பெரம்பலூர் எம்.ஆர்.எஃப்: 30 மாதங்களாக மறுக்கப்படும் ஊதிய உயர்வு — போராடும் தொழிலாளர்களை ஒடுக்கும் நிர்வாகம்!

பெரம்பலூர் எம்.ஆர்.எஃப் தொழிலாளர்களின் போராட்டம் ஒரு நிறுவனத்தின் ஊதிய பிரச்சினை மட்டுமல்ல; ஒப்பந்தமயம், சங்க விரோதம், கார்ப்பரேட் ஆதரவு அரசுக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிரான தொழிலாளர் வர்க்கப் போராட்டமாகும். நிரந்தரத் தொழிலாளர், ஒப்பந்தத் தொழிலாளர், பயிற்சியாளர் என்ற நிர்வாகப் பிரிவுகளைத் தாண்டி அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைவதை நோக்கி இப்போராட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டும். ஆலை நிர்வாகத்தின் தொடர்ச்சியான தாக்குதல்களை முறியடிக்கும் திசைவழி இதுதான்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் எம்.ஆர்.எஃப் திருச்சி TCC ஆலையில், 2024 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவேண்டிய புதிய ஊதிய ஒப்பந்தத்தை நிர்வாகம் 30 மாதங்களாக இழுத்தடித்து வருவதைக் கண்டித்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 750 நிரந்தரத் தொழிலாளர்களும், ஒப்பந்தம், பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் சுமார் 5,000 நிரந்தரமற்ற தொழிலாளர்களும் இவ்வாலையில் பணியாற்றி வருகின்றனர். நிறுவனத்தின் கோடிக்கணக்கான ரூபாய் உற்பத்திக்கும் இலாபத்திற்கும் அடித்தளமாக இருக்கும் தொழிலாளர்களின் நியாயமான ஊதிய உயர்வை மறுக்கும் நிர்வாகம், போராட்டத்தை ஒடுக்க இடைநீக்கம், மிரட்டல், போலீசுதுறை அழுத்தம் ஆகியவற்றை ஆயுதமாக்கி வருகிறது.

30 மாத பேச்சுவார்த்தை: காலங்கடத்தும் நிர்வாகச் சூழ்ச்சி!

முந்தைய ஊதிய ஒப்பந்தக் காலம் 01.01.2024 அன்று முடிவடைந்துவிட்டது. புதிய ஊதிய உயர்வு தொடர்பாக திருச்சி தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்திலும் (DCL), சென்னை தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்திலும் (ACL) பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. “சமரசப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது” என்ற பெயரில் நிர்வாகம் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது; ஊதிய உயர்வைப் பற்றிய உண்மையான பேச்சுவார்த்தைக்கே முன்வர மறுக்கிறது.

இந்த 30 மாதங்களிலும் தொழிலாளர்கள் உற்பத்தியை நிறுத்தி விடவில்லை. நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, முழு உற்பத்தியையும் அளித்தபடியே பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் ஆலையில் தரப்படும் உணவைப் புறக்கணித்து 30 நாட்கள் போராடியபோதும் உற்பத்தியைப் பாதிக்காமல் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். இந்தப் பொறுப்புணர்வை மதித்து ஒப்பந்தத்தை முடிப்பதற்குப் பதிலாக, நிர்வாகம் தொழிலாளர்களின் சகிப்புத்தன்மையை பலவீனமாகக் கருதி வஞ்சிக்கிறது.

ஊதியப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வந்த தொழிலாளர்களில் 44 பேரை நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. இடைநீக்கத்தைப் பயன்படுத்தி மற்ற தொழிலாளர்களை அச்சுறுத்துவது, வேலைநிறுத்தத்திலிருந்து விலகச் செய்வது, சங்க முன்னணியாளர்களைத் தனிமைப்படுத்துவது போன்ற முயற்சிகளிலும் நிர்வாகம் ஈடுபட்டுவருகிறது. ஊதிய உயர்வு கேட்பது குற்றமல்ல; கூட்டுப் பேச்சுவார்த்தையும் வேலைநிறுத்தமும் தொழிலாளர்களின் சட்டப்பூர்வ உரிமைகள். ஆனால், அந்த உரிமையை மதிக்காமல் போராடும் தொழிலாளர்களைப் பழிவாங்கி வருகிறது, எம்.ஆர்.எஃப் நிர்வாகம்.

பேச்சுவார்த்தை மேசையில் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு பதிலளிக்காமல், ஆலையினுள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்களை மிரட்டுதல், அச்சுறுத்துதல், பணிப் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு வேலைநிறுத்த உரிமையை ஒடுக்கிவிட்டு, நிரந்தரமற்ற தொழிலாளர்களைக் கொண்டு உற்பத்தியைத் தொடர முயல்வது, ஒருபுறம் சங்கத்தை உடைக்கும் நடவடிக்கையாகவும் மறுபுறம் தொழிலாளர்களுக்குள் போட்டியையும் அச்சத்தையும் உருவாக்கும் நடவடிக்கையாகவும் உள்ளது.

