பேருற்சாகத்தோடு நடைபெற்று முடிந்த சென்னை மாவட்ட ம.அ.க. பொதுக்குழு கூட்டம்

அதிகப்படியான இளைஞர்களைக் கொண்டு நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டமாகவும் இக்கூட்டம் இருந்தது. த.வெ.க. அரசின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ள இச்சூழலில் சாரியான மாற்றை முன் வைத்துள்ள நாம் அரசியலை இன்னும் தீவிரமாகக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் இப்போது ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நமது அரசியலால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என தோழர்கள் தெரிவித்தனர்.

02.08.2026

பத்திரிகைச் செய்தி

பேருற்சாகத்தோடு நடைபெற்று முடிந்த சென்னை மாவட்ட மக்கள் அதிகாரக் கழக பொதுக்குழு கூட்டம்

மக்கள் அதிகாரக் கழகத்தின் சென்னை மாவட்டத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் 02-08-2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் மற்றும் சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் அமிர்தா தலைமை தாங்கினார். சில தோழர்கள் மட்டும் சொந்த வேலை காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

திட்டமிடப்பட்டு முறையான நிகழ்ச்சி நிரலோடு கூட்டம் தொடங்கியது. முதலில் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதன் பிறகு நக்சல்பாரி புரட்சியாளர் மேனாள் ம.க.இ.க. பொதுச்செயலாளர் தோழர் கதிரவனுக்கு சிவப்பு அஞ்சலி செலுத்தப்பட்டது. தோழர் ஆகாஷ் கதிரவன் தோழரின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் அவரிடமிருந்து நாம் வரித்துக் கொள்ள வேண்டிய வர்க்க உணர்வைப் பற்றியும் பேசினார்.

இன்றைய சமகால அரசியல் நிலைமைகள் பற்றி தோழர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டது. த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்ற இந்த மூன்று மாத காலத்தில் துணை வேந்தர் நியமன தேர்வுக் குழுவில் 5 பேரை இணைக்கும் பா.ஜ.க. செயல்திட்டத்தைச் செயல்படுத்தும் த.வெ.க. அரசு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாம் இடத்திற்கு பின்னுக்குத் தள்ளப்பட்ட விவகாரம், நீட் தேர்விற்கு எதிராகப் போராடிய மாணவர்களை தமிழ்நாடு அரசு போலீஸை வைத்து ஒடுக்கியது, NEET, EWS – க்கு எதிராக நடைபெற இருந்த திராவிடர் கழக வாகன பரப்புரைக்கு அனுமதி மறுத்து வரலாற்றில் முதல்முறையாக பெரியார் திடலில் போலீஸை குவித்து போராட்டத்தை ஒடுக்கியதென பா.ஜ.க. தமிழ்நாட்டில் வளர்வதற்கு செப்பனிடும் வேலையை த.வெ.க. அரசு செய்வதும், மாநில உரிமைகளை பா.ஜ.க. பறித்து வரும்போது முதலமைச்சர் விஜய் கள்ள மவுனம் சாதிப்பது என மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை த.வெ.க. அரசு சந்தித்து வருகிறது என்பதைப் பற்றி தோழர்களோடு விவாதிக்கப்பட்டது. இளம் தோழர்களும் விவாதத்தில் ஊக்கமாகவும் ஊணர்வுபூர்வமாகவும் கலந்து கொண்டு தாங்கள் நடைமுறையில் சந்தித்த த.வெ.க. நபர்களின் அரசியல் மற்றும் த.வெ.க. செய்யும் திசை திருப்பும் அரசியல் என தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்ததோடு எந்த சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி த.வெ.க. வெற்றி பெற்றதோ அதுவே இன்று முதல்வர் விஜய்க்கு எதிராகத் திரும்பி உள்ளதாக தோழர்கள் கூறினார்.

அடுத்த நிகழ்ச்சி நிரலாக சென்னை மாவட்ட மக்கள் அதிகாரக் கழகத்தின் 6 மாதகால வேலைப் பரிசீலனையைப் பொறுத்தவரை பல்வேறு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் ஊக்கமாகப் பங்குபெற்று வினையாற்றி உள்ளோம் என்பதைப் பரிசீலித்தோம்‌.

வெனிசுலா அதிபர் மதுரோ கைதை கண்டித்து ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைந்து நாம் நடத்திய போராட்டத்தில் அனைவரின் பங்களிப்பு, நம் முழக்கத்தின் கீழ் அனைவரையும் பேச வைத்தது நாம் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆகாஷ் டெலிசன் கொட்டடிக் கொலை நடந்து 100-வது நாள் தமிழ்நாடு முழுவதும் மனு கொடுக்கும் இயக்கத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து மனு கொடுக்கப்பட்டது. மேலவளவு முருகேசன் படுகொலை நினைவு தினம் கடைப்பிடிப்பு, கவின் ஆணவப் படுகொலை முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் கடைப்பிடித்ததும் அது ஜனநாயக சக்திகள் மத்தியில் தலித் பிரச்சனைக்கு நாம் தொடர்ச்சியாகப் போராடி வருவதை உணர்த்தியது. இது சென்னை பகுதியில் ஏற்படுத்திய தாக்கத்தையும் அரசியல் ரீதியாக நாம் வளர்ந்துள்ளதையும் தெளிவாகக் காட்டும் படி இருந்ததால் புதிய தோழர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அதிகப்படியான இளைஞர்களைக் கொண்டு நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டமாகவும் இக்கூட்டம் இருந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட தோழர்களில் பெரும்பாலானவர்கள் முதல் முறை பொதுக் குழுவில் கலந்து கொள்பவர்கள். மிகச் சிறப்பாக கூட்டம் நடைபெற்றதாகவும் சமகால அரசியல் நிலைமையைப் பற்றிய அரசியல் பார்வை கிடைத்ததாகவும் மற்ற அமைப்புகளில் நடப்பது போல் இல்லாமல் எளிமையாகப் புரியும்படி இக்கூட்டம் நடைபெற்றதாகக் கூறினர்.

இக்கூட்டத்திற்கான தீர்மானத்தை தோழர் அஜித் வாசித்தார். தோழர்களின் கர ஒலியோடு அனைத்து தீர்மானங்களும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

த.வெ.க. அரசின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ள இச்சூழலில் சாரியான மாற்றை முன் வைத்துள்ள நாம் அரசியலை இன்னும் தீவிரமாகக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் இப்போது ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நமது அரசியலால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என தோழர்கள் தெரிவித்தனர். எல்லா பிரச்சினைகளையும நம் அரசியல் கண்ணோட்டத்தோடு தெளிவாக விவாதித்தும் அடுத்தகட்ட வேலைகளை இன்னும் வேகமாக எடுத்துச் செல்வோம் என இளைஞர்கள் பங்கேற்புடன் பேருற்சாகத்தோடு நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் இறுதியில் பாட்டாளி மக்கள் சர்வதேசிய கீதத்துடன் முடிவடைந்தது.

மக்கள் அதிகாரக் கழகம் – சென்னை மாவட்ட பொதுக் குழு தீர்மானங்கள்

1. செங்கல்பட்டு: ஊனைமாஞ்சேரி, நல்லம்பாக்கம் ஊராட்சிகளில் இயங்கும் சட்டவிரோத கிரஷர்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்.

இது குறித்து மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உரிய முறையில் வழக்குப் பதிவு செய்து அதன் உரிமையாளர்களைக் கைது செய்ய வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக டன் கணக்கில் கனிமங்களைக் கொண்டு செல்லும் லாரிகளை பறிமுதல் செய்ய வேண்டும். குறிப்பிட்ட லாரி உரிமையாளர்களைக் கைது செய்ய வேண்டும்.

மாசை கட்டுப்படுத்தத் தவறிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.

2. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள ஜெயின் மெட்டல் காப்பர் ( Jain Resource Recycling Ltd) தொழிற்சாலையில் மற்றொரு கொடூர விபத்து நேர்ந்துள்ளது. ஜெயின் ரிசோர்ஸ் ரீசைக்கிளிங் நிறுவனம், தாமிரம், அலுமினியம் மற்றும் ஈயம் போன்ற கழிவுப் பொருட்களை வைத்து வாகன, மின்சார மற்றும் கட்டுமான தொழில்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களாக மாற்றி, இரும்பு அல்லாத உலோகப் பொருட்களை உற்பத்தி செய்கிறது. கும்மிடிப்பூண்டியைச் சுற்றி இரும்பு மற்றும் காப்பர் தொழிற்சாலைகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்வதுடன் அதைக் கண்காணிக்கத் தவறிய அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்;

என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.

மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிடவும், தொடர்ச்சியாக அரங்கேறும் தொழிற்சாலை விபத்துகளையும், தொழிலாளர்கள் பலியிடப்படுவதையும் தடுத்து நிறுத்திட இந்த நச்சு ஆலைகளால் வாழ்வாதார பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் பகுதிவாழ் மக்களையும், பாதுகாப்பற்ற நிலையில் பணிபுரியும் தொழிலாளிகளையும் ஒருங்கிணைத்த போராட்டங்களை தொழிற்சங்கங்களும் ஜனநாயக சக்திகளும் வலுவாக கட்டியமைக்க வேண்டும்.

3. தாம்பரம் மாநகராட்சியில் கட்டண உயர்வு ரத்து செய்ய பொதுமக்களும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்தனர்.

முறையாக குடிநீர் விநியோகம் செய்யாமல் மூன்று மடங்கு கட்டண உயர்வுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் மக்கள் அதிகம் பாதிப்படுக்கின்றனர்.

மக்களின் எதிர்ப்பால் தற்போது கட்டணம் வசூலிக்கவில்லை. ஆனால் 22 ம் வார்டில் இன்னும் கட்டணம் வசூலிக்கப்பட்டுவருகிறது.

தனியார்மயத்தின் விளைவால் இன்று குடிநீர் விற்பனை பண்டமாக மாறி மக்களுக்கு அடிப்படை உரிமைகளைக் கொடுக்க வக்கில்லமால் மேலும், மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கிறது.

