
13.06.2026
தருமபுரி: அடிப்படை வசதிகளே இல்லாத
கரப்பாடி பழங்குடியின மாணவர் பள்ளி
பத்திரிகைச் செய்தி
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கரப்பாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அடிப்படை வசதிகள் இன்றி மோசமான நிலையில் உள்ளது. மேலும் கிராமத்தில் உள்ள அங்கன்வாடியும் செயல்பாட்டில் இல்லை. மேற்கண்ட கிராமத்தில் ஏறத்தாழ 50 பழங்குடியினக் குடும்பங்கள் உள்ளன. இந்தப் பள்ளியில் 14 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் ஒரு தலைமையாசிரியரும், ஒரு ஆசிரியரும் உள்ளனர்.
அடிப்படையான குடிநீர் வசதி கூட இப்பள்ளியில் இல்லை. மாணவர்கள் வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து குடிக்கின்றனர். முறையான கழிப்பறை வசதி இல்லாததால், மாணவர்கள் வெட்டவெளியில் சிறுநீர் கழிக்கும் நிலை உள்ளது. பள்ளிக்கு மின்சார இணைப்பு இருந்தாலும், வகுப்பறைகளில் மின்விசிறி கிடையாது.
சமையலறையும் முறையாகப் பராமரிக்கப்படாத நிலையிலேயே உள்ளது. சமையலறையில் எலிகளின் கழிவுகளும், உலர் உணவுப் பொருட்களைச் சேமிக்கப் பயன்படுத்தப்படும் பாத்திரங்களில் எலிகள் உலவும் மோசமான நிலைமையை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திகளிலிருந்து அறிய முடிகிறது.
கடந்த ஏப்ரலில் இக்கிராமத்தில்தான், பழங்குடிப் பெண் ஒருவர் பிரசவத்தின்போது இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கிராமத்தில் சத்துணவு விநியோகமோ, மருத்துவ முகாமோ நடத்தப்படவில்லை என்ற உண்மையை, மாவட்ட நிர்வாகத்தின் மோசமான செயல்பாட்டை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அப்போது அம்பலப்படுத்தியது.
பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும், அவர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கும் அரசு முறையான அடிப்படை வசதிகள் செய்து தராமல் அலட்சியமாக இருப்பது இது முதன்முறையல்ல; தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்வாகும்.
பழங்குடி மக்களை இரண்டாந்தர குடிமக்களாகவும், வாழத் தகுதியற்றவர்களாகவும் அதிகார வர்க்கம் கருதுகின்றது என்பதைத்தான், அம்மக்களின் மீதான புறக்கணிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.
பழங்குடி மக்கள் மீதான அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
- பழங்குடி மக்களின் கல்வி, உணவு, சுகாதாரம், மருத்துவம், வேலைவாய்ப்பு, வாழ்விடம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் அரசு முழுமையான அக்கறையோடு செயல்பட வேண்டும்.
- பழங்குடி மக்களுக்கு அவர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுகிறதா என்பதைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து, அவற்றை உடனுக்குடன் பூர்த்தி செய்ய வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.
- பழங்குடி மக்களின் நலனில் அக்கறையின்றி, அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பழங்குடி மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காக, அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
![]()
இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