நிர்வாகம் உண்மையில் உற்பத்தி நலனில் அக்கறை கொண்டிருந்தால், அச்சுறுத்தலை நிறுத்தி, இடைநீக்கங்களைத் திரும்பப் பெற்று, ஊதிய உயர்வைப் பற்றிய நேர்மையான பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்கியிருக்க வேண்டும்.

நாப்ஸ் லீட் பெயரில் நேரடி உற்பத்தியில் நிரந்தரமற்ற தொழிலாளர்கள்

நாப்ஸ்- லீட் (NAPS, LEAD) போன்ற பயிற்சித் திட்டங்களின் பெயரிலும், ஒப்பந்தத் தொழிலாளர் முறையிலும் பணியில் சேர்க்கப்படுபவர்களை நிர்வாகம் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்துகிறது. நிரந்தரத் தொழிலாளர்கள் செய்ய வேண்டிய தொடர்ச்சியான உற்பத்திப் பணிகளை, குறைந்த ஊதியமும் பணிப் பாதுகாப்பும் இல்லாத பயிற்சியாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் ஒப்படைப்பது, உழைப்புச் செலவைக் குறைத்து இலாபத்தை உயர்த்தும் கார்ப்பரேட் சுரண்டலாகும்.

போதிய அனுபவமும் பாதுகாப்பும் இல்லாதவர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்துவதால் தயாரிப்புத் தரமும் பாதிக்கப்படுவதைப் பற்றி நிர்வாகத்துக்கு எந்த அக்கறையும் இல்லை. இதே பிரச்சினை, நிரந்தரத் தொழிலாளர் வேலைசெய்யும் போது வந்தால், அதற்காகத் தொழிலாளர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதும் இதே நிர்வாகம் தான்.

எம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் 2024–25 அறிக்கையிலேயே, நிறுவனம் முழுவதும் 11,075 நிரந்தரத் தொழிலாளர்களுக்கு எதிராக 15,142 நிரந்தரமற்ற தொழிலாளர்கள் பணியாற்றுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, நிரந்தரமற்ற உழைப்பைப் பெருமளவில் பயன்படுத்துவது பெரம்பலூர் ஆலையின் தனிப்பட்ட நடைமுறை அல்ல; நிறுவன அளவிலான கார்ப்பரேட் கொள்கை. ஒரே உற்பத்திப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களை நிரந்தரம், ஒப்பந்தம், பயிற்சி எனப் பிரித்து ஊதிய வேறுபாடு உருவாக்கி வருகிறது நிர்வாகம். தொழிலாளர் ஒற்றுமையைப் பிளந்து சங்க வலிமையைத் தளர்த்துவதற்கான வழிமுறையாக இதைப் பயன்படுத்துகிறது.

போராட்டத்திற்கு இடம் கொடுத்தவரையே மிரட்டும் போலீசு – வருவாய்த்துறை

வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து பெரம்பலூர், பாடாலூர் உள்ளிட்ட பல இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சி.ஐ.டி.யு. சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்துவதற்காக ஒரு தனியார் இடத்தின் உரிமையாளருடன் ஒப்பந்தம் செய்து, போலீசுதுறையிடம் அனுமதி கோரியுள்ளனர். ஆனால், அனுமதி விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சர்வே எண்ணை எடுத்துக்கொண்டு, அந்த இடத்தின் உரிமையாளரைக் போலீசுதுறை, கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் உள்ளிட்டோர் மிரட்டியுள்ளனர்.

அமைதியாகப் போராடுவதற்கான இடத்தை வழங்கிய ஒருவரையே அரசு அதிகாரிகள் அச்சுறுத்துவதன் மூலம், எம்.ஆர்.எஃப் நிர்வாகத்தின் அடியாட்படையாக அரசு எந்திரம் செயல்பட்டு வருகிறது.

தொழிலாளர்களின் மனுவை வாங்கி கோப்புகளில் புதைக்கும் தொழிலாளர் நலத்துறை; போராட்டத்திற்கு அனுமதி மறுக்கும் போலீசுதுறை; இட உரிமையாளரை மிரட்டும் வருவாய்த்துறை — இவை அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனத்தின் நலனைப் பாதுகாக்க ஒரே அணியாக நிற்கின்றன. இதைக் கண்டித்து 11.07.2026 அன்று பாடாலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சி.பி.எம் கட்சி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

தி.மு.க. முதல் த.வெ.க. வரை — ஆட்சி மாறியும் தொழிலாளர் நிலை மாறவில்லை

முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடமும், அப்போதைய தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடமும் இத்தொழிலாளர்கள் பலமுறை மனு அளித்து வலியுறுத்தியுள்ளனர். ஆனால், எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. தற்போது பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் கவனத்திற்கும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸின் கவனத்திற்கும் பிரச்சினை பலமுறை கொண்டு செல்லப்பட்டும் எந்தப் பலனும் இல்லை என்று தொழிலாளர்கள் குமுறுகின்றனர்.

ஆட்சி மாறினாலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனைப் பாதுகாக்கும் அரசின் கொள்கை மாறவில்லை. தொழிலாளர் துறை, 30 மாதங்களாக நிலுவையில் உள்ள ஒப்பந்தத்தை காலக்கெடுவுடன் முடிக்கச் செய்யவில்லை. மாறாக, முடிவில்லாத சமரசப் பேச்சுவார்த்தைகளுக்குள் தொழிலாளர்களைச் சுற்றவைக்கிறது. தொழிலாளி ஊதிய உயர்வு கேட்டால் சட்டம், அனுமதி, ஒழுங்கு என்று அச்சுறுத்தும் அரசு, கார்ப்பரேட் நிறுவனத்திற்கு நிலம், மின்சாரம், தண்ணீர், சலுகை ஆகியவற்றை வழங்குவதில் மட்டும் தாமதிப்பதில்லை. எந்தச் சலுகை வேண்டுமானாலும் செய்து கொடுப்பதாக, ரீல்ஸ் போட்டு கம்பெனிகளுக்கு அழைப்பு விடுக்கிறார் தொழிற்துறை அமைச்சர். ஆனால், ஊதிய உயர்வு கேட்டு ஆண்டுக்கணக்கில் போராடி வரும் தொழிலாளர் நலனில் எந்த அமைச்சருக்கும் அக்கறையில்லை.

தொழிலாளர் நலத்துறை என்பது முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையில் நடுநிலை வகிக்கும் அலுவலகம் அல்ல. சட்டப்படி தொழிலாளரின் உரிமையை உறுதிசெய்ய வேண்டிய அரசுத் துறையாகும். ஆனால், ஒப்பந்தம் முடிந்து இரண்டரை ஆண்டுகள் முடிந்த பின்னும் “பேச்சுவார்த்தை தொடர்கிறது” என்று இழுத்தடிப்பது நிர்வாகத்தின் நோக்கத்தை நிறைவேற்ற துணைபோகும் செயலே அன்றி வேறில்லை.

முந்தைய ஆட்சியிடமும் தற்போதைய ஆட்சியிடமும் தொடர்ந்து மனு அளித்தும் தீர்வு இல்லாத நிலையில், வேறு வழியே இல்லாமல் தான் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்; இந்த நிலைக்கு ஆண்ட, ஆளும் அரசுகள் தான் முதன்மைப் பொறுப்பேற்க வேண்டும்.

இது பெரம்பலூர் ஆலையின் தனிப்பட்ட பிரச்சினையல்ல

எம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் பிற ஆலைகளிலும் இதேபோன்ற தொழிலாளர் விரோதப் போக்கு தொடர்ச்சியாக நீடித்து வருகிறது. 2009-ஆம் ஆண்டு அரக்கோணம் ஆலையில் தொழிற்சங்க அங்கீகாரத்திற்காக தொழிலாளர்கள் 125 நாட்கள் வேலைநிறுத்தம் நடத்தினர். 2015-ஆம் ஆண்டு திருவொற்றியூர் ஆலையில் ஊதியப் பேச்சுவார்த்தை 18 மாதங்கள் இழுத்தடிக்கப்பட்டதைக் கண்டித்து தொழிலாளர்கள் போராடினர். 2025-இலும் திருவொற்றியூர் ஆலையில் மருத்துவக் காப்பீடு மற்றும் நாப்ஸ் (NAPS) பயிற்சியாளர் நியமனம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து சுமார் 800 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஆலை மாறினாலும் நிர்வாகத்தின் வழிமுறை ஒன்றே: ஊதியப் பேச்சுவார்த்தையை இழுத்தடிப்பது; நிரந்தரப் பணிகளை ஒப்பந்தம் மற்றும் பயிற்சி முறைகளுக்குள் தள்ளுவது; தொழிலாளர்களிடையே ஊதியப் பிளவை உருவாக்குவது; சங்க முன்னணியினரை இடைநீக்கம் செய்வது; இறுதியில் போலீசுதுறை மற்றும் தொழிலாளர் துறையின் உதவியுடன் போராட்டத்தை ஒடுக்க முயல்வது. இது ஓர் ஆலையின் மேலாளரின் தனிப்பட்ட போக்கல்ல; இலாபத்தை மிதமிஞ்சி அதிகரிக்கும் நோக்கோடு, தொழிலாளர் உரிமைகளை நசுக்கும் கார்ப்பரேட் கொள்ளையின் அங்கமாகும்.

