18.06.2026

தருமபுரி : வனத்துறை அதிகாரிகளால் பறிக்கப்படும்
பன்னப்பட்டி இருளர் பழங்குடி மக்களின் வாழ்வுரிமை

பத்திரிகைச் செய்தி

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், கூத்தப்பாடி ஊராட்சிக்குட்பட்ட பன்னப்பட்டி சருக்கல் ஜொனை காவல் நத்தம் பகுதியில், சுமார் 260 க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட, 56 இருளர் பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

காலங்காலமாக அப்பகுதியில் இருளர் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். அம்மக்கள் வனத்துக்குள் சென்று, தேவையான நாட்கள் தங்கி, காட்டில் கிடைக்கும் காய், கனி, கிழங்கு வகைகள், கீரை வகைகள், தேன் போன்ற உணவுப் பொருட்களையும், சிறு மகசூலையும் சேகரித்து வாழ்ந்து வருகின்றனர். பென்னாகரத்திலிருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் உள்ள சோதனைச் சாவடி அருகில் அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது.

2008 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்ட சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் (பதிவு எண் 136/2008) பன்னப்பட்டி என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான வங்கிக் கணக்கும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பழங்குடியினர் சான்று போன்ற ஆவணங்கள் அனைத்தும் பன்னப்பட்டி முகவரியில் உள்ளன.

தமிழ்நாடு அரசானது, வன விளைப் பொருட்கள் மற்றும் சிறு மகசூலை அனுபவித்துக் கொள்ள 2003 ஆம் ஆண்டில் ஆணையும் பிறப்பித்துள்ளது. மேலும் ஒன்றிய அரசின் 2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டமும் பழங்குடி மக்களின் மேற்கண்ட உரிமையை உறுதிப்படுத்துகிறது.

ஆனால், தற்போது பன்னப்பட்டியில் வசிக்கும் இருளர் பழங்குடி மக்களின் உரிமையை வனத்துறை அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். இருளர் பழங்குடி மக்களை வனத்தை விட்டு வெளியேற வேண்டும் என மிரட்டி வருவதாக அம்மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பென்னாகரத்திலிருந்து ஒகேனக்கல் செல்லும் சாலை சந்திப்பில் வனத்திற்கு தொன்றுதொட்டு செல்லும் வழியையும் கடந்த சில ஆண்டுகளாக அடைத்து விட்டார்கள்.

இது தொடர்பாக, ஒருமுறை வனக்காப்பாளர் (Forest Guard), வனக்காவலர் (Forest Watcher) பழங்குடி மக்களின் அரிசி, பருப்பு, பாத்திரங்களை சேதப்படுத்தியுள்ளனர். சின்னதாயி, ராதிகா, கோகிலா, பேபி, மௌனா, சர்க்கரை ஆகியோரை வன அலுவலகத்துக்கு அழைத்து வந்து, மாலை வரை அங்கேயே வைத்திருந்து, ’இனிமேல் பன்னப்பட்டிக்குள் நுழையவே கூடாது’ என மிரட்டி அனுப்பியதாக அம்மக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

மக்களை சட்டவிரோதமாக அடக்குமுறை செய்த அந்த அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட வன அலுவலருக்கும், பிற அதிகாரிகளுக்கும் பலமுறை மனுவும் அளித்துள்ளனர். தொடர்ந்து இருளர் பழங்குடி மக்களின் உரிமைகளை மறுத்து வனத்துறை அதிகாரிகள் ஒடுக்கி வருவதைக் கண்டித்து அம்மக்கள் போராடி வருகின்றனர்.

ஆனால், இதுவரை மாவட்ட நிர்வாகம் அம்மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகின்ற வகையிலும், பழங்குடி மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவிய வனத்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்கின்ற வகையிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பது அம்மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பெயரளவிலான சட்டங்கள் இருந்தாலும், அதிகார வர்க்கம் பழங்குடி மக்களை மனிதர்களாகக் கூட மதிப்பதில்லை, அவர்களின் உரிமைகளை பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை என்பதே கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு துயர சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. வாச்சாத்தி உள்ளிட்ட சம்பவங்கள் நமக்கு இதைத்தான் முகத்தில் அடித்தாற்போன்று உணர்த்தின.

அம்மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதைப் பற்றி, அம்மக்கள் மீதான அடக்குமுறைகளைத் தடுப்பது பற்றி அரசு உயர் நிர்வாக அமைப்புகளும், ஆளுங்கட்சிகளும் அலட்சிய மனப்பான்மையையே இப்போதும், எப்போதும் வெளிப்படுத்தி வருகின்றன. கம்யூனிச இயக்கங்கள் தலைமையிலான மக்கள் போராட்டங்களே அம்மக்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கான ஒரே தீர்வாக இருந்து வருகிறது.

பன்னப்பட்டி இருளர் பழங்குடி மக்களின் மீது அடக்குமுறை செலுத்தி வரும் வனத்துறை அதிகாரிகளை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருக்கும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டிக்கிறோம்.

  • தமிழ்நாடு அரசே! தருமபுரி மாவட்ட நிர்வாகமே!
    பன்னப்பட்டி இருளர் பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக் கோரிக்கைகளை நிறைவேற்று!
  • அம்மக்களின் வன உரிமையை உடனடியாக மீண்டும் நிலைநாட்டு!
  • பன்னப்பட்டி இருளர் பழங்குடி மக்களை ஒடுக்கும் வனத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடு!
  • உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே!
    பன்னப்பட்டி இருளர் பழங்குடி மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்போம்! அதிகார வர்க்கத்தை நிர்ப்பந்திப்போம்!


இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

(இக்கட்டுரை 22.06.2026 அன்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads