மு.க, மண்னார்குடி செயலாளர், நாளைக்கு நம்ம எல்லாரையும் விடுதலை செய்றோம் சொல்லிட்டாக”

“முருகேசன், ஜனதா தளம், ஸ்ரீரங்கம் தலைவர், எல்லாரும் நாளைக்கு வீட்டுக்கு போயிறலாம். ஒரு பிரச்சனையும் இல்ல”

என்ற வகையில் ஏழு எட்டு கட்சிக்காரர்கள் ஒலிப்பெருக்கியில் பேசினர்.

“சர்வகட்சி போராட்டம் ஓங்குக” என வித்தியாசமாக ஆரம்பித்தார் தோழர் கதிரவன். “நம்மள அடிச்சதுக்கும் சாப்பாடு குடுக்காம விட்டதுக்கும் அரசு சார்புல மன்னிப்பு கேட்டு இருக்காங்க” யாரோ இடை மறித்தனர். “இதெல்லாம் சொல்ல வேணான்னு சொல்றாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாருக்கும் சாப்பாடு குடுப்போம்னு உறுதி கொடுத்து இருக்காங்க. இன்னும் ஒருமணி நேரத்துக்குள்ள சாப்பாடு குடுக்கலைனா திரும்பவும் பிரச்சனை ஆகும்னு நாங்க சொல்லி இருக்கோம். நாளைக்கு பந்த்த ஒட்டி கைது செஞ்சவங்கள எல்லாம் விடுதலை செய்யுறோம்னு சொல்லி இருக்காங்க. கோர்ட் மூலமா ரிமாண்ட் ஆகி வந்த ம.க.இ.க, பு.மா.இ.மு, வி.வி.மு தோழர்கள கோர்ட் தான் விடுதலை செய்யணும்.” என பேசி முடித்தார்.

” இவரு எப்படி விளக்கமா பேசுறாறு. ங்கொம்மாள.. நம்மாளும் பேசுறானே” என ஏதோ ஒரு எதிர்கட்சிக்காரர் புலம்பியதை கேட்ட போது, “தந்தன தந்தன” என நான் ஆகாயத்தில் பறக்காது தான் குறை.

அடுத்த நாள் மற்ற கட்சிக்காரர்கள் போய்விட்டனர்.

எங்களுக்கு முறையாக ஒரு பிளாக் ஒதுக்கப்பட்டது.

மே 5, ஆசான் மார்க்ஸ் பிறந்தநாள் முதல் முறைப்படுத்தப்பட்ட வகையில் நிகழ்ச்சிகள் நடக்க ஆரம்பித்தன.

மே 5, செய்தித்தாள்களில் பெரும்பகுதி கருப்பு மை பூசி வந்தன. ‘சிறைக் கலகம் பற்றிய செய்திகளை அழித்துள்ளனர்’ என புரிந்து கொண்டோம்.

மே 6 செய்தித்தாளிலும் கருப்பு மை. ஒரு ஓர துண்டுச் செய்தியில், “வை.கோ தந்தி: திருச்சி சிறை கலவரத்தில் மரணமடைந்த ம.தி.மு.க உறுப்பினர்—- (பெயர் இப்போது நினைவுக்கு வர மறுக்கிறது) க்கு நீதி கேட்டு ஜனாதிபதிக்கு வை.கோ தந்தி” என்ற செய்தி வந்துள்ளதை அழிக்க மறந்து விட்டார்கள்.

மீண்டும் சிறையில் போராட்டம். தினமும் 50 பேர் என பட்டினிப் போராட்டம். இறந்தவருக்கு நீதி கேட்டு.

ஒரு வழியாய் 10 நாள் கழித்து விடுதலை ஆனோம்.

ஆனால்…. அந்த பத்து நாட்களில் நாங்கள் போதுமான உணவு உட்கொள்ளவில்லை, சரியான நேரத்திற்கும் சாப்பாடு வரவில்லை, குடும்பத்தினருக்கு தகவல் ஏதும் கொடுக்க வசதி இல்லை. போர்வை இல்லை, தலையணை இல்லை, படுக்கை இல்லை… இன்னும் என்னென்னவோ இல்லை.

ஆனால், எங்கள் வர்க்க உணர்வும் போராட்ட உணர்வும் வற்றவில்லை. அவற்றை வற்றாமல் வளர்ப்பதற்கு தோழர் கதிரவனின் திட்டமிடலும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பும் தான் காரணம்.

அந்த பத்து நாள் அனுபவம் மேலும் பல சிறைகளுக்கு என்னை போக ஊக்கமளித்தது. சிறையில் ‘நாம் என்ன செய்யவேண்டும்’ என எனக்கு கற்றுத்தந்தது தோழர் கதிரவன் தான்.

அப்போதும் அதன் பிறகும் தோழர் கதிரவனோடு போராடும் வாய்ப்புகள் பல வாய்த்தன. சில சமூக பிரச்சனைகளுக்கு

எதிராக. சில என் தவறான குணக்கோளாறுகளுக்கு எதிராக.

ஒருபோதும் அதிர்ந்து பேசியதே இல்லை தோழர் கதிரவன்.

என் சில புதிய முயற்சிகளை பாராட்டத் தவறியதே இல்லை தோழர் கதிரவன்.

எதைச் சொல்வது?

எதை விடுவது?

உங்களிடம் கற்க இன்னும் நிறைய உள்ளது தோழர்.

அதற்குள்…

தோழமையுடன்
சிகப்பி.


முகநூல் இணைப்பு

disclaimerசமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க