திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் தொடர்ச்சியாக ஐந்து சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ் என்ற தலித் இளைஞரும் (வயது 21), மறவர் சாதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த ஏப்ரல் 16 அன்று நள்ளிரவில் சுபாஷைத் தொலைபேசி மூலம் தனியாக அழைத்த தேவர் சாதிவெறிக் கும்பல், அவரைச் சாதி ரீதியாக அவதூறாகப் பேசி, அரிவாளால் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்தது. அத்துடன் சுபாஷின் உடலில் கற்களைக் கட்டி, அங்குள்ள காலனி பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசியுள்ளது. இவ்வழக்கில் மாரிச்செல்வம் (வயது 27), தனசங்கர் (வயது 24) மற்றும் ஒரு சிறுவன் உட்பட மூன்று பேர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கரடிகுளம் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் எனும் 18 வயது இளைஞரும், கெச்சிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் 17 வயது மகளும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் தேவேந்திர குல வேளாளர் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சஞ்சய்யின் ஏழ்மை நிலையைக் காரணமாக வைத்து, இவர்களின் காதலுக்குப் பெண்ணின் தந்தை குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
கடந்த மே 17 அன்று இரவு, சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் சென்னைக்குச் செல்வதற்காகக் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது, அங்குத் தனது மகள் மற்றும் உறவினர்களான மாரிமுத்து, சங்கரநாராயணன் ஆகியோருடன் வந்த பெண்ணின் தந்தை குமார், சஞ்சய்யிடம் திருமணப் பேச்சுவார்த்தை நடத்துவது போல் தந்திரமாகப் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, காதலியின் கண்முன்னே சஞ்சயைக் கத்தியால் கொடூரமாகக் குத்தியுள்ளது, சாதிவெறிக் கும்பல். இதில் கழுத்து மற்றும் உடலின் பல பாகங்களில் பலத்த காயமடைந்த சஞ்சய், நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மே 18 அன்று உயிரிழந்தார். இவ்வழக்கில் பெண்ணின் தந்தை குமார், சித்தப்பா மாரிமுத்து மற்றும் சங்கரநாராயணன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு ஜே.ஜே. நகர் கீழக்காலனியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 27) என்ற பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரும், தேவர் சாதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த மே 19 அன்று, அந்தப் பெண்ணின் தம்பியும் அவரது உறவினர்கள் சிலரும் சுரேஷை வழிமறித்துக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இது குறித்து சுரேஷின் தாய் பேச்சியம்மாள் களக்காடு போலீசு நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசு எவ்வித முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், கடந்த ஜூன் 1-ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில், ஆயுதங்களுடன் சுரேஷின் வீட்டிற்குள் புகுந்த பெண்ணின் உறவினர்கள், அங்குத் தூங்கிக் கொண்டிருந்த சுரேஷை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த இராமலட்சுமி (வயது 23), தலித் சாதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதனால் இராமலட்சுமியின் தம்பி முத்துகிருஷ்ணன் (வயது 21), கடந்த ஜூன் 4 அன்று தன் உடன்பிறந்த அக்காவையே அரிவாளால் வெட்டிக் கொடூரமாகப் படுகொலை செய்துள்ளான்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டம் தெற்கு மயிலோடை கிராமத்தில் மறவர் சாதியைச் சேர்ந்த அபிசெல்வியும் (வயது 19), ஹரி பிரசாத் என்ற பட்டியலின இளைஞரும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு அபிசெல்வியின் அண்ணன் சிவஞானம் மற்றும் தாய் எஸ்தர் பாலின் ஆகிய இருவரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஜூன் 9 அன்று சிவஞானமும் எஸ்தர் பாலினும் இணைந்து அபிசெல்வியை அடித்துக் கொலை செய்துவிட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியுள்ளனர்.
