மேற்குவங்கம்: பாசிச கும்பலின் புதிய சோதனைச்சாலை!

குஜராத்தின் கலவர-கார்ப்பரேட் பிணைப்பு, உத்தரப்பிரதேசத்தின் புல்டோசர் பயங்கரவாதம், அசாமில் இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல், மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சி ஒழிப்பு ஆகிய முந்தைய பாசிச பரிசோதனைகளின் தொகுப்பாக “மேற்குவங்க மாடலை” உருவாக்கியும் செயல்படுத்தியும் வருகிறது.

மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தற்போதைய முதல்வர் சுவேந்து அதிகாரி.

மேற்குவங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சி செய்துவந்த திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி, தேர்தல் மோசடிகள், அதிகாரக் குவிப்பு, பாசிச தாக்குதல்கள் மூலம் பாசிச பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியையடுத்து, மேற்குவங்க மக்களின் வாழ்க்கை ஒரே நாளில் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல் அடித்துவரும் கொட்டமானது, இது ஏதோ வழக்கமான ஓட்டு அரசியல் அதிகாரப் பரிமாற்றம் அல்ல என்பதை உணர்த்துகிறது.

பாசிச சோதனைச்சாலைகளின் பரிணாமமும்
மேற்குவங்க மாடலும்

இந்தியாவை இந்துராஷ்டிரமாக மாற்றும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல், ஒவ்வொரு மாநிலத்தின் சமூக-வரலாற்று முரண்பாடுகளுக்கும் ஏற்ப உத்திகளை வகுத்து செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம், இந்திய மாநிலங்களின் பன்மைத்துவத்தை அழித்து அவற்றை இந்துராஷ்டிரத்தின் நுகத்தடியில் பிணைக்கத் துடிக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, மேற்குவங்க மாநிலத்தின் வெற்றியை பா.ஜ.க. கும்பல் மிகவும் முக்கியத்துவமுடையதாக பார்க்கிறது. இயல்பிலேயே புரட்சிகர, முற்போக்கு, சமத்துவக் கூறுகளையும் பார்ப்பனிய எதிர்ப்பு, பா.ஜ.க. எதிர்ப்பு மரபையும், தேசிய இன உணர்வையும் கொண்ட மேற்குவங்கத்தை எப்படியேனும் காவி நீரோட்டத்தில் கலக்கச் செய்யும் நோக்கில் பாசிச கும்பல் செயல்பட்டு வருகிறது.

அந்தவகையில், குஜராத்தின் கலவர-கார்ப்பரேட் பிணைப்பு, உத்தரப்பிரதேசத்தின் புல்டோசர் பயங்கரவாதம், அசாமில் இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல், மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சி ஒழிப்பு ஆகிய முந்தைய பாசிச பரிசோதனைகளின் தொகுப்பாக “மேற்குவங்க மாடலை” உருவாக்கியும் செயல்படுத்தியும் வருகிறது.

அதிகார வர்க்க ஒத்திசைவாக்கல்

இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலும் கண்டிராத பாசிச வகைப்பட்ட ஒரு தேர்தலை மேற்குவங்கத்தில் பா.ஜ.க. கும்பல் நடத்திக் காட்டியது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த உடனே, நிர்வாக மற்றும் போலீசுதுறை அமைப்பில் பெரிய மாற்றங்களைச் செய்து, 170-க்கும் மேற்பட்ட போலீசு நிலையப் பொறுப்பாளர்கள், உயர்மட்ட அதிகாரிகள் உட்பட மொத்தம் 483 கள அதிகாரிகளைக் கூண்டோடு இடமாற்றம் செய்தது. இதன் மூலம், தேர்தலுக்கு முன்னரே திரிணாமுல் காங்கிரசு தலைமையிலான மாநில அரசிடமிருந்து அதிகாரம் பறிக்கப்பட்டு ஒன்றிய பா.ஜ.க. அரசால் முடக்கப்பட்டது.

