
27.05.2026
பள்ளிகளில் சாதிய வன்முறையைத் தூண்டும் த.வெ.க. அரசின்
புதிய அடையாள அட்டை: பு.மா.இ.மு கண்டனம்!
கண்டன அறிக்கை
“சாதி அடையாளத்துடன் பள்ளி மாணவர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்படும்” என செங்கோட்டையன் அறிவித்திருப்பது, ஏற்கனவே பள்ளிகளில் நிலவி வரும் மாணவர்களுக்கிடையிலான சாதி வன்முறைகளை அதிகப்படுத்தும் செயலாகும். இந்நடவடிக்கையை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
முதற்கட்டமாக, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அந்த அட்டையில் மாணவரின் சாதிச் சான்றிதழ் விவரம், முகவரி, ரத்த வகை, அடையாள எண்கள், தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்கள் ஒருங்கிணைக்கப்படும்.
பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் சாதிச் சான்றிதழைப் பெற வேண்டிய சிரமத்தைக் குறைப்பதே இதன் நோக்கம் எனக் கூறுவது அபத்தமானது. மாணவர்களின் சாதியை அடையாள அட்டையில் பதிவு செய்வது, ஆர்.எஸ்.எஸ்., சாதி வெறி சங்கங்களின் கேடான நோக்கத்திற்கு பள்ளி மாணவர்களை அரசே இலக்காக்குவதாகும்.
மேலும், இது அவர்களே ஏற்றுக்கொண்டிருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளையும் மீறுவதாகும்.
சரத்து 14 – “அனைவரும் சட்டத்தின் முன் சமம்” என்ற அரசியலமைப்புக் கோட்பாட்டை, மாணவர்களின் சாதியை உள்ளடக்கிய இந்த புதிய அடையாள அட்டை சிதைக்கிறது. சரத்து 17 – “தீண்டாமை ஒழிப்பு”.
சாதி சார்ந்த அடையாளங்களை அடையாள அட்டையில் இணைப்பது, சமூகத்தில் நிலவி வரும் தீண்டாமை மனப்பான்மையை மாணவர்களிடையே வலுப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு இடையில் நிலவும் பல்வேறு வேறுபாடுகளை களைந்து, சமூக சகோதரத்துவத்தை மேம்படுத்தும் இடங்களாக இருக்க வேண்டும். மாறாக, இந்திய சமூகம் சாதிய சமூகமாகவும், மனித உறவுகளே சாதியை அடிப்படையாகக் கொண்ட உறவுகளாகவும் நீடித்து வருகிறது. இந்தச் சாதிய தீண்டாமைச் செயல்கள் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் வெளிப்பட்டுக் கொண்டு வரும் வேளையில், அவை பள்ளி, கல்லூரி நிறுவனங்களில் மிகத் தீவிரமாக வெளிப்படுகின்றன.
கோவையில், பள்ளி ஒன்றில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் பூப்படைந்த காரணத்தால் வகுப்பறைக்கு வெளியே உட்கார வைக்கப்பட்டார்.
நன்றாக மதிப்பெண் பெற்ற காரணத்தினால், மறவர் சமூக மாணவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நாங்குநேரி சின்னதுரை. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே, கபடி போட்டியில் சிறந்து விளங்கியதற்காக தாக்கப்பட்டு, விரல்கள் துண்டிக்கப்பட்ட தலித் மாணவர் தேவேந்திர ராஜா என பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது.
குறிப்பாக, தென்மாவட்டங்களில் மாணவர்களுக்கு இடையிலான சிறிய சிறிய சண்டைகள் கூட சாதியப் பிரச்சினைகளாகவும், இரு சமூகங்களுக்கு இடையிலான மோதல்களாகவும் உருவெடுத்து வரும் வேளையில், செங்கோட்டையனின் இந்த அறிவிப்பு மிகவும் அபாயகரமானது.
மாணவர்களுக்கு இடையிலான வேறுபாடுகளை அகற்ற வேண்டிய பள்ளி வளாகங்கள் அனைத்தும், மாறாக சாதிய வன்முறைகளை வளர்க்கும் நிறுவனங்களாக, பாஜகவின் பத்து ஆண்டு கால ஆட்சியில் வேகமாக மாறி வருகின்றன.
