நீட் முதல் சி.பி.எஸ்.இ. வரை: சந்தைமயமாகும் தேர்வுகள் பலியிடப்படும் மாணவர்கள்!

இன்று இந்தியாவில் உயர்கல்வித்துறையின் நுழைவுத் தேர்வுகளும் பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வுகளும் இணை கல்வி சந்தையாக மாறி வருவதானது ஏதோ தன்னிச்சையாக நடந்தது அல்ல. பாசிச பா.ஜ.க. அரசால் நேர்த்தியாக திட்டமிடப்பட்ட கார்ப்பரேட்மயமாக்கல் சதியும் மறுகாலனியாக்கத்தின் தவிர்க்கவியலாத விளைவுமாகும்.

20 ஜூலை, 2026: நீட் தேர்வு மோசடிகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றியக் கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நாடாளுமன்ற முற்றுகை பேரணி நடத்திய மாணவர்கள்-இளைஞர்கள்.

த்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 12-ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் வெளியாகி, நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளன. ஒருபுறம், நீட் தேர்வு மோசடிகள் அம்பலமாகி மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்துவரும் சூழலில், சி.பி.எஸ்.இ. தேர்வு குளறுபடிகளும் வெளியாகி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி வருகின்றன. தீவிரமடைந்துவரும் தேர்வு மோசடிகளுக்குப் பொறுப்பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் மாணவர்கள் போராடி வருகின்றனர்.

இந்தாண்டு சி.பி.எஸ்.இ. 12-ஆம் வகுப்பு தேர்வு, கடந்த பிப்ரவரி – ஏப்ரல் மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டது. தேர்வெழுதிய 18 இலட்சம் மாணவர்களின் 98 இலட்சம் விடைத்தாள்கள் மதிப்பீட்டிற்காகச் சமர்ப்பிக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் மூலம் நேரடியாகக் கைகளால் திருத்தப்படும் விடைத்தாள்கள், இம்முறை “திரைவழி விடைத்தாள் மதிப்பீடு” (OSM – On-Screen Marking) முறைக்கு மாற்றப்பட்டன. அதாவது, விடைத்தாள்களை ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் பதிவேற்றி மதிப்பீடு செய்யும் முறையாகும். இதன் மூலம் மதிப்பெண் கூட்டல் பிழைகளைத் தவிர்க்க முடியும் என்றும் முடிவுகளுக்குப் பிந்தைய மறுமதிப்பீட்டு (Revaluation) தேவையை ஒழிக்க முடியும் என்றும் மொண்ணையான காரணங்களை சி.பி.எஸ்.இ. முன்வைக்கிறது.

இவ்வாறு டிஜிட்டல் முறையில் விடைத்தாள்களைத் திருத்துவதற்கான ஒப்பந்தம், ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் “கோஎம்ட் எடுடெக் பிரைவேட் லிமிடெட்” (Coempt Eduteck Private Limited) என்ற தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

மேலும், இந்தாண்டு விடைத்தாள் திருத்தப்பணி தொடங்குவதற்கே தாமதமானது. விடைத்தாள்களை டிஜிட்டல் முறையில் திருத்துவதற்கான உரிய பயிற்சியோ, கால அவகாசமோ வழங்கப்படாமல் மதிப்பீட்டாளர்கள் இப்பணியில் அவசரகதியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டிய மே 13 அன்று காலையில் கூட, சில விடைத்தாள்களைத் திருத்தித் தருமாறு தங்களிடம் கேட்டதாக ஆசிரியர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