இதன் அடுத்தக்கட்டமாக, தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில் அம்மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசு-அதிகாரமும் பாசிசமயமாக்கப்பட்டு வருகிறது. அம்மாநில முதல்வராக பா.ஜ.க. தலைவர் சுவேந்து அதிகாரி பதவியேற்ற சில நாட்களிலேயே, மாநிலப் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையின் அதிகாரப்பூர்வ உத்தரவுகளின் வழியே, சுமார் 200 அதிகாரிகள் தொடர்பான நியமனம் மற்றும் மாற்றங்கள் மின்னல் வேகத்தில் முடுக்கிவிடப்பட்டன. இதன் மூலம், மாநிலத் தலைமைச் செயலகமான “நபன்னா” ஆர்.எஸ்.எஸ் அடிவருடிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக, தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் (SIR) சிறப்புப் பார்வையாளராக இருந்து, பாசிச கும்பலின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொடுத்த, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரதா குப்தா, உடனடியாக முதலமைச்சரின் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக (CEO) இருந்து, எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட தேர்தல் மோசடிகளின் மூலம் பா.ஜ.க-வின் வெற்றிக்கு துணைபோன மனோஜ் குமார் அகர்வாலுக்கு, மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

போலீசுதுறை மற்றும் சட்டம்-ஒழுங்கு மையத்தின் உயர் பொறுப்புகளும் இவ்வாறே பாசிச கருத்தியல் கொண்டோரைக் கொண்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சித்தநாத் குப்தாவிற்கு (DGP In-charge), மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எந்தவித ஒளிவுமறைவுமின்றி பாசிச அடிவருடிகளுக்கு ‘சன்மானங்களை’ வழங்கும் பா.ஜ.க-வின் இந்நடவடிக்கையானது அதன் பாசிச திமிரைக் காட்டுகிறது.

இத்தகைய அதிகார வர்க்க ஒத்திசைவாக்கலின் மூலம், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய போலீசுதுறை பாசிச கும்பலின் ஏவல்துறையாக மாற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாகத்தான், ஆட்சி மாற்றத்தின் முதல் நாளிலேயே கொல்கத்தாவின் நியூ மார்க்கெட் பகுதியில் திரிணாமுல் காங்கிரசு அலுவலகங்கள் புல்டோசர்களால் இடிக்கப்பட்ட போதும், இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான இறைச்சி உணவுக் கடைகளுக்கு பாசிச குண்டர்கள் மிரட்டல் விடுக்கப்பட்ட போதும், போலீசு அதனைத் தடுத்து நிறுத்தாமல் வெறும் பார்வையாளனாக நின்று வேடிக்கை பார்த்தது. குஜராத் இனப்படுகொலையின் போதும், வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டுமென, போலீசுதுறைக்கு அன்றைய முதல்வர் பாசிச மோடி உத்தரவிட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.

எஸ்.ஐ.ஆர். அடக்குமுறை:
வாக்குரிமைப் பறிப்பிலிருந்து தடுப்பு முகாம் வரை

மேற்குவங்கத்தில் மக்களின் எதிர்ப்புகளையெல்லாம் மீறி பா.ஜ.க வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம், தேர்தலுக்கு முன்னர் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) எனும் பாசிச நடவடிக்கையாகும். ஆர்.எஸ்.எஸ் சங்கிக் கும்பலை களமிறக்கியும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும், மாநிலத்தின் வாக்காளர் பட்டியலிலிருந்து 7.66 கோடி வாக்காளர்களில் சுமார் 91 லட்சம் (11.88 சதவிகதம்) பேரின் பெயர்கள் ஈவிரக்கமின்றி நீக்கப்பட்டன.

நீக்கப்பட்ட 91 லட்சம் பேரில் சுமார் 31.1 லட்சம் பேர் இஸ்லாமியர்கள் ஆவர். மீதமுள்ளவர்களில் இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் போக மற்றவர்கள் முறையான ஆவணங்கள் இல்லாத விளிம்புநிலை தலித் மக்கள், கல்வியறிவற்ற பழங்குடியினர் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர்களே ஆவர். ஒட்டுமொத்தத்தில் இந்த 91 லட்சம் பேரில் பெரும்பாலானோர் ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு ஆளான அடித்தட்டு உழைக்கும் மக்களே ஆவர்.

