12.07.2026

சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகம் தனியாருக்கு தாரைவார்ப்பு:
த.வெ.க. விஜய் அரசின் மக்கள் விரோத, கார்ப்பரேட் சேவை

பத்திரிக்கைச் செய்தி

சேலம் மாநகராட்சியில் 24 x 7 குடிநீர் விநியோகம் வழங்குவதற்கு, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தம் மக்களிடத்தில் கடும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் பிப்ரவரி 9, 2026 அன்று சேலம் மாநகராட்சி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சூயஸ் நிறுவனத்திற்கு இத்திட்டத்திற்கான டெண்டர் முதன்முதலாக வழங்கப்பட்டது.

பிப்ரவரி 25, 2026 அன்று சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை 25 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்தத்தை தாங்கள் வென்றுள்ளதாக சூயஸ் (SUEZ) நிறுவனம் அதிகாரப்பூர்வமான செய்தியை வெளியிட்டது.

மார்ச் 2026 இல் இத்திட்டத்தைச் செயல்படுத்த தொடக்கத்தில் 758.13 கோடி மதிப்பீட்டில் முதல் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

அதன் பிறகு, ஜூன் 4, 2026 இல் தமிழ்நாட்டில் த.வெ.க அரசு பொறுப்பேற்ற பின், 4,295.34 கோடி மதிப்பிலான திட்டமாக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஒப்பந்தத்திற்கு மக்களிடத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து ஜூன் 29, 2026 அன்று நடந்த மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் டெண்டரை ரத்து செய்வதாக மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் அறிவித்தார். ஆனால், அதற்கு முன்பே (ஜூன் 19) ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதால் சட்டப்படி (மக்கள் விரோத) திட்டம் தொடரும் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஏற்கெனவே அ.தி.மு.க. ஆட்சியில் 2018ஆம் ஆண்டில், கோவை மாநகராட்சியில் சூயஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதையடுத்து, கடும் எதிர்ப்புகளுக்கிடையிலும் தனியார் குடிநீர் விநியோகக் கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கையைத் தீவிரமாக அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் விஜய், மக்களின் எதிர்ப்பைத் துச்சமாகத் தூக்கியெறிந்துவிட்டு மேற்கண்ட நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது, த.வெ.க. அரசு கார்ப்பரேட் கும்பலுக்காகத் தீவிரமாகச் சேவை செய்யும் அரசுதான் என்பதையும் மக்களுக்கான அரசு இல்லை என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

உலகளவில் குடிநீர் தனியார்மயமாக்க நடவடிக்கைகள் பெரும் தோல்வியையே சந்தித்துள்ளன. பொலிவியாவின் கொச்சபம்பாவில் “பெக்டெல்” எனும் ஏகபோக பன்னாட்டு தண்ணீர் நிறுவனத்திற்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டம், ”சூயஸ்” மற்றும் “விவாண்டி” ஆகிய நிறுவனங்களின் ”ப்ரீ பெய்டு” முறைக்கு எதிராக தென்னாப்பிரிக்க மக்கள் நடத்திய போராட்டம், தண்ணீர் தனியார்மயமாக்கத்திற்கு எதிராக 1990 களின் இறுதியில் ஆப்பிரிக்க மக்களின் போராட்டம், ஆசியக் கண்டத்தில் பிலிப்பைன்ஸ் மக்களின் போராட்டம் உள்ளிட்ட எண்ணற்ற போராட்டங்கள் தண்ணீர் தனியார்மயம் மிகக் கொடூரமாக மக்களைப் பாதிக்கும் என்பதையும், தண்ணீர் பன்னாட்டு நிறுவனங்கள் ஈவிரக்கமின்றி மக்களுக்குக் கட்டுப்பாடுகள் விதித்து கொடூரமாக நடந்து கொள்ளும் என்பதையும் உலகிற்கே எடுத்துக் காட்டின.

இதிலிருந்து எந்த அனுபவத்தையும் எடுத்துக் கொள்ளாத கார்ப்பரேட் அடிமை அரசுகள் உலக வங்கியின் ஆணைக்கிணங்க, தண்ணீரை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு வெற்று வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கும் விஜய் அரசும் விதிவிலக்கல்ல.

இப்பேரபாயம் மிக்க நடவடிக்கையானது குடிநீரை கார்ப்பரேட்மயமாக்குவதற்கான மோடி அரசின் “அம்ருத் 2.0” திட்டத்தின் கீழேயே செயல்படுத்தப்பட்டுள்ளது.

இது மோடி அரசின் பாசிச திட்டங்களை த.வெ.க. அரசு மறைமுகமாக நடைமுறைப்படுத்தி வருவதை வெளிக்காட்டுகிறது.

தண்ணீர் தனியார்மயம் என்பது மறுகாலனியாக்கத்தின் கோர வடிவம். இயற்கையின் நியதிக்கு எதிரான வன்கொடுமை. மனித உரிமைக்கு எதிரான அநீதி. உணவு இல்லாமல் கூட மனிதனால் பல நாட்கள் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் ஓரிரு நாட்கள் கூட மனிதனால் வாழ முடியாது.

எனவே த.வெ.க. விஜய் அரசுக்குக் கடுமையான கண்டனங்களை மக்கள் அதிகாரக் கழகம் தெரிவிக்கிறது. கார்ப்பரேட் த.வெ.க. விஜய் அரசின் தண்ணீர் தனியார்மயமாக்கல் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும் என உழைக்கும் மக்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் மக்கள் அதிகாரக் கழகம் அறைகூவல் விடுக்கிறது.


இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க