இதன் விளைவாக, மே 13 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருந்தன. மாணவர்களின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் கடந்தாண்டு 88.39 சதவிகிதமாக இருந்த நிலையில், இந்தாண்டு அது 85.29 சதவிகிதமாகச் சரிந்துள்ளது. 90 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியுற்ற மாணவர்கள், மறுமதிப்பீட்டிற்காகத் தங்களது விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளைக் கோரிய போது, மங்கலான ஸ்கேன்கள், படிக்கவே முடியாத கையெழுத்துகள், பக்கங்கள் விடுப்பட்டிருந்தது ஆகியவற்றைக் கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தனர். இயற்பியல் பாடப்பிரிவில் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த 12-ஆம் வகுப்பு மாணவர் வேதாந்த் ஸ்ரீவஸ்தவாவிற்கு, அவருடைய விடைத்தாளுக்குப் பதிலாக வேறொரு மாணவரின் விடைத்தாள் மாற்றி பதிவேற்றப்பட்டிருந்தது. இதற்கு சி.பி.எஸ்.இ. எந்த விளக்கமும் அளிக்காததையடுத்து, எக்ஸ் தளத்தில் புதிய கணக்கைத் தொடங்கி தனக்கு நேர்ந்த அநீதி குறித்துப் பதிவிட்ட அம்மாணவரை ‘பாகிஸ்தானி’, ‘தேசவிரோதி’ என்றெல்லாம் சங்கிக் கும்பல் முத்திரைக் குத்தி அவதூறு பரப்பியது.

இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும், ஓ.எஸ்.எம். முறையிலான திருத்தத்தால் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் சி.பி.எஸ்.இ – மோடி அரசின் தோல்வி ஆகியவை குறித்தே பேசுகின்றன. ஆனால், எந்தவொரு அவசியமுமின்றி திணிக்கப்பட்ட இந்த ஓ.எஸ்.எம். முறைக்கு பின்னணியில், பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகளைச் சந்தையாக மாற்றி, கார்ப்பரேட் கொள்ளைக்கு வித்திடும் கார்ப்பரேட்மயமாக்கல் சதியே அடங்கியிருக்கிறது.

ஓ.எஸ்.எம். முறை என்ற போர்வையில்
கார்ப்பரேட் திணிப்பு

10 மற்றும் 12-ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. மாணவர்களின் 2.38 கோடி விடைத்தாள்களை ஓ.எஸ்.எம். முறையில் திருத்துவதற்கான ஏலம் கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்டது. இதன் முதல் இரண்டு சுற்று ஏலங்கள், தகுதியான விண்ணப்பங்கள் வராததாலும், விண்ணப்பித்த நிறுவனங்கள் தொழில்நுட்பத் தகுதிகளைப் பூர்த்தி செய்யாததாலும் தோல்வியடைந்தன. கோடிக்கணக்கான விடைத்தாள்களை ஓ.எஸ்.எம். முறையில் மதிப்பீடு செய்வதற்கான தகுதியான தொழில்நுட்பம் இங்கு இல்லை என்பதையே இது நிரூபிக்கிறது.

ஆனால், சி.பி.எஸ்.இ. நிர்வாகமோ ஆகஸ்டில் நடைபெற்ற மூன்றாம் சுற்று ஏலத்தில், ஏல விதிகளைத் திரைமறைவில் திருத்தி கோஎம்ட் எடுடெக் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தைத் தாரைவார்த்தது. சர்தாக் சித்தாந்த் எனும் 12-ஆம் வகுப்பு மாணவர், நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்ட சி.பி.எஸ்.இ-இன் ஏல அறிக்கையை ஆராய்ந்து இந்த மோசடியைத் தோலுரித்துக் காட்டியுள்ளார்.

சி.பி.எஸ்.இ. தேர்வு குளறுபடிகளை தோலுரித்த மாணவர் சர்தாக் சித்தாந்த்.