இந்நிலையில், இச்சதியும் ஒடுக்குமுறையும் வாக்குரிமைப் பறிப்போடு நின்றுவிடவில்லை. புதிய பா.ஜ.க. அரசு தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே, ‘சட்டவிரோத குடியேறிகள்’ என சந்தேகிக்கப்படுபவர்களை அடைக்க தடுப்புக் காவல் மையங்களை அமைக்க உத்தரவிட்டுள்ளது. எல்லையோர இஸ்லாமிய மக்கள் மற்றும் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்களைச் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவது, பின்னர் அவர்களைச் சந்தேகத்திற்குரிய குடிமக்கள் என்று முத்திரை குத்தி தடுப்பு முகாம்களில் அடைப்பது என ஒரு முழுமையான சுருக்குக்கயிற்றை இந்த பாசிச கும்பல் தயாரித்துள்ளது.

அசாமில் தேசியக் குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்தி இஸ்லாமியர்களைத் தடுப்பு முகாம்களில் அடைத்துவரும் பா.ஜ.க, எஸ்.ஐ.ஆர் மூலம் மேற்குவங்கத்திலும் அதனைச் செயல்படுத்துகிறது. இது அசாம் மாடலை விடவும் மோசமான, நவீனத் தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்ட பாசிச நடவடிக்கையாகும்.

மேலும், எஸ்.ஐ.ஆர் என்பது இஸ்லாமிய, பழங்குடியின, தலித் மக்களின் குடியுரிமையைப் பறிப்பதற்கான கொல்லைப்புற வழியிலான தேசியக் குடியுரிமைப் பதிவேடு எனப் பாசிச எதிர்ப்புச் சக்திகள் எச்சரித்து வந்தது மேற்குவங்கத்தில் நிரூபணமாகியுள்ளது.

பண்பாட்டு காவிமயமாக்கலும்
இடஒதுக்கீடு பறிப்பும்

உழைக்கும் வர்க்கத்தை மத ரீதியாகப் பிளவுபடுத்தும் பாசிச கும்பல், தனது பார்ப்பனிய மேலாதிக்கத்தைப் பண்பாட்டுத் தளத்திலும் தீவிரமாகத் திணிக்கிறது. பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, மாநிலத்தின் அனைத்துப் பள்ளிகளிலும், அதனைத் தொடர்ந்து சிறுபான்மையினரின் மதரசாக்களிலும் காலை வழிபாட்டில் “வந்தே மாதரம்” எனும் பார்ப்பனிய மேலாதிக்க – இசுலாமிய வெறுப்பு பாடல் கட்டாயமாக்கப்பட்டது. இது மதச்சார்பற்ற கல்வி வெளியைக் காவிமயமாக்கும் அப்பட்டமான பாசிச திணிப்பாகும்.

வரலாற்று அடையாளங்களை அழிக்கும் பாசிச நடவடிக்கையாக, வங்காளத்தின் கடைசி நவாப் நினைவாக அமைந்திருந்த கொல்கத்தாவின் “சிராஜ் உத்யான்” பூங்கா, ஒரே இரவில் “சிவாஜி உத்யான்” எனப் பா.ஜ.க குண்டர்களால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது, 18-ஆம் நூற்றாண்டில் வங்காளத்தின் உழைக்கும் மக்களைக் கொன்று குவித்த மராட்டியப் படைகளின்  வரலாற்று வன்மத்தை நினைவூட்டும் செயலாகும். மறுபுறம், சிறுபான்மையினரைப் பொருளாதார ரீதியாக முடக்கும் நோக்கில், மசூதிகளின் இமாம்கள் மற்றும் முஅத்தின்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர உதவித்தொகையைச் சுவேந்து அதிகாரியின் அரசு எவ்வித முன்னறிவிப்புமின்றி முழுமையாக ரத்து செய்துள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இஸ்லாமிய மக்களின் இட ஒதுக்கீடு மீது பா.ஜ.க. அரசு தொடுத்த தாக்குதல் மிகக் கொடூரமானது. மம்தா ஆட்சியில், புதிதாக 77 சமூகங்களை (பெரும்பான்மையாக இஸ்லாமிய சமூகங்கள்) இணைத்து 7 சதவிகிதமாக இருந்த ஓ.பி.சி. இடஒதுக்கீடு 17 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. ஆனால், பாசிச பா.ஜ.க. கும்பலுக்கு கரசேவையாற்றும் விதமாக, கொல்கத்தா உயர்நீதிமன்றம் இந்த இட ஒதுக்கீட்டின் மீது அடுத்தடுத்த தாக்குதல்களை தொடுத்தது. எனினும், ஆய்வின் அடிப்படையில் புதிய அரசாணை வெளியிட்டும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தும் மம்தா அரசு இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை பாதுகாத்து வந்தது.