இலாபம் குவிகிறது; தொழிலாளிக்கு ஊதிய உயர்வு மட்டும் கிடையாது!

2025–26 நிதியாண்டில் எம்.ஆர்.எஃப் நிறுவனம் ரூ.30,652 கோடி செயல்பாட்டு வருவாயையும் ரூ.2,355 கோடி நிகர இலாபத்தையும் பதிவு செய்துள்ளது; நிகர இலாபம் முந்தைய ஆண்டைவிட 29 சதவீதம் அதிகரித்துள்ளது. பங்குதாரர்களின் ஈவுத்தொகையும் நிர்வாகத்தின் வருமானமும் உயரும்போது, டயரை உற்பத்தி செய்யும் தொழிலாளியின் ஊதியம் மட்டும் 2024 ஜனவரியிலேயே நின்று கொண்டிருக்கிறது. முதலாளியின் இலாபம் அனைத்தும் உழைப்பை உறிஞ்சுவதால் தான் உருவாகிறது; அப்படி கசக்கிப் பிழிந்து எடுக்கப்பட்ட இலாபம் இனிக்கிறது; ஆனால் அந்த இலாபத்தை உருவாக்கித் தரும் தொழிலாளியின் ஊதிய உயர்வு மட்டும் முதலாளிக்குக் கசக்கிறது. தனது உரிமையைக் கேட்கும் தொழிலாளியை நிர்வாகம் “ஒழுங்கீனமானவன்” என்று முத்திரை குத்துகிறது.

தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்று!

தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு, 01.01.2024 முதல் கணக்கிட்டு ஊதிய உயர்வையும் முழு நிலுவைத்தொகையையும் வழங்கும் வகையில் முத்தரப்புப் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும். இடைநீக்கம் செய்யப்பட்ட 44 தொழிலாளர்களையும் நிபந்தனையின்றி மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதற்காக எந்தப் பழிவாங்கல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. நாப்ஸ்- லீட் (NAPS, LEAD) மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் பெயரில் நிரந்தர உற்பத்திப் பணிகளில் ஈடுபடுத்தப்படுபவர்களைப் படிப்படியாக நிரந்தரப்படுத்த வேண்டும். தொழிற்சாலையின் பாதுகாப்பு மற்றும் தயாரிப்புத் தரம் குறித்த தொழிலாளர்களின் குற்றச்சாட்டை ஆய்வு செய்ய வேண்டும். காத்திருப்புப் போராட்டத்திற்கு இடம் கொடுத்த உரிமையாளரை மிரட்டிய அதிகாரிகள்மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரம்பலூர் எம்.ஆர்.எஃப் தொழிலாளர்களின் போராட்டம் ஒரு நிறுவனத்தின் ஊதிய பிரச்சினை மட்டுமல்ல; ஒப்பந்தமயம், சங்க விரோதம், கார்ப்பரேட் ஆதரவு அரசுக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிரான தொழிலாளர் வர்க்கப் போராட்டமாகும். நிரந்தரத் தொழிலாளர், ஒப்பந்தத் தொழிலாளர், பயிற்சியாளர் என்ற நிர்வாகப் பிரிவுகளைத் தாண்டி அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைவதை நோக்கி இப்போராட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டும். ஆலை நிர்வாகத்தின் தொடர்ச்சியான தாக்குதல்களை முறியடிக்கும் திசைவழி இதுதான்.

இந்தப் போராட்டத்தை இதர தொழிற்சங்க அமைப்புகளும் தமிழ்நாடு தொழிலாளர்களும் ஜனநாயக சக்திகளும் ஆதரிக்க வேண்டும். கார்ப்பரேட் ஆதரவு – தொழிலாளர் விரோதப் போக்கினைக் கையாளும் த.வெ.க. அரசை அம்பலப்படுத்திப் போராட வேண்டும்.

தொழிற்சங்கத்தின் ஐந்து அம்ச முக்கிய கோரிக்கைகள்:

    1. 44 தொழிலாளர்கள் மீதான பழிவாங்கல் நடவடிக்கையை கைவிட்டு அவர்களுக்கு உடனே பணி வழங்கிடு.
    2. ஊதிய ஒப்பந்தத்தை உடனே அமல்படுத்து!
    3. ரூபாய் 13,000 ஊதிய உயர்வு வழங்கிடு.
    4. டேட் ஆப் சைனிங் என்பதை ஏற்க முடியாது; பேச்சு வார்த்தையில் முடிவு எடு.
    5. இந்த 30 மாதங்களுக்கான ஊதிய பாக்கியை (அரியர்) முழுமையாக வழங்கிடு .
    6. சீனியர் ஜூனியர் ஊதிய பாகுபாட்டை (டிஃபரென்ஸ்) கைவிடு.


வினவு களச்செய்தியாளர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க