மகாராஷ்டிரா: இஸ்லாமிய சிறுவர்களை கட்டிவைத்து அடித்த சாதிவெறியர்கள்!

விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பிகளைத் திருடியதாகக் கூறி 13–15 வயதிற்குட்பட்ட மூன்று இஸ்லாமிய சிறுவர்களை, மராத்தா ஆதிக்கச் சாதிவெறி கும்பல் கம்பத்தில் கட்டிவைத்து பெல்ட், பைப்பால் கொடூரமாகத் தாக்கியுள்ளது.

0

பா.ஜ.க. ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் லத்தூர் மாவட்டத்தின் ரேனாபூர் தாலுகாவில் அமைந்துள்ளது கரோலா கிராமம். இக்கிராமத்தின் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பிகளைத் திருடியதாகக் கூறி 13–15 வயதிற்குட்பட்ட மூன்று இஸ்லாமிய சிறுவர்களை, மராத்தா ஆதிக்கச் சாதிவெறி கும்பல் கம்பத்தில் கட்டிவைத்து பெல்ட், பைப்பால் கொடூரமாகத் தாக்கியுள்ளது. ஜூலை 10 அன்று நடத்தப்பட்ட இவ்வன்கொடுமையை அதில் ஈடுபட்ட ஒருவன் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதையடுத்து, இக்கொடூரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர்கள் தாக்கப்படுவதை அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சிறுவர்களின் பெற்றோர்களையும் அக்கும்பல் சாதி – மத ரீதியாக ஆபாச வார்த்தைகளால் வசைபாடி மிரட்டியுள்ளது. உடனடியாக பெற்றோர்கள் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள போலீசு நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளனர். சிறுவர்களை மீட்ட போலீசு, தாக்குதலை நேரில் பார்த்த பிறகும் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆனால், முதன்மை குற்றவாளியான சச்சின் ராவ்ராவ் அன்றிரவு அளித்த திருட்டுப் புகாரின் பேரில் சிறுவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து தனது சாதிப் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளது.

பின்னர் கிராம மக்களின் எதிர்ப்பின் காரணமாக அன்று நள்ளிரவில் குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. ஆனால், இவ்வழக்கில் சிறுவர்களின் இஸ்லாமிய அடையாளத்தை முன்னிறுத்தக் கூடாது என்று போலீசு பெற்றோர்களிடம் அயோக்கியத்தனமாகக் கூறியுள்ளது.

மறுபுறம், இந்தக் கால இடைவெளிக்குள் முக்கியக் குற்றவாளியான சச்சின் ராவ்ராவ் நிதின் ஷிண்டே இருவரும் கிராமத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். ஆறு குற்றவாளிகள் மட்டுமே கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களும் இரண்டு நாட்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


படிக்க: மகாராஷ்டிரா சாதிப் பஞ்சாயத்து: பெண் அரை நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்!


கரோலா கிராமத்தில் 1,500-க்கு மேற்பட்ட பல்வேறு தரப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் 509-க்கும் மேற்பட்ட மராத்தா குடும்பங்களும், 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களும் அடங்கும். பிற குடும்பங்கள் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவை.

இக்கிராமத்தில் வாழும் பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்தவர்கள். நிலமற்ற ஏழைகளாக உள்ள இவர்கள், தங்களது வாழ்வாதாரத்திற்காகக் கிராமத்தில் நில உரிமையாளர்களாக இருக்கும் மராத்தா சாதியினரின் விவசாய நிலங்களில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இதுவே இவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. இது இச்சிறுவர்களின் மீதான கொடூரத் தாக்குதலுக்கு முக்கியக் காரணமாகும்.

“தாக்கப்பட்ட சிறுவர்கள் அதே (மராத்தா) சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால், இந்த ஆண்கள் அவர்கள் மீது கையை வைத்திருக்கத் துணிந்திருப்பார்களா? இவர்கள் எளிய இஸ்லாமிய சிறுவர்கள் என்பதும், இவர்களின் பெற்றோர்களால் எதிர்த்துப் போராட முடியாது என்பதுமே குற்றவாளிகளுக்கு இந்தத் துணிச்சலைக் கொடுத்துள்ளது” என்று மகாராஷ்டிரா ஆர்வலர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஜுனைத் அதார் தெரிவித்திருப்பது இதனை உறுதிப்படுத்துகிறது.

பா.ஜ.க கும்பல் ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் இஸ்லாமிய சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், மக்கள் மீதான தாக்குதல்கள் பல்வேறு வடிவங்களில் தீவிரமடைந்து வருகின்றன. குறிப்பாக, தலித் மக்கள் மீது தொடுக்கப்படுகின்ற தீண்டாமையும் வன்கொடுமைகளும் பா.ஜ.க. ஆட்சியில் மதத்தின் பெயரில் இஸ்லாமியர்கள் மீது தொடுக்கப்படுகின்றன. இஸ்லாமியர்கள் மீது திட்டமிட்டுப் பரப்பப்படும் வெறுப்பு இஸ்லாமிய சிறுவர்களுக்குக் கூட பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க