இந்நிலையில், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை 7 சதவிகிதமாகக் குறைத்து, இஸ்லாமியர்களின் ஓ.பி.சி. அந்தஸ்தை பறித்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களின் இடஒதுக்கீட்டை பறித்துள்ளது. மேலும், மம்தா அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவைப் புதிய பா.ஜ.க அரசு திரும்பப் பெற்றுள்ளது.

இறைச்சி அரசியல்: சிறுபான்மை வெறுப்பும்
இந்து விவசாயிகளின் வாழ்வாதாரப் பறிப்பும்

பக்ரீத் பண்டிகைக்குச் சில வாரங்களுக்கு முன்பாக கடந்த மே 13  அன்று, “புதிய இறைச்சி வணிக விதியை” பா.ஜ.க. அரசு வெளியிட்டது. அதில், கறிக்கடைகளின் முன்புறத்தைக் கறுப்புக் கண்ணாடிகள் கொண்டு மறைக்க வேண்டும்; வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து 200 மீட்டர் தள்ளி இருக்க வேண்டும்; நவீன வசதிகள் கொண்ட மையப்படுத்தப்பட்ட இறைச்சிக் கூடங்களில் இருந்து மட்டுமே இறைச்சியைப் பெற வேண்டும்; 14 வயதிற்கு உட்பட்ட கால்நடைகளை அறுக்கக் கூடாது; முதிர்ந்த மாடுகளை அறுப்பதற்கு “அவை வேலைக்கோ இனப்பெருக்கத்திற்கோ தகுதியற்றவை” என்ற மருத்துவச் சான்றிதழைப் பெற வேண்டும் உள்ளிட்ட கடுமையான விதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

இது, மாநிலத்தின் ஒட்டுமொத்த உணவுப் பண்பாட்டின் மீதும் முறைசாரா பொருளாதாரத்தின் மீதும் தொடுக்கப்பட்ட கொடியத் தாக்குதலாகும்.

தேசியக் குடும்ப சுகாதார ஆய்வறிக்கையின்படி, மேற்குவங்க மக்கள்தொகையில் 98.5 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் இறைச்சி உணவு உண்பவர்கள் ஆவர். இப்படிப்பட்ட ஒரு பன்மைத்துவ மாநிலத்தில், மேற்கண்ட விதிகளை திணிப்பது, 98.5 சதவிகித மக்களின் அன்றாட உணவுப் பழக்கத்தை வர்க்க ரீதியாகவும் சாதிய ரீதியாகவும் ஒரு ‘தீண்டத்தகாததாக’ சித்தரிக்கும் பாசிச உத்தியாகும்.

மேலும், ஏழைச் சிறு வியாபாரிகளால் பல இலட்சங்கள் செலவாகும் சான்றிதழ்களையும், குளிர்சாதனக் கட்டமைப்புகளையும் ஒருபோதும் உருவாக்க முடியாது. இதன் மூலம், மாநிலத்தில் கால்நடை வளர்ப்பு, இறைச்சி வெட்டுதல், போக்குவரத்து மற்றும் விநியோகம் என இத்துறையை நம்பியுள்ள சுமார் 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள், ஏழை வியாபாரிகள் மற்றும் முறைசாரா தொழிலாளர்களின் (குறிப்பாக தலித் மற்றும் இஸ்லாமியர்களின்) வாழ்வாதாரச் சங்கிலி அடியோடு தகர்க்கப்பட்டு அவர்கள் பலவந்தமாகச் சந்தையிலிருந்து வெளியேற்றப்படுவர்.