சமீபத்தில் அரங்கேறிய பெரும்பத்து, நெட்டூர் பகுதி தலித் மக்கள் மீதான தாக்குதல்களில் சிறார்களே அதிகமாக ஈடுபட்டுள்ளனர். இதன் பின்னணி குறித்து ஆராயும் போது, பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். சாகாக்கள் நடத்தப்படுவதும், ஆதிக்க சாதி வெறி சங்கங்கள் மாணவர்களிடம் சாதி வெறுப்புணர்வைப் பரப்பி, தங்களுக்கான கூலிப்படைக் கும்பல்களாக அவர்களை உருவாக்குவதும் முக்கிய காரணங்களாக இருந்து வருகின்றன.
கடந்த திமுக ஆட்சியில், தென்மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான சாதிய வேறுபாடுகளைக் களைய அமைக்கப்பட்ட நீதிபதி சந்திரு தலைமையிலான ஒருநபர் ஆணையம் பல பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியது. அதில், ஒவ்வொரு சாதிக்கும் உரிய வண்ணக் கயிறுகளை மாணவர்கள் பள்ளி வளாகங்களில் கைகளில் கட்டி வருவதைத் தடை செய்ய வேண்டும் என்பதும் ஒன்றாகும்.
ஒரு மாணவர் எந்தச் சாதியைச் சேர்ந்தவர் என்பதை வண்ணக் கயிறுகள் மூலமே கண்டறிந்து, தீண்டாமைக் கொடுமைகள் நிகழ்த்தப்படும் சூழலில், மாணவர்களின் சாதியை அடையாள அட்டையில் சேர்ப்பது, அவர்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை எளிதில் அறியவும், பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட மதவாத சக்திகளும், ஆதிக்க சாதி வெறி சங்கங்களும் தங்களின் நோக்கத்தை நிறைவேற்றவும் ஏதுவாக அமையும் நடவடிக்கையாகும்.
2019-ஆம் ஆண்டு, மதுரை உயர்நீதிமன்றத்தில், புதுக்கோட்டை மாவட்டம், கரம்பாக்குடியைச் சேர்ந்த பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகத்தின் அதிகாரி எஸ். சண்முகம் தாக்கல் செய்த மனுவில், வலைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் அடையாள அட்டைகள் அவர்களின் சாதி அடையாளத்தை மறைமுகமாக வெளிப்படுத்துவதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
அதில், தலித் மாணவர்கள் வசிக்கும் தெருப் பெயர்கள் சாதிப் பெயர்களைக் கொண்டிருப்பதாலும், அவை அடையாள அட்டையில் முகவரியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாலும், அவர்களின் சாதி அடையாளம் வெளிப்படுவதாகக் கூறப்பட்டது. மேலும், பள்ளியின் துப்புரவுப் பணியாளர் விலகியபோது, பட்டியல் சாதியைச் சேர்ந்த மாணவர்களையே கழிவறைகளைச் சுத்தம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள், பள்ளி அடையாள அட்டைகள் மூலமாக மாணவர்களின் சாதி அடையாளம் மறைமுகமாக வெளிப்படுவதாகக் குறிப்பிட்டனர்.
இவ்வாறு, மாணவர்களின் சாதியை அடையாள அட்டையில் சேர்ப்பது கடந்த ஆண்டு நீதிபதி சந்திரு அரசுக்கு அளித்த பரிந்துரைகளுக்கு எதிரான நடவடிக்கையாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, பாசிச பாஜக அரசின் நீண்டகால இலக்கான மாணவர்களுக்கு இடையிலான வன்முறைகளை அதிகப்படுத்தும் நோக்கத்திற்கு அரசே துணைநின்று செயல்படுவதாக இந்த நடவடிக்கை உள்ளது.
பெரியார், அம்பேத்கர் ஆகியோரை தங்களது கொள்கைத் தலைவர்களாக அறிவித்துக் கொண்டுள்ள த.வெ.க. அரசு, பள்ளி வளாகங்களை காவிமயமாக்கும் பாஜகவின் நடவடிக்கைகளுக்கும், மாணவர்களை கூலிப்படைக் கும்பல்களாக மாற்றும் ஆதிக்க சாதி வெறி சங்கங்களுக்கும் துணைபோகும் இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வலியுறுத்துகிறது.
![]()
இவண்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு – புதுவை.
9444836642
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











