கென் பெத்வா: மோடி அரசைப் பணிய வைத்த இன்னொரு போராட்டம்!

மலைவாழ் மக்களின் உறுதியான போராட்டமே இந்த பாசிச கும்பலைப் பேச்சுவார்த்தை என்ற கட்டத்திற்குப் பணிய வைத்துள்ளது. மேலும், முறையான சர்வே மீண்டும் நடத்தப்படும் என்று அரசு தரப்பிலிருந்து உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இதுவே மக்கள் போராட்டங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஆனால், இத்திட்டத்தைக் கைவிடுவதைப் பற்றி எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது ஒன்றிய அரசு.

டந்த சில வாரங்களாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள சட்டர்பூர் மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்தியப் பிரதேசத்தில் உள்ள கென் மற்றும் பெத்வா நதி இணைப்பு திட்டத்திற்கு (KBLP) எதிராக நடத்தப்படும் ஒரு போராட்டமாகும். இந்தக் கென் பெட்வா நதி இணைப்பு திட்டம் என்பது என்ன? இதனை எதிர்த்து மக்கள் போராடுவது ஏன்?

யமுனை நதியின் துணை நதிகளான கென் மற்றும் பெத்வா நதிகள் மத்தியப் பிரதேசத்திலிருந்து உத்தரப் பிரதேசம் வரை பாய்கின்றன. இதில் பெத்வா நதியில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்து வருகிறது. இந்நிலையில் தண்ணீர் அதிகமாக இருக்கும் கென் நதியை தண்ணீர் தட்டுப்பாட்டுடன் இருக்கும் பெத்வா நதியுடன் இணைப்பதற்கான கென் பெத்வா நதி இணைப்பு திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கான ஒப்புதல் டிசம்பர் 2021-இல் வழங்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைகள் தொடங்கவுள்ளது.

45 ஆயிரம் கோடி மதிப்பிலான இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் சட்டர்பூர் மற்றும் பன்னா கிராமத்தில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பிற்குள்ளாகும் அபாயம் உள்ளது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதால் சட்டர்பூர் மாவட்டத்தில் 5,288 குடும்பங்களும் பன்னா மாவட்டத்தில் 1,400 குடும்பங்களும் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படும். மொத்தமாக 24 கிராமங்கள் இடப்பெயர்வை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும்.

மேலும், அத்தடத்தில் உள்ள 6,017 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்படும். இதனால் அக்காடுகளில் உள்ள பல வகைப்பட்ட உயிரினங்களும் அழிவுக்குள்ளாகும். மேலும் பன்னா மாவட்டத்தில் முக்கியமான புலிகள் காப்பகம் (பன்னா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகம்) உள்ளது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதால் 70 சதவீதம் வரை அப்புறப்படுத்தப்பட வேண்டியிருக்கும்.

இத்திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்படுவதால் மலைவாழ் மக்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக 6,600க்கும் மேற்பட்ட கோல் மற்றும் கோண்ட் பழங்குடியினக் குடும்பங்கள் தங்கள் சொந்த நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். அவர்களின் நிலம் பறிக்கப்படுவதோடு, காடுகள் அப்புறப்படுத்தப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்படும். இப்பகுதிகளில் வாழும் மக்கள் பெரும்பாலும் தினக்கூலி வேலைகளைச் செய்தும், காடுகளில் கிடைப்பவற்றைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில், ஒன்றிய அரசு தரப்பிலிருந்து இவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாகவும் மாற்று இடம் வழங்குவதாகவும் உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது.

இடம் பெயரும் மக்களுக்கு மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ், ஏக்கருக்கு ₹6.5 லட்சம் இழப்பீட்டுடன் நகர்ப்புற வீட்டுமனை, அல்லது ஏக்கருக்கு ₹7 லட்சம் இழப்பீட்டுடன் கிராமப்புற வீட்டுமனை, அல்லது வீட்டுமனை பெற விருப்பமில்லையெனில் ஏக்கருக்கு ₹12.5 லட்சம் வழங்கப்படும் என்று அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் வீட்டுமனை வழங்கப்படாமல், பணமாக மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் பலருக்கு சொற்பமான அளவே வழங்கப்பட்டுள்ளது. மேலும், இழப்பீடு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட சர்வேக்களும் முறையாக நடத்தப்படவில்லை.

மரங்கள், பழத்தோட்டங்கள், குடிசைகள், கொட்டகைகள், கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்ட சொத்துகளுக்கான கூடுதல் இழப்பீடு மொத்தமாக வெறும் ₹2 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது. கையகப்படுத்தப்படும் வீடுகளுக்கான இழப்பீடும் ₹6 லட்சம் என்ற குறைந்த அளவிலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதைவிட முக்கியமாக, இந்தக் காடுகளைச் சார்ந்தே வாழ்ந்து வந்த மக்களுக்கு, காட்டு வளங்களைப் பயன்படுத்தும் உரிமையை இழப்பதற்காக எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை. மகுவா பூக்கள், தெண்டு இலைகள் போன்ற பொருட்களைச் சேகரித்து, அவற்றின் மூலம் உணவையும் வருமானத்தையும் ஈட்டிய அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

இந்தப் பழங்குடியின மக்களில் பலருக்கு இது முதல் இடம்பெயர்வு அல்ல. பன்னா புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டபோதும் அவர்கள் தங்கள் பூர்வீக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். தற்போது அவர்கள் மீண்டும் ஒருமுறை கட்டாய இடப்பெயர்வை எதிர்கொள்கின்றனர்.