இதன் மூலம், சந்தையில் உருவாகும் மாபெரும் வெற்றிடத்தை, ஐ.டி.சி., கோத்ரேஜ், வெங்க்கீஸ் போன்ற கார்ப்பரேட் ஏகபோகங்கள் தங்களின் “பதப்படுத்தப்பட்ட இறைச்சி” வணிகத்தின் மூலம் எளிதாகக் கைப்பற்றிக் கொள்வதற்கான பொருளாதார சூழ்ச்சியும் இதில் அடங்கியுள்ளது. இது சிறுபான்மையினர் மீதான வெறுப்பை மூலதனமாக்கும் பாசிச கும்பலின் திட்டமிட்ட இரட்டைத் தாக்குதலாகும்.

மறுபுறம், பக்ரீத் இறைச்சி வணிகத்தை முடக்கி அதன் மூலம் திட்டமிட்டு ஒரு மதக்கலவரத்தை உருவாக்க பா.ஜ.க. எத்தனித்தது. கொல்கத்தா நகோடா மசூதியின் இமாம் மற்றும் ஃபுர்ஃபுரா ஷெரீப் போன்ற ஆன்மீகத் தலைவர்கள் இச்சதியை முன்னுணர்ந்து, “சமூக நல்லிணக்கத்தைப் பேணவும், வீணான சட்டச் சிக்கல்களைத் தவிர்க்கவும் இஸ்லாமியர்கள் பக்ரீத்தின் போது மாடுகளைப் பலியிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்” எனப் பகிரங்க அறைகூவல் விடுத்தனர். இதனை ஏற்று இஸ்லாமியச் சமூகம் மாடுகளை வாங்குவதைப் புறக்கணித்ததன் எதிர்விளைவு, ஆளும் பா.ஜ.க-விற்கு மாபெரும் அரசியல் நெருக்கடியாக மாறியது.

பண்டிகைக் கால வணிகத்தை நம்பிக் கன்றுகளை வளர்த்து வந்த முதன்மை உற்பத்தியாளர்களான கிராமப்புற தலித் மற்றும் இந்து விவசாயிகளே (கோபாலா சமூகம்) இந்தப் புறக்கணிப்பால் பல கோடி ரூபாய் நட்டத்தைச் சந்தித்துள்ளனர். மாடுகளை வாங்க ஆளில்லாமல் தங்களின் வாழ்வாதாரம் முடங்கியதால், பா.ஜ.க அரசுக்கு எதிராக இந்து விவசாயிகளே இன்று வீதிகளில் இறங்கிப் போராடும் நிலை உருவாகியுள்ளது.

இது மேற்கு வங்கத்திற்கு மட்டுமேயான முரண்பாடல்ல. உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற இதர மாநிலங்களிலும் அரசால் கட்டவிழ்த்துவிடப்பட்ட ‘பசு வதை’, “இறைச்சி வெறுப்பு அரசியல்”, நேரடியாகப் பெரும்பான்மை இந்து விவசாயிகளுக்கே எதிராகத்தான் முடிந்துள்ளது. கடுமையான இறைச்சித் தடைகளால், பால் வற்றிய முதிர்ந்த மாடுகளைச் சந்தையில் விற்க முடியாமல் இலட்சக்கணக்கான விவசாயிகளின் தவித்து வருகின்றனர். மேலும், கைவிடப்பட்டு அலைந்து திரியும் ஆதரவற்ற மாடுகளால் பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நாசமாகி வருகின்றன. உழைக்கும் மக்களின் வர்க்க ஒற்றுமையை உடைக்கப் பயன்படுத்தப்படும் பாசிசத்தின் மதவெறி அரசியல், முடிவில் உழைக்கும் இந்துக்களின் சொந்த வாழ்வாதாரத்தையே அழித்தொழிக்கும் என்பதற்கு இதுவே நிகழ்கால வரலாற்றுச் சான்றாகும்!

நலத்திட்ட நிபந்தனையாக்கமும்
புல்டோசர் பயங்கரவாதமும்

பாசிச கும்பல், தனது மக்கள் விரோத ஒடுக்குமுறையை மறைக்கப் பயன்படுத்தும் உத்திகள்தான் “நலத்திட்டங்களுக்கான நிபந்தனைகள்” மற்றும் “சட்டப்பூர்வ வறுமையாக்கம்”. மேற்குவங்கத்தில், உழைக்கும் மக்களின் “உரிமையாக” இருந்த நலத்திட்டங்களை, அடுக்கடுக்கான ஆவணங்களைக் கேட்கும் அரசின் “நிபந்தனையாக” மாற்றுவதன் மூலம் இது அரங்கேறுகிறது.

குடும்பப் பெண்கள் அனைவருக்கும் மாதம் ரூ.1,500 வழங்கும் “லட்சுமி பண்டார்” திட்டத்தை ரத்து செய்துவிட்டு, ரூ.3,000 வழங்கும் “அன்னபூர்ணா பண்டார்” திட்டத்தைப் பா.ஜ.க கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் நிதியுதவி இருமடங்கானது போன்ற மாயையை உருவாக்கினாலும், இதைப் பெறுவதற்குக் கடுமையான ஆவணச் சரிபார்ப்புகள் திணிக்கப்பட்டுள்ளன. எஸ்.ஐ.ஆர் (SIR) மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பல லட்சம் ஏழைப் பெண்களுக்கு இத்திட்டம் ஈவிரக்கமின்றி மறுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் 24.2 மில்லியன் ஏழைக் குடும்பங்களுக்கு நிபந்தனையற்று மருத்துவப் பாதுகாப்பு வழங்கிய “சுவஸ்திய சதி” திட்டத்திற்குப் பதிலாக, ஒன்றிய அரசின் “ஆயுஷ்மான் பாரத்” திணிக்கப்பட்டுள்ளது. இதன் கடுமையான ஆவண வரைமுறைகளால், மருத்துவப் பயனாளிகளின் எண்ணிக்கை சரிபாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அடுக்கடுக்கான ஆவணங்களைச் சமர்ப்பித்தால் மட்டுமே உழைக்கும் மக்கள் உயிர்வாழத் தகுதியானவர்கள் என்பது குரூரமான உத்தியாகும். இதன் மூலம், இஸ்லாமியர்களையும் ஒடுக்கப்பட்ட, பழங்குடி மக்களையும் புறக்கணிப்பதை சட்டப்பூர்வமாக செய்கிறது பாசிச கும்பல்.

மறுபுறம், பீகாரைத் தொடர்ந்து மேற்குவங்கத்திலும் எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களை, அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்குத் தகுதியற்றவர்களாகப் பா.ஜ.க அரசு அறிவித்துள்ளது. இது, எஸ்.ஐ.ஆர் என்பது பட்டியலின, சிறுபான்மையின மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்குவதற்கான சதி என்பதை அம்பலப்படுத்துகிறது.

மேற்குவங்கத்தில் அமல்படுத்தப்பட்ட
“மகாராஷ்டிரா மாடல்”

மகாராஷ்டிராவில் தன்னை கூட்டணியில் இணைத்துக்கொண்டு ஆட்சி செய்த, வளர்வதற்கு அடித்தளமிட்டுக் கொடுத்த சிவசேனா கட்சியை ஏக்நாத் ஷிண்டே மூலம் இரண்டாக உடைத்து அதிகாரத்தைக் கைப்பற்றியது பா.ஜ.க. கும்பல். அதைப்போல், அம்மாநிலத்தின் மற்றொரு கட்சியான தேசியவாத காங்கிரசு கட்சியை அஜித் பவார் மூலம் உடைத்து தன்னுடன் இணைத்துக்கொண்டது. இன்று, மகாராஷ்டிராவில் தனிப்பெருங்கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்து அதன் தலைமையில் ஆட்சி செய்து வருகிறது. இந்த மாடலைத் தற்போது மேற்குவங்கத்தில் அமல்படுத்தியுள்ளது பா.ஜ.க. கும்பல்.

காவிக்கும்பலின் வன்முறை வெறியாட்டத்தால் உடைக்கப்பட்டிருக்கும் பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் சிலை.