மென்பொருள் மற்றும் ஐ.டி. துறையில் சர்வதேச அளவில் உயரிய தரநிலையாகக் கருதப்படும் “சி.எம்.எம்.ஐ. நிலை 5” (CMMI Level 5) சான்றிதழை ஏலத்தில் பங்குபெறும் நிறுவனம் கொண்டிருக்க வேண்டும் என்ற விதியானது, “சி.எம்.எம்.ஐ. நிலை 3” இருந்தால் போதுமானது எனத் தளர்த்தப்பட்டது. அந்நிறுவனத்திடம் குறைந்தபட்சம் 100 பயிற்சி பெற்ற வல்லுநர்கள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை 15 பேராகக் குறைக்கப்பட்டது. குறைந்த அனுபவம் கொண்ட கோஎம்ட் போன்ற நிறுவனங்கள் போட்டியிடும் வகையில், கடந்த காலத்தில் 25 இலட்சம் விடைத்தாள்களைக் கையாண்டிருந்தால் போதுமானது என விதி மாற்றப்பட்டது. கோடிக்கணக்கான விடைத்தாள்களைத் திருத்தம் செய்யும் நிறுவனங்கள், சொந்தமாக சர்வர்களைக் (Servers) கூட வைத்திருக்க வேண்டியதில்லை என்ற நிலைக்கு விதிகள் தளர்த்தப்பட்டன.

மேலும், ஸ்கேனிங் தெளிவுத்திறன் (Resolution) குறைந்தபட்சம் 300 டி.பி.ஐ. (DPI) இருக்க வேண்டும் என்பது 200 டி.பி.ஐ-ஆகக் குறைக்கப்பட்டதுடன், “தானியங்கி ரோபோடிக் ஸ்கேனிங்”-இன் (Automated Robotic Scanning) தேவையும் நீக்கப்பட்டது. இதுவே, மாணவர்களின் விடைத்தாள்கள் மங்கலாக இருப்பதற்கு காரணமாகும்.

அனைத்தையும் விட முக்கியமாக, ஒன்றிய – மாநில அரசுகளால் எப்போதாவது கருப்புப் பட்டியலில் (Blacklisted) சேர்க்கப்பட்டிருந்த நிறுவனம் தகுதி நீக்கம் செய்யப்படும் என்ற விதியானது, “தற்போது கருப்புப் பட்டியலில் இருக்கக்கூடாது” எனத் திருத்தப்பட்டது. ஒரு நிறுவனத்தின் கடந்தகாலச் செயல்பாடு மோசமாக இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்ற விதியும் நீக்கப்பட்டது. மேலும், தரவுக் கசிவு மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்கள் போன்ற தவறுகளைச் செய்யும் தனியார் நிறுவனத்தைக் கருப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கான சி.பி.எஸ்.இ-இன் அதிகாரமும் பறிக்கப்பட்டது. இங்குதான், கோஎம்ட் நிறுவனத்தின் கடந்தகால அயோக்கியத்தனங்கள் கவனம் பெறுகின்றன.

இந்நிறுவனம்தான் தெலங்கானாவில் 2019 ஏப்ரலில் நடைபெற்ற இடைநிலைக் கல்வித் தேர்வு (Intermediate exam) தொடர்பான நிர்வாகப் பணிகளை டிஜிட்டல்மயமாக்குவதற்கான மென்பொருளை உருவாக்கியிருந்தது. 9.7 இலட்சம் மாணவர்கள் எழுதிய அந்தத் தேர்வில் 3.8 இலட்சம் மாணவர்கள் தோல்வியுற்றதும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் சுமார் 23 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிறுவனத்தின் தவறுகள் அம்பலமாகி, இதனைக் கருப்புப் பட்டியலில் சேர்க்கக்கோரி தெலுங்கானாவில் போராட்டங்கள் நடைபெற்ற போதிலும் இந்நிறுவனம் தண்டிக்கப்படவில்லை. மாறாக, அச்சமயத்தில் “குளோபரேனா டெக்னாலஜீஸ்” (Globarena Technologies) என்ற பெயரில் செயல்பட்டுவந்த இந்நிறுவனம், அதே ஆண்டு அக்டோபரில் “கோஎம்ட் எடுடெக்” என்று பெயரை மாற்றிக்கொண்டு எந்தவித தடையுமின்றிச் செயல்பட்டு வருகிறது. இத்தகைய கொலைகார நிறுவனத்திற்குத்தான், ஒட்டுமொத்த விதிகளையும் தளர்த்தி விடைத்தாள்களைத் திருத்துவதற்கான ஒப்பந்தத்தை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் வழங்கியுள்ளது.

தற்போதும், 12-ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு தொடங்கிய பிறகே இந்நிறுவனம் ஓ.எஸ்.எம். தளத்தைச் சோதிப்பதற்கான தானியங்கு மென்பொருளை “கிட்ஹப்”பில் (GitHub) உருவாக்கியுள்ளது. முறையான பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுச் சோதனைகளின்றி, இத்தளம் அவசரகதியில் நேரடிப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருப்பதை இது நிரூபிக்கிறது. அதற்கேற்ப, விடைத்தாள் மதிப்பீட்டுத் தளத்தில் ஓ.டி.பி. (OTP) சரிபார்ப்பு செய்யாமலேயே தேர்வாளர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து மதிப்பெண்களை மாற்றும் நிலை இருந்ததையும், அடிப்படை தொழில்நுட்ப அறிவுள்ள எவரும் விடைத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யும் அளவிற்குப் பாதுகாப்புக் குறைபாடு இருந்ததையும் 12-ஆம் வகுப்பு மாணவரும் நெறிமுறை ஹேக்கருமான (Ethical Hacker) நிசர்கா அதிகாரி அம்பலப்படுத்தியுள்ளார்.

அதைப்போல், முதல் இரண்டு கட்ட ஏலங்களில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் 2.38 கோடி விடைத்தாள்களைத் திருத்துவதற்கான ஒப்பந்த மதிப்பு சுமார் ரூ.28 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இறுதி ஒப்பந்தத்தில் அது ரூ.38.46 கோடியாக திடீரென உயர்த்தப்பட்டது. மேலும், 10-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் கைவிடப்பட்டு, 12-ஆம் வகுப்பு மாணவர்களின் 98 இலட்சம் விடைத்தாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்பட்ட போதும் அதற்கேற்ப ஒப்பந்தத் தொகை குறைக்கப்படவில்லை.

இவையனைத்தும், விடைத்தாள்களை ஓ.எஸ்.எம். முறையில் திருத்துவதற்கான தேவையோ அதற்கான தொழில்நுட்பமோ இல்லாமலேயே, வலுக்கட்டாயமாகவும் விதிகளை எல்லாம் திருத்தி மோசடித்தனமாகவும் இம்முறை சி.பி.எஸ்.இ-யால் திணிக்கப்பட்டிருப்பதை அம்பலப்படுத்துகிறது. இத்திணிப்பானது, கோஎம்ட் எடுடெக் போன்ற தனியார் – கார்ப்பரேட்டுகளை மறைமுகமாக உள்ளே நுழைத்து, சி.பி.எஸ்.இ. தேர்வை முழுமையாகக் கார்ப்பரேட்மயமாக்குவதற்கான ஏற்பாடாகவே அமைந்துள்ளது.

சந்தையாக உருவெடுத்துவரும்
நுழைவுத் தேர்வுகள்

இந்தியாவில் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பிறகு கல்வித்துறையானது கார்ப்பரேட் கொள்ளைக்கான சந்தையாக மாற்றப்பட்டது. பாசிச மோடியின் ஆட்சியில் இக்கொள்ளை மேலும் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், மோடியின் ஆட்சியில் உயர்கல்வித்துறையில் வரைமுறையின்றி திணிக்கப்பட்ட நாடு தழுவிய நுழைவுத் தேர்வுகள் என்பதே ஒரு “இணை கல்வி சந்தை”யாக (Parallel education market) உருவெடுத்துள்ளது. மருத்துவச் சந்தைக்குள்ளேயே மருத்துவக் காப்பீடு என்பது இணை சந்தையாக வளர்ந்திருப்பது போன்றதுதான் இதுவும். இந்த தேர்வு சந்தையை பள்ளிக்கல்வித்துறையிலும் விரிவுப்படுத்தி கார்ப்பரேட் கொள்ளையைத் தீவிரப்படுத்துவதற்கான ஏற்பாடாகவே இந்தாண்டு 12-ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் வலுக்கட்டாயமாக ஓ.எஸ்.எம். முறை திணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாசிச மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டு மக்களின் போராட்டம், அனிதா உள்ளிட்ட மாணவர்களின் தற்கொலை ஆகிய எல்லாவற்றையும் மீறி மருத்துவப் படிப்பில் நீட் நுழைவுத் தேர்வை திணித்தது. இதனை மாதிரியாக வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த உயர்கல்வித்துறையிலும் அடுத்தடுத்த நுழைவுத் தேர்வுகளை திணித்து வருகிறது.

மத்தியப் பல்கலைக்கழகங்களில் கலை – அறிவியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாக திணிக்கப்பட்ட “கியூட்” (CUET) தேர்வு, சங்கி துணைவேந்தர்களின் துணையுடன் மாநிலப் பல்கலைக்கழகங்களிலும் திணிக்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டில் இந்த கியூட் தேர்வு வேளாண் படிப்பிற்கான நுழைவுத் தேர்வாகவும் (CUET-ICAR) மாற்றப்பட்டதன் மூலம் பிற துறை சார்ந்த படிப்புகளுக்கும் இத்தேர்வு கட்டாயமாக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

அதைப்போல், ஒருபுறம் நீட் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்களை கொன்று குவிப்பது போதாதென்று, எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டுத் தேர்வு மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட்-பி.ஜி. (NEET-PG) தேர்வு ஆகியவற்றை ஒழித்துவிட்டு “நெக்ஸ்ட்” (NexT) தேர்வை மோடி அரசு கொண்டுவர உள்ளது.

இவற்றின் விளைவாக 12 முதல் 14 ஆண்டுகள் மாணவர்கள் படித்துவந்த பள்ளிக்கல்வியின் தேர்வுகள் செல்லாக்காசாக்கப்பட்டு இந்தியா முழுவதும் புற்றீசல்களை போல பயிற்சி மையங்கள் உருவாகியுள்ளன. இந்த பயிற்சி மையங்களின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.58 ஆயிரம் கோடி முதல் ரூ.65 ஆயிரம் கோடிக்கும் அதிகமாகும். 2030-ஆம் ஆண்டிற்குள் இது ரூ.1.5 இலட்சம் கோடியாக பூதாகரமாக பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சி மையங்களுக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதன் மூலம் இத்துறையிலிருந்து அரசுக்கு 2019-20-இல் மட்டும் ரூ.2,240 கோடி வரி வசூலானது. இது தற்போது ரூ.5,500 கோடியைக் கடந்து 146 சதவிகிதம் பெருகியுள்ளது. இதுவன்றி இணையவழி பயிற்சியும் பல ஆயிரம் கோடி சந்தை மதிப்புடன் வேகமாக வளர்ந்து வருகிறது.

இவை வெறுமனே நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்களின் சந்தை மதிப்பு மட்டுமே. மாறாக, பா.ஜ.க. ஆட்சியில், தேர்வுக்கான பயிற்சி, தேர்வுக்கான தயாரிப்புப் பணிகள், தேர்வை நடத்துவது, விடைத்தாள் திருத்தப் பணி என தேர்வு சங்கிலியின் ஒவ்வொரு அங்கமும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு “சிறப்புமயமாக்கல்” செய்யப்பட்டு காண்டிராக்ட் அடிப்படையில் தனியார் – கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்நுழைக்கப்படுகின்றன. சான்றாக, நீட் தேர்வின் தயாரிப்புப் பணிகளிலும் தேர்வை நடத்துவதற்கான ஒப்பந்தங்களும் தனியார் நிறுவனங்களிடம் தாரைவார்க்கப்படுகின்றன. இவையும் கணிசமான சந்தை மதிப்பைக் கொண்டுள்ளன.