எனினும், அப்பெண்ணின் உடலில் நஞ்சு கலந்திருந்ததும், அவர் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்ததும் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, கொலைக் குற்றத்திற்காகத் தாய், அண்ணன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களக்காடு சுரேஷ் மற்றும் தென்காசி சுபாஷ் ஆகியோரின் கொலை வழக்குகள் இரண்டும், பட்டியலின மற்றும் பழங்குடியின வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், கரடிகுளத்தில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சஞ்சய் மற்றும் கொலையாளிகள் ஆகிய இருதரப்பினரும் தேவேந்திர குல வேளாளர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சுத்தமல்லி இராமலட்சுமி மற்றும் கயத்தாறு அபிசெல்வி ஆகிய இருவரும் தலித் சாதியைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதாலும், இவ்வழக்குகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. மாறாக, இவை கொலை வழக்குகளாக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஆணவப் படுகொலை குற்றவாளிகளுக்குக் கீழமை நீதிமன்றங்களில் அரிதாகத் தண்டனை கொடுக்கப்பட்டாலும், மேல்முறையீட்டில் தண்டனைக் குறைக்கப்படுவதோ விடுதலை செய்யப்படுவதோ தொடர்கதையாகவே உள்ளது. நிலைமை இப்படி இருக்கையில், தலித் சாதிக்குள் நடக்கும் ஆணவப் படுகொலைகளையும், ஆதிக்கச் சாதிக்குள் நடக்கும் ஆணவப் படுகொலைகளையும் பதிவு செய்வதற்குத் தனியாகச் சட்டம் எதுவும் இல்லை. அதனால்தான் ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கெனத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இக்கோரிக்கை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.
கர்நாடகாவில் தலித் இளைஞரை காதலித்துத் திருமணம் செய்துகொண்ட லிங்காயத்து சாதியைச் சேர்ந்த மான்யா என்ற இளம்பெண் கர்ப்பிணி என்றும் பாராமல் தந்தையாலேயே கடந்தாண்டில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இதற்கெதிராக, நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக, அம்மாநிலத்தில் ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டிலும் இச்சட்டத்தை இயற்றுவதற்கான கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றது.
கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அழகேந்திரன், பிரவீன், முத்தையா, ஐஸ்வர்யா, கவின் எனப் பல இளைஞர்கள் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுச் சாதிவெறிக்கு பலிகொடுக்கப்பட்டனர். “ஆண்ட பரம்பரை” என்ற வீண் ‘பெருமை’யை பலவாறு பேசி சாதிவெறியை ஊட்டும் ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களும், அதன் பின்னணியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பலுமே இத்தகைய ஆணவப் படுகொலைகள், சாதியத் தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்படுகின்றன. ஆனால், ஆணவப் படுகொலைகளை உடனடியாகத் தடுக்க வேண்டும், அதற்கெனத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும், சாதிவெறி சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு முந்தைய தி.மு.க. அரசு துளியளவும் செவிமடுக்கவில்லை.
தற்போது த.வெ.க. ஆட்சியிலும் இத்தகைய ஆணவப் படுகொலைகள் தொடர்கதையாகவே உள்ளன. சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான தனிச் சட்டம் இயற்றப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், கூட்டத்தொடர் முடிவடைந்த பின்பும் த.வெ.க. அமைச்சர்களோ, கட்சியினரோ இது குறித்து வாய் திறக்கவில்லை.
எனவே, தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமே ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சிறப்புச் சட்டத்தை இயற்ற வைக்க முடியும். அச்சட்டம், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. சங்கப் பரிவார அமைப்புகள், ஆதிக்கச் சாதிவெறிச் சங்கங்களைத் தடை செய்வது; ஆணவப் படுகொலைக் குற்றவாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது; ஆணவப் படுகொலைக்கு உள்ளானவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவது ஆகியவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும்.
மேலும், இந்த அரசுக் கட்டமைப்பானது பார்ப்பனிய, மனுநீதி, ஆணாதிக்க, சாதியக் கண்ணோட்டத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆணவப் படுகொலைக்கு எதிரான சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டாலும், அதை நடைமுறைப்படுத்த மக்கள் நீண்ட நெடிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கும். சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்க வேண்டும். இந்த உரிமையை நிலைநாட்ட உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து களமிறங்க வேண்டும்.
![]()
ராஜன்
(புதிய ஜனநாயகம் – ஜூலை 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











