6 மாதங்களில் 101 மலக்குழி மரணங்கள்: மோடி அரசே குற்றவாளி!

இந்தியாவில் ஒவ்வொரு 45 மணி நேரத்திற்கும் ஒரு மலக்குழி மரணம் நிகழ்ந்து கொண்டிருக்கிற போதிலும், வெட்கமற்ற பாசிச மோடி அரசு, தனது ஆட்சியில் நாட்டில் மலக்குழி மரணங்களே நடக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்து வருகிறது.

2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கழிவுநீர் மற்றும் மலத் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது 101 தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக “சஃபாய் கர்மச்சாரி அந்தோலன்” (SKA – Safai Karmachari Andolan) அமைப்பு தெரிவித்துள்ளது. தூய்மைப் பணியாளர்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் தேசிய மக்கள் இயக்கமான எஸ்.கே.ஏ., மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் பணிக்கு உச்சநீதிமன்றம் சட்டப்பூர்வத் தடை விதித்திருந்தாலும் தூய்மைப் பணியாளர்களின் உயிரிழப்பு அதிகமாகியுள்ளது எனத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை 16 மாநிலங்களில் கழிவுநீர் மற்றும் மலத் தொட்டி மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் டெல்லி என்.சி.ஆர். பகுதியில் மட்டும் 12 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டில் 121 தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்திருந்த நிலையில், 2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்திலேயே 101 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இந்தாண்டின் முடிவில் மிகப்பெரும் அளவில் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு 45 மணி நேரத்திற்கும் ஒரு மலக்குழி மரணம் நிகழ்ந்து கொண்டிருக்கிற போதிலும், வெட்கமற்ற பாசிச மோடி அரசு, தனது ஆட்சியில் நாட்டில் மலக்குழி மரணங்களே நடக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்து வருகிறது.


படிக்க: ‘டிஜிட்டல் இந்தியா’வில் தொடரும் மலக்குழி மரணங்கள்!


குறிப்பாக, கடந்த பத்தாண்டுகளில் கழிவு நீர் மற்றும் மலத் தொட்டி மரணங்கள் தீவிரமாக அதிகரித்துள்ளன. 2016-இல் 39 மரணங்கள் பதிவான நிலையில், அது 2017-இல் மும்மடங்கிற்கும் மேலாக அதிகரித்து 137 மரணங்களாக உயர்ந்துள்ளது.

2013-ஆம் ஆண்டின் “கையால் மலம் அள்ளும் முறையில் தூய்மைப் பணியாளர்களைப் பணியமர்த்துவதைத் தடைசெய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வுக்கான சட்டம்’’ (Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Act – PEMSR) இயற்றப்பட்ட போதிலும், கழிவுநீர் மற்றும் மலத் தொட்டி மரணங்கள் என்பவை எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

2013-ஆம் ஆண்டு இச்சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் மலத் தொட்டிகளில் 1,726 பேர் உயிரிழந்துள்ளதாக எஸ்.கே.ஏ. அறிக்கை தெரிவித்துள்ளது. அவர்களில் 1,203 பேர், தமிழ்நாடு (332), குஜராத் (216), டெல்லி என்.சி.ஆர். (157), மகாராஷ்டிரா (155), உத்தரப்பிரதேசம் (148), ஹரியானா (104) மற்றும் பீகார் (91) ஆகிய ஏழு மாநிலங்களில் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

இத்துணை மலக்குழி மரணங்கள் நிகழ்ந்த போதிலும் இம்மாநிலங்கள் எதுவும் இம்மரணங்களைத் தடுப்பதற்கான சிறு நடவடிக்கையைக் கூட எடுக்கவில்லை என்பது ஆளும் வர்க்க அரசுகளினுடைய கேவலத்தின் உச்சமாகும்.

அதைப்போல், மோடி அரசின் “ஸ்வச் பாரத்” திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி கழிப்பறைகள் கட்டப்பட்டாலும், அவற்றுக்கான அடிப்படைச் சுகாதாரக் கட்டமைப்பு முறையாகச் செயல்படுத்தப்படவில்லை. மனிதக் கழிவுகளை அகற்றும் பணிகளை இயந்திரமயமாக்குவதற்காக 2023-இல் “நமஸ்தே” (NAMASTE) என்ற திட்டம் கொண்டுவரப்பட்டாலும், மலக்குழிகளில் மனிதர்கள் இறக்கும் அவலம் குறையாமல் முன்பை விட அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, இந்தியா முழுவதும் கழிவுநீர் மற்றும் மலத் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்களில் 80 சதவிகிதத்தினர் பட்டியல் சமூக மக்களே ஆவர். பார்ப்பனிய வர்ணாசிரமத்தை இந்தியாவில் வலுவாக நிலைநாட்ட துடிக்கும் பாசிச பா.ஜ.க-வின் ஆட்சியில், சாதிய அடிப்படையில் தலித் மக்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. தொழில்நுட்பங்கள் பிரம்மாண்டமாக வளர்ந்துவரும் போதிலும் தூய்மைப் பணி இந்தியாவில் இயந்திரமயமாக்கப்படாததற்கு இதுவே முதன்மை காரணமாகும். ஆகவே, மலக்குழி மரணங்களை தடுக்க பாசிச மோடி அரசிற்கு எதிராகப் போராடுவதும், சமத்துவமான சமூகக் கட்டமைப்பை கட்டியெழுப்புவதும் இன்றியமையாததாகும்.


மணிமேகலை

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க