இந்நிலையில், பள்ளிக்கல்வித் தேர்வுகளையும் சந்தையாக மாற்றும் முயற்சியாகவே 12-ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. விடைத்தாள் திருத்தப்பணி தனியார்மயமாக்கப்பட்டுள்ளது. அதாவது, உயர்கல்வித்துறையில் நுழைவுத் தேர்வுகளை சந்தைமயமாக்குவதற்கான சோதனையாக நீட் தேர்வு இருந்தது எனில், பள்ளிக்கல்வித்துறை தேர்வுகளை சந்தைமயமாக்குவதற்கான சோதனையாகவே சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வு கையிலெடுக்கப்பட்டுள்ளது. மாநில பாடத்திட்ட தேர்வுகளை போலன்றி சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு நாடுதழுவிய அளவில் நடப்பதானது இந்த சந்தைமயமாக்கல் சதித்திட்டத்தை பா.ஜ.க. – கார்ப்பரேட் கும்பலுக்கு எளிதாக்குகிறது.

பள்ளிக்கல்வித்துறையில் பா.ஜ.க-வால் தீவிரப்படுத்தப்பட்டுவரும் தேர்வுகளுக்கென ஏற்கெனவே பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை மேலும் வளர்த்தெடுக்கும் திட்டம் ஒருபுறமிருக்க, தேர்வு சங்கிலியின் மற்றொரு அங்கமான விடைத்தாள் திருத்தப் பணியையும் கார்ப்பரேட்மயமாக்கும் அடுத்தக்கட்ட நகர்வாக ஓ.எஸ்.எம். முறை திணிக்கப்பட்டுள்ளது. இக்கார்ப்பரேட்மயமாக்கலானது அடுத்தக்கட்டமாக தேர்வை நடத்துவதிலும் என்.சி.ஆர்.டி. மற்றும் மாநில தேர்வுகளிலும் விரிவுப்படுத்தப்படும் அபாயம் உள்ளது.

தேர்வு சந்தைமயமாக்கலை தீவிரப்படுத்தும்
தேசியக் கல்வி கொள்கை

இன்று இந்தியாவில் உயர்கல்வித்துறையின் நுழைவுத் தேர்வுகளும் பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வுகளும் இணை கல்வி சந்தையாக மாறி வருவதானது ஏதோ தன்னிச்சையாக நடந்தது அல்ல. பாசிச பா.ஜ.க. அரசால் நேர்த்தியாக திட்டமிடப்பட்ட கார்ப்பரேட்மயமாக்கல் சதியும் மறுகாலனியாக்கத்தின் தவிர்க்கவியலாத விளைவுமாகும்.

பாசிச மோடி அரசால் கொண்டுவரப்பட்ட “தேசிய கல்வி கொள்கை” பள்ளிக்கல்வியிலும் உயர்கல்வித்துறையிலும் தேர்வுகளை திட்டமிட்டே தீவிரப்படுத்தி வருகிறது. பள்ளிக்கல்வியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பிற்கு நடந்துவரும் பொதுத்தேர்வுகளை 3, 5, 8, 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு விரிவுப்படுத்துவதை தேசிய கல்விக் கொள்கை முன்மொழிகிறது.

இதற்கான பயிற்சி மையங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இவையனைத்தும் தேர்வு சந்தைமயமாக்கல் திட்டத்துடன் இணைந்ததாகும். மனப்பாடக் கல்வியை ஒழிக்கப் போவதாக சொல்லிக்கொண்டே மொழி, பிராந்திய, அறிவியல் பூர்வமற்ற மனப்பாடக் கல்வியை மாணவர்களிடம் திணித்து வருகிறது. இதற்காகவுமே பாசிச மோடி அரசு மாநில பாடத்திட்டங்களை ஒழித்துக்கட்டிவிட்டு, சி.பி.எஸ்.இ., என்.சி.ஆர்.டி. போன்ற நாடுதழுவிய பாடத்திட்டங்களை நிறுவத் துடிக்கிறது.

அதைப்போல், உயர்கல்வித்துறையில் ஒருபுறம் நுழைவுத்தேர்வுகளை திட்டமிட்டு தீவிரப்படுத்தும் அதேவேளையில் அத்தேர்வுகளை நடத்துவதற்காக “தேசிய தேர்வு முகமை”யையும் (NTA) மோடி அரசு உருவாக்கியது. ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்டிருந்தாலும், இது தன்னிச்சையாக இயங்கும் அரசு சாராத அமைப்பாகும். இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப முடியாது. மறுகாலனியாக்கத்தின் கீழ் அமைச்சகங்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு அவை ஆணையங்களிடம் தாரைவார்க்கப்பட்டு கார்ப்பரேட் கும்பல்களின் கொள்ளைக்கு திறந்துவிடப்படுவதன் அங்கமாகவே தேசிய தேர்வு முகமை உருவாக்கப்பட்டது.