இத்தேர்தலில் 80 இடங்களில் வெற்றிபெற்றுள்ள திரிணாமுல் காங்கிரசு கட்சியின் மூத்த தலைவரான சோவன்தேப் சட்டோபாத்யாயை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கக் கோரி சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால், ரித்தோ பிரதோ பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரசு கட்சியிலிருந்து விலகிவந்த 58 எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க ஆசியுடன் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம், மேற்குவங்கத்தில் ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி என இரண்டுமே பா.ஜ.க-தான் என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

மேலும், ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற போர்வையில் எதிர்க்கட்சி அலுவலகங்கள் மீது புல்டோசர் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. கரியா பகுதியில் இருந்த திரிணாமுல் காங்கிரசு அலுவலகம், ஹாக் மார்க்கெட், சீல்டா மற்றும் ஹவுரா பகுதிகளில் இயங்கி வந்த அதன் தொழிற்சங்க அலுவலகங்கள் மத்திய ஆயுதப் படைகளின் பாதுகாப்புடன் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இது வெறும் கட்டட இடிப்பல்ல; எதிர்க்கட்சியின் அடிமட்ட வலைப்பின்னல்களையும் அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதமாகும்.

மக்கள் போராட்டமும்
பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமைகளும்

மேற்குறிப்பிட்ட பாசிச தாக்குதல்களின் மூலம் மேற்குவங்க மாநிலத்தை அடக்கி ஒடுக்கப் பா.ஜ.க. முயன்றாலும், அதற்கெதிராக மக்களின் எதிர்ப்பும் போராட்டமும் தீவிரமடைந்து வருகின்றன.

கொல்கத்தாவின் தில்ஜாலா, பார்க் சர்க்கஸ் பகுதிகளில் ஏழை எளிய மக்களின் குடியிருப்புகள் மற்றும் சிறுகடைகளை இலக்குவைத்து பாசிச பா.ஜ.க-வின் ஆதரவோடு ஏவப்பட்ட புல்டோசர் அரச வன்முறைக்கு எதிராக, திரண்டெழுந்த ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்கள் மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். என்.ஆர்.சி. மற்றும் எஸ்.ஐ.ஆர். மூலம் ஏற்கெனவே தங்கள் குடியுரிமையைப் பறிகொடுத்திருந்த மக்களின் கடும் கோபம், போலீசுதுறையின் அடக்குமுறையை எதிர்கொண்டபோது தீரமிக்கப் போராட்டமாக வெடித்தது.

இதைக் கண்டு அஞ்சிய முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களை “காஷ்மீரைப் போல இரும்புக்கரம் கொண்டு முழுமையாக ஒடுக்குவோம்” என்று கொக்கரித்ததோடு, ஏராளமான உழைக்கும் மக்களைக் கொடூரமான முறையில் கைது செய்து சிறையிலடைத்துள்ளார்.

ஆனால், இத்தகைய தீரமிக்க மக்கள் போராட்டங்களை தேர்தல் அரசியலாகக் சுருக்கிவிடாமல், பாசிச கும்பலுக்கு எதிரான மாபெரும் மக்கள் திரள் இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு, பாசிச எதிர்ப்பு சித்தாந்தமும் மாற்று திட்டமும் முன்நிபந்தனையாகும்.

எனவே, குறைந்தபட்சச் செயல்திட்டத்தின் அடிப்படையில், களத்தில் நெஞ்சுரத்தோடு போராடிக்கொண்டிருக்கும் அடித்தட்டு உழைக்கும் மக்கள் மற்றும் முற்போக்கு – பாசிச எதிர்ப்புச் சக்திகளுடன் கைகோர்த்து, பாசிச பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கான கூட்டுப் போராட்டங்களை உடனடியாகக் கட்டியமைக்க வேண்டும். அத்தைகைய போராட்டங்களே, வரவிருக்கும் நாள்களில் மேற்குவங்க மண்ணிலிருந்து பாசிசத்தை அடியோடு வீழ்த்தி, மக்களுக்கான ஜனநாயகத்தையும் உரிமையையும் மீட்டெடுக்கும்.


அப்பு

(புதிய ஜனநாயகம் – ஜூன் 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க