மேலும், இப்பிரச்சினையில் வன உரிமைச் சட்டம் நடமுறைபடுத்தப்படாமல் உள்ளது. இச்சட்டமானது, மலை மற்றும் காட்டுப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் உரிமைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்வதுடன், இத்திட்டம் பற்றி தீர்மானிக்கின்ற உரிமையை கிராம சபைக்கு வழங்கும்.


படிக்க: உலகளாவிய நீர் திவால்நிலையும் இந்தியாவை சூழ்ந்திருக்கும் அபாயமும்


தற்போது நதிகள் இணைப்புத் திட்டத்தை எதிர்த்து அப்பகுதியில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். “ஜெய் கிசான் சங்கார்த்தன்” என்ற அமைப்பின் தலைவரான அமித் பத்மநாகர் ஒன்றிய அரசின் இந்த நதிநீர் இணைப்பு திட்டத்தைக் கண்டித்து 18 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். மேலும் அப்பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்கள் தங்கள் கழுத்துகளில் தூக்குக் கயிறுகளை மாட்டியும் (சிட்டா அந்தோலன்), நதிக்குள்ளே இருந்தும், தங்கள் உடல்கள் மீது சேற்றைப் பூசிக்கொண்டும் போராடி வருகின்றனர். ”எங்களுக்கு நியாயம் கொடுங்கள் அல்லது எங்களைக் கொன்று விடுங்கள்” (நியாய் தோ யா மார் தோ) என்ற முழக்கத்தை முன்வைத்து தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும், நிலத்திற்கு மாற்றாக தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுருவாக்கம் செய்து கொள்வதற்கு மாற்று நிலம் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அம்மக்கள் போராடி வருகின்றனர்.

பல பகுதிகளில் அவர்களுக்கு இழப்பீடு ஏற்கெனவே வழங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அம்மக்களோ தங்களில் ஒரு சிலருக்கு மட்டுமே சொற்பமான அளவில் இழப்பீடு வழங்கப்பட்டதாகவும், இன்னும் சில நபர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை என்றும் கூறியுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடந்த போராட்டத்தில் போலீசும், துணை ராணுவப் படையும் குவிக்கப்பட்டிருந்தனர். 18 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திலிருந்த அமித் பட்நாகரை வலுக்கட்டாயமாக போலீஸ் அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களிடம் மீண்டும் ஒரு புதிய சர்வே நடத்தி அவர்களுக்கு முறையான இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் களைக்கப்பட்டனர்.

45 ஆயிரம் கோடி மதிப்பிலான இத்திட்டத்தின் கான்ட்ராக்ட் என்.சி.சி லிமிடெட் (NCC Ltd.,) என்ற தனியார் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் கான்ட்ராக்ட்டை உறுதி செய்வதற்காகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த வாழ்விடத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் நடந்து வரும் இப்போராட்டத்தை எந்த பிரதான செய்தி ஊடகங்களும் இதுவரை வெளியில் கொண்டு வரவில்லை. மேலும், இரண்டு வாரங்களுக்கு மேலாக இவர்கள் போராடிய பின்னரே அவர்களிடம் பேச்சுவார்த்தை கூட நடத்தப்பட்டது.

தொடர்ச்சியாக இதுபோல மலைகளையும் காடுகளையும் கார்ப்ரேட்டின் கைகளில் தாரை வார்ப்பதற்காக அப்பகுதிகளில் பல ஆண்டு காலமாகக் குடியிருக்கும் பழங்குடியின மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

ஒரிசாவில் உள்ள மலைப்பகுதிகளில் உள்ள கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்பதற்காக அங்குள்ள மலைவாழ் மக்களை நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்திக் கொன்று குவித்து வருகின்றனர். அதைப்போல, இன்னும் பல மலைப்பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் அப்பகுதிகளுக்கு அரணாக விளங்கும் மலைவாழ் மக்களை அவர்களது வாழ்வாதாரத்தைப் பறித்து பூர்வீக இடத்தை விட்டு விரட்டியடிக்கும் மோடி கும்பல், இந்தியாவில் உள்ள இயற்கை வளங்களை கார்ப்ரேட்டுக்கு கூறு போட்டு விற்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வருகிறது.

கடந்த ஜனவரி 20, 2026 அன்று, “உலகளாவிய நீர் திவால்நிலை” (Global Water Bankruptcy) எனும் கட்டமைப்பு வீழ்ச்சிக்குள் நுழைந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் (UNU) எச்சரித்துள்ளது. இந்நிலையில் நீர்நிலைகளை கார்ப்ரேட்களுக்கு தாரைவாக்கும் வேலையை எந்த தடையுமின்றி செய்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

இப்படிப்பட்ட சூழலில் மலைவாழ் மக்களின் உறுதியான போராட்டமே இந்த பாசிச கும்பலைப் பேச்சுவார்த்தை என்ற கட்டத்திற்குப் பணிய வைத்துள்ளது. மேலும், முறையான சர்வே மீண்டும் நடத்தப்படும் என்று அரசு தரப்பிலிருந்து உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இதுவே மக்கள் போராட்டங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஆனால், இன்னமும் இந்த நாசக்கார, இயற்கைக்கு விரோதமான நதிநீர் இணைப்பு திட்டத்தைக் கைவிடுவதைப் பற்றியோ அதைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதைப் பற்றியும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது ஒன்றிய அரசு.

கென்-பெத்வா நதிநீர் இணைப்பு திட்டத்தை முழுமையாக நிறுத்துமாறு அரசைப் பணிய வைக்கும் போராட்டத்தைக் கட்டியமைப்பது ஜனநாயக மற்றும் புரட்சிகர சக்திகளின் கடமையாகும்.


மாயவள்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க