2025 நவம்பர் 28-ஆம் தேதி வெளியிடப் பட்ட செங்கல்பட்டு மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு இன்னும் அமலில் உள்ளது. இதை ரத்து செய்து மக்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும். தாம்பரம் மாநகராட்சியின் இத்தகைய போக்கை மக்கள் அதிகாரக் கழகம் கண்டிக்கிறது.

4. கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு அருகே உள்ள மிக முக்கிய வடிகாலாகத் திகழும் பக்கிங்காம் கால்வாயில், டன் கணக்கில் கட்டுமான கழிவுகளும் மணலும் கொட்டப்பட்டு நீர் வழித்தடம் முற்றிலுமாக தூர்ந்துள்ளது.

வட சென்னையின் கேப்டன் காட்டன் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய் போன்றவற்றின் உபரி நீரை உள்வாங்கி வெளியேற்றும் ஒரே முக்கிய தடம் இந்த பக்கிங்காம் கால்வாய் தான். ஆனால், தற்போது கொட்டப்பட்டுள்ள கழிவுகளால் இந்தக் கால்வாயின் அகலம் மற்றும் நீர் செல்லும் திறன் 75% வரை முற்றிலும் குறைந்து, ஒட்டுமொத்த வடிகால் அமைப்பும் தூர்ந்துள்ளது.

2023ஆம் ஆண்டு மிக்ஜாம் புயலின் போது, இதேபோன்ற அடைப்புகளால் நீரோட்டம் தடைப்பட்டு, வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து பல நாட்கள் மக்கள் தவித்தனர். தற்போதைய அடைப்பை உடனடியாக நீக்காவிட்டால், லேசான மழை பெய்தால் கூட கேப்டன் காட்டன் கால்வாய் உடைப்பெடுத்து வியாசர்பாடி, முல்லை நகர், சத்தியமூர்த்தி நகர், உதயசூரியன் நகர், எழில் நகர் மற்றும் ஜே.ஜே.ஆர் நகர் போன்ற ஒட்டுமொத்த பகுதிகளும் மீண்டும் தண்ணீரில் மூழ்கும் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

வழக்கமாக வெள்ள நீர் சில மணி நேரங்களில் வடிந்துவிடும். ஆனால், வடிகால் தடம் முக்கால்வாசி அடைபட்டுள்ளதால், தேங்கிய மழைநீர் வடிவதற்குப் பல நாட்களாகும். இப்பகுதியில் மயானம் கட்டுவதற்காகத் தான் இந்த மணல் கொட்டப்பட்டது என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டதாகக் கூறி, கழிவுகளை அகற்ற ஒப்பந்ததாரருக்கு 3 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளனர். மேயர் பிரியா தலைமையில் பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டங்கள் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான டன் தூர் வாரப்பட்டுள்ளதாகக் கூறினாலும், கள நிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது. கால்வாயில் இன்னும் ஆகாயத்தாமரைகளும் குப்பை கழிகளும் மண்டிக் கிடக்கின்றன. மழைக்காலம் தொடங்குவதற்குள் இந்த ஆபத்தான அடைப்புகளைப் போர்க்கால அடிப்படையில் அகற்றாவிட்டால், இந்த ஆண்டும் வட சென்னை மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நடுரோட்டிற்கு வருவது நிச்சயம் இதை உடனடியாக சரி செய்ய மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.

5. சென்னை மாவட்டத்தில் தொடர்ந்து இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதால் அதிக புழுக்கம் நிலவும் சூழலில் வயதானவர்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பகல் முழுவதும் கடுமையான வெயிலில் வேலை பார்த்து வீட்டிற்குத் திரும்பும் மக்கள் இரவிலும் தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். பல நாட்கள் மின்வெட்டுத் தொடர்வதால் மின் நிலையங்களை நடுநிசியில் இரவு இரண்டு மணிக்கு ஆவேசமாக மின் நிலையங்களை முற்றுகையிட்டு மின்துறை அதிகாரிகளிடம் ஏன் மின்வெட்டைச் சரி செய்யவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.மின்வெட்டு பிரச்சினையை முறையாகச் சரி செய்வதற்கான வேலைகளை முன்னெடுக்காமல் தி.மு.க. தான் மின்வெட்டுக்குக் காரணம், பியூசை பிடுங்கி விடுகிறார்கள் என்று சமூக ஊடகங்களில் செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.

அதிகாரத்தில் இருக்கக்கூடிய த.வெ.க. அரசு மக்கள் பிரச்சினைகளுக்குப் பொறுப்பாக பதில் சொல்ல வேண்டும். மக்கள் பிரச்சினைகளில் முறையாகத் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டியது இந்த அரசின் கடமை.

தொடரும் மின்வெட்டைச் சரி செய்யாமல் மக்களை அவலத்தில் தள்ளும் த.வெ.க. அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. மின் வெட்டு பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு த.வெ.க. சரி செய்ய வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.


தோழர் அமிர்தா,
சென்னை மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
7358482113

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க