2022 ஆம் ஆண்டில் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பட்டியல் சாதியினருக்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான வன்கொடுமைகள் பதிவாகியுள்ளதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, பட்டியல் சாதியினருக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளில் 97.7 சதவீதம் 13 மாநிலங்களில் பதிவாகியுள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் 12,287 வழக்குகள் (மொத்த வழக்குகளில் 23.78 சதவீதம்), ராஜஸ்தானில் 8,651 வழக்குகள் (16.75 சதவீதம்), மத்தியப் பிரதேசத்தில் 7,732 வழக்குகள் (14.97 சதவீதம்) பதிவாகியுள்ளன.
குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வழக்குகளைக் கொண்ட மற்ற மாநிலங்களில் பீகார் 6,799 வழக்குகள் (13.16 சதவீதம்), ஒடிசா 3,576 வழக்குகள் (6.93 சதவீதம்), மகாராஷ்டிரா 2,706 வழக்குகள் (5.24 சதவீதம்) ஆகியவை உள்ளன. 2022 ஆம் ஆண்டில் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் பதிவான மொத்த வழக்குகளில் இந்த ஆறு மாநிலங்களில் மட்டும் கிட்டத்தட்ட 81 சதவீத வழக்குகள் பதிவாகியுள்ளன.
மொத்தத்தில், 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 51,656 பட்டியல் சாதியினருக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று இவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
படிக்க: உ. பி: இஸ்லாமிய உணவகங்கள் மீது வன்முறைக்கு வழிவகுக்கும் யோகி அரசு!
அதேபோல், பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளில் பெரும்பாலானவை 13 மாநிலங்களில் பதிவாகியுள்ளன என்று இவ்வறிக்கை மேலும் எடுத்துக்காட்டுகிறது. பட்டியல் பழங்குடியினர் சம்பந்தப்பட்ட 9,735 வழக்குகளில், மத்தியப் பிரதேசத்தில் 2,979 வழக்குகள் (30.61 சதவீதம்), ராஜஸ்தானில் 2,498 வழக்குகள் (25.66 சதவீதம்), ஒடிசாவில் 773 வழக்குகள் (7.94 சதவீதம்) பதிவாகியுள்ளன.
பட்டியல் பழங்குடியினர் தொடர்பான குறிப்பிடத்தக்க வழக்குகளைக் கொண்ட மற்ற மாநிலங்கள்: மகாராஷ்டிரா 691 வழக்குகள் (7.10 சதவீதம்), ஆந்திரா 499 வழக்குகள் (5.13 சதவீதம்) ஆகும்.
மேலும், வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதற்கு போதுமான சிறப்பு நீதிமன்றங்கள் இல்லை என்றும், 14 மாநிலங்களில் உள்ள 498 மாவட்டங்களில் 194 மாவட்டங்களில் மட்டுமே வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குகளை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கூறியுள்ளது.
எனவே சாதி அடிப்படையிலான வன்முறைகளைத் தடுக்கவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு வலுவான பாதுகாப்பை வழங்கிடவும் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.
முக்கியமாக பாசிசக் கும்பல் ஆளும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகம் நடைபெற்றுள்ளதாக அரசு அறிக்கையே கூறுகிறது. எனவே, பாசிசக் கும்பலால் விளம்பரப்படுத்தப்படும் ‘டபுள் இன்ஜின் சர்க்கார்’ ஆட்சி என்பது பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மக்களுக்கு முற்றிலும் எதிரானது என்பது இவ்வறிக்கையின் மூலம் மீண்டும் அம்பலமாகியுள்ளது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram