19.07.2026
மக்கள் அதிகாரக் கழகத்தின் கிளை கோத்தகிரியில் உதயம்!
பத்திரிகைச் செய்தி
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள, அம்பாள் நகர் மலை கிராம மக்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி ஏற்படுத்தித் தரக்கோரி அரசிடம் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்.
இக்கிராமத்தில் இருந்து முதன்மை சாலையை (கோத்தகிரி-சோலூர் மட்டம் முதன்மை சாலை) அடைவதற்குத் தடையாக ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சிலருக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் 250 மீட்டர் நீளத்திற்கு 10 அடி அளவில் நிலத்தைக் கையகப்படுத்தினால் இந்த கிராம மக்கள் எளிதில் நகரத்தை அடைய முடியும். ஆனால், இந்த வழியாக சாலை அமைக்கப்படாததால், சுமார் ஒரு கி.மீட்டர் தொலைவுக்கு காட்டுவழியே நடைபயணமாக சுற்றி வந்து முதன்மை சாலையை அடைய வேண்டியுள்ளது.
இப்பிரச்சினை தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுப்பது; அரசு வழங்கிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை உட்பட அனைத்து ஆவணங்களையும் தபால் மூலம் ஆட்சியருக்கு அனுப்புவது போன்ற பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் அரசு சார்பாக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. மேற்கண்ட போராட்டங்கள் பயனளிக்காததால், மக்கள் அதிகாரக் கழகத்தைப் பற்றி அறிந்த ஒரு நண்பர் மூலமாக, எமது அமைப்பைத் தொடர்பு கொண்டு, சாலை பிரச்சினைக்கு உதவி செய்யுமாறு மக்கள் கோரினர்.
மக்களது கோரிக்கையை ஏற்று, ஜூன் 2025-இல் அம்பாள் நகருக்கு நேரில் சென்று அம்மக்களது பிரச்சினையை விரிவாகக் கேட்டறிந்தோம். அப்போது அம்மக்கள் ஓர் இடத்தில் கூடி “பல ஆண்டுகளாக போராடியும் நடவடிக்கை எடுக்காத அரசு, இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டங்களை மேற்கொள்வோம்” எனத் தெரிவித்தனர். இப்பிரச்சினையை மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் மாறன் காணொளி பதிவாக தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்தக் காணொளியைப் பார்த்த அரசு அதிகாரிகள் மற்றும் போலீசுதுறையினர் அம்பாள் நகருக்குச் சென்று, “மக்கள் அதிகாரக் கழகம் கட்சியை இப்பிரச்சினையில் ஈடுபடுத்த வேண்டாம். நாங்கள் செய்து தருகிறோம்” என்று நயவஞ்சகமாகப் பேசினர். மேலும் கழகத்தைப் பற்றி அவதூறு செய்து மக்களுக்கு பீதியூட்டினர்.
இந்த அவதூறுகளுக்கும் அரசின் நயவஞ்சக நாடகங்களுக்கும் அடிபணியாத மக்கள், “இதுவரையில் எங்களது ஊருக்கு அரசு அதிகாரிகள் இந்தப் பிரச்சினை தொடர்பாக வந்ததே இல்லை, நீங்கள் வந்து காணொளி பேசி போட்ட பின்னர்தான் அரசு அதிகாரிகள் எங்கள் ஊருக்கே வந்துள்ளனர்.” என நம்பிக்கையாக தெரிவித்து அடுத்த கட்ட போராட்டங்களை மேற்கொள்வோம் எனக் கூறினர்.
இதன் பின்னர் நமது கட்சியின் சார்பாக, அம்பாள் நகர் மக்களுக்கு சாலை வசதியை ஏற்படுத்தக் கோரி கடந்தாண்டு ஆகஸ்டில் ஆர்ப்பாட்டத்திற்கு துண்டறிக்கை அச்சடித்து, மக்கள் மத்தியில் விநியோகித்து, மக்களை திரட்ட தொடங்கினோம். இந்த நடவடிக்கைகளில் மக்கள் மிகவும் ஆர்வமாக பங்கேற்று துண்டறிக்கையை கோத்தகிரி மக்களிடம் கொண்டுச்சென்று சேர்த்தனர்.
இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையிலேயே, ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி மனு கொடுத்தனர். இந்தப் பிரச்சனையில் மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் மக்களுக்கு உற்றத் துணையாக நின்று வழிகாட்டி உதவினர்.
இந்நடவடிக்கைகள் அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியதையடுத்து, இப்பிரச்சினையை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் படிப்படியாக மேற்கொண்டனர். இதனால் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தோம்.
இதன் பின்னர் 2026 சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருந்ததால் இப்பிரச்சினை தொடர்பான பணிகள் முடங்கின. தேர்தல் முடிந்த பின்னர் இப்பிரச்சினையை நிறைவேற்றும் நடவடிக்கைகள் இறுதி கட்டத்திற்கு வந்து தேங்கின.
இந்நிலையில், அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்து இப்பிரச்சினை தொடர்பாக கேட்டபோது, அவர்களைப் பாருங்கள், இவர்களைப் பாருங்கள் என மீண்டும் மக்களை அலைக்கழிக்க தொடங்கினர்.
ஆகவே, இனியும் இந்த அரசிடம் கெஞ்சி எந்த தீர்வும் கிடைக்காது என்பதை மக்கள் தங்களின் சொந்த அனுபவங்களின் மூலமாக உணர்ந்தனர். மக்களுக்காக போராடுகின்ற மக்கள் அதிகாரக் கழகத்தில் இணைந்து அமைப்பாக போராடும் பொழுதுதான் இப்பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வர முடியும்; தங்களது உரிமைகளை குறைந்தபட்சம் தற்காத்துக் கொள்ள முடியும் என்றுணர்ந்து அம்மக்கள் மக்கள் அதிகாரக் கழகத்தில் இணைய முன்வந்தனர்.
தமது ஊருக்கு மட்டுமல்ல கோத்தகிரியில் உள்ள பல உட்புற கிராமங்களின் அடிப்படை வசதிகளுக்காகவும், மக்களுக்காக குரல் கொடுக்கின்ற மக்கள் அதிகாரக் கழகத்தில் இணைவதுதான் தீர்வு என்று அம்மக்கள் உணர்ந்து உள்ளனர்.
முக்கியமாக, உளவுத்துறையும் போலீசும் கழகம் குறித்து அவதூறு செய்து மக்களுக்கு பீதியூட்டிய போதும், மக்கள் கழகத்தின் உறுப்பினராக உறுதிமொழி ஏற்று நம்பிக்கையுடன் கட்சியில் இணைந்துள்ளனர்.
அதனடிப்படையில் கோத்தகிரி கிளையின் முதல் கூட்டம் ஜூலை மாதம் 19-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தோழர் சண்முகம் செயலாளராகவும், தோழர் ராஜ் இணைச் செயலாளராகவும், தோழர் சந்திரசேகர் பொருளாளராகவும் தோழர் செல்வம் மற்றும் தோழர் அற்புதராஜ் கிளை உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். அந்தவகையில், கோவை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் சங்கர் தலைமையில் கோத்தகிரி மக்கள் அதிகாரக் கழகத்தின் முதலாவது கிளைக் கூட்டம் நடைபெற்றது.
புதிதாக அமைப்பில் இணைந்துள்ள தோழர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசிய மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச்செயலாளர் தோழர் மாறன், “அம்பாள் நகர் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம். பாசிசத்துக்கு எதிரான பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டியமைக்க ஒன்றிணைவோம்” என்று சிற்றுரை ஆற்றி தோழர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இக்கிளைக் கூட்டத்தில், வயது மூப்பின் காரணமாக ஜூலை 13 அன்று மறைந்த நக்சல்பாரி புரட்சியாளர், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மேனாள் பொதுச் செயலாளர் தோழர் கதிரவன் அவர்களுக்கு செவ்வணக்கம் செலுத்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
![]()
இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கோவை மாவட்டம்.
9488902202
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





