
21.07.2026
ஏலகிரி: அரசின் துணையுடன் முறைகேடாக விற்கப்படும் பழங்குடியினர் நிலங்கள்
பத்திரிகைச் செய்தி
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்களின் நிலங்கள், சட்ட விதிமுறைகளை மீறி வெளியாட்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், தங்களது நில உரிமை பறிக்கப்படுவதாகவும் மலைவாழ் மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
மலையில் உள்ள பழங்குடியின மக்களின் நிலங்களை, மலைவாழ் அல்லாத வெளி நபர்களுக்கு விற்பனை செய்யக் கூடாது என்ற சட்ட விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. ஆனால், முறையான ஆவணங்கள் மற்றும் சரிபார்ப்புகள் இல்லாமல், அரசுத் துறை மூலமாகவே இத்தகைய நிலப் பதிவுகள் (கிரையம்) தடையின்றி நடப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக ஏலகிரி மலை கிராம மக்கள், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, “சட்டத்தை மீறி அரசு எப்படி வெளி நபர்களுக்கு எங்கள் நிலங்களை பதிவு செய்து கொடுக்கிறது?” என கேள்வி எழுப்பி தங்களது வாழ்வாதாரத்தை காக்கப் போராடி வருகின்றனர்.
ஏலகிரி மலை தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வதால், அங்கு தங்கும் விடுதிகள் (Resorts), பண்ணை வீடுகள் (Farm houses) மற்றும் சொகுசு பங்களாக்கள் கட்டுவதற்காக வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலத்தவர்களின் முதலீடுகள் அதிகரித்துள்ளன.
நிலங்கள் பெரிய அளவில் (செண்ட் கணக்கில்) பெரும் பணம் படைத்த வெளியாட்களுக்கும், சுற்றுலா நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யப்படுவதால், நிலத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், உள்ளூர் மலைவாழ் மக்களாலேயே நிலங்களை வாங்க முடியாத அவலநிலை உருவாகியுள்ளது.
ஆகவே, “தலைமுறை தலைமுறையாகத் தாங்கள் விவசாயம் செய்து வரும் அனுபவ நிலங்களுக்கு, தங்களுக்குச் சாதகமாக வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்” என்று ஏலகிரி மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் அரசியல் இயக்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
விதிமுறைகளை மீறி நடக்கும் ரியல் எஸ்டேட் விற்பனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; பழங்குடியின மக்களின் பாரம்பரிய நில உரிமைகளைப் பாதுகாக்க அரசு உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பழங்குடியின மக்களுக்காக மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பிய முன்னணியாளர் சுப்ரமணி மீது போலீசு வழக்குப் பதிந்துள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
மேலும், ஏலகிரி பழங்குடி மக்களின் கோரிக்கைகளை உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும்; ஏலகிரி மலைப் பகுதியில் ரியல் எஸ்டேட் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.
![]()
இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