அதற்கு முன்னர் வரை சி.பி.எஸ்.இ-யால் நடத்தப்பட்டுவந்த நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் இம்முகமையிடம் மாற்றப்பட்டன. கியூட் உள்ளிட்ட தேர்வுகள் இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டன. உயர்கல்வித்துறையில் நுழைவு – ‘தகுதி’ தேர்வுகளை நடத்துவதற்கான ஒற்றை அமைப்பாக தேசிய தேர்வு முகமை மாறி வருகிறது. பள்ளிக்கல்வி தேர்வுகளுக்கு வழிகாட்டுதல் கொடுப்பதற்கான அதிகாரமும் இம்முகமைக்கு வழங்கப்பட்டுள்ளது. பாசிச மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை இதன் சர்வ அதிகாரத்தை அங்கீகரித்துள்ளது. இதன் விளைவாக, உயர்கல்வித்துறையின் நுழைவுத் தேர்வு சந்தையை கட்டி காத்து வளர்த்தெடுக்கும் அமைப்பாக தேசிய தேர்வு உருவெடுத்துள்ளது.

மேலும், தேசிய தேர்வு முகமை உருவாகுவதற்கு முன்னர் அந்தந்தத் துறைகளால் நடத்தப்பட்டு வந்த தேர்வுகளில் இந்தளவிற்கு மோசடி முறைகேடுகள் தலைவிரித்து ஆடவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தேசிய தேர்வு முகமை அனைத்து தேர்வுகளையும் விழுங்கத் தொடங்கியதிலிருந்து தேர்வு சங்கிலியில் கார்ப்பரேட்மயம் உள்நுழைக்கப்பட்டு அதன் தவிர்க்க முடியாத விளைவாக மோசடி – முறைகேடுகள் அரங்கேறி வருகின்றன.

2024-ஆம் ஆண்டில் நீட் தேர்வில் பட்டவர்த்தனமான மோசடிகள் அம்பலமானது; மோசடிகள் அம்பலமானதால் யு.ஜி.சி. நெட் (UGC NET) தேர்வு இரத்து செய்யப்பட்டது; சி.எஸ்.ஐ.ஆர். நெட் (CSIR NET) தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்தாண்டு நீட் தேர்வு மோசடிகள் அம்பலமானதையடுத்து மறுதேர்வு நடத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இதுவரை 12 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர். இது மோடி அரசின் பச்சை படுகொலையாகும். நீட் தேர்வு மோசடிகள் ஆண்டுக்காண்டு அதிகரித்துவரும் நிலையில், பலி எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தற்போது இந்த அபாயமே பள்ளிக்கல்வியில் பிஞ்சுக் குழந்தைகளை சூழத் தொடங்கியுள்ளது.

எனவேதான், நீட் தேர்வு மோசடி, சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு குளறுபடிகளுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் முன்வைத்த “தேசிய தேர்வு முகமையை கலைத்திடு” என்ற கோரிக்கை முக்கியத்துவமுடையதாகும். கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடைபெற்றுவரும் மாணவர்கள் போராட்டமானது தேசிய தேர்வு முகமையை கலைத்திடு, தேசிய கல்வி கொள்கையை இரத்து செய் உள்ளிட்ட கோரிக்கைகளையும் உள்ளடக்கி, மாற்று கல்விக் கொள்கையை முன்வைத்து முன்னெடுக்கப்பட வேண்டும். அத்தகைய போராட்டங்களைக் கட்டியெழுப்பும் போதே, நம்முடைய இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை நாம் பாதுகாக்க முடியும்.


துலிபா

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க