25.04.2022
சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இருந்து ஜனநாயகம், பன்மைத்துவம்
மதச்சார்பின்மை உள்ளிட்ட பகுதிகள் நீக்கம்!
பத்திரிகை செய்தி
மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம்!
மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE), 2022-2023-ம் கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்திலிருந்து தற்போதைய அதன் பாடத்திட்டத்தில் பல கூறுகளை நீக்கியுள்ளது.
பத்தாம் வகுப்பு ஜனநாயக அரசியல் II பாடப்புத்தகத்தில், ‘ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை’, ‘மக்கள் போராட்ட இயக்கம்’ மற்றும் ‘ஜனநாயகத்திற்கான சவால்கள்’ ஆகிய அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த அத்தியாயங்களில் முதல் அத்தியாயம் இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள நாடுகளில் சாதி, இனம் மற்றும் பிற வழிகளில் சமூகப் பிளவுகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் குறித்ததாகும். இந்த அத்தியாயங்களை நீக்கியிருப்பதன் நோக்கம், ஜனநாயகத்தின் வாசனையை கூட நுகராத மாணவர்களை உருவாக்குவதே.
படிக்க :
விவசாயிகளின் நிலங்களை இழப்பீடு வழங்காமல் அபகரித்த பவர்கிரிட் நிறுவனம் ! | மக்கள் அதிகாரம் தருமபுரி
சென்னை இளைஞர் விக்னேஷ் காவல் கொட்டடி சாவு ; போலீஸ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடை!
11-ம் வகுப்புக்கான வரலாற்றுப் பாடத்திட்டத்தில் இருந்து ‘மத்திய இஸ்லாமிய நிலங்கள்’ என்ற அத்தியாயம் நீக்கப்பட்டதன் மூலம் இஸ்லாமியர்களின் வரலாற்று தடத்தை சுவடின்றி அழிப்பதையே நோக்கமாக மோடி அரசு கொண்டிருக்கிறது.
கூடுதலாக, “விவசாயத்தில் உலகமயமாக்கலின் தாக்கம்” பற்றிய உள்ளடக்கம் 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது மற்றும் “பனிப்போர் காலம் மற்றும் அணிசேரா இயக்கம்” பற்றிய ஒன்று 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தானின் புகழ்பெற்ற கவிஞர் ஃபைஸ் அஹ்மத் ஃபைஸ் எழுதிய கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இரண்டு பகுதிகளையும் நீக்கியுள்ளது.
இந்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) பாடப்புத்தகத்தின் 10-ம் வகுப்பு ஜனநாயக அரசியல் II பாடத்தில் ‘மதம், வகுப்புவாதம் மற்றும் அரசியல் – வகுப்புவாதம், மதச்சார்பற்ற அரசு’ என்ற பிரிவின் ஒரு பகுதியாக, அந்த இரண்டு பகுதிகளும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தன. இவை மதவாதமாகவும், இந்து மதத்திற்கு எதிராகவும் இருப்பதாக பிரச்சினையை கிளப்பிக் கொண்டிருந்த ஒன்றிய அரசு, இப்போது அதை பாடப்புத்தகத்திலிருந்து நீக்கியுள்ளது. ஃபைஸ் அஹ்மத் ஃபைஸ் எழுதிய கவிதை என்பது அடக்கு முறை மற்றும் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிரானது. ஒன்றிய அரசின் இந்த கவிதை பகுதி நீக்கத்தை அறிவுத்துறையினர் பலரும் கண்டித்துள்ளனர்.
இவ்வாறு காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு தோதாக மாணவர்களை உருவாக்கும் நோக்கோடு சதி வேலைகளை தீவிரமாக பாஜக அரசு செய்துவருகிறது. ஒருபுறம், சூத்திரர்கள் கல்வி கற்க கூடாது என்று நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் என்ற பெயரில் பல தடைகளை போடும் மத்திய அரசு, மறுபுறம் காவி பாசிசத்திற்கு ஏற்றபடி கல்வியை மாற்றியமைக்கின்றனர். மொத்தத்தில் புதிய கல்வி கொள்கையை நடைமுறைக்கு மெல்ல மெல்ல கொண்டுவருகின்றனர்.
ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து கல்வியில் திணிக்கப்படும் இந்த பாசிச நடவடிக்கையை தடுத்து நிறுத